Feed on
Posts
Comments

தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம். இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே. வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும்.

இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம். புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பொங்கல் 2004

Continue Reading »

ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்
(தமிழில்: இரா. செல்வராசு)

தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா,
பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்;
அவளின் தெய்வீகத் தெரிவதனில்
இனியென் றும் ஊடுருவாதீர்.

தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை
அசைவேதும் இன்றிக் காண்பாள்;
அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே
மண்டி யிடினும்

நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள்
தெரிவென்பது ஒன்றே.
தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள்
கல் லெனவே.

Source: Emily Dickensen The Soul Selects…

பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு நாளில் அணுவியல் அறிஞர் செயபாரதன் (ஜெயபாரதன்) (தமிழ்மன்றம் கூகுள் குழுமத்தில்) மொழிபெயர்த்திருந்த ஒரு கவிதையைப் பார்த்து எனக்கும் அதே எமிலி டிக்கின்சனின் கவிதையை எழுதிப் பார்க்கத் தோன்றியது… தலைக்கிறுக்கு விரைவில் இறங்கி விடும் என எதிர்பார்க்கலாம். 🙂

இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

Book Release Invitation - mellach chuzhaluthu kaalam

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் – முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன்,  துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.

Nila Tamil

அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க.

ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன். ‘கேள்’னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் ‘கேன்’னு படிச்சுது பொண்ணு.

என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் அவளக் குழப்பி விட்டுருச்சுன்னு தெரிஞ்சுது. அசப்புல பாத்தா ளகர மெய்யும் னகர மெய்யும் கொஞ்சம் ஒரே மாதிரியாத் தான இருக்கு. இதெல்லாம் பயபுள்ளைங்க படிக்கறதுக்குக் கஷ்டம் இல்லியா?

தனி ஒருத்தனுக்குச் சோறில்லைன்னா உலகத்தையே அழியுங்கன்னு பாரதி சொன்னானேங்கறதுக்காக அவனுக்குச் சோறு கெடைக்க வழி பண்ணாம, உலகத்த அழிக்க எது வசதி, என்ன பண்ணலாம்னு யோசிக்கற வம்சம் இல்லியா தமிழன்?

அயல்நாட்டுல பகுதிநேரமாத் தமிழ் படிக்கிற கொழந்தைக்குக் கஷ்டம்னு ஆயிரம் ஆண்டா இருக்கற எழுத்த மாத்தி உகர ஊகாரத்த ஒடச்சிச் சீர்திருத்தம் பண்ணிடலாம்னு ஒரு கூட்டம் துடிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க கிட்ட எம்புள்ள ஒரு நாள் காலைல பள்ளிக்கூடத்துக்குப் போற அவசரத்துல ளகரத்தையும் னகரத்தையும் போட்டுக் கொழப்பிப் பட்ட கஷ்டத்த யாராவது பாத்தா எடுத்துச் சொல்லுங்க. கையோட இதையும் மாத்திச் சீர்சீர்திருத்தம் செஞ்சுரட்டும். Lன்னு ளகரத்துக்கு வச்சுக்கிட்டா ஆங்கில எழுத்துப் படிக்கிற அவளுக்கு சுலபமா இருக்கும். அடடா… டகரத்தோடு கொழம்பீருமா? சரி டகரத்த Tன்னு மாத்தீரலாமே. ‘உகர ஊகார டகர னகர ளகரச் சீர்திருத்தம்’ ன்னு சொன்னாக் கேக்கறதுக்குக் கூட நல்லா ஒரு கவிதையாட்ட இருக்குல்ல!

ஓரத்துல இருக்கறவன் சும்மா இருங்கப்பா. ஒழுங்காச் சொல்லிக் கொடுத்தா ரெண்டு நாள்ல எல்லா எழுத்தையும் சரியாப் படிச்சுக்கும்னு உங்கள யாரு நூணாயம் பேசச் சொன்னது?

என்னது? இத்தன காலமா அச்சடிச்சு வச்சுருக்குற புத்தகமெல்லாம் வீணாப் போகுமா? யாருக்கும் புரியாமப் போயிருமா? இப்போ இதுக்கெல்லாம் தேவை இல்லியா? எழுத்த மாத்தறதுனால எந்தப் பயனும் இல்லைனு அறிஞர்கள் அனுபவத்துல சொல்லி இருக்காங்களா? சைனா, சப்பான்காரனெல்லாம், படம் படமாப் போட்டு ஆயிரக்கணக்குல எழுதிக்கிட்டு இருக்கானே அவனுக்கு இல்லாத கஷ்டமான்னு கேக்கறீங்களா?

சும்மா இருங்கப்பா. உங்கள எல்லாம் யாரு கேட்டா? கேள்வி கேக்க வந்துட்டீங்க? எங்கைய்யா பெரியாரே சொல்லீட்டுப் போயிட்டாரு. என்னது? நான் சொன்னேங்கறதுக்காகச் செய்யாதீங்க. அது சரின்னு உங்களுக்குப் பட்டாச் செய்யுங்கன்னும் அவரே சொல்லியிருக்காரா?

அடப் போங்கப்பா. கை துருதுருங்குது. எதையாச்சும் செஞ்சே ஆகணும். பெரியாரு பேரச் சொன்னாவாச்சியும் கேள்வி கேட்காமப் போயிருவீங்கன்னு பாத்தா, உடமாட்டேன்னு நிக்கறீங்களே?

தமிழ் என்ன உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?

* * * *
சிறிது தொடர்புடைய இடுகை: கையெழுத்துத் தமிழ்

அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை.

Gate Valve

தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள பேரா.செல்வா ‘அதர்’ என்றால் வழி என்பதை வைத்து அதரி என்று வழிப்படுத்தும் கருவியைச் சொல்லலாம் என்று ஓரிடத்தில் விளக்கியிருந்ததை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

Valve என்னும் கருவியின் வேலை அது தானே. புழம்பு (பைப்புன்னும் சிலர் சொல்லுவாங்க:-)) ஒன்றின் இணைப்பாக இருந்து அதில் பாயும் பாய்மத்தை தடுத்து நிறுத்தவோ, வேகம்/அழுத்தம் குறைக்கவோ, ஒருவழிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்தப் படும் கருவியே வால்வு.

Continue Reading »

« Newer Posts - Older Posts »