Feed on
Posts
Comments

வருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல.

Spring 2010அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர்.

புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் சலிப்புக்களையும் கலைத்தெறிந்து வாழ்க்கையைக் கொண்டாடப் பல்லாயிரம் காரணங்களைச் சொல்லி அமைகிறது வசந்தம்.

கடுங்குளிரில் வீட்டினுள் சிறு தொட்டியினுள் வாடியிருந்த சின்னஞ்சிறு செடி ஒன்றும் கூட அழகானதொரு பூவினைப் பூத்துக் கொண்டாடுகிறது. ஓக் மரங்களின் மகரந்தப் பெருவெடிப்பில் ஒவ்வாமை வந்து சேரும் ஒரு நாள் என்றாலும், இன்று இக்கணம் தன்னைக் கொண்டாடும் வசந்தத்தைக் கொண்டாடுகிறேன்.

இக்கணம் ஒவ்வொன்றும் மந்திரத் தன்மை வாய்ந்தது. இந்தக் கணத்தின் சிறு துளியில் உயிருடன் இருப்பதற்கு மகிழ்கிறேன். நன்றியுடையவனாக இருக்கிறேன். நிறைவடைகிறேன்.

இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான்.

வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். பள்ளி முடிந்து கல்லூரியில் பொறியியல் படிக்கக் கோவைக்குப் போன காலத்தில் இருந்து அவன் ஊருக்கும் கோயிலுக்கும் போவது கொஞ்சம் குறைந்து தான் போனது.

“இந்தத் தடவ உன் பெரியப்பா வீட்டுக்கும் போயிட்டு வரோணும்ப்பா” என்று அப்பா தான் ஆரம்பித்தார். “நாலு மாசம் முன்னாடி உங்க அண்ணன் தோட்டத்துல பாம்பு கடிச்சுச் செத்துப்போயிட்டான்”.

“ஆமாப்பா. என்ன தான் சண்டையினாலும், இதுக்கு நீயும் வந்து ஒரு வார்த்த கேட்டுட்டுத் தான் வரணும்” என்று அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டார்கள்.

“ஏம்மா… உங்களை அத்தனை அவமானப் படுத்துனவங்க வீட்டுக்கு எப்படிங்கம்மா போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்டாலும், ஒரு மரணம் மன உறுதியைச் சற்று வலுவிழக்கத் தான் செய்கிறது. ஒரு சாவினால் பிறவற்றை மறந்துவிடவேண்டுமா என்று கேள்வி எழும்பினாலும், அது பக்குவமான கேள்வியில்லை என்று தயங்க வைத்து, ஒரு கணம் நின்று மறுபக்கத்தின் நிலையையும் யோசிக்கவே வைக்கிறது.

“சரி விடுங்க. போய்ட்டுத் தான் வரலாம்”.
Continue Reading »

Growth“அதெல்லாம் நீ கேக்கக்கூடாது. பொம்பளைங்க சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கிற எடத்துல ஆம்பிளப்பையனுக்கு என்னடா வேலை? போடா அந்தட்டம்”னு குமார அவங்க அம்மாவே தொரத்தி உட்டாங்க.

குமாருக்குக் கோவம் கோவமா வந்துச்சு. ஊற வச்ச கொட்டமுத்த உறிச்சுக் குடுறான்னு அவங்களே கூப்பிட்டுட்டு இப்பத் தொரத்தராங்க. ‘அப்படி என்ன நான் கேட்டுட்டேன், இல்லாததையும் பொல்லாததையுமா? இவங்க பேசிக்கிட்டிருந்ததப் பத்தித் தானே கேட்டேன்’னு நெனச்சுக்கிட்டு மொறச்சுப் பாத்தான்.

கீழ துணி சுத்தியிருந்த மொளக்குச்சிய ஆட்டாங்கல்லுக் குழிக்குள்ள ஒரு வட்டக்கல்லு வச்சு அடிச்சு தெரமாக்கீட்டு, நெத்தில வடிஞ்ச வேர்வையப் பொறங்கையால தொடச்சிக்கிட்டே பக்கத்து ஊட்டு அன்னபூரணியக்காவும் அவனப் பாத்தாங்க. அவ‌ங்க‌ லேசாச் சிரிக்கிற‌ மாதிரியும் குமாருக்குச் ச‌ந்தேக‌மா இருந்துச்சு. அதுவும் கோவ‌த்த‌ அதிக‌மாக்குச்சு.

ஆனா, அன்ன‌பூர‌ணிய‌க்காவ‌ அவ‌னுக்குப் புடிக்கும். குச்சி ஐஸ் வண்டிக்காரன் வந்தா ‘போனாப் போகுது வாங்கிக்கட்டும் உடுங்க’ன்னு அம்மா கிட்ட அவனுக்குப் பரிஞ்சு பேசுவாங்க. புரட்டாசிச் சனிக்கிழம பெருமாள் மலைக்கு அவங்களோட போனா, வரும்போது நன்னாரி வேர் போட்ட எலுமிச்சம்பழச் சர்பத் வாங்கிக் குடுப்பாங்க. அதனால கோவத்தக் கொஞ்ச‌ம் அட‌க்கிக் கிட்டான். ஆனா, இன்னிக்குத்த பிரச்சினைக்கு இந்த அக்காவும் ஒரு காரணம்.

Continue Reading »

தமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள் நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். அவரவர் பதிவில் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இணையத்தில் தமிழின் வளர்ச்சி அபரிதமானது. குறிப்பிடத்தக்கது. உள்ளடக்கங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றாலும், மேற்சொன்ன வளர்ச்சியும் கவனம் பெறவேண்டும். எழுத்துரு, குறியேற்றப் பலக்கிய தன்மைகளால் ஆரம்ப கட்ட வளர்ச்சி சற்று வேகம் குன்றியதாகவே இருந்தது என்றாலும், யுனிக்கோடு/ஒருங்குறியின் பரவலால் கடந்த சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு வலைப்பதிவுகளும் ஒரு முக்கியமான மறுக்கவியலாத பங்களிப்பை அளித்திருக்கின்றன. வணிகநோக்கு ஊடகங்களும் தங்களது தனிப்பட்ட குறியேற்றங்களையும், எழுத்துருக்களையும் விடுத்து, இப்போது ஒருங்குறியின் பக்கம் திரும்பி இருப்பதும் இதற்கு ஒரு சான்றே.

Continue Reading »

100 yearsசிறு குழந்தைகள் எப்போதேனும் தும்மினால் எங்களூர்ப் பக்கத்துப் பெரியோர்கள் ‘நூறு… நூறு…’ என்பார்கள். ‘நூறு வயது வாய்க்கட்டும்’ என்னும் வாழ்த்து அதனில் அடங்கி இருக்கும்.

“வாப்பா, உனக்கு நூறாயுசு! இப்பத்தான் உன்னப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்; (அல்லது) இப்பத்தான் உன்னப் பத்தி நெனச்சேன்”, என்பதிலும் நூறு வயதின் சிறப்பு வெளிப்படும்.

நூறு வயது வரை வாழ்தல் என்பதில் எனக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போய்விட்டது. ஒருவேளை குழந்தையாய் இருக்கையில் நான் நிறையத் தும்மி இருக்கலாம். அல்லது நிறையப் பேர் என்னைப் பற்றி நினைத்தவாறு இருந்திருக்கலாம்; பேசி இருந்திருக்கலாம் 🙂 .

“அம்பது அறுபதுன்னு ஆனாலே பொட்டுனு போயிடனும்”, என்று சிலர் தமது ஆயுட்கால விருப்பத்தைக் குறுக்கிக் கேட்டிருந்தாலும், நான் மட்டும் யார் என்னை எப்போது கேட்கினும், “எனக்கு நூறு வயசைத் தாண்டியும் வாழணும்” என்னும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். இரண்டு, நான்கு, ஐந்து வருடங்கள் கழித்தும் மாறாத என் பதிலைக் கேட்டு, “இன்னுமா உங்களுக்கு அந்த ஆசை தீரலை?” என்று மலைத்துப் போகிறார்கள். ‘இலக்கு மட்டுமல்ல; பயணமும் முக்கியமானது’ என்னும் சிந்தனையின்பால் சார்ந்ததினாலான விளைவாகவும் கூட இருக்கலாம்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »