தமிழ்மணம் ஐந்தாண்டுகள் – காசியின் கேள்விகளும் என் பதில்களும்
Aug 25th, 2009 by இரா. செல்வராசு
தமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள் நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். அவரவர் பதிவில் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள்.
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
இணையத்தில் தமிழின் வளர்ச்சி அபரிதமானது. குறிப்பிடத்தக்கது. உள்ளடக்கங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றாலும், மேற்சொன்ன வளர்ச்சியும் கவனம் பெறவேண்டும். எழுத்துரு, குறியேற்றப் பலக்கிய தன்மைகளால் ஆரம்ப கட்ட வளர்ச்சி சற்று வேகம் குன்றியதாகவே இருந்தது என்றாலும், யுனிக்கோடு/ஒருங்குறியின் பரவலால் கடந்த சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு வலைப்பதிவுகளும் ஒரு முக்கியமான மறுக்கவியலாத பங்களிப்பை அளித்திருக்கின்றன. வணிகநோக்கு ஊடகங்களும் தங்களது தனிப்பட்ட குறியேற்றங்களையும், எழுத்துருக்களையும் விடுத்து, இப்போது ஒருங்குறியின் பக்கம் திரும்பி இருப்பதும் இதற்கு ஒரு சான்றே.
2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் பயனை எல்லோரையும் போலத் தமிழர்களும் அனுபவித்தாலும், அது இன்னும் ஒரு கட்டத்தைத் தாண்டிச் சமூகத்தின் எல்லாப் படிநிலைகளுக்கும் பரவவில்லை என்றே நான் நினைக்கிறேன். பெரும் மாநகர நகர மக்களைத் தாண்டி உட்புற ஊர்களில் கணினியும் இணையமும் அதிகமாகப் பரவவில்லை என்றே நினைக்கிறேன்.
சாதாரண மனிதனுக்கு அவனுடைய அன்றாடத் தேவைகளில் சிலவற்றை எளிமைப்படுத்தும் சேவைகள் வந்து சேரும்போது அது இன்னும் அதிகரிக்கும். அதற்கு அவன் ஊடாடும் அரசு மற்றும் தனியார் இடங்களில் இருந்து அந்தப் பயன்பாடு தொடங்க வேண்டும்.
3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களின் பங்களிப்பே காரணம் என்பேன். மதுரைத் திட்டம், தமிழ் விக்கிப்பீடியா போன்றவை இதற்கு முக்கிய காட்டுக்கள்.
தனியார்வலர்களுடன் சேர்ந்து அரசும் அரசு சார் அமைப்புக்களும் தமது நடவடிக்கைகளைக் கைக்கொண்டிருக்குமானால் மிகவும் சிறப்பான முறையில் இவ்வளர்ச்சியை அதிகரித்திருக்கலாம். ஆனால், டாப் டாம் போன்ற குறியேற்றங்கள் அன்றைய கூட்டு முயற்சியான டஸ்கியில் இருந்து வேறுபடக் காரணமாயிருந்ததைப் போல, ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமலேயே போயிருக்கிறது. இவற்றையும் மீறி ஒரு சில குறிப்பிட்ட தன்னார்வலர்களின் முயற்சியாலேயே தமிழிணைய வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்திருக்கிறது.
தமிழ் விக்கிப்பீடியா போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவை. ஆனால் அவற்றிற்கும் இன்னும் அதிகரித்த பங்களிப்பாளர்கள் தேவை, என்னையும் சேர்த்து.
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
இணையத்தமிழ்த் துறை ஒன்றை ஏற்படுத்தி அதன்வழியாக அரசும் தன்னார்வலர்களும் சேர்ந்து செயல்படும் ஒரு முறைவழியை அமைக்க முயற்சி செய்வேன். அந்தக் குழுக்களைக் கொண்டு செய்யவேண்டிய செயல்களை வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களோ, திட்டங்களோ அமைத்துச் செயல்படலாம்.
தமிழ் குறியேற்றங்கள் பல்வேறாக இன்னும் இருப்பதை மாற்றி யுனிக்கோடு அமைப்புடன் அதிகரித்த கருத்துப் பரிமாற்றத்தின் பின், ஒன்று புதிய குறியேற்றத்தினை ஏற்படுத்த முயல்வேன். ஆனால், அதற்குக் காலம் கடந்துவிட்டது என்னும் யதார்த்தத்தினை உணர்ந்து வேறு ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து இப்போது இருக்கும் யுனிக்கோடு முறையையே அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை அறிவித்துவிட்டு, அரசின் அமைப்புகள் தளங்கள் இவற்றை எல்லாம் பொதுப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ஒருங்குறிக்கு மாற்றச் செய்வேன்.
கணினி மையங்கள் அனைத்திலும் இருக்கும் கணினிகளில் தமிழ் எழுதப் படிக்க வேண்டிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இத்துறை வழியாகச் செய்வோம். பொது நூலகங்களில் இலவசப் பயன்பாட்டிற்குத் தமிழ்க்கணினிகள் அமைக்கச் செய்வோம். அரசு சம்பந்தப்பட்ட ஊடாடல்கள் தமிழ்வழியில் இருக்குமாறு செய்து, பொதுமக்களுக்குத் தேவையானவற்றை அவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கச் செய்வோம். மாவட்டம் தோறும் இதற்கான அரசு கணினி மையங்களை அமைப்பது பற்றியும் பரிசீலிக்கப் படும். அரசுடைமையாக்கப் பட்ட தமிழ் நூல்கள் மின்வடிவத்தில் கிடைக்கச் செய்வோம்.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
தமிழ் வலைப்பதிவுகள், தமிழகத்தில் இருப்போருக்கும் சரி, புலம்பெயர்ந்தவர்களுக்கும் சரி, தமிழில் எழுதவும், தங்கள் எண்ணங்கள், சிந்தனைகள், திட்டங்கள், வாழ்க்கை முறைகள் இவற்றைப் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாய் அமைந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை வெவ்வேறு காலகட்டத்தில் இயங்கி வந்த வெவ்வேறு குழுக்கள் ஆர்வம் குன்றி எழுதுவதைக் குறைத்துக் கொண்டதையும் பார்க்கிறோம். அதே சமயம், இடையிடையே வாழ்க்கையின் பிற ஈடுபாடுகள் காரணமாகப் பதிவுலகில் இருந்து தற்காலிகமாக மட்டும் விலகிவிட்டுப் பின்னும் தொடர்ந்து தங்களுக்கு இயன்ற பொழுது இயங்கி வருவோரையும் பார்க்கிறோம்.
புதிதாக எழுத வருபவர்களுக்குப் பின்னூட்டங்களும், வாசகர்களும் பெரும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், அவற்றையும் தாண்டி எழுதுவதற்கான சுய முனைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பரவலான வாசகர்களைப் பெற்றுத் தருவது புதிய பதிவர்களுக்குப் பலம் தரும் ஒன்று. அதே சமயம், வெறும் பரபரப்புக்காகவும், கவன ஈர்ப்புக்காகவும் எழுதப்படும் பதிவுகள் நாளடைவில் ஒதுக்கப்பட்டு விடும் என்பதோடு, எழுதுபவருக்குமே ஒரு மனத்தொய்வைத் தந்துவிடும். மாறாக, நமது மனத்திருப்திக்காக எழுதுகிறோம் என்பதோடு, நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இவ்வனுபவத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் புதிய பதிவர்களுக்கு நலம் பயக்கும்.
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
காசியால் தமிழ்மணம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, தமிழ் மீடியா இண்டர்நேசனல் (டி.எம்.ஐ) அமைப்பு அதனைச் சிறப்பாக வழிநடத்தி வரும் இன்று வரை, அதன் நிர்வாகத்திலும், நுட்பக்குழுவிலும், பிற வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு கொண்டவன் என்கிற முறையில் என்னுடைய கருத்துக்கள் சார்புடையதாய் இருக்கலாம். இருப்பினும், தமிழ்மணம் தமிழ் இணைய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலுமே மறுக்க இயலாது. தனிநபர்களுக்கு அரசியல் மற்றும் சமூகச் சார்புகள் இருப்பினும், அன்று முதல் இன்று வரை தமிழ்மணம் குழுவினர் இயன்றவரையில் தமிழ்மணத்தை ஒரு சுதந்திரத் தளமாகவே நடத்தி வருகின்றனர். இனி வரும் காலத்திலும் இப்படி ஒரு சுதந்திர வெளியாக நிர்வகித்து வர வேண்டும்.
நூற்றுக்கும் குறைவான பதிவுகள் இருந்த காலகட்டத்தில் இருந்து இன்று ஐயாயிரம் பதிவுகள் வரை திரட்டும் நிலையில் திரட்டி வடிவத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர முயலலாம். நல்லது அல்லது என்று பதிவுகளைப் பிரிப்பது ஒவ்வொருவருடைய சார்பைப் பொறுத்தும் அமைவது என்றாலும், பொதுவாக நல்ல பதிவுகளை இனம்கண்டு அவற்றை முன் நிறுத்தத் தமிழ்மணம் முயலலாம். நன்றாக எழுதுபவர்களுக்கு ஊக்கத்தையும் புதிவர்களுக்கு ஆர்வத்தையும் அது தரும். தொடர்ந்தும் தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டும் தமிழ்மணம் தன் பணியைத் தொய்வின்றிச் செய்துவரவேண்டும்.
* * * *
இராம.கி ஐயாவின் விரிவான கருத்துக்கள் இங்கே.
* * * *
really good….