நூற்றாண்டுத் தலைவன்
Aug 7th, 2019 by இரா. செல்வராசு
அவர் இன்றிருந்தால் கலைஞர் தொலைக்காட்சியை அழைத்து, "ஏய்யா தப்புத் தப்பா எழுதறீங்க? என்னை ‘நூறாண்டு தலைவன்’னு எழுதக்கூடாது. ‘நூற்றாண்டுத் தலைவன்’னு எழுதணும்", என்று ஒருவேளை திருத்தம்சொல்லிக் கடிந்துகொண்டிருக்கக்கூடும். சிறுசிறு விவரங்களின்வழி பலரின் வாழ்வை அவர் தொட்டிருந்ததைப் புகழஞ்சலிக் கூட்டங்கள்வாயிலாக அறியமுடிந்தது.
எப்படியும் நூறு ஆண்டுகளை அவர் பார்க்கவேண்டும் என்னும் சிறு ஆசை என்னுள் இருந்தது. அரசியல்சார்ந்த செயல்பாடுகள் ஒருபுறம் இருப்பினும் அதைத்தாண்டிப் பன்முக ஆளுமையை அவர் கொண்டிருந்ததும், குறிப்பாகத் தமிழ்சார்ந்த செயல்பாடுகளில் ஒளிர்ந்ததும் காரணம். ஆறாண்டுகள் மிச்சமிருக்கும் நேரத்தில் ஓராண்டின் முன் கலைஞர் கருணாநிதியினது மறைவுச் செய்தி வந்தபோது எனது இந்தியப் பயணத்தின் முடிவில் பணிநிமித்தம் சிங்கப்பூரில் இருந்தேன். செய்தியை அமைதியாக மனம் உள்வாங்கியது. அதன்பிறகான கடற்கரைப் போராட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது.
அச்சமய இந்தியப் பயணத்தின்போது சில நண்பர்கள் காரணமின்றிக் கொண்டிருந்த காழ்ப்பினை உணர முடிந்தது. ஒரு உரையாடலின் தொடக்கத்திலேயே எச்சரித்தேன்.
"டேய், கருணாநிதி பற்றிய என் கருத்துகள் வேறானவை. எனக்கு அவரைப் பிடிக்கும்".
நண்பரை இது தடுத்து நிறுத்தவில்லை.
"இல்லடா, உனக்குத் தமிழுக்காக அவரைப் பிடிச்சிருக்கலாம். ஆனால், அவரால தான் நாடே கெட்டுக் குட்டிச் சுவராயிற்று".
எனது பொறுமையை இது பாதிக்கவில்லை.
"இல்லை, தமிழ் சார்ந்து மட்டுமில்லை. பிற நல்ல பல செயல்களையும் அவர் செய்திருக்கிறார். நூருல் அதுபோன்ற நூறு புள்ளிகள் கொண்ட ஒரு பட்டியலை அனுப்பியிருந்தானே, பார்க்கவில்லையா?"
கோணற்சாய்வுகளும், முன்முடிவுகளும் கொண்டவர்களுக்கு உண்மைகளும் புள்ளிவிவரங்களும் அவசியமற்றவை. வேறு கோணத்தில் அணுகுவோம் என்று கேட்டேன்.
"சரி விடு. நீ அதனைப் படித்திராவிட்டால் பரவாயில்லை. உன் பார்வையில் அவர் செய்த மோசமான செயல் எவை?"
ஒருகணம் யோசித்தவர், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கி மதுக்கடைகள் பெருக அவர்தான் காரணம் என்றார்.
"இல்லையே, தற்காலிகமாக நீக்கிப் பின் மீண்டும் அவர் மதுவிலக்கைக் கொண்டுவந்துவிட்டார். பிறகு வந்தவர்கள் தான் மீண்டும் மதுக்கடைகளைத் திறந்து பின் அவற்றை அரசே ஏற்று நடத்துவதையும், தாசுமாக்கு அமைத்ததும், அவற்றுக்கு விற்பனை/வருவாய் இலக்குகள் விதிப்பதுமாக இப்படியொரு குடிகாரச் சமூகத்திற்குக் காரணமாய் அமைந்துவிட்டார்கள்", என்றேன்.
ஒன்றுகூடல்களில் மட்டையாய்க் குடித்துவிட்டு மப்பேறிக்கிடப்பவரின் குடிபற்றிய கரிசனை எனக்கு விந்தையாக இருந்தது. இத்தனைக்குப் பிறகும் அவர் பின்னவர்களைப் பற்றி யாதொரு விமரிசனமும் வைக்கவில்லை. "கருணாநிதி தான் எல்லாத்துக்கும் காரணம்; பெரும் ஊழல்வாதி", என்று தொடர்ந்தார்.
கலைஞரைப் பற்றி முற்றிலும் விதந்தோத்துவது என் வேலையன்று. ஆனால், ஊழல்வாதி என்று குற்றம்சாட்டுபவர்கள் அதற்கான சான்றுகளையும் முன்வைக்க வேண்டும். கவனிக்க, அவரும் சார்ந்தோரும் ஊழல் செய்ததில்லை என்று நான் வாதிடவில்லை. அதுபற்றிய விவரங்கள், நிரூபணங்கள், தீர்ப்புகள் இவை என்னிடம் இல்லை என்கிறேன்.
ஐந்தோ பத்தோ தள்ளி சிறுசிறு காரியங்களை நிறைவேற்றிக் கொள்பவர்களும், வரியேய்ப்புக்குப் பொய்க் கணக்குக் காட்டுபவர்களும், பன்னூறு ஆயிரங்கள் செலவுசெய்து, படிப்பிடமோ, அரசுபதவியோ பெறுபவர்களும் நிறைந்திருக்கும் இச்சமூகத்தில் ஊழல் ஆழப் புரையோடி இருப்பதை யார்தான் மறுப்பர்? பெற்ற தந்தையின் மரணச்சான்று வாங்கக் கையூட்டுக்கேட்கப்பட்ட இடத்தில் தயங்கிய என்னை வெளியேற்றிவிட்டு, என் சார்பாக யாரோ கொடுத்துப் பெற்றதும் ஊழலில் சேர்ந்ததுதான். அதன் நீட்சியாக, உறுதியான விவரங்கள் இல்லாமல் ஒருவரை ஊழல்வாதி என்று சாடவும் முடியாது; அல்லவென்று வாதிடவும் முடியாது.
ஆனால் இதே நண்பரும் இவரைப் போன்றவர்களும் பல்லாண்டுகாலம் நீதிமன்றத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, பல அடுக்குகளில் குற்றமும் தண்டனையும் உறுதியாக்கப்பட்டு ஊழல்வாதி என்று முத்திரை குத்தப்பட்ட செயலலிதாவையும் அவர்வழிக்கும்பலையும் கண்டுகொள்ளாதிருப்பதை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
‘சேச்சே! அவர் புனிதத்தாய்! அதெல்லாம் பொய்க்கேசு’, என்றோ, ‘என்ன இருந்தாலும் அவர் எவ்வளோ நல்லது பண்ணியிருக்கார்’ என்றோ மறுப்பாளர்களாகவும் உடனடி மன்னிப்பை நல்குபவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தேயத்துப் பல்லடுக்கு நீதிமன்றங்கள் கூட, சிலரைமட்டும் செத்தபின்பே குற்றவாளி என்று நீதியையும் தள்ளி வைத்துச் செயலாற்றுகின்ற அந்த வெம்மைச் சூழலில், அத்தனை எதிர்ப்புகளையும் தகர்த்தொருவன் உயர்ந்தான்; தன்னைப் போல் பிறரையும் உயர்த்த நினைத்தான்; முயன்றான் என்று உணர்கையில் ஒரு மதிப்புத் தோன்றவே செய்கிறது.
ஆகத் தமிழினைச் சிறப்புசெய்தற்கு மட்டுமின்றி, தமிழனைச் சிறக்கவைக்கவும் இந்த நூற்றாண்டுத் தலைவன் நூறாண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.
கலைஞர் மு. கருணாநிதிக்கு ஓராண்டு நினைவஞ்சலி.
-முனைவர். இரா. செல்வராசு
07 ஆகத்து 2019.
ஈரோடு.