அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
Aug 7th, 2020 by இரா. செல்வராசு
எண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் சேர்ந்திருந்தோம்.
தூத்துக்குடி, நாகர்கோயில், ஈரோடு என்று அன்றுசேர்ந்த அனைவருமே மாவட்டங்களில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்தவர்கள் தாம். அதன்பிறகு இரண்டாவது பட்டியல், மூன்றாவது பட்டியல் என்று இடவொதுக்கீட்டு மதிப்பெண் புள்ளிகள் கீழே இறங்கிவந்தாலும், முதலில் சேர்ந்த எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் இடங்களில் தான் சேர்த்திருந்தார்களே தவிர, திறந்த ஒதுக்கீட்டிற்கு மாற்றவில்லை என்பது ஓர் ஏமாற்றுவேலை தான். அந்த அரசியல் எல்லாம் அன்று புரியவில்லை. இன்றும் நுணுகி முழுவிவரத்தை அறிந்தவர் யார்?
இருந்தாலும், கடும்போட்டிச் சூழலில் மாநகரங்கள் அல்லாத மாவட்டச் சிற்றூர்களில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தும் முதன்மையான இடத்திற்கு வந்து சேரத் தமிழகத்தின் திராவிட இயக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் தான் காரணமாக இருந்தன. வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு, என்று வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது தான் அதன் அடிப்படைச் சித்தாந்தம். ஆனால், அப்படிப் பயன்பெற்ற சிலரே இன்று இவ்விடவொதுக்கீட்டுக் கொள்கைகளில் ஐயம் கொள்வதும், நிலையற்ற தன்மையில் இருப்பது ஏன் என்பது ஓர் உளவியற் சிக்கல் தான். அசுரபலம் கொண்டோர் ஒன்றிய அரசு இடவொதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் எம் கொங்குநாட்டுத் தங்கங்கள் காதிலே பூச்சுற்றிக் கொண்டு, ‘எண்ணிக்குங்க’ என்று ஏன் தோப்புக் கரணங்கள் போடுகிறார்களோ, தெரியவில்லை!
கல்லூரிக்கு நான் வந்து சேர்ந்தபோது, நீதிமன்ற அரசுப்பணியில் இருந்த என் தந்தைக்கு மாதம் எழுநூறு உரூவாய் ஊதியம். அடிப்படை ஊதியத்தோடு வீட்டுப்படி, பஞ்சப்படி, இதர எல்லாம் சேர்ந்து, அதில் ஓய்வூதிய வைப்புக்குப் பிடித்தம் போக என்று எல்லாக் கணக்குக்கும் பிறகு வந்த தொகை தான் இவ்வளவு. பள்ளிப்படிப்பை ஆங்கிலவழியிலே தனியார்ப் பள்ளியிலே படிக்க மாமனும் தாத்தனும் உதவியிருந்தார்கள். இல்லையெனினும் அரசுப்பள்ளியிலே சேர்ந்து படிக்க வழிவகை இருந்தது. வழி ஏதாகினும் அதே இலக்கை எட்டியிருக்க இயலும் என்று தான் எண்ணுகிறேன். அதற்கான சமூகக் கட்டமைப்பு ஓரளவிற்கு இருந்தது.
நல்ல அரசுக்கல்லூரியில் படிக்க இடமின்றிப் போயிருந்தால் சில நூற்றாயிரக் கணக்கில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கொட்டிப் படிக்கச் சிக்கலேற்பட்டிருக்கும். (ஏதாவது விசைத்தறிக்கோ, சாயப்பட்டறைக்கோ அனுப்பிவிடலாம்னு தான் இருந்தேன் என்று அம்மா இப்போதும் ஏதோவொருநாள் சொல்வார்கள் 🙂 ). நல்லூழும், தொலைநோக்குச்சிந்தனையிற் கிளைத்த சமூகத்திட்டங்களும் என்னை ஒரு நல்ல அரசுக் கல்லூரியில் சேர்த்து விட்டன.
ஆண்டுக் கட்டணம் எவ்வளவு என்று மறந்து போய் விட்டது. ஏதோ 1200 அல்லது 1800 என்னும் இந்த அளவிற்குள் தான் இருந்ததாக நினைவு. மிகவும் குறைவான கட்டணம் தான். கல்லூரிக்கட்டணம் தவிர, மாதம் 400 உரூவாய் விடுதி/உணவுக் கட்டணம் என்று அனைத்தையும் சேர்த்தாலும் அப்படியொன்றும் பெரிய செலவாக இன்று தோன்றாது. ஆனால், மாதம் எழுநூறு உரூவாய் ஊதியம் மட்டும் கைக்கு கிடைக்கும் ஒருவர் அதில் பாதிக்கும் மேல் செலவு செய்து மகனைப் படிக்க வைக்க முடிந்திருக்குமா? அப்போதும் மாமனும் தாத்தனும் உதவினார்கள் என்றாலும், மேலும் மேலும் அவர்களுக்குப் பளுவை ஏற்றாத வகையில், எந்தச் சொந்தமும் இல்லாத அன்றைய அரசு, ஓர் அலுவலர் வழியாக அழைத்துப் பேசியது.
"இந்தாப்பா தம்பி, அப்பா அரசு வேலையில இருக்கார்ல? நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கேல்ல? அரசு கல்வி உதவித்தொகைத் திட்டம் ஒண்ணு இருக்கு. இதோ, இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செஞ்சு குடு"
சும்மா அந்தப் பக்கமாய்த் திரிந்துகொண்டிருந்தவனைத் தானாக வருந்தி அழைத்து உதவித்தொகை என ஆண்டுக்கு ரூ.4000-ஐ அள்ளி வழங்கியது. மாதம் 400 என்றாலும், கிட்டத்தட்ட ஆண்டுமுழுதுக்குமான விடுதி/உணவுக் கட்டணத்துக்கு வழிவகை செய்துவிட்டதன்றோ? அதுவும் எவ்வளவு பெரிய நிம்மதியை, நிறைவைத் தந்திருக்கும் ஒன்று!
அந்தக் கல்லூரியில் குறைகள் என்று இல்லாமல் இல்லை தான். அரசு, கொள்கைகள், கட்டமைப்பு, என்று பல நூறு நொள்ளை நொட்டை சொல்லலாம். ஆனாலும், அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் என்று திராவிட இயக்க அரசுகளும், கொள்கைகளும், திட்டங்களும் ஒரு உந்து பலகையாய்ச் செயல்பட்டன என்பதை மறுக்க முடியாது. அதன் உந்துவிசையில் தான் அமெரிக்காவுக்குப் பறந்து ஐந்தாண்டுக் கல்வியும் கற்று, சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளாய்ப் நற்பணியிலும் அமர்ந்து இருக்க முடிகிறது.
சோற்றுக் கூலிக்குக் குக்கிராமப் பண்ணையத்தில் குத்தகைக்கு போன ஒருவரை ஒரு வேலை கொடுத்து ஐநூறு, அறுநூறு, எழுநூறு என்று ஊதியம் தந்து நகரத்திற்கு அனுப்பிய அதே அரசு, அவர் மகனுக்குப் படிக்க இடமும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்து, ஊக்கத் தொகையும் தந்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறது. அப்படி வளர்ந்தவர்கள் ஏராளம் இருப்பர். அவ்வாறான வளர்ச்சிக் கொள்கைகளுக்கும் சமூக முன்னேற்றப் பார்வைக்கும் பங்கம் உண்டாக்கும் வண்ணம் முரடர்கள் முனையும்போது உறுதியாகத் தட்டிக் கேட்க, தகர்த்து எறிய ஒருவன் அன்றிருந்தான். இன்றில்லை.
தகுதி, தேர்வு என்று வடிகட்டி நூற்றில் நான்கு பேரை மட்டும் மேலே ஏற விடுவது மேட்டுக்குடி மனப்பான்மை. ‘எல்லோரும் படிங்கடா, வாய்ப்பை நான் ஏற்படுத்தித் தருகிறேன். அதற்குப் பிறகு, தகுதி இருக்கிறவன் பிழைச்சுக்குங்க’, என்று கடவுகளைத் திறந்து விடுவது திராவிடச் சித்தாந்தம், சமத்துவம், சமவாய்ப்பு. இதனாலும் தான் தேசியக் கல்விக் கொள்கையைக் கொள்கையளவிலேயே எதிர்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம் மக்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும். ஒன்றியம் தான்வைத்தது தான் சட்டம் என்று மாநிலங்களின் மீது திணிப்பது மக்களாட்சிக்குக் குந்தகம் விளைவிப்பது. அனைவர்க்குமான கல்வியும் வாய்ப்பும் வளர்ச்சியும் பேணும் தமிழ்மாநிலக் கல்விக்கொள்கைகளைத் தொடரவைப்போம்.
தமிழின வளர்ச்சிக்கும் அனைவர்க்குமான வாய்ப்புகளுக்கும் குரல்கொடுத்துச் செயல்பட்டவருமான கலைஞர்.மு.கருணாநிதிக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.
-முனைவர். இரா. செல்வராசு,
இயூசுட்டன், தெக்காசு, அமெரிக்கா.
ஆகத்து 2020.
அருமையான பதிவு!
நன்றி திரு. மகிழ்ச்சி.