இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அலுக்கம்

May 5th, 2019 · No Comments

“அலுக்கம்னு ஓரிடத்துல பயன்படுத்தியிருக்கீங்க. அதற்குச் சரியான பொருள் என்னங்க?”, என்று கேட்டு எழுதியிருந்தார் நண்பர் சுந்தர். அதன் இடத்தைப் பொருத்து ‘வாய்ப்பு’ என்று பொருள் கொள்ளலாமா என்று தோன்றியது என்றிருந்தார். ‘இனிக்காதது’ என்னுமொரு கட்டுரையில் 2006இல் எழுதியிருக்கிறேன். https://blog.selvaraj.us/archives/218 

(வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை).

கொங்கு வட்டாரத்தில் அலுக்கம் என்பது அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் சொல். பல இடங்களில் நான் பயன்படுத்தியிருக்கக் கூடும், எதைப் பற்றிக் கேட்கிறார் என்று பார்ப்போம் என்று தான் தேடத் தொடங்கினேன். ஆனால், எனது முதல் வியப்பு – கடந்த பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அதனை நான் மேற்சொன்ன ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாவித்திருக்கிறேன். வாய்ப்பு என்று பொருள்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றாலும் நான் இதனை indicator/அறிகுறி என்னும் பொருளில் ஆண்டிருக்கிறேன். பொதுவாக இந்தப் பொருளில் தான் வழங்குவது வழக்கம்.

“மழை வரும்; கொட்டோ கொட்டுனு கொட்டும்னாங்க. ஒண்ணையும் காணோம். ஒரு அலுக்கமும் இல்லே”

“இவம்படிச்சுப் பெரியாளாகி நம்ம குடும்பத்துக்கு உதவியா இருப்பான்னு நெனச்சோம். எங்க? அந்த அலுக்கத்தையே காணோம். சும்மா ஊரச் சுத்திக்கிட்டு இருக்கான்”

“அண்ணந்தம்பி அடிச்சுக்கிட்டுக் கெடந்தாங்க. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் அலுக்கம் தெரியுது. நல்லது கெட்டதுன்னாச் சேந்துக்கறாங்க”

“இவ்வளவு நேரம் யாரையும் காணல்லே. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் அலுக்கம் தெரியுது”

இப்படிப் பலவாறாகப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. சரி, நாம் ஒரு முறை தான் எழுதியிருக்கிறோம். இந்தத் தமிழ் இணைய உலகம் என்ன சொல்கிறது என்று தேடிப் பார்த்தால், அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது. அலுக்கம் என்ற சொல்லைக் கூகுளில் இட்டுத் தேடினால் அது என் பதிவையும் சேர்த்து நான்கே தேடல் முடிவுகளைத் தருகிறது. அதிலும் இதுபோன்ற பொருளில் சரியாகப் பயன்படுத்தியிருப்பது என்னைத் தவிர இன்னும் ஒருவரே ஒருவர். இது வெறும் பேச்சு வழக்காய் இருக்கும் போலும்.

தமிழின் அழகு பேச்சு வழக்கிலும் மறைந்து கிடக்கிறது என்பதற்கு இச்சொல்லும் ஒரு நல்ல காட்டு. பாவாணரின் செ.சொ.அகரமுதலியிலோ வேறு ஒன்றிரண்டு அகரமுதலிகளிமோ கூட இச்சொல்லைக் காண்கிலேன்.

இதனருகில், தேடலில் அலுத்தல் என்று பரவலாய் அறியப்படும் சொல் ஒன்றைப் பார்த்தேன். அது சோர்வு என்னும் பொருள் தரும்; அலுப்பு என்று கிளைக்கும். அலுத்துக் கொண்டான், அலுக்க அலுக்கக் கதை சொன்னான் என்றெல்லாம் விரியும்.  அல்->அலு->அலுத்தல். மேலும் அலுக்க, அலுத்து, அலுக்கா, அலுக்காத என்று வினையெச்ச வடிவங்களாயும் அலுத்த, அலுக்கின்ற, அலுக்கும் என்று பெயரெச்சங்களாகவும், அலுப்பு போன்ற பெயர்களாகவும் மாறும்.  ஆனால் இவை வேறு. அலுத்து என்பதை வினையெச்சமாகச் சொல்லியிருந்தாலும், செலுத்து போல அலுத்து என்னும் இன்னொரு வினையடியும் உண்டு. ஆனால் அதன் இறந்தகாலத் தன்மை ஒருமை வினைமுற்றையோ, இறந்தகாலப் படர்க்கை ஆண்பால் அல்லது பெண்பால் விகுதிகொண்ட வினைமுற்றையோ கூகுளில் தேடி நீங்கள் கண்டடையும் பக்கங்களுக்கு நான் பொறுப்பாளியல்லன். இப்படியும் பொருள் திரிந்து போயிருப்பதை அவதானித்து அங்கும் தமிழ் வாழ்கிறது என்று கொள்வோம். இவையும் வேறு.

அல்->அலு->அலுங்கு->அலுங்குதல் என்றொரு சொல்லுமுண்டு. அலுங்கு என்னும் வினையடிக்கு சிறிய அசைவு என்பது பொருள். அலுங்குறேன் குலுங்குறேன் என்ற பாட்டு கேட்டிருக்கிறீர்களா?

https://www.youtube.com/watch?v=7CAAM_x-zJE

அலுங்கு என்னும் தன்வினையின் பிறவினை வடிவம் தான் அலுக்கு. இதன் அடிப்படையில் அம் விகுதி பெற்றுப் பெயரானால் அலுக்கம். சிறிய அசைவு என்பது பின்வரும் பெரிய மாற்றத்திற்கான அறிகுறி. அப்படியாகத் தான் அலுக்கம் என்பது சிறு அசைவு, அறிகுறி, என்னும் பொருள்களில் வழங்கப்பட்டிருக்கவேண்டும். அலுக்கத்தின் முதன்மைப் பொருள் அசைவாகக் கூட இருக்கலாம். பிறகு அறிகுறி என்பதுபோல் புழக்கத்தில் வந்திருக்கலாம். அலுத்தல், அலுங்குதல், அலுக்குதல் வரை அகரமுதலிகளில் காணப்படுவது, அலுக்கம் என்றாகையில் பதிவாகவில்லை. ஆனால், கொங்கு வட்டார(ப் பேச்சு) வழக்கில் அலுக்கம் பரவலாய் உண்டு.

‘சல்லடை போட்டு இணையத்தில் தேடினேங்க. ஒரு அலுக்கத்தையும் காணோம்’, என்று இனிமேல் சொல்லவேண்டியிராதபடி இன்னுமொரு அலுக்கப் பதிவையும் இணையத்தில் இட்டு வருங்காலத்திற்காய்ச் சேர்த்து வைக்கிறேன்.

Tags: இணையம் · தமிழ் · பொது