சித்திரைப்பெண்ணே வருக!
Apr 14th, 2019 by இரா. செல்வராசு
நான் கவிஞனல்லன். ஆனால் அதுபோல ஏதேனும் அவ்வப்போது முற்காலத்தில் எழுதியதுண்டு. சிலநாள் முன்பு எனது ஆசிரியை சரசுவதி ஐயை ஒரு செய்தி அனுப்பியிருந்தார்கள். ‘சித்திரைப் பெண்ணே வருக’வென்று ஒரு கவிதை எழுதியனுப்பு என்று பணித்திருந்தார். ‘எழுதி நாளாச்சுங்க’ என்று மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று முதலில் தோன்றினாலும், எனக்குள்ளும் ஓரார்வம் பற்றிக் கொள்ள, 2019இன் சித்திரையாளை வரவேற்க இதோ ஒரு ‘கவிதை’ 🙂
* * * *
சித்திரைப்பெண்ணே வருக!
கந்தனோ கதிர்வேலனோ கடவுளை யாரறிவார்
காலந்தான் தொடங்குமுன்னே இருந்ததுவும் யார்யார்
சிந்தையிலே அறம்வளர்க்கும் செந்தமிழே அமுதே
முந்தைநாள் மூத்தவளே முழுமுதற் கடவுள்நீயே
கருமுகிலுண்டு வான்மழையுண்டு காற்றும் நிலமும்
நெருப்புமுண்டு கருந்துளையும் நிகழ்வெளியும் உண்டு
அருந்தமிழே இயற்கையினோர் அங்கம் நீ
வருந்துவமோ வாழ்விலுன் நினைவும் உள்ளவரை
அனைத்தும் என்னூர் யாவரும் கேளிரென்று
அன்பைச் சொன்னாய் அறிவை வளர்த்தாய்
முப்பத்துநூற்று ஆண்டுகளின் முன்னே பிறந்தவளே
பித்தராய்த் திரிகின்றோம் உன்னாள் எந்நாளென்றே
சித்திரையோ தையோ சிற்றாட்டம் ஆடுகிறோம்
நித்தம்நித்தம் பூக்கும் புதுமலரும் நீ
சங்கத்தில் வளர்ந்தவளே சந்தனத் தமிழே
நறுமணம் சேர்த்து நல்வாழ்வு தருவாய்
அருள்தரவே அன்புதரவே வளம்தரவே வாழ்வுதரவே
வரம்தரவே வருகவருகவே சித்திரைப்பெண்ணே வருகவே!
அல்லவை நீங்கி அறம் பெருகவே!
வையகம் தழைத்தோங்கி வாழ்க வாழ்கவே!