நூறு வயது
Aug 19th, 2009 by இரா. செல்வராசு
சிறு குழந்தைகள் எப்போதேனும் தும்மினால் எங்களூர்ப் பக்கத்துப் பெரியோர்கள் ‘நூறு… நூறு…’ என்பார்கள். ‘நூறு வயது வாய்க்கட்டும்’ என்னும் வாழ்த்து அதனில் அடங்கி இருக்கும்.
“வாப்பா, உனக்கு நூறாயுசு! இப்பத்தான் உன்னப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்; (அல்லது) இப்பத்தான் உன்னப் பத்தி நெனச்சேன்”, என்பதிலும் நூறு வயதின் சிறப்பு வெளிப்படும்.
நூறு வயது வரை வாழ்தல் என்பதில் எனக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போய்விட்டது. ஒருவேளை குழந்தையாய் இருக்கையில் நான் நிறையத் தும்மி இருக்கலாம். அல்லது நிறையப் பேர் என்னைப் பற்றி நினைத்தவாறு இருந்திருக்கலாம்; பேசி இருந்திருக்கலாம் 🙂 .
“அம்பது அறுபதுன்னு ஆனாலே பொட்டுனு போயிடனும்”, என்று சிலர் தமது ஆயுட்கால விருப்பத்தைக் குறுக்கிக் கேட்டிருந்தாலும், நான் மட்டும் யார் என்னை எப்போது கேட்கினும், “எனக்கு நூறு வயசைத் தாண்டியும் வாழணும்” என்னும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். இரண்டு, நான்கு, ஐந்து வருடங்கள் கழித்தும் மாறாத என் பதிலைக் கேட்டு, “இன்னுமா உங்களுக்கு அந்த ஆசை தீரலை?” என்று மலைத்துப் போகிறார்கள். ‘இலக்கு மட்டுமல்ல; பயணமும் முக்கியமானது’ என்னும் சிந்தனையின்பால் சார்ந்ததினாலான விளைவாகவும் கூட இருக்கலாம்.
ஐம்பதில், அல்லது அறுபதில் போய்விட வேண்டும் என்றும், நூறு வயது தாண்டியும் இருக்க வேண்டும் என்றும் இரு மாறுபட்ட நிலைகளை எடுக்கும் பலரைக் கண்ணுறுங்கால், முதல்வகையில் பெரும்பான்மையினர் பெண்களாக இருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட அறிவியல்-சாரா குறை-தரவு அவதானம். அதற்கான காரணம் என்ன? உளவியல் சமூகவியல் சார்ந்த நிலைப்பாடு என்ன? என்று சிலசமயம் நான் ஆராய முற்பட்டதுண்டு. ஆனால் அவை பற்றி நாம் இப்போது பார்க்கப் போவதில்லை.
நூறு வயது வாழ்க்கை வேண்டுமெனில் உள்ளத்து ஆசை மட்டும் போதுமா? உடலையும் பேண வேண்டுமே. உடல் நலுங்காது, பயிற்சி காணாது, எந்நேரமும் கணினி முன்னமர்ந்த வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம் – உடலின் கொலசுடிரால், கொழுப்பு அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கும் சில ஆண்டுகள் முன்பு மருத்துவர் எச்சரிக்கை விடுத்துவிட்டார். சரிதான் என்று என் ஆயுசை நானே தொண்ணூறு எனக் குறைத்துக் கொண்டேன்.
“நான் சொல்றபடி கேட்டீங்கன்னா ஒடம்பு கொழுப்பு குறைஞ்சிடும்” என்பார் மனைவி! யோகாசனம், உடற்பயிற்சி பற்றிச் சொல்கிறாரா வேறு ஏதேனுமா என்று கேட்டால், “அதில் என்ன சந்தேகம்?” என்று ‘தெளிவாகப்’ பதில் வரும் என்பதால் நான் வாளாவிருந்து விடுவதுண்டு.
ஏதோ, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்கிற சில பயிற்சியாலும், உணவுப் பழக்கங்களில் ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதாலும், இப்போது சுயமாக ஒரு முன்னேற்றத்தை உணர்ந்து ஆயுசில் ஒரு ஐந்தைக் கூட்டிக் கொள்கிறேன். ஆக, தொண்ணூற்றி ஐந்தை எட்டியாயிற்று.
* * * *
அலுவல் நிமித்தமாய் வெளியூரில் இருக்கிறேன். நேற்றிரவு மகள்களிடம் பேசியபோது அரைமணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ததைச் சிறப்புச் செய்தியாகச் சொன்னேன்.
“கிரேட் அப்பா! உங்களுக்கு அது நல்ல உணர்ச்சியைத் தந்திருக்குமே?”
தங்கும் விடுதி பயிற்சிக் கூடத்தில், செய்யலாமா, வேண்டாமா என்ற பெரு மன ஊசலாட்டத்தின் பின் உறுதியாகக் காலையில் சுமார் 40 நிமிடங்கள் நடந்து வந்ததில் நான் சற்றே மன நிறைவை அடைந்தே இருந்தேன். ஆனால், பரவாயில்லையே… அது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது?
“ஆமாம் கண்ணா. நான் ரொம்ப நல்லாத் தான் உணர்ந்தேன். தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்ய எண்ணி இருக்கிறேன்”
“அப்பா, பரவாயில்லையே. உங்க புத்தாண்டுத் தீர்மானத்தைக் கடைப்பிடிக்கறீங்க போலிருக்கு!”
நம்மைப் பாராட்டிவிட்டார்களே என்று பூரித்துப் போய்த் தூங்கப் போன பிறகு இரவு இரண்டு மணிக்கு ‘விழிப்பு’ உண்டானது. பாவி மக்கள். என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அசந்தவரா நாம்? மீண்டும் அதனைப் பாராட்டாகவே எண்ணிக் கொண்டு சுய சாதனையில் மகிழ்ந்து போய் ஆயுட்காலத்தில் இன்னும் ஒரு ஆண்டைச் சேர்த்துக் கொள்கிறேன். புத்தாண்டு என்று ஒரு நாளை மட்டும் நாம் ஏன் எண்ண வேண்டும்? நமக்கு ஒவ்வொரு நாளும் புத்தாண்டே!
என்னைக் கிண்டல் அடிப்பதில் மக்கள் கைதேர்ந்து வருகிறார்கள். அன்றும் ஒரு நாள் காலையில் தரையில் சிதறிய ஏதோ ஒன்றைக் குனிந்து எடுக்கையில், அருகிருந்த மகள்,
“அப்பா, உங்க தலை சொட்டையாகத் தெரியுது”, என்றாள். அவசரமாய் நிமிர்ந்து முடியை ஒதுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தேன்.
“அது சொட்டை இல்லம்மா… அதுக்குப் பேரு சுழி. எனக்கு ரெட்டைச் சுழி இருக்கு தெரியுமா?”
“அதில்லை அப்பா…” என்றவளை மேலே பேச விடாமல் தடுத்தேன்.
“அது தாண்டா இது. ரெண்டு சுழிக்காரர்களுக்கு என்னாகும்னு சொல்வாங்க தெரியுமா? ” என்று ஆரம்பித்து, சரி இந்த விளையாட்டு இவர்களுக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
* * * *
சிறிது காலம் முன்பு அடர்த்தி குறையத் தொடங்கி ‘ஒளிவட்டம்’ காட்டுவதாய் எனக்கே ஐயப்பாடு எழுந்தாலும், அதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. தினசரி கொஞ்சம் எண்ணெய் பூசி மெழுகிவிட்டேன்.
ஆனாலும் இந்த உடல், நம் உறுதியோடு சரியான போட்டி போடுகிறது. அதன் அடுத்த ஆயுதமாக வெள்ளிக் கம்பியென ஒற்றை நரை முடியை மீசையில் வீசியது. பத்து இருபது நிமிடங்கள் செலவிட்டுக் கவனமாக நானும் அதனைப் பிடுங்கி எறிந்தாலும், மீண்டும் ஒரே மாதத்தில் இன்னும் ஒன்று முளைக்கிறது. மாதம் ஒன்றாக நான்கு மாதங்களாக ஒவ்வொன்றாகப் பிடுங்கினால், இப்போது ஒரே மாதத்தில் நான்காக விசுவரூபம் எடுக்கிறது. இந்த நிலையும் போரும் தொடர்ந்தால், கூடிய விரைவில் மொட்டை மீசை தான் மிஞ்சும் போலிருக்கிறது.
முகம் சிரம் தாண்டி மூளையில் கூட நரை விழும் போலிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுத் தொலைபேசி எண்கள் ஐந்து இலக்கங்கள் மட்டுமே கொண்டிருந்த காலத்துச் சங்கர் சதீஷ் செங்கோட்டுவேலுவின் எண்கள் 72520, 73740, 77365 என்பது இன்னும் நினைவில் இருந்தாலும், சிலசமயம் தற்போதைய எனது அலுவல் எண் நீட்சி மறந்து போய்விடுகிறது. எண்கள் மட்டுமல்ல, சில சமயம் பெயர்களும், நிகழ்வுகளும் சாயம் போய் விடுகின்றன. அல்லது வேறு வண்ணம் பூசிக் கொள்கின்றன. (அதற்குத் தான் ஒரு ஐ-போன் வாங்கிக் கொண்டால் எல்லாம் சரியாகிப் போகும் என்று வீட்டில் அடிபோட்டுக் கொண்டிருக்கிறேன்).
ஆயிரக்கணக்கில் உடன் பணிபுரிவோர் இருக்கையில் எல்லோரையும் அறிந்து வைத்திருக்க இயலாது. ஆனால், எப்படியாவது பெயர்கள் தெரியவந்தால், அவர்கள் எதிரே செல்லும்போது புன்னகைத்துவிட்டு, உள்ளுக்குள்ளே அவர்களது பெயர்களைச் சொல்லிக் கொள்வது எனக்கு ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால், சில நாட்கள் முன்பு எனது பிரிவிலேயே இருக்கும் பெண் ஒருவரின் பெயர் மறந்து போய்ப் படாத பாடு படுத்திவிட்டது. அதிக அறிமுகமோ, உரையாடலோ இல்லை என்றாலும் அப்போது தான் திருமணமாகிக் கடைசிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். முதல்ப் பெயர் தெரிந்தாலும், கடைசிப் பெயர் இரண்டுமே மூளை நரம்புகளில் புதையுண்டு போய் விட்டன. தொலைபேசிப் பட்டியலைப் பார்த்திருந்தால் நிமிடத்தில் தெரிந்திருக்கும் என்றாலும், எனது நினைவகத்தில் இருப்பதையே கிண்டி எடுக்க முயன்றேன். பல மணி நேரத்துக்குப் பிறகு, வீட்டுக்குத் திரும்புகையில் சட்டென நினைவுக்கு வந்தது. காரில் தனியே இருந்த காரணத்தால் கத்தி கத்தி அந்தப் பெயரைக் கூவினேன். ஒரு பாரமே இறங்கியது போன்ற நிம்மதி. காருக்கு ஒன்றும் ஆகவில்லை.
ஈரோட்டில் பிரப் ரோட்டில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் எனது எட்டாம்/ஒன்பதாம் வகுப்பு உயிரியல் ஆசிரியை திருமணம் செய்துகொண்டபோது எங்கள் வகுப்பே அங்கு தான் இருந்ததாக நினைவு. அவருடைய பெயர் கூட ‘பி’ என்னும் எழுத்தில் ஆரம்பிக்குமே என்பதைத் தவிர முற்றாக மறந்து விட்டது ஒரு நாள். திடீரென்று அவருடைய ஞாபகம் எப்படி வந்தது என்று நீங்கள் என்னைக் கேட்கக் கூடாது. பிலோமினா அல்ல. திலோத்தமாவா என்று எட்டிப் பார்த்த பெயரை முதல் எழுத்துப் பொருந்தாததால் நிராகரித்து விட்டேன். இப்படியே பலவாறாக யோசித்து, பலநாட்கள் கழித்து அது திடீரென மீண்டும் நினைவுக்கு வந்துவிட்டது. ‘ஐந்தெழுத்துப் பெயரைக் கண்டுபிடி’ என்று எனது பள்ளி நண்பர்கள் இதனைப் படித்தால் ஒரு சவாலாக இருக்கட்டுமென விட்டுவிடுகிறேன்.
சில சமயம் மனைவியையோ, மகளையோ விளிக்கையில் விளையாட்டாக, “ஆமாம்… உன் பெயர் என்ன?” என்று நான் கேட்பதுண்டு. எங்கே அது வினையாகிப் போகுமோ என்று பயமாக இருக்கிறது. சும்மா இருக்க முடியாத சில ஆராய்ச்சியாளர்கள் வேறு இப்போது ‘கொலசுடிரால்’ அளவு அதிகம் இருப்பதற்கும், வயதாகும்போது வரும் ஆல்சைமர்சு மறதி நிலைக்கும் தொடர்பு இருப்பதாக முடிச்சுப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.
என்ன இருந்தாலும் சரி. நூறு வயசு விருப்பத்தை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை. குழந்தைகளின் நலனுக்காக உயில் முதலியன எழுதி வைக்கலாம் என்று மனைவி நினைவுறுத்தும் போதெல்லாம், “தீர்க்க சுமங்கலி பவ”, என்று வாழ்த்துவது போல், “எனக்குச் சாவு இப்போதைக்கு வராது, நான் தான் நூறு வயது வரை வாழ்வேனே” என்று சொல்லி வந்தாலும், விரைவில் அந்த ஏற்பாடுகளைச் செய்து வைக்க வேண்டும்; இவை ஒரு தற்காப்பு நிலை தானே என்ற எண்ணம் யதார்த்தமாய் உண்டாவது வயது ஏறுவதால் அல்ல; அனுபவ அறிவாலும், முதிர்ச்சி நிலையாலும் தான் என்று, ஹலோ, உங்களிடம் தான் சொல்கிறேன்.
“எதற்காகப் புன்முறுவல் பூக்கிறீர்கள்?”
எதற்கும் ஐ-போன் வாங்கினால் சொல்கிறேன். மிச்சம் இருக்கிற நாலு வயதையும் கூட்டி நூறு வயது எனப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நன்றி. நீங்களும் பல்லாண்டு வாழ்க!
Aanaalum romba aasai Sir ungalukku. Ungal viruppam niraiverinaal neengal desathrogam seithavar aavirgal. Because enga veetil en husbandoda paati irukaanga, she is 100 years old. Avanga for the last 35 years oru veliyum seiyaam (no commitments), verumane saaputu saaputu thoogi life enjoy panaraanga. Till today she is very active and having normal food (we are vegetarians). Ippa maradhi viyadhi vandadinaala avanga kelvikku padhil solvadhrku oru aal podanumnu ninaikarom. Just joking… Vaazhka 100 years
கீதா ராம்குமார், ஆசைக்கு எதுக்குங்க அளவு போடணும் 🙂 . உங்க வீட்டுப் பாட்டி வாழ்க்கையை நினைச்சா நல்லாத் தான் இருக்கு. என்ன? கொஞ்சம் மறதி வந்திருதுன்னு சொல்றீங்க. மற்றபடி, ஜாலியா இருந்துட்டுப் போறாங்க (போறேன்). இதைப் போய் ஏன் தேசத் துரோகம்கறீங்க?! அப்புறம், உங்க வாழ்த்துக்கு நன்றி. பாட்டிக்கும் என்னுடைய வாழ்த்துச் சொல்லுங்க.
🙂
நல்ல பதிவு, செல்வா.
நூறாண்டு வாழ அப்பன் முருகன் அருள்வானாக. ஒளிவட்டத்துக்கே இப்படியா? ஏரோபிளேனே எறங்கற மாதிரி இருக்கறங்கவங்க நிலைமைய யோசிச்சு பாருங்க 🙂 நூறு வயசு இருந்தா தலையில ஏரோபிளேன்னெல்லாம் இறங்குங்கோ. 🙂
வயசானா மறதி வரும் அப்படிங்கறாங்க. ஆல்சைமர்சு அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்றாங்க. ஆனா வயதானவங்க அவங்க அனுபவத்தை வைச்சு நமக்கு நல்லது கெட்டது சொல்லுவாங்க அப்படின்னும் சொல்றாங்க. இங்க ஏரணம் சரிபட்டு வரலையே? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.
குறும்பன், கொஞ்ச நாளா வெளியூர்ப் பயணம் என்பதால் தாமதம். உங்க வாழ்த்துக்கு நன்றி. எங்க அப்பச்சியய்யன் வழியாக வந்தால் எனக்கும் ஏரோப்பிளேன் தளத்துக்கு வாய்ப்பிருக்கு. பாக்கலாம். 🙂
ஆல்சைமர்சும், அவங்க அனுபவப் பாடமும் குறித்து ஏரணத்தில் பெரும் சிக்கலில்லீங்க. ஒரே நபர் வெவ்வேறு காலகட்டத்திலும், ஒரே வயதில் வெவ்வேறு நபர்களும்னு யோசிச்சுப் பாருங்க. இந்த இரண்டு நிலைகளுமே அப்போது சாத்தியம் தானே?
நீங்க் நூறாண்டுகள் நலமா இருக்க வாழ்த்துக்கள்.. எங்கதாத்தா இப்பத்தான் 100 ஐ எட்டிப்பிடிச்சிருக்காங்க.. அவங்களோட ஒழுங்கு முறையான வாழ்க்கை முறையை ஆச்சரியமா பாத்துட்டு உக்காந்திருக்கோமே தவிர எங்களால் கடைபிடிக்கமுடியாதுன்னு நல்லாவே தெரியுது.. 🙂
முத்துலெட்சுமி, உங்க வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி. உங்க தாத்தா நூறை எட்டிப் பிடிச்சிருப்பதற்கும் மகிழ்ச்சி. இது ஒன்றும் முடியாத விசயமல்ல என்று ஊக்கம் சொல்ற மாதிரி சொல்லி இருக்கீங்க. (ஆனாலும் ஒழுங்கு முறையான வாழ்க்கை பத்தியெல்லாம் சொல்றீங்களே… வேற எதாவது சுலப வழி இருக்கான்னு விசாரிச்சுப் பாருங்க 🙂 )
ore vali thaan irukku to live 100 years,that is reduce your breath, as i already told you DO PRANAYAMA.every one is gifted with some number of breathes.if you use it fast your living time will reduce,if you use it slow your living time will go more than 100 years.anyhow our wishes for your 100 th birthday!enjoy long living!!
உங்க வாழ்த்துக்கு நன்றி சிவகிரி. பயனுடைய கருத்தா இருக்கலாம். ஆனா அதை முழு உண்மையா என்னால ஏத்துக்க முடியல்லே. பாக்கலாம். காலம் மாற்றலாம். அல்லது நானாக ஏதேனும் புதுத் தேற்றங்களை உருவாக்கலாம். அகத்தின் நிறைவும் ஆற்றலும் கூட நீண்ட ஆயுளுக்குப் பங்காற்றும் என நான் நினைக்கிறேன். வெறும் மூச்சு மட்டுமே அதைக் கொடுக்க முடியுமா?
உண்மை. உள்ளத்தில் வசந்தம்.
வாழும் விவரம் கண்டு நான் வியக்கிறேன்
அருமை . நல்லா இருக்கிறது சார்
இறைவன் நம் உடலில் பல வித தடுப்பு தந்து நம்மை பாது காக்கின்றான் . நாசியில் முடி தந்து தூசி போகாமல் தடுத்து விட அதனையும் மீறி பாதிப்பு வராமல் ஒரு நீர் சுரக்க (nasal congestion -Nasal congestion is the blockage of the nasal passages usually due to membranes lining the nose becoming swollen from inflamed blood vessels)வைக்கின்றான் அதற்கும் பின்புதான் தும்மல். நமது இதயம் கெடாமல் இத்தனை வகையாக பாதுகாப்பு கொடுத்த அந்த இறைவனுக்கேபுகழ் அனைத்தும் .
ஆனால் நாம் எடுத்த உடன் மருந்து (anti biotic)இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் கொடுத்து விடுகின்றனர் .
தும்மினால் முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை
Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning “Praise to God” or “All praise is due to Allah,”
“It produces calm and health to practice saying, “Alhamdulillah” for what we have and for what we are faced with. …”
Please visit:
http://blog.selvaraj.us/archives/316#comment-44595
மனைவியின் அருமை அறிய முதுமை தேவை
முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள்…….