Feed on
Posts
Comments

வாசிங்டனைச் சுற்றும் ஐ-495 என்னும் ‘பெல்ட்வே’யிற்குச் சற்று வெளியே, ‘ரவுட் 50’ஐ ஒட்டிய சிறு குன்றொன்றின் உச்சியிலே அமைந்திருந்தது ‘சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்’ என்னும் அந்த முதியோர் இல்லம். புதிதாக வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்துக்கொண்டு ஒரு சனிக்கிழமைக் காலையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது அவருக்குச் செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.

வெளிர் நீலச் சீருடை அணிந்த பணிப்பெண்களில் ஒருத்தி அன்றலர்ந்த வண்ணமலர்கள் சிலவற்றைக் கொய்து வந்து மேசைக் குடுவையினுள் வைத்துவிட்டுத் தினமும் போலவே அன்றும் “குட் டே மிஸ்டர் சின்னூ” என்று
புன்னகைத்துச் சென்றாள்.

செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிச் சின்னூ என்று அழைக்கப்பட்ட சின்னசாமி முருகையனுக்கு நினைவில் வருவதற்கு இரண்டே இரண்டு விசயங்கள் தான் இருந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கதை. அப்போது அவருக்கு என்ன ஒரு பத்து வயது இருந்திருக்கலாம்.

தன் பேரனுக்கும் இப்போது சுமார் பத்து வயது தானிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. அவருடைய ஒரே மகளின் ஒரே பையன். அசப்பில் பார்த்தால் தன் சாயல் இருக்கிறதோ என்று தோன்றினாலும் அதைத் தானாக வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார்.

பணிப்பெண் வாழ்த்தியதைப் போல, உண்மையிலேயே அவருக்கு இன்றைக்கு நல்ல நாள் தான். பல மாதங்களுக்குப் பிறகு மகளும் பேரனும் இன்று அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.
Continue Reading »

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை”

என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண செய்ய இயலாது விட்டுவிட்டோமா என எப்போதாவது பதைக்கிறேன்.

இது தான் பிரச்சினை. இந்த ‘எப்போதாவது’ எப்போதுமே இருந்திருக்க வேண்டும். தொடர்ந்த வலியுறுத்தலும் ஊக்கமும் இருந்திருந்தால் இந்நிலை அமைந்திருக்காது என்பதற்குச் சில காட்டுக்களையும் மகளது நண்பர் வட்டாரத்திலேயேவும் கண்டிருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் அதிக வலியுறுத்தல் எதிர்மறையாகப் போய்விடுமோ என்று அஞ்சியும் சற்றுக் குறைத்துக் கொண்டோம், என்பது சரியான காரணமா, ஒரு சாக்குத் தானா என்றும் கூடக் குழப்பம் தான். அப்படி ஒரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அதனைக் கையாளும் விதம் பற்றி முழுமையாகச் செயல்பட்டுச் சிந்தித்தேனா என்றால் இல்லை என்பதே சரியான பதிலாய் இருக்கும். வேறு பல காரணங்களையும் சாக்குகளையும் ஒன்றாகக் கலந்து இந்தப் பாதையை நாங்களே அடைத்தும் இருக்கலாம்.

இன்னும் கூட நம்பிக்கை இழக்காமல் இந்த விசயத்தை அவ்வப்போது கையில் எடுத்து ஆவண செய்ய முனைகிறேன். அதனால் குறைந்த பட்சம் எழுத்துக் கூட்டியேனும் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதனைச் செய்யாமல் விடுவது தான் குறை என்பதை உணர்ந்து முயல வேண்டும்.

தமிழோசையாவது வீட்டில் தவழ்வது உதவும் என்று சில நண்பர்கள் சொன்னபடி, தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றைப் பார்க்க, காட்ட எண்ணினோம். அதிலும், சதா சர்வ காலமும் ஏதேனும் ஒரு திரை முன் சடநிலையில் அமைந்து கிடப்பது உடலுறுதிக்கு நல்லதில்லை என்று தொலைக்காட்சி, கணினி, வீ போன்றவற்றின் நேரத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அதிகம் பார்க்கச் சொல்ல முடியவில்லை. அப்படியே பார்த்தாலும் ஏதேனும் சினிமாப்பாட்டு, நடன நிகழ்ச்சி, அல்லது அழுமூஞ்சித் தொடர்க்காட்சிகள் தான் தெரிகின்றன. அத்தொடர்களில் வருகிற அதீத பொய்யுலகைத் தான் நம்முடைய கலாச்சாரம், வாழ்வுமுறை என்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமா என்றும் தயக்கம்.

Thindal Murugan from ta.wikipedia.org (Thanks Kurumban)

Continue Reading »

handspringஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு நாற்பதிற்குள்ளாவது வளைத்துவிடலாமா என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதிலும் குறிப்பாக எனது மகள்களை ஏதேனும் பனிவழுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங் 🙂 ), நீச்சல், போன்ற வகுப்புக்களுக்கு எப்போதாவது அழைத்துச் செல்ல நேரும்போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் மேலெழும்.

ஆரம்பகால நுட்பியற் சிக்கல் ஒன்றால் மாறிப்போய்விட்ட அப்பிறந்தநாள், தாண்டிச்சென்றதெனக் காப்பீட்டுக்காரர்களெல்லாம் வாழ்த்துச் சொல்லி நினைவூட்டினாலும், நாற்பதென்னும் அவ்விலக்கை உண்மையில் எட்ட இன்னும் சுமார் ஐந்தாறு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக எதையும் வளைத்துவிடும் சாத்தியங்கள் அரிதென்பதால், அந்த எண்ணங்களை இனிக் கைவிட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது.

இப்படிச் சொல்வதால் நான் ஒன்றுமே முயன்றதில்லை என நீங்கள் நினைத்துவிடக் கூடாது. பதினைந்து வருடத்திற்கு முன்பே ஒரு முறை சின்சின்னாட்டி நகர மையத்தில் இருந்த பனியரங்கில் ஸ்கேட்டிங்கிற்கு முயன்று விழுந்து விழுந்து (இரண்டு முறை எழுதியது தவறுதலாக இல்லை) பழுத்த பிட்டப் பகுதி இன்னும் கூட ‘வலிக்குதுடா’ என்கிறது.

kiddie rideகால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றும் சாதா ஸ்கேட்டிங் கூடக் கற்றுக் கொள்ள ஆசை தான். சிகாகோ நண்பர் சுதாகர் கற்றுக் கொண்டிருந்த போது ஒரு முறை அவருடைய சக்கரக்காலணியை வாங்கிப் போட்டுப் பார்த்து, எழுந்து நிற்கக் கூட முடியாத ஒரு அவல நிலையைச் சந்திக்க நேர்ந்த பிறகு அந்த எண்ணம் முக்கால்வாசி போய்விட்டது. அவருடைய நண்பர் ஒருவர் கீழே விழுந்து பலத்த சேதாரத்தை நிரந்தரமாக அடைந்தார் என்று கேள்விப்பட்டபோது அந்த மிச்சக் கால்வாசி எண்ணமும் துப்புரவாகத் துடைத்தது போலப் போய்விட்டது.

இருந்தும், எனது பெண்கள் இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு சுற்றத் தொடங்கும் போதும், அவர்களைப் போன்ற சிறாரோடு சேர்ந்து இவ்வூர் அம்மா, அய்யன் எல்லோரும் இயல்பாகச் செல்லும் போதும், மீண்டும் அந்த ஆசை துளிர்ப்பது உண்டு.
Continue Reading »

இரண்டு, இரண்டரை வாரப் பயணமாக ஊர் போய் வந்தவனைப் பார்த்து, “ஊரெல்லாம் எப்படியப்பா இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டிருந்தால், ஒருவேளை “அப்படியே தாங்க இருக்கு”, என்று நான் கூறியிருந்திருக்கலாம். இன்னும் சிலரிடமோ “சுத்தமா மாறிப் போச்சுங்க” என்று முற்றிலும் முரணாகக் கூறியிருப்பேன். இரண்டு நிமிடத்தில் என்ன சொல்லவென்று யோசித்து “ஒரே கூட்டமாக இருக்குங்க” என்றோ, “இந்த வருடம் அதிக மின்வெட்டு இல்லை” என்றோ கூடக் கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், ஊருக்குள் மொத்தமாக இருந்த பத்து வீட்டில் பட்டணத்துப் பக்கம் போன நாலு வீடு போக மிச்சம் ஐந்தாறு வீடு மட்டுமே இருக்கும் சிறு பட்டி தொட்டிக் கிராமங்களில் கூட, பார்த்து ஐந்தாவது நிமிடம், “ஆமா அமெரிக்கா பூரா பன்னிக் காய்ச்சலாமே?” என்று கேட்கிறார்கள் என்பதைச் சொன்னேனா?

மழை பொய்த்ததால் காய்ந்து போன காட்டை விற்றுக் கைக்கு வந்த காசில் கந்து வட்டி ‘லைன்’ போட்டுப் பொருளாதார நிலையில் முன்னேறப் போராடுபவர்கள் கூட, “ஏப்பா, அமெரிக்காவுல என்னவோ பேங்க் எல்லாமே திவால் ஆகுதாமா?” என்றார்கள்.
Continue Reading »

ஏழரைச் சனியனுக்குப் பரிகாரம் செய்யத் திருநள்ளாறு போக வேண்டும் என்று சோதிடர் சொன்னதன் காரணத்தால் சிறுவயதில் பல ஊர்களுக்கு ஒரு பயணமாகச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதோடு விட்டுவிடவில்லை சோதிடர். வாரா வாரம் வெள்ளிக் கிழமை மாரியம்மனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கொண்டு போகவேண்டுமென்றும் யோசனையொன்றைச் சொல்லி வைத்தார்.

Chain from commons.wikimedia.org/wiki/File:Daisy_chain.svgசோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அந்தச் சோதிடர் மீது ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்தது என்பதாலும், வீட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இரண்டங்குல உயரச் சின்னத் தூக்குப்போசியை மிதிவண்டிக் கைப்பிடிக் கம்பியில் மாட்டிக் கொண்டு பிரப் ரோட்டு மாரியம்மனைத் தரிசிக்கச் சென்று வருவேன்.

நிற்க. கோயிலுக்கு வாரா வாரம் போய் வந்ததன் காரணமென்னவென்று நீங்கள் குறும்பாய்க் கேட்கும் முன் அப்போது நான் சிறுசிறுவன் என்பதும், இதை என் ஆன்மீக அனுபவங்களுக்கு ஒரு உதாரணமாகச் சொன்னேன் என்பதும் மட்டும் நீங்கள் ஏற்றுக் கொண்டு மேலே சென்றுவிட வேண்டும். சரியா?

கண்விழித்து எழுந்தபோதெல்லாம் ‘நல்ல தாயீ, மகமாயீ… ஆத்தா பரமேசுவரியை’ நினைத்து வணங்கி எழுந்த அப்புச்சித் தாத்தாவோடு வளர்ந்த நான் அந்த இறைநிறை காலத்திலும் கூட, ‘ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி துணை; இந்த மடலை இன்னும் பத்து பேருக்கு அனுப்பினீர்களென்றால் அதிர்ஷ்டம் அடிஅடியென்று அடிக்கும்; இல்லையெனில் இரத்தம் கக்கியோ லாரி மோதியோ சாவீர்கள்’ என்று வந்த தபால் அட்டைகளை ஒரு முறை கூட நம்பியதில்லை. பிய்த்துக் குப்பையில் எறிந்திருக்கிறேன். இன்று வரை எந்த லாரியும் மோதவில்லை.
Continue Reading »

« Newer Posts - Older Posts »