ஐந்தில் வளையாதது
Jul 9th, 2009 by இரா. செல்வராசு
ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு நாற்பதிற்குள்ளாவது வளைத்துவிடலாமா என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதிலும் குறிப்பாக எனது மகள்களை ஏதேனும் பனிவழுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங் 🙂 ), நீச்சல், போன்ற வகுப்புக்களுக்கு எப்போதாவது அழைத்துச் செல்ல நேரும்போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் மேலெழும்.
ஆரம்பகால நுட்பியற் சிக்கல் ஒன்றால் மாறிப்போய்விட்ட அப்பிறந்தநாள், தாண்டிச்சென்றதெனக் காப்பீட்டுக்காரர்களெல்லாம் வாழ்த்துச் சொல்லி நினைவூட்டினாலும், நாற்பதென்னும் அவ்விலக்கை உண்மையில் எட்ட இன்னும் சுமார் ஐந்தாறு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக எதையும் வளைத்துவிடும் சாத்தியங்கள் அரிதென்பதால், அந்த எண்ணங்களை இனிக் கைவிட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது.
இப்படிச் சொல்வதால் நான் ஒன்றுமே முயன்றதில்லை என நீங்கள் நினைத்துவிடக் கூடாது. பதினைந்து வருடத்திற்கு முன்பே ஒரு முறை சின்சின்னாட்டி நகர மையத்தில் இருந்த பனியரங்கில் ஸ்கேட்டிங்கிற்கு முயன்று விழுந்து விழுந்து (இரண்டு முறை எழுதியது தவறுதலாக இல்லை) பழுத்த பிட்டப் பகுதி இன்னும் கூட ‘வலிக்குதுடா’ என்கிறது.
கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றும் சாதா ஸ்கேட்டிங் கூடக் கற்றுக் கொள்ள ஆசை தான். சிகாகோ நண்பர் சுதாகர் கற்றுக் கொண்டிருந்த போது ஒரு முறை அவருடைய சக்கரக்காலணியை வாங்கிப் போட்டுப் பார்த்து, எழுந்து நிற்கக் கூட முடியாத ஒரு அவல நிலையைச் சந்திக்க நேர்ந்த பிறகு அந்த எண்ணம் முக்கால்வாசி போய்விட்டது. அவருடைய நண்பர் ஒருவர் கீழே விழுந்து பலத்த சேதாரத்தை நிரந்தரமாக அடைந்தார் என்று கேள்விப்பட்டபோது அந்த மிச்சக் கால்வாசி எண்ணமும் துப்புரவாகத் துடைத்தது போலப் போய்விட்டது.
இருந்தும், எனது பெண்கள் இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு சுற்றத் தொடங்கும் போதும், அவர்களைப் போன்ற சிறாரோடு சேர்ந்து இவ்வூர் அம்மா, அய்யன் எல்லோரும் இயல்பாகச் செல்லும் போதும், மீண்டும் அந்த ஆசை துளிர்ப்பது உண்டு.
* * * *
இவை மட்டுமா? பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு நடனம் கூடக் கற்றுக் கொள்ளலாம் என்கிற எண்ணம் எங்கிருந்தோ எனக்குள் புகுந்து கொண்டிருந்தது. இசை ஞானம், நாட்டியம் எல்லாம் மருந்துக்கும் இல்லாத பரம்பரையில் எப்படி இப்படியொரு எண்ணம் ஏற்பட்டது என்பது பெரிய ஆய்வுக்குரிய தலைப்பாகக் கூட இருக்கலாம்.
எனது எண்ணத்தை அப்போது நடனம் கற்றுக் கொண்டிருந்த சுற்றத்து அக்கா ஒருவரிடம் சொன்னேன். அவரோ, நான் என்னவோ வேடிக்கை செய்வதாய் எண்ணி, மெலிதாக நகைத்துவிட்டு, பிறகு சுதாரித்துக் கொண்டு,
“அதுக்கு பதிலா ஏதேனும் இசைக்கருவி வாசிக்கக் கற்றுக் கொள்ளலாமே” என்று நாசூக்காகத் தெரிவித்தார்.
‘ஆகா…’ என்று என்னுடைய ஏமாற்றத்தை எப்போதும் என்னுடன் இருந்த இளந்தொப்பையைத் தடவிச் சரிசெய்து கொண்டேன்.
கல்லூரி விழாக்களில் இசை நிகழ்ச்சி மேடைக்கு முன்னால் நண்பர் மக்கள் ஆடியபோதே சிறிதாகக் குத்தாட்டம் ஆடியாவது எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
இப்போது எனது மகள்கள் நடன வகுப்புக்களுக்கு போகும்போது, “பரவால்லீங்க, நல்லா ஆடறாங்க” என்று ஆசிரியை சொல்லும்போது, “ஆமாங்க… பரம்பரையில் இல்லேன்னாலும், நான் ஆடணும்னு நெனச்சிருக்கேன்ல. அது தான் ஈன் வழியாக வந்திருக்க வேண்டும்” என்று வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் நினைத்துக் கொள்வேன்.
இருந்தாலும், எங்கிருந்து இவள், இவர்கள் இப்படி ஒரு திறமையைப் பெற்றார்கள் என்று பூரித்தும் தான் போகிறேன். (காக்கை, தன் குஞ்சு, பொன் குஞ்சு என்று எதுவும் என் காதில் விழவில்லை 🙂 ).
‘தித் தை, தித் தித் தை’ என்று அவர்களைப் பின்பற்றி யாருமற்ற நேரத்தில் ஆடிப் பார்த்த போது தேவைப்பட்ட மூச்சுக் காற்றின் கொள்ளளவால், யாருக்கும் தெரியாமல் எனது சொந்த நாட்டியக் கனவை மொத்தமாகக் கைவிட்டேன்.
“ததிங்கிண தாம் திகதக தாம் இதையெலாம் கைவிட்ற லாம்”
* * * *
நெடுந்தொலைவு மிதிவண்டிப் பயணம் என்று வேண்டுமானால் அறியாத வயதில் ஒரு முறை சென்னை தொடங்கிப் பாண்டிச்சேரி வரை சென்றிருக்கிறேன். அறிந்த வயதில் அப்படி ஒரு தப்பை கென்டக்கியின் லூயிவில் முதல் லெக்சிங்டன் வரை செய்துவிட்டு, போதும் ஒரு வழி என்ற பொன்மனத்தோடு மிதிவண்டியைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு திரும்பினோம்.
வாழ்க்கையில் செய்ய வேண்டியவை எனப் பட்டியல் இட்டால் பலரும் ஒரு மேரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது என்பதை வைத்திருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அல்லது படித்திருக்கிறேன். இங்கு வாசிங்டன் அருகே இதற்கெனவே ஒரு கும்பல் இருக்கிறது. சத்தமாகச் சொன்னால் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. சென்ற மாதம் ஒரு வார இறுதியில் சந்தித்த நண்பர் கூட அரை மேரத்தான் ஓடுவதாகச் சொன்னார்.
பக்கத்தில் இருந்த ஒரு பதின்ம வயதுப் பெண்ணைக் காட்டி, ‘இதோ இந்தப் பெண் கூட ஓடுகிறார்’ என்றார். ஆகா, உறங்கும் புலியைத் தட்டி எழுப்பி விடுவார்கள் போலிருக்கிறதே என்று எண்ணியவாறு அமைதியாகி விட்டேன்.
“வாரா வாரம் பயிற்சிக்குப் போறோம். முதல்லே ஒரு மைல். அப்புறம் ரெண்டு மைல், மூணு மைல்னு கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து இந்த வாரம் பதிமூணு மைல் ஓடிட்டு வந்தேன்”
“…”
“அதோடு பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுப்பது போல் செய்தால், பெரிய வலியோ அசதியோ இல்லாமல் இருக்கிறது” என்றார்.
இந்த மேரத்தான் பற்றிய சுற்றறிக்கை வந்த போதும் இப்படித் தான், ‘நம்மால் முடியுமா, நாம் இதுவரை ஓடியது இல்லையே’ என்றெல்லாம் நினைக்காதீர்கள் என்றெல்லாம் ஆசை காட்டி மோசம் போக வைக்கப் பார்த்தார்கள். ஏமாறுவேனா என்ன நான்? அந்தப் பக்கம் திரும்பி மூச்சுக் கூட விடவில்லை.
ஒரு இரண்டரை நிமிடம் ஓடினாலே மூச்சு வாங்க நடப்பவனைப் பார்த்து, “வாங்க இருபத்தெட்டு மைல் ஓடலாம்” என்று கூப்பிட்டால் அதில் என்ன நியாயம் சொல்லுங்கள்?
இந்த ஓட்ட விசயம் சிக்கலான ஒன்று. கொலைவெறியுடன் கோரப் பல்லைக் காட்டியபடி ஒரு நாய் துரத்தினால் கூட இரண்டு நிமிடம் ஓடிவிட்டு, அதற்கு மேல், “இந்தா நாயே, கடிக்கறதுனா கடிச்சிக்கோ, இதுக்கு மேல ஓட நம்மால் ஆகாது” என்று நின்று விடுகிற ஆசாமி நான்.
சும்மா இல்லை. நானும் பள்ளிக் காலத்திலேயே இரண்டு நண்பர்களுடன் ஈரோடு பெருந்துரை ரோட்டில் ஆசிரியர் காலனி, குமலான் குட்டை என்று ஓடிப் பார்த்திருக்கிறேன். அப்போதும் அதே இரண்டரை நிமிடம் தான் ஓடியிருப்பேன். கூட வந்தவர்கள் முன்னே ஓடிக் கொண்டிருக்க,
“அப்படியேவா போயிருவீங்க. வீட்டுக்குப் போறதுக்கு இப்படித் தானே திரும்பி வரணும்”, என்று நான் பாட்டுக்கு நடையைக் கட்டிக் கொண்டிருப்பேன்.
* * * *
ஓட்டம் தான் ஆகாது, நடையாவது கட்டுவோம் என்று அண்மையில் ஆரம்பித்து, அறுபது வயதைத் தாண்டியவரோடு போட்டி போட்டுக் கொண்டு நடந்து பார்த்தேன். நடையின் முடிவில் மூச்சு வாங்க எப்போ ஓய்வு எடுக்கலாம் என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவரோ அலட்டாமல் ஒரு மணி நேரம் நடந்துவிட்டு,
“இன்னிக்குக் கொஞ்சம் வேகம் கம்மி தான். இன்னொரு ரவுண்டு போலாமா?” என்று அதிர வைக்கிறார்.
ஐந்து நாள் நடந்துவிட்டு, “சனி, ஞாயிறு எனக்கு ஓய்வு வேண்டும்” என்று கழண்டு கொண்டேன். அவரோ நாள் கிழமை பார்க்காமல், தவறாமல் ஐந்தரை ஆறு மணிக்குக் கிளம்பிவிடுகிறார்.
விட்டேனா பார் என்று, சிறிது நேரம் என்றாலும் சில நாட்கள் தனியே நடந்து பார்த்தேன். அப்படி வீரம் வந்த ஒரு நாளில் ‘அட நடை என்ன நடை ஓடியும் தான் பார்ப்போமே’ என்று இரண்டொரு நிமிடம் ஓடியும் பார்த்தேன். மேரத்தான் கனவு கூடச் சற்றே எட்டிப் பார்த்த நிலையில், ஆ… கொஞ்சம் பொறுங்கள். முட்டிக்குக் கீழே கொஞ்சம் வலிப்பது போல் இருக்கிறது. கணுக்கால் கூடக் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டாற்போல் இருக்கிறது.
‘நமக்கெதுக்கு சாமி இக்கு. ரொம்ப வளைத்து உடைந்து விடப் போகிறது’ என்று உள்மனது எச்சரிக்க, இப்போதைக்கு வருடம் ஒருமுறை விளையாடும் டென்னிசும், சிறுவர் குழாத்தோடு போடும் கரண ஆட்டங்களும் போதும் என்று விட்டுவிடுகிறேன். ஆனாலும், ‘அப்படி உட்ருவியா என்ன?’ என்று இன்னொரு பக்கம் உசுப்பேத்தி விடுகிறதே என்ன செய்ய?
நிற்க. இவை தவிர நடப்பதற்கென்று வாங்கிப் போட்ட இயந்திரங்களின் நலம் பற்றி நீங்கள் விசாரிக்கவில்லை என்றால் நானும் ஒன்றும் சொல்லவில்லை. சம்மதம் தானே?
* * * *
உங்க பொண்ணுங்க நல்லாவே ஆடுறாங்க! ஏதாவது ஒரு கலை கத்துக்கிடட்டுங்க, நல்லது தான்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இராம.கி.
////ஆமாங்க… பரம்பரையில் இல்லேன்னாலும், நான் ஆடணும்னு நெனச்சிருக்கேன்ல. அது தான் ஈன் வழியாக வந்திருக்க வேண்டும்” என்று வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் நினைத்துக் கொள்வேன். ////
:))
good job kids!
//ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு நாற்பதிற்குள்ளாவது .//
கண்டிப்பா வளைத்துவிடலாம்…. ஜஸ்ட் கீப் ட்ரை..
//இவ்வூர் அம்மா, அய்யன் எல்லோரும் இயல்பாகச் செல்லும் போதும், மீண்டும் அந்த ஆசை துளிர்ப்பது உண்டு.//
கரெக்டா சொன்னீங்க… நானும் பல சமயம் அவர்களை பார்த்து ஆசை பட்டது உண்டு…
//வாசிங்டன் அருகே இதற்கெனவே ஒரு கும்பல் இருக்கிறது//
செல்வா.. உங்களை போல தான் நானும் மேரத்தான் ஒட்டத்ததில் ஓட முடியுமா என யோசிச்சேன்… ஆனா ரொம்ப கஷ்டமா இல்ல… உண்மையாழுமா ரொம்ப நல்ல இருக்கு… முயற்சி பண்ணுங்க…எப்படியதாவது ஓடிடலாம்.. so அடுத்த வாரம் நாங்க உங்களை எதிர்பார்க்கலாம்…
ஐந்தில் வளைந்திருக்காவிட்டால் பரவாயில்லை, ஐம்பதில் வளைய முயற்சித்தால் கூட, ஓரிரண்டு ஆண்டுகளில் ஏதேனும் ஓரளவிற்கு வளையலாம்; இது அறுபது வயதில் வளைய முயற்சிப்பதைக் காட்டிலும் எளிதுதான்.
என்ன இப்படி பொசுக்குன்னு மாரத்தான் ஓட மாட்டேன்னு சொல்லிட்டீங்க? 🙂 . முழு மாரத்தான் முடியாவிட்டாலும் அரை மாரத்தான் ஓடுங்க. எனக்கு தெரிந்த பலர் முதல் முறையா ஓடி இருக்காங்க (முழு மாரத்தான்). நீங்க ஓடி முடிக்கிறிங்களோ இல்லையோ வாரா வாரம் சனிக்கிழமை விடியகாலையில் எழுந்து பூங்காவுக்கு போயிடுவிங்க :-)). (விடியகாலை எழுந்திருக்கும் பழக்கம் இல்லையென்றால் அந்த பழக்கம் வந்திடும்).
கூட்டமா ஓடும் போது அயற்சி ஏற்படாது (தெரியாது) என்பது உண்மை.
டென்னிஸ் தான் ஆடுவிங்கிளா? கைப்பந்து எப்படி? ஆடறாப்பள இருந்தா சொல்லுங்க.
இராம.கி அய்யா, செல்வநாயகி, நடனமாடியிருப்பதில் எனது பெண் ஒருத்தி மட்டுமே – பெரியவள் நிவேதிதா. சின்னவள் நந்திதா இப்போது தான் கற்று வருகிறாள் – இன்னும் மேடையேறவில்லை. வரும் செப்டம்பரில் அந்த இலக்கை எட்டுவாள். மனம் தயங்கிய பொழுதுகளையும் மீறிக் கற்றுக் கொள்ளப் பணித்தது குறித்து நன்றாக உணர்கிறேன்.
இருங்க பாலா. அவசரப் படாதீங்க. இந்த வருசம் நடந்து பார்க்கிறேன். ஓடுறத இப்போதைக்குத் தள்ளி வச்சுக்கிறேன். குறும்பன் வேற பொக்குனு போய்டுவாறாட்ட இருக்குது. அவர் சொல்ற அரை மேரத்தானுக்கு வேணும்னா ‘ஒருநாள்’ முயற்சி பண்ணிப் பாக்கலாம்.
குறும்பன், கைப்பந்துன்னா வாலிபால் பத்தி சொல்றீங்களா? வாரா வாரம் இந்தப் பகுதியில ஒரு கூட்டம் ஆட ஆரம்பிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். நானும் போலாம்னு நெனச்சிருக்கேன். கூட இன்னொருத்தரும் வரதா சொல்லி இருக்காரு. ஆமா, நீங்க இந்தப் பக்கமா இருக்கீங்க? இது பத்தி எதுக்குக் கேட்டிருக்கீங்க?
விஜயகுமார் சுப்புராஜ், நீங்கள் சொல்வதும் உண்மைதான். உந்துசக்திப் பக்கமாக உங்கள் வாதத்தையும் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி.
Got company!!!
கணுக்கால் வலி, முட்டி வலி, இடுப்பு வலி-னு இந்தியா போகும்போது ஊர்ல பெரிய டாக்டர், உள்ளூர் டாக்டர் அமெரிக்கால.. X-ray, MRI, physiotherapy.. எல்லாம் எந்த பயனும் இல்லை, இரண்டு வருசமா. டென்னிஸ் விளையாட போற இடத்துல குறைந்த செலவுல ஒரு 4-5 one hour sessions டென்னிஸ் fitness exercise, mostly stretching and warm-up, attend பண்ணினேன். அப்புறம் கிட்ட தட்ட சரியா போச்சு. The point is.. what appeared to be a big problem (and big pain) got resolved by some physical training and it stays away as long as we keep doing moderately intensive physical activities (say 10 minutes jogging per day).
அவங்களுக்கு பயற்சி அழிக்கவோ.. கூட விளையாட ஒரு ஆளாகவோ இல்லைனாலும் பரவாயில்லை.. குழந்தைங்கல பள்ளிகூடதுக்கோ, வெளில எங்கயாவது கூட்டிகிட்டு போகும்போதோ அப்பா fit-ஆ இருக்க வேண்டாமா? அவங்க காலேஜ் போற வரைக்கும். (அவங்க பெருமைக்காக?) Anything it takes to stay fit.. you got it.
அருமையான பதிவு, வாழ்த்துகள் செல்வராஜ்.
-Rajan
இளங்கோ, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் (ஒருமாதம் போல்:-) ) உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிற்குச் சென்றபோது அங்கு ஒரு 50+ வயதிருக்கும் ஒருவரும் வருவார். கூடவே கல்லூரியில் படிக்கும் மகள். மகளின் வற்புறுத்தலின் காரணமாக அங்கு வருகிறேன் என்று சொல்வதிலேயே பெருமிதம் இருப்பதாய் நான் நினைப்பதுண்டு. அது போல், நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நலமாக இருக்க ஏதேனும் ஒன்றில் ஈடுபடத்தான் வேண்டும், அது நமது குழந்தைகளின் பெருமிதத்திற்காகவும்.
ராஜன், ஊக்கத்திற்கு நன்றி.
செல்வராஜ்
அருமையான பதிவு.
மகளின் அல்லாரிப்பு அல்லது ஜதிஸ்வரம்
கண்டு மகிழ்ந்தேன்
நன்றாக ஆடி உள்ளாள்
.
பொறுத்திருந்து பாருங்கள் வர்ணம் மற்றும் பதம் ஆடும் பொழுது திகைத்து போவீர்கள்!!
பச்சை
ரசிக்கும் படியாக இருந்தது இந்தப் பதிவு….
எனக்கும் மராத்தான் கனவு எல்லாம் இருக்குது !!!!!! இப்படியே பதிவு உலகத்துல சுத்திகிட்டு இருந்தா ஒரு நாளைக்கு எங்க வாத்திங்க ஓட உடப்போறாங்க !!!!! அன்னைக்கு பார்த்துக்கலாம்….
அந்த வீடியோ நல்ல இருந்துச்சு !!!!
பச்சை (அக்கா), நன்றி. என்னென்னவோ சொல்றீங்க. பொறுத்துப் பார்க்கிறேன். இத விட நல்லா ஆடுன படத்த ஏன் போடலைன்னு கேட்கிறாள் மகள் 🙂
பதி, நன்றி. உங்கள் பதிபக்கமும் இப்போது தான் பார்த்தேன். விரிவாக இன்னும் பார்க்கவில்லை. பொறுமையாகப் பார்க்கிறேன். ஓட்டத்தைத் திட்டமிட்டுச் செய்தால் செய்துவிடலாம் என்று இங்கிருக்கும் மேரத்தான் குழுவினர் சொல்லியவண்ணம் இருக்கின்றனர்.
இவ்வளவு சிரித்து நாளாகி விட்டது. நன்றி செல்வராஜ்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் தெரியும் தானெ.
முயலுங்கள். இலக்குக் கண்ணுக்குத் தெரியும்:)
என் வைத்தியர் எனக்குச் சொல்லி இருக்கும் பழக்கம் இதுதான். மூட்டு வலியைக் காரணம் காட்டி நான் நடக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த சோகத்தைக் கொடுத்திருக்கிறது. அதுவும் சர்க்கரையௌய்ம் உடலில் கூட்டிக் காண்பிக்கிறதே.
அதனால் நானும் நடக்கப் போகிறேன்.
மாடியில் துணிகளை உலர்த்தப் பயன் பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெட்மில்லிலாவது பத்து நிமிடம்.
இல்லையானால் உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரை முதியோர்களோடாவது ஒரு மாலை நேரம் நடக்க வேண்டும்.
இந்த எண்ணத்தை உங்கள் பதிவு கொடுத்து விட்டது:)
கை காட்டிவிட்ட செல்வநாயகிக்கு நன்றி!!!!!!
Yr daughter’s video was good.
it was tastefully done.thank you.
//பதி, நன்றி. உங்கள் பதிபக்கமும் இப்போது தான் பார்த்தேன். விரிவாக இன்னும் பார்க்கவில்லை. பொறுமையாகப் பார்க்கிறேன். //
பார்த்துட்டு திட்டிகிட்டி போடாதீங்க !!!!!
//ஓட்டத்தைத் திட்டமிட்டுச் செய்தால் செய்துவிடலாம் என்று இங்கிருக்கும் மேரத்தான் குழுவினர் சொல்லியவண்ணம் இருக்கின்றனர்.//
அதுக்கு மொதல்ல, தொப்பையை கழட்டி வைச்சுட்டு ஓட பயிற்சி எடுக்குறேன் !!!!!! எப்போ பார்த்தாலும் கூட கூட்டிட்டு சுத்த சிரமமா இருக்கு…..
:'(
ரேவதிநரசிம்மன், நன்றி. நீங்க வேற கெளப்பி விடுறீங்க. பாக்கலாம். உங்களுக்கும் உந்துதலாய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கடற்கரை அருகில் காலையில் நடக்கும் அனுபவம் அண்மையில் ஒரு நாள் கிட்டியது. நல்லா இருக்குங்க.
பதி, உங்க பிரான்சில் மேல்படிப்பு குறித்த இடுகையைத் தெரிந்தவருக்கு அனுப்பி இருக்கிறேன். பயனுள்ளதாக இருந்தது. தொப்பை குறித்து நீங்கள் சொன்னது என்னவோ உண்மை தான். நானும் சொல்லித் தான் பார்க்கிறேன். கேட்கிற மாதிரி தெரியவில்லை. கூடக் கூடவே தான் வருது. 🙂
“இந்த ஓட்ட விசயம் சிக்கலான ஒன்று. கொலைவெறியுடன் கோரப் பல்லைக் காட்டியபடி ஒரு நாய் துரத்தினால் கூட இரண்டு நிமிடம் ஓடிவிட்டு, அதற்கு மேல், “இந்தா நாயே, கடிக்கறதுனா கடிச்சிக்கோ, இதுக்கு மேல ஓட நம்மால் ஆகாது” என்று நின்று விடுகிற ஆசாமி நான்.”
😀 😀
வணக்கம் செல்வராஜ்! நலந்தானே? புண்ணியவான் காசிக்கு நன்றி, அவர் பதிவிலிருந்து இங்கே குதிச்சேன்.
//சின்சின்னாட்டி நகர மையத்தில் இருந்த பனியரங்கில் ஸ்கேட்டிங்கிற்கு முயன்று விழுந்து விழுந்து // இதைத்தான் ஆகாத வேலைக்கு….ன்னு ஒரு பழமொழில சொல்வாங்க 😉 உடனே, முயற்சி திருவினையாக்குன்னு திருப்பியடிச்சீங்கன்னா ஒன்னுஞ்செய்யறதுக்கில்ல! 😉
வாங்க இராதாகிருஷ்ணன். உங்களப் பாத்து நாளாச்சு. எப்படி இருக்கீங்க?
இல்லைங்க. இப்பல்லாம் அத (ஸ்கேட்டிங்) முயன்று பார்ப்பதில்லை. அது ஏதோ பத்துப் பதினஞ்சு வருசம் முன்னாடி இளமைத் துடிப்புல செஞ்ச தப்பு. 🙂
Home away from home,
பரத நட்டியட்தில் ,கர்நாடக சங்கீதத்ல் உள்ள இனிமை எதிலும் கிடைக்காது .
பரத நாட்டியட்தில் ,கர்நாடக சங்கீதத்தில் உள்ள இனிமை எதிலும் கிடைக்காது . செவிகள் கேட்க சாரமது. நல்லா இருக்கு
அழகாய் இருக்கிறீர்கள், அழகான முயற்சிகளுடன்?