இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மிதிவண்டிப் பயணங்கள் – 4

May 23rd, 2006 · 7 Comments

…அன்றிலிருந்து சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை…

Kentucky, USA - Image (c) Wikipedia.Orgஅமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் ஒன்றான கென்டக்கியின் இரு பெரும் நகரங்கள் லூயிவில் மற்றும் லெக்சிங்டன் என்பவை. இவற்றினிடையே தூரம் சுமார் எண்பது மைல் இருக்கும். மாநிலத்தின் இரு பெரும் நகரங்கள் என்பது மட்டுமல்ல, இவை இரண்டு மட்டும் தான் ஓரளவாவது பெரு நகரங்கள் என்று சொல்ல முடியும். இரண்டிற்குமிடையே இருக்கும் ‘ஃபிராங்க்போர்ட்’ என்னும் சிற்றூரே இதன் தலைநகர். வளம்மிக்க ‘நீலப்புல் மண்டலம்’ என்று சொல்லப்படும் இந்தப் பகுதியை முன்னிருத்தியே கென்டக்கி ‘நீலப்புல் மாநிலம்’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

லூயிவில்லில் நானும் லெக்சிங்டன்-இல் பள்ளி நண்பர் ஒருவரும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அடுத்தடுத்த வருடம் வந்து சேர்ந்தோம். சென்னைக் கல்லூரியில் என்னோடு பயின்ற நண்பரும் லூயிவில்லில் மாணவராய் அடுத்த பருவத்தில் வந்து சேர்ந்தார்.

2006 Winner Barbaro - Image (c) http://sportsillustrated.cnn.comகென்டக்கி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது குதிரைகளும், அதன் பிறகு புகையிலையும் தான். தனிமனித வருவாயின் அடிப்படையில் நாட்டிலேயே கடைசிப் பத்தில் ஒன்றாக அமைந்திருந்தாலும், உலகத்துச் செல்வந்தர்கள் எல்லாம் கூடும் புகழ்பெற்ற டெர்பி குதிரைப் பந்தயம் வருடாவருடம் நடக்கும் இடமும் இது தான். இரண்டு நிமிடத்தில் முடிகிற ரோஜாவிற்கான ஓட்டம் பார்க்கப் பெருந்திரளாய்க் கூட்டம் லூயிவில்லின் சர்ச்சில் டவுண்ஸ் மைதானத்தில் கூடியிருக்கும். அந்த மைதானத்தின் அடுத்த தெருவில் தான் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் என்றாலும் டெர்பிப் பந்தயங்களுக்குச் சென்று பார்த்ததில்லை.

குதிரைப் பண்ணைகள், பந்தயங்கள், புகையிலைத் தோட்டங்களைத் தாண்டி, அண்மைய காலங்களில் தான் பிற தொழில்களிலும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது கென்டக்கி. குறிப்பாக, டொயோட்டா நிறுவனத்தின் வருகையின் பயனாகவும் தான்நகர்ச்சி (automobile) வண்டிகளைக் கட்டுமானித்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. புகழ்பெற்ற இன்னொன்று – அறுபத்தியைந்து வயதுக் கிழவர் கர்னல் சாண்டர்ஸ் ஆரம்பித்த கென்டக்கி வறுகோழிக் கடை. இன்று இந்தியா உட்பட அகிலம் முழுதும் பரவிக் கிடக்கிறது.

Cycle Trip '94 - Louisiville to Lexington, KY

கென்டக்கியில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய உண்டு. ஆறுகளும், ஏரிகளும், அடர்வனப் பகுதிகளும், மலைகளும், அருவிகளும் நிறைய உள்ள இடம். பெரும் பாறைகளாலான இயற்கைப் பாலங்களும், பல மைல் தொலைவுள்ள நிலத்தடிக் குகைகளும் அங்கு உண்டு. நீலப்புல் விரிவெளிகளையும், வெள்ளைத் தீற்றுக் கட்டை வேலிகளையும், அவற்றினுள்ளே வால்சொடுக்கிப் பாய்ந்தோடும் புரவிகளையும் காண்பதற்கு இதமாய் இருக்கும். அவசரப் பயணமாய் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் விலகிச் சிறிய சாலைகளில் பயணம் செய்வது இனிமையான ஒன்று. அப்படியான இயற்கைக் காட்சிகளில் ஆழ்ந்து மிதிவண்டியிலேயே லூயிவில்-இல் இருந்து லெக்சிங்டன் வரை சென்று வந்தாலென்ன என்று யோசனை விதையாய் விழுந்தது ஒரு நாளில். அந்த விருப்பு அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும், அப்படி நெடுந்தொலைவுப் பயணம் ஏதும் முன்னர் அமெரிக்காவில் பயணித்திருக்காத தயக்கம் வந்து தடுத்துக் கொண்டே இருந்தது.

இந்த எண்ணத்தை வெளியில் விடுவது தான் அந்தத் தயக்கத்தை உதற வழி என்று எண்ணி ஒரு வேனிற்கால மாலையில் இப்படியாக நான் ஒரு பயணம் செல்லப் போகிறேன் என்று அறிவித்தேன். சிலர் ஆச்சரியப்பட்டதில் என் ஊக்கத்தை அதிகரித்துக் கொண்டேன். அப்போது தான் வண்டி வாங்கியிருந்த சென்னை நண்பரும் இதனால் உந்தப் பட்டு, அரிய சாதனையில் (!) பங்கு கொள்ளும் ஆர்வத்தில் தலைக் கவசம் ஒன்று வாங்கிக் கொண்டு தயாரானார். வித்தியாசமான முயற்சிகளுக்கு என்றும் தயாராய் இருப்பவர். நல்லவேளை, துணைக்கு அவர் ஒருவராவது கிடைத்தார். இல்லையெனில் பயணம் மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும்.

இந்தியாவில் போலின்றி அமெரிக்காவில் மிதிவண்டியில் தூரப் பயணம் போவதில் பல சவால்கள் இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில் செல்ல இயலாது. விரைவு வண்டிகள் தவிர வேறெதற்கும் அங்கே அனுமதி இல்லை. மாநில நெடுஞ்சாலையில் செல்லலாம் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மிதிவண்டிக்கு என்று தனிச் சாரை எதுவும் கிடையாது. அதோடு அவற்றிலும் வேகமாகச் செல்லும் தான்நகர்ச்சி வண்டிகளும் கார்களும் அதிகம் இருக்கும். மிதிவண்டியில் செல்வோரை எதிர்பார்க்காத காரணத்தால் எரிச்சலுற்றுத் திட்டி விட்டுச் செல்லும் மனப்பாங்கு சிலருக்குண்டு என்பதையும் அறிய நேர்ந்தது. சாலைகளும் நிலப்பகுதியும் தட்டையாக இல்லாமல் பெரும் மேடு பள்ளங்களும், ஏற்ற இறக்கங்களுமாய் விரைவில் சோர்வை உண்டு பண்ணும். வழியில் அதிக ஊர்கள் இல்லாமல், அதிக மக்களைப் பார்க்க இயலாத தனிமைப் பகுதிகள் சிலவும் இருக்கும்.

Cycle Trip '94 - Louisiville to Lexington, KY

‘மவுண்டன் பைக்’ என்கிற மலைவண்டியை ஓட்டிச் சென்றதில், பின்சுமப்பி இல்லாததால் முதுகில் சுமந்து சென்ற பையில் நீர் முதலியவற்றின் கனம் சோர்வை அதிகரித்தது. ஆகஸ்டு மாத வெய்யல் உடலின் நீரை விரைவில் வற்றச் செய்தது. வெய்யவன் மேலே வரும் முன்னே சிறிது தூரம் சென்று விட வேண்டும் என்று எண்ணினாலும், சுமார் ஒன்பது மணிக்குத் தான் கிளம்பினோம். ஒரு மணி நேரத்தில் பத்தோ பன்னிரண்டோ மைல் சென்று விட்டோம். முதல் நிறுத்தத்தில் ஆற அமர்ந்து இரசித்து விட்டுக் கிளம்பினோம். அவ்வளவு நேரம் ஓய்வு அங்கு எடுத்திருக்கக் கூடாது என்பது போகப் போகப் புரிந்தது.

‘ஷெல்பிவில்’ தாண்டி மாநிலச்சாலை 60ல் சென்றுகொண்டிருந்தோம். சோர்வில் பாதியிலேயே திரும்பி விடலாமா என்று உண்டான யோசனைகளை உதறிவிட்டுப் பின்வாங்காமல் செலுத்திக் கொண்டிருந்தோம். அப்படியே முடியவில்லை என்றால் நண்பனை அழைத்து, காரில் வந்து அழைத்துச் செல்லப் பணித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை.

Cycle Trip '94 - Louisiville to Lexington, KY

வழியில் கண்ட காட்சிகள் அருமையாக இருந்தன. குதிரைப் பண்ணைகள், உலா வரும் குதிரைகள், பிரம்மாண்டமாய் வீடுகள் என்று அமெரிக்க நாட்டுப்புறம் வித்தியாசமாக இருந்தது. ஒரு குதிரைப் பண்ணையருகே புல்தரையில் அமர்ந்து சில நேரம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வெடுத்துக் கொண்டோம். காயப்போட்டுத் தொங்கிக் கொண்டிருந்த புகையிலைகள் கென்டக்கியின் வாசனையை வீசிக் கொண்டிருந்தன. மதிய உணவின்போது கிட்டிய உருளைக்கிழங்கு வறுவல்கள் மெக்டானல்ட்ஸ்-இல் கிடைப்பது போல் குச்சி குச்சியாக இல்லாமல் பெரிதாகத் துண்டு துண்டாக இருந்தது புதுமையாக இருந்தது.

தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது சாலை. சோர்ந்து கொண்டே இருந்தது உடல். இருவரிடமும் இருந்த தண்ணீர் ஒரு கட்டத்தில் தீர்ந்துவிட நீர்கிடைக்கும் அடுத்த நிறுத்தம் எங்கே என்று தேடியபடி கண்கள். அந்த நிலையில் முதன் முதலில் கண்ட ஒரு கடையில் வண்டியை நிறுத்திவிட்டு நீர் குடித்துவிட்டுக் குளிர்ந்த நீரால் உடல் முழுக்க நனைத்துக் கொண்டோம். வெகு இதம். அதோடு விறுவிறுப்போடு கிடைத்த ஒரு ‘மவுண்டன் ட்யூ’ பானம் பெரும் புத்துணர்வையே தந்தது. கனிவோடு சில சொற்களைக் கடைக்காரர் பகிர்ந்து கொண்டார்.

Cycle Trip '94 - Louisiville to Lexington, KY

ஃபிராங்க்போர்ட் பகுதியில் செங்குத்தாகச் சென்ற மலைப்பகுதியில் ஓட்டுவது சாத்தியம் இல்லை என்று சில நிமிடங்கள் இறங்கித் தள்ளிக் கொண்டு சென்றோம். சாலையோரத்துப் பூங்கா ஒன்றில் இருந்து தூரத்தில் தெரிந்த தலைநகரக் கட்டிடக் கோபுரத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தோம். மாலை ஆக ஆக சற்று வெப்பமும் தணிந்தது. ஃபிராங்க்போர்ட் – லெக்சிங்டன் பகுதியில் ஓட்டிச் சென்றது நன்றாக இருந்ததால் அதன் பிறகு நீண்ட ஓய்வுகள் எதுவும் எடுக்கவில்லை.

இரு தினங்கள் கழித்துத் திரும்பும் திட்டத்தை வழியிலேயே கைவிட்டுவிட்டேன். மிதிவண்டியில் வந்த அனுபவம் போதும் என்று திரும்புகையில் காரில் வந்துவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டேன். அன்று மாலைக்குள் சென்று சேர்ந்து விடுவோம் என்று நினைத்திருந்தாலும், அங்கங்கே எடுத்துக் கொண்ட ஓய்வாலும், நினைத்த வேகத்தில் செல்ல முடியாத சோர்வாலும் நண்பரின் வீட்டை அடையும் போது இருட்டி விட்டது. மணி பத்து ஆகியிருந்தது. எனினும் நெருங்க நெருங்கச் சந்தோஷம் புகுந்து கொண்டது. UK (Univ of Kentucky) என்ற பலகை மாட்டிய சாலைக் கம்பங்களைக் கண்டு வேகம் அதிகரித்தது. நினைத்த நேரத்தில் முடிக்கவில்லை என்றாலும் பயணத்தை முடித்ததே பெருமையாக இருந்தது. எண்பது மைல் தூரத்தை மொத்தம் 13 மணி நேரத்தில் கடந்திருக்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு 11 மைல் வேகத்தில் ஏழரை மணி நேரம் ஓட்டியும், ஐந்தரை மணி நேரம் ஓய்வெடுத்தும் சென்றிருக்கிறோம். நிச்சயமாய்த் தனியாய் வந்திருந்தால் பெருஞ்சிரமம் என்பதால் உடன் வந்த நண்பருக்கு இன்றும் ஓக்லஹோமாவை நோக்கி ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இரண்டும் ஐந்துமாய் எண்கள் குத்தி வைத்து இரவிலே நான் வெட்டவென்று ஒரு ‘கேக்’ வாங்கி வைத்திருந்தார் லெக்சிங்டன் நண்பர். அன்றோடு என் வாழ்வில் கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தன. ஒன்றைச் சாதித்த நெஞ்சத்தோடு காலத்தில் இன்னும் முக்கால்வாசி கடக்க இருக்கிறது (:-) ) என்று எண்ணிக் கொண்டு ‘உஃப்’ என்று ஊதியணைத்தேன்.

அதன்பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த போதும் இன்னும் இருக்கிறது அந்த மிதிவண்டி, கார் நிறுத்தகத்தின் மூலையொன்றில் பாவமாய் ஒட்டடை சுமந்தபடி.

-(முற்றும்).

Tags: பயணங்கள்

7 responses so far ↓

  • 1 வெளிகண்ட நாதர் // May 23, 2006 at 11:06 pm

    //உலகத்துச் செல்வந்தர்கள் எல்லாம் கூடும் புகழ்பெற்ற டெர்பி குதிரைப் பந்தயம் வருடாவருடம் நடக்கும் இடமும் இது தான்.// இங்கு santa anita டெர்பியில் அதிகம் கென்டக்கி குதிரைகள் ஜெயிக்கும். நான் எப்போதாவது போய் பார்க்கும் பொழுதெல்லாம்!

  • 2 krishnamurthy // May 30, 2006 at 3:19 am

    சுகமாயிருந்தது உம்மோடு பயணித்தது.

    உம் பதிவால் உந்தப்பட்டு, இப்போது காலையில் மகனை பகல் நேரக் காப்பகத்துக்கு சென்று விடுவதும், மாலையில் பல்கலைக்குச் செல்வதும், மிதிவண்டியிலேயே. மகனுக்கு பிறந்த நாள் பரிசும் மிதிவண்டியே!!

  • 3 செல்வராஜ் // Jun 1, 2006 at 9:15 pm

    சிறு மாற்றங்களுடன் இந்தப் பதிவு திசைகள்: ஜூன் 2006 இதழில் வெளிவந்திருக்கிறது. திசைகளுக்கும் ஆசிரியர் அருணாவிற்கும் நன்றி.

    வெளிகண்ட நாதர், கிருஷ்ணமூர்த்தி உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி. மகனுக்கும் மிதிவண்டியுடன் நல்லனுபவங்கள் உருவாகட்டும் கிருஷ்.

  • 4 வாசன் // Jun 2, 2006 at 12:39 am

    உங்களுடைய மிதிவண்டி பயணங்கள் தொகுப்பை படிக்க 2 நாளைக்கு முன் வாய்ப்பு கிடைத்தது.

    கடைசி பகுதியை, கோரிமேடிலிருந்து புதுவைக்கு போகும் சரிவுச்சாலையில் காலை சுழற்றாமல் வேகமாய் போகிற மாதிரி முடித்து விட்டீர்கள் !

    நிற்க.

    லேன்ஸ் ஆர்ம்ஸ்றாங் மேல் ஏதும் தவறு கிடையாதுன்னு முடிவு வந்திருக்கு..ரொம்ப நல்ல விடயம், இல்லையா..

    நன்றி செல்வராஜ்.

  • 5 செல்வராஜ் // Jun 2, 2006 at 11:00 am

    வாசன், நன்றி. சரிவுச்சாலைகளில் பயணம், அதுவும் நெடுந்தொலைவு மிதிக்குப் பின் கிடைக்கும் ஓய்வாய் அமையும்போது, வியர்வையைத் துடைத்துச் செல்லும் காற்றின் பின்னணியில்… அருமையான உணர்வை நினைவுறுத்தினீர்கள்.

    லேன்ஸ் பற்றி அவரது தொடர்ந்த வெற்றியைக் கண்டு வியந்து, மன/உள்ள உறுதியைப் பாராட்டியிருக்கிறேன். அண்மைய செய்திகளை அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொன்ன பிறகு பார்த்து அறிந்துகொண்டேன்.

    நாம் உயரத்தில் வைத்திருக்கிறவர்கள் கீழே விழும்போது சோகமாய் இருக்கும். லேன்ஸ் விதயத்தில் அப்படி இல்லாமல் இருப்பது நல்லது தான். எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு வீரர் – அப்படி எதுவும் கெட்ட பெயர் எடுக்காத நிலையில் மகிழ்வைத் தந்தது – கபில்தேவ்.

  • 6 டிசே // Jun 2, 2006 at 12:04 pm

    செல்வராஜ், இப்போதுதான் உங்களின் மிதிவண்டிப்பயணங்களின் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து முடித்தேன். அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.ஏதோ உங்களுடன் சேர்ந்து நானும் மிதிவண்டியில் பயணித்தமாதிரியான உணர்வைத்தந்தது. நன்றி.

  • 7 priya // Jan 15, 2008 at 3:58 am

    romba nalla post ky a pathi potirukeenga.. ore malarum ninavugal!!