இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அன்புள்ள ரஜினிகாந்த்

May 30th, 2006 · 10 Comments

Rajini - Img from Rajinikanth.comஅடிப்படையில் நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை வெளி வந்து 400 நாட்களுக்கு மேலான நிலையில் அண்மையில் வீட்டில் மகள்களுடன் பார்த்த சந்திரமுகி படத்தின் போது மீண்டும் உணர்ந்து கொண்டேன். படம் வந்த முதல் நாளோ முதல் வாரமோ கிழித்துப் போட்ட காகிதப் பூச்சொரியலின் பின்னணியில் பார்த்துக்கொண்டு சீக்கியடிக்கிற தீவிர ரசிகன் இல்லையென்றாலும், வாய்ப்புக் கிடைக்கிற போது தவறவிடாமல் பார்த்ததுண்டு. பாபா வந்தபோது கூடப் பல நாட்கள் கழித்துத் தான் பார்த்தேன் என்றாலும் அது அவ்வளவாகப் பிடிக்காமல் போனதற்கு அடிப்படை ரஜினி படத்திற்குத் தேவையான விதயங்கள் கூடச் சரியாய் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். சொந்த வாழ்வின் ஆன்மீகத் தேடல் மந்திரங்களையும் புகுத்தி ஒரு இரண்டும்கெட்டானாக ஆக்கியிருந்தது தான் பரவலான படத்தோல்விக்குக் காரணமாயிருக்கலாம். அந்த ஆன்மீகச் சமாச்சாரங்களே படத்தைப் பிடிக்கச் சிலருக்குக் காரணமாயிருந்தது என்றாலும் அப்படிப்பட்டோரின் எண்ணிக்கை குறைவு. அது வேறொரு கூட்டம்.

வில்லனாயிருந்து தீவிர நாயகனாகிப் பின் வேடிக்கை கலந்த கதாநாயகனாகிய ‘தம்பிக்கு எந்த ஊரு’ காலகட்டத்தில் நன்றாக ரசித்திருக்கிறேன். ரஜினியின் நடிப்புக்கோ திறமைக்கோ எதிராக எழுந்த/எழுகிற விமர்சனங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘நான் பொல்லாதவன், பொய் சொல்லாதவன்’ என்றவனின் ‘பொதுவான சிங்க மனதை’ பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ‘வாழும்போதும் செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா’ என்று கிளம்புகிறவனைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன். எல்லோரையும் போல், அவருக்கு நடிக்கத் தெரியும் என்று சொல்லவென்றே வந்த சில படங்களாக ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, என்று நானும் சிலவற்றை அடுக்கியிருக்கிறேன். கமலா ரஜினியா என்று காலத்தில் நீங்காதெழுகிற வாதங்களில் பெரிதான ஒரு காரணமோ (reason) ஏரணமோ (logic) இன்றி ரஜினி பக்கமாகச் சாய்ந்திருக்கிறேன்.

‘சந்திரமுகி’ வந்த புதிதில் எழுந்த விமர்சனங்களை வலையுலகில் நிறையப் படித்திருந்தாலும் அவை சொன்ன ஓட்டைகள் குறைகள் முதலியன படம் பார்க்கிற போது பெரிதாக உறுத்தவில்லை. நல்லதொரு ‘ரஜினி படம்’ பார்ப்பதற்கென்று இருக்கின்ற ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டால் ரஜினியின் கால்சுழற்சியில் இயல்பியல் விதிகளுக்கெதிராய் எழுகின்ற சருகுகளைப் பற்றிய அறிவுய்தி ஆய்வுகள் தோன்றாது. அவை வெறும் உயர்வுநவிற்சியாய்க் காட்சிப் பட்டிருக்கிற கற்பனைகள். மாபாரதத்திலும் இராமாயணத்திலும் பாய்கின்ற அம்புகள் பல காத தூரம் பாய்ந்து ஒன்றை ஒன்று தேடிச் சென்று மோதுவதை ஒத்துக் கொள்ள முடியும் போது ஒரு கதை என்னும் அளவில் காட்டப்படுகிற இந்தக் கற்பனை நிகழ்வுகளை அதே உப்போடு சேர்த்து ஏன் விழுங்க முடியாது?

Rajini - Img from Rajinikanth.com‘லகலகலகலக’வென்னும் ஜோதிகாவின் நடிப்புப் பெரிதாகச் சிலாகிக்கப் பட்டது நியாயம் என்றாலும், அதையே வேட்டையனாக வரும் ரஜினி செய்வதிலும் ஒரு சிறப்பு இருக்கத் தான் செய்தது என்று எனக்குத் தெரிந்தது. திராவிட அரசியல் கழகங்களுக்கு என்று இருக்கிற மாறா ஓட்டு வங்கியைப் போல, வழக்கமாய் இருக்கிற ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தும் ஒரு படமாக அமைந்திருந்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். கமலைப் போல் எப்போதும் புது முயற்சிகளும் தானே உயர்த்திக் கொள்கிற இலக்குகளும் அதைச் சதா எட்ட முனையும் முயற்சிகளும் ரஜினிக்குத் தேவையில்லை. ஒரு நல்ல ‘ரஜினி படம்’ மட்டுமே தேவை.

இன்று நான் எழுத எண்ணியதோ ‘சந்திரமுகி’ பற்றியல்ல. எனது பெண்களுக்காகவென்று அண்மையில் வாங்கி வந்து இன்று ஓடிக் கொண்டிருக்கிற இருபது வருடம் முந்தைய படம். ‘ரஜினி அங்கிள், நான் இங்க இருக்கேன்’ என்ற பேபி மீனாவின் குரல் அழைக்கின்ற ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. ஒரு கருணை இல்லத்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டாளே என்று அன்னையை வெறுத்தபடி அனைவரது அன்பையும் கவனிப்பையும் தூக்கி எறிகிற ஒரு சிறுமி, ‘குட்டி யானையைத் தன் தாயோடு சேர்ப்பதற்காக எவ்வளவு தூரம் கஷ்டப் பட்டாரு!’ என்று நிழலுகைக் கண்டு (அன்னை ஒரு ஆலயம்) மருகி, நிஜ உலகில் இலகி மனிதரோடு ஒன்றுகிற நிகழ்வைக் காட்சிப் படுத்துகிற வித்தியாசமான படம்.

Rajini - Img from Rajinikanth.comதன்னுடைய கதாபாத்திரம் தானாகவே ஒரு முழுப் படத்திற்கும் வரும்படி நடித்திருப்பவர்களில் எனக்குத் தெரிந்து ரஜினி ஒருவர் தான். அது ஒரு தனித்துவம், ஆனால் சிறப்பொன்றுமில்லை என்று வாதம் எழுந்தாலும், ஒரு கருணை இல்லத்துக் குழந்தைகளுக்காக என்று இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பதற்குப் பாராட்டலாம், தவறில்லை. ஆனால் அந்தக் குழந்தையைப் போல நிழலுலகையும் நிஜ உலகையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ரசிகர்பட்டாளம் தான் ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது (கொண்டிருந்தது?).

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்கவென்று வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாது ரோசி துப்பிவிடுவதையும் கொடுத்த பூங்கொத்தைக் குப்பைத் தொட்டியில் எறிவதையும் நிதானமாய் ஏற்றுக் கொண்டு, சினந்துகொள்கிற காப்பாளரைக் கனிவோடு தடுத்துப் புன்னகைத்துச் செல்கின்ற காட்சியில் இருந்தே நிறைவாகச் செய்திருக்கிறார் ரஜினி. ‘புன்னகை மன்னன்’ என்று வேறு யாருக்கோ பெயர் கொடுத்தது யார்?

குழந்தைகளின் முன்னிலையிலும் புகையை ஊதித் தள்ளிக்கொண்டிருந்த காட்சிகள் சற்று நெருடியது என்றாலும் இராமதாஸ்/அன்புமணி காரணமாக அண்மைய படங்களில் புகையை விடுத்து ஒயிலாக மெல்லுஞ்சவ்வு தூக்கிப் போட்டுப் பிடிக்கும் காட்சிகள் வர ஆரம்பித்திருப்பது வரவேற்கக் கூடியது. அரசியலும் உட்காரணங்களும் ஆராயாமல் பார்த்தால், இராமதாஸ் போன்றவர்களின் எதிர்க்குரலுக்கும் அர்த்தம் இருக்கிறது என்பது கண்கூடு. ரஜினி போன்ற குரவத்தன்மை (leadership) கொண்டவர்கள் கூடப் போதுமான சமூக அக்கறை காட்டவில்லையே என்று எழுகிற ‘பாட்டாளி மக்களின்’ குரல்களும் ஒரு சமன்பட்ட மக்களாட்சிக் குமுகாயத்திற்கு அவசியம்.

நடிப்பிலே இமயம் என்று சிலாகிக்க முடியாவிட்டாலும் ரஜினிக்குக் குழந்தைகளிடத்தே அன்பு காட்டும் எளிமையும் இதமும் இலகுவாக வருகிறது. சோகம் என்கிற உணர்ச்சியைக் காட்ட முகச்சதைகள் துடிதுடிக்கக் கண்ணீரும் கம்பலையுமாய்க் கதறுகிற நாட்டிலே, நா தழுதழுக்க நீள் வசனங்கள் பேசுகிற காலத்திலே ரஜினியின் அலட்டாத நடிப்பு ஈர்க்கிறது. இது ஒரு ரசிகப் பார்வையெனும் கட்டுக்கூறுக்குள் வந்துவிடுமா என்று தெரியவில்லை, ஆனால், ரோசி மறைந்த பிறகு எழுகிற போது விடாமல் பற்றியிருக்கும் அவளது கையை விலக்கக் கூடத் தெம்பில்லாது, சோர்ந்து உட்கார்ந்து பனித்த கண்கள் இமைக்க, கறுத்த முகவாயில் உள்ளங்கை வைத்து நிலம் பார்க்கும் போதும் சரி, கருணை இல்லத்தை விட்டு விலகும் போது காரில் ஏறும் முன் திரும்பிப் பார்க்கும் வெற்றுப் பார்வையிலும், சலுப்பில் குலைந்த தோளுறுதியோடு இறுகிப் போவதும் சிறந்த நடிப்பென்றே எனக்குத் தோன்றுகிறது.

சோகம் என்னவெனில், இப்படியான அலட்டலில்லாத நடிப்பை, அந்நியனின் கணிமயப்பட்ட பளபளப்பில் மயங்கிப் போன உலகில் இன்னொரு “சிவாஜி” வந்தாலும் பார்க்க முடியாது என்பதே.

Tags: திரைப்படம்

10 responses so far ↓

 • 1 கில்லி - Gilli » AnbuLLa Rajinikanth - Selvaraj // May 30, 2006 at 11:21 pm

  […]

 • 2 krishnamurthy // May 31, 2006 at 12:21 am

  மணிசித்திரத்தாழுவை அனுபவித்துப் பார்த்ததினாலேயே, சந்திரமுகி அவ்வளவாக ஈர்க்கவில்லை, வேட்டையனாக ரஜினி வரும்வரை. அதிலில்லாத இச்சேர்க்கை, அவரின் நடிப்புக்கும், கற்பனைக்கும் சான்று.

  குழந்தைகள், சிறார்கள் குதூகலிக்கும் கலைஞன் அவர். அவரது புகைப்பழக்கம் எத்தனை சிறார்களுக்கு தூண்டுகோலாய் இருந்திருக்குமோ என நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. நல்ல வேளை, ராமதாஸ்களின் சீண்டல்களால் அக்காட்சிகள் இல்லாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

  ஒரு நல்ல ரஜினி படம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதுதான் இன்றைய தமிழ்பட உலகின் கற்பனைத் திறன். பார்க்கலாம், சிவாஜியில் ரஜினி சிவாஜியாகிறாரா என்று.

 • 3 மீனாக்ஸ் // May 31, 2006 at 12:48 am

  ரசித்துப் படித்தேன். சுவையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

 • 4 "Rajni" Ramki // May 31, 2006 at 3:21 am

  //ஆனால் அந்தக் குழந்தையைப் போல நிழலுலகையும் நிஜ உலகையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத ரசிகர்பட்டாளம் தான் ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது (கொண்டிருந்தது?).

  மாயா மாயா எல்லாம் மாயா.. சாயா சாயா எல்லாம் சாயா! 🙂

 • 5 ஜெயக்குமார் // May 31, 2006 at 8:27 am

  உங்களை, மிகுந்த ரசனை மிகுந்தவர் என்று நினைத்த என் நினைப்பு இந்த பதிவின் மூலம் சற்று பொய்த்துப்போய்விட்டது.

  இருந்தாலும் எழுதிய விதம் அருமை.

  தமிழ் சினிமா, இவர்களால் தரம் கெட்டுப்போகட்டும்.

 • 6 Vimala // May 31, 2006 at 6:18 pm

  Rajni movies are feel good movies(ie he never fails)…In that sense it is good to watch.

 • 7 சிறில் அலெக்ஸ் // May 31, 2006 at 7:22 pm

  இதப் பாருங்க..
  http://theyn.blogspot.com/2006/05/blog-post_114910667841552694.html

 • 8 செல்வராஜ் // May 31, 2006 at 8:47 pm

  பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. முதல் வாசகராய் “வீட்டிலேயே” இடிவாங்கிவிட்டுத் தான் இந்தப் பதிவு வெளிவந்திருக்கிறது என்பதால் எல்லா வகை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன் 🙂 !

 • 9 செல்வராஜ் 2.0 » Blog Archive » எண்ண உருவகங்களும் அன்பே சிவமும் // Jun 22, 2008 at 1:15 am

  […] சந்திரமுகி காலத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் பற்றி எழுதிய பெருமை கொண்டவன் […]

 • 10 ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். // Mar 17, 2010 at 7:01 am

  ஒரு சாதாரண ரசிகன் என்ற பார்வையில் வியப்பாய் தெரியவில்லை. ஆனால் இன்று செல்வராஜ் என்றொரு பிம்பம் இரண்டு நாட்களாக உருவாகி உள்ளே இருந்தது இந்த கட்டுரையை படித்த போது ரசிப்பு என்பதற்கு நோக்கம் வரையறை தன்மை என்று எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொண்டேன்.