பாபா – ஒரு குழந்தைகள் படம்
Nov 5th, 2003 by இரா. செல்வராசு
சென்ற வாரத்தில் பார்த்த பாபா படத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. எல்லோரும் ‘பாய்ஸ்’ பட விமரிசனம் எழுதிக் கொண்டிருக்கும் போது ‘பாபா’ என்கிற அரதப் பழைய படம் பற்றி எழுதுகிறேனே என்று பார்க்காதீர்கள். நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ! (இது ஒரு பாபா வசனம் :-)). ஏற்கனவே பல விமர்சனங்கள் படித்திருந்ததால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் பார்க்க அமர்ந்தோம். ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும் பார்ப்பவர்களின் அந்த நேர மனநிலையையும், அது உண்டாக்கும் விளைவுகளையும் பொருத்தும் அமைகிறது என்பது என் எண்ணம். அந்த கண்ணோட்டத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், அமெரிக்காவில் வளரும் என் ஐந்து வயது மகள்.
தமிழ்ப்படம் என்றாலே ‘boring’ என்று எழுந்து சென்று விடும் அவள், இந்தப் படத்தை ஆர்வமாய்ப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தாள். கூடவே அமர்ந்து ‘இப்போ என்ன ஆச்சு? இப்போ என்ன பேசராங்க ?’ என்று கேட்ட அவளிடம் விரிவாய் விளக்கிக் கொண்டிருந்தும் நான் படத்தில் எதையும் இழக்கவில்லை. அவளுடைய கேள்விகளுக்கு செவி மடுத்துப் பதில் இறுக்கும் சமயம் எதையாவது இழந்து விடுவோமோ என்று கருதும் அளவிற்கு அங்கு நடிப்பு, வசனம், கதை என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. அதனால் ஒரு சுய ஆர்வத்தோடு அவளுக்குச் சொந்தமாய் நானே கொஞ்சம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். படத்தில் வரும் மாய மந்திரங்களை விளக்க அவள் அறிந்த ‘The Wizard of Oz’ என்கிற ஆங்கில டுமீல் கதையோடு கொஞ்சம் ஒப்பீடு. சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் வர்ணனை என்று நான் கலந்தடிக்க அவள் பெரிதும் மகிழ்ந்து போனாள். அடுத்தது என்ன தமிழ்ப் படம் பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறாள். அப்படி அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிய இது ஒரு நல்ல (!) குழந்தைப் படம் தானே…
மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்று ஒரு வலைப்பதிவில் பரி எழுதி இருந்தார். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. எங்கு இருந்தாலும் தாய்மொழி அறிவு அவசியம் என்று கருதுவதால் எம் மக்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க முனைந்து கொண்டிருக்கிறோம். பாபா வழியாகச் செல்ல வேண்டியிருந்தால் என்ன ? அந்த இலக்கு தானே முக்கியம்.
அடுத்தது ‘அருணாச்சலா’ கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்…