சூனியக்கிழவிகளும் மிட்டாய்களும்
Nov 3rd, 2003 by இரா. செல்வராசு
ஹாலோவின் – என்னவோ ஒரு பூசனிக்காய்த் திருவிழா, சென்ற வெள்ளியிரவு சுமார் இரண்டு மணி நேரம் எங்கள் தெருவே கொஞ்சம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்க நன்றாகத் தான் இருந்தது. சாதாரணமாய், இருட்டுக்குத் துணையாய் நிற்கும் ஒற்றை விளக்குக் கம்பங்களும், இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் நிறம் மாறிய மரங்களும் தவிர வேறு நடமாட்டங்கள் அதிகம் இல்லாத இளங்குளிர்காலத்து சாலை, அன்று விதம் விதமாய் வேடங்கள் அணிந்தபடி வீட்டுக்கு வீடு திரிந்து மிட்டாய் வேட்டை ஆடிய சிறார்களைச் சுமந்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தது.
எங்கள் வீட்டுப் பொடிசுகள் இரண்டும் சூனியக்கிழவிகளாய் மாறி என்னைப் பயமுறுத்துவதில் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் சந்தோஷம் தான் எவ்வளவு எளிமையானது… நான் பயந்த மாதிரி நடிக்கிறேன் என்று தெரிந்த போதும் அது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது ! ஏன்… “அப்பா, இன்னும் கொஞ்சம் பயந்த மாதிரி நடியுங்கள்” என்று கேட்டுக் கொண்டு என் நடிப்பில் மகிழ்கிறார்கள். (இல்லை, அவர்கள் இன்னும் அவ்வளவு தெளிவாய்த் தமிழ் பேசுவதில்லை!)தாயுடன் கிளம்பி இந்தப் பேய்த்திருவிழாவை (அப்படித்தான் சிலர் இதை வலையில் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்கள்) ஒட்டி ஒரு சுற்று மிட்டாய் வசூலுக்கு அவர்கள் சென்றுவிட, வருவோர் போவோருக்கு வீட்டில் இருந்து இனிப்பு விநியோகம் செய்வது என் வேலை என்று தீர்மானமாகியிருந்தது. சிறியது பெரியது என்று பல வயதுக்காரர்கள் வந்து போனார்கள். சிலரைப் பார்த்தால், ஒரு வயது உச்ச வரம்பும் (முக்கியமாய் எடை உச்ச வரம்பும்) இருக்க வேண்டும் என்று தோன்றியது. வந்திருந்த சிலர் ஊதினால் நான் கீழே விழுந்துவிடுவேன் போலிருந்தது. இத்தனை இனிப்பும் உள்ளே போய் அடுத்த வருடம் இன்னொரு சுற்றுப் பெருத்து விடுவார்கள். (அப்போது ஊத வேண்டியது இல்லை, மூச்சு விட்டால் போதும். நான் டணால் !!)
வந்தவர்கள் அணிந்திருந்த வேடங்கள் பார்க்கச் சுவாரசியமாக இருந்தது. சூனியக் கிழவிகள், எலும்புக் கூடுகள், பேய்கள், நடமாடும் பிணங்கள் என்று இந்த நாளின் சிறப்பை (!) ஒட்டிய பல வேடங்கள். இன்னும் பூனை, ஆனை, பூச்சி என்று இன்னொரு வகை. இளவரசிகள், பாட்டுப் பாடும் அழகிகள் (மன்னிக்க, எனக்கு ப்ரிட்டனி, க்றிஸ்டினா வித்தியாசம் எல்லாம் நிஜமானவர்கள் வந்து நின்றாலே தெரியாது), என்று இன்னொரு வகையறா. இன்னும் சிலர் இதுக்கும் சோம்பல் பட்டுக் கொண்டு சும்மா சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்து நின்றார்கள். எத்தனை வகை வேடங்கள் ! (நம்புவீர்களா தெரியவில்லை – கழிவறை மாதிரி எல்லாம் வேடம். ஐயா !)
என் இனிய சூனியக் கிழவிகளின் இரண்டு கூடை மிட்டாயோடு, வீட்டில் மிச்சமான இன்னொரு கூடையும் சேர்ந்து கொண்டது. அதிக இனிப்புக்கள் நல்லதல்ல என்பதால் குழந்தைகளின் கண்களில் இருந்து விரைவில் அவை மறைந்து போகும். சென்ற வருடமும் இப்படித் தான். அப்போது மறைத்த மிட்டாய்கள் வீணாய்ப் போய்விடக் கூடாதே (எவ்வளவு அக்கறை) என்று அவ்வப்போது அவை என்னோடு அலுவலகம் வந்து விடும். சென்ற வருடாந்திரப் மருத்துவப் பரிசோதனையில் எகிறிப் போன என் cholesterol, triglycerides இவற்றிற்கெல்லாம் இவை தான் காரணமென்று இவ்வருடம் அவற்றை என் கண்களில் இருந்தும் மறைத்து விட்டாள் என் இல்லத்து அரசி.