ஊர் நிலை
Jun 29th, 2009 by இரா. செல்வராசு
இரண்டு, இரண்டரை வாரப் பயணமாக ஊர் போய் வந்தவனைப் பார்த்து, “ஊரெல்லாம் எப்படியப்பா இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டிருந்தால், ஒருவேளை “அப்படியே தாங்க இருக்கு”, என்று நான் கூறியிருந்திருக்கலாம். இன்னும் சிலரிடமோ “சுத்தமா மாறிப் போச்சுங்க” என்று முற்றிலும் முரணாகக் கூறியிருப்பேன். இரண்டு நிமிடத்தில் என்ன சொல்லவென்று யோசித்து “ஒரே கூட்டமாக இருக்குங்க” என்றோ, “இந்த வருடம் அதிக மின்வெட்டு இல்லை” என்றோ கூடக் கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், ஊருக்குள் மொத்தமாக இருந்த பத்து வீட்டில் பட்டணத்துப் பக்கம் போன நாலு வீடு போக மிச்சம் ஐந்தாறு வீடு மட்டுமே இருக்கும் சிறு பட்டி தொட்டிக் கிராமங்களில் கூட, பார்த்து ஐந்தாவது நிமிடம், “ஆமா அமெரிக்கா பூரா பன்னிக் காய்ச்சலாமே?” என்று கேட்கிறார்கள் என்பதைச் சொன்னேனா?
மழை பொய்த்ததால் காய்ந்து போன காட்டை விற்றுக் கைக்கு வந்த காசில் கந்து வட்டி ‘லைன்’ போட்டுப் பொருளாதார நிலையில் முன்னேறப் போராடுபவர்கள் கூட, “ஏப்பா, அமெரிக்காவுல என்னவோ பேங்க் எல்லாமே திவால் ஆகுதாமா?” என்றார்கள்.
“நம்மூர் மேல இப்போ தெனமும் ஒரு மினிபஸ்ஸு போகுது” என்று அதிகரித்த போக்குவரத்தை இப்போது தான் கண்டுகொண்டவர்கள், “ஓபாமா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரா?” என்று அமெரிக்க அரசியல் பேசவும் தயங்குவதில்லை.
இலவசமாய்க் கிடைத்த தொலைக்காட்சியும், எல்லாப் பக்கங்களிலும் பரவியிருக்கிற செல்பேசி முதலிய நுட்பங்களும் ஒரு தகவல் பரவலையும் அறிவுப் பரவலையும் செய்துவருகின்றன என்பதை நன்கு உணர முடிகிறது. அழுமூஞ்சித் தொடர்களாகப் போட்டு மக்களைக் கட்டி வைக்கிற கெட்ட வேலையைச் செய்தாலும், தொலைக்காட்சிகள் மக்களுக்குச் சில சாளரங்களைத் திறந்து விட்டிருக்கின்றன என்று உணரும் போது, இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தில் கூட ஒரு நல்லது இருக்கத் தான் செய்கிறது என்று எண்ண வைக்கிறது.
“ஏப்பா உங்களுக்கெல்லாம் ஒண்ணுந் தொந்தரவு இல்லையா? அமெரிக்காவுல இந்தியப் பசங்களாப் பாத்து அடிக்கறாங்களாமா?”
“இல்லீங்க, அது ஆஸ்திரேலியாவுலைங்க. அதுவும் சும்மா ஊதிப் பெருசு பண்ணீட்டாங்கன்னு நினைக்கிறேன்”. உண்மையில் அங்கு முழுமையாக என்ன நடந்தது என்பதை விரிவாக நான் படித்திருக்கவில்லை. செய்திகளிலும் கேட்டிருக்கவில்லை.
“அதேன். டீவீலெ சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஆமா அந்த ஊரு நீங்க இருக்கறதுக்கு ரொம்ப தூரமா?”
சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. இதற்கான காரணம் என்ன என்று சிந்திக்க நிறைய இருக்கிறது.
* * * *
தொலைபேசியில் இரண்டு நண்பர்களை அழைத்துப் பேசிய போது ஊர் வந்திருப்பதாகத் தெரிவித்தேன். “என்ன ஏதும் விசேசமா?”, “அதுக்குள்ள வந்துட்ட?” என்று ஆச்சரியப்பட்டார்கள். வருடத்திற்கு ஒரு முறை வந்து போகும் ஆசை இருந்தும் இதுவரை செய்ததில்லை. இப்போது தான் முதன்முறையாக அப்படி அமைந்து போயிருந்தது.
“இல்லப்பா. சும்மா வந்து அப்பா அம்மாவை எல்லாம் பாத்துட்டுப் போலாம்னு நான் மட்டும் வந்தேன்”.
“பரவால்லயே. இங்க இருக்கற எங்கனாலயே ஒரு வாரம் சேர்ந்தாப்புல போய் அம்மா அப்பா கூட இருக்க முடியறதில்ல”
அம்மாவிடம் இதைச் சொன்னேன். இருந்தாலும் “நெனச்சா வர முடியுதா போக முடியுதா” என்றார்கள்.
சென்ற வருடத்தின் இடையில் அப்பாவுக்குச் சற்று உடல்நலம் குன்றித் தேறியிருந்தது. ஒரு மன ஆறுதலுக்காகவும் சென்று பார்த்து வருவோம் எனச் சென்றிருந்தேன். அவர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு கோயில், தோட்டம், சொந்தம் எனச் சில நாட்கள் சுற்றி வந்தேன்.
பல ஊரிலும் இப்போது உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதாகப் படுகிறது. ஈரோடு வ.வு.சி பூங்கா மைதானம் காலை நேரங்களில் கூட்டமாகக் களை கட்டி இருக்கிறது.
“இப்படி மொல்ல நடந்தா என்னிக்குப் பள்ளிபாளையம் போறது? எட்டி வையம்மா” என்று ஒரு தெரிஞ்ச அண்ணன் சொல்ல, “டாக்டர் தான்னா மெதுவா நடக்கச் சொன்னாரு” என்று சொன்னபடி இரண்டடிக்கு ஓடி மீண்டும் மெல்லச் சென்றார் ஒரு பெண்மணி.
“பம்பாயில் ஓட்டல் மேனேஜரா இருந்துட்டு இங்க வந்தானுங்க. இப்போ இங்கயே பெரிய ஓட்டல் கட்டீட்டான்” என்று ஏதோ ஒரு ஆளின் வளர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டு பத்துப் பதினைந்து பேர் என்னைக் கடந்தார்கள்.
எல்லா வயதினரும் நடைபயிலவென்று அதிகாலையிலேயே வந்து சுற்றுப் பாதையில் சுற்ற, உள்ளே மைதானத்தில் பள்ளிப் பெண்கள் தடகளப் போட்டிகளுக்கு பயின்று கொண்டிருக்கின்றனர். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் ஒழுங்காகச் செய்யச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தார்.
“அஞ்சு மணிக்கே போயிருவோம். நாங்க போனா மூணு லவுண்டு அடிப்போம்”.
பக்கத்து வீட்டு அக்காவோடு நடைக்குப் போகும் பழக்கத்தைப் பற்றி அம்மா கூறினார். நான் போன ஒரு நாளில் அரை மணி நேரத்தில் ஆறு ‘லவுண்டு’ அடித்துவிட்டு வந்தேன்.
* * * *
ஊர் முழுவதும் கூட்டம் அதிகரித்துவிட்டதாகப் போன வருடமே தோன்றியதில் மாற்றம் ஏதுமில்லை. சாலையைக் கடந்து மறுமுனைக்குச் செல்வதற்குக் கூட நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.
சாலை முக்குச் சிவப்பு விளக்குகளில் கீழிறங்கும் வினாடிகள் பூச்சியத்திற்கு வரும்வரை யாரும் காத்திருப்பதில்லை. ஐந்து வினாடிகள் இருக்கையிலேயே வண்டியை உறுமிக்கொண்டு கிளப்பியவர்கள் இப்போதெல்லாம் பத்து, பதினைந்து வினாடிகள் இருக்கையிலேயே பறக்கிறார்கள்.
நான்கு தடவழி நெடுஞ்சாலைகள் தரமாக அமைத்துக் கொண்டிருப்பது ஒருபுறம் நன்றாக இருந்தாலும், அங்கு ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதையும் கவனத்தில் கொண்டு மக்களுக்குச் சாலை விதிகளைப் பற்றிய அறிவை, பயிற்சியை அதிகரித்தால் நன்றாக இருக்கும். சாலை விபத்துக்களால் இழக்கப்படும் உயிர்கள் அதிகம். அனாவசியம்.
* * * *
கூட்டம் அதிகரித்த இன்னொடு இடம் பள்ளி கல்லூரிகள். இப்போது கல்விக்கூடங்கள் பெரிய வணிக வாய்ப்பாக அமைந்துவிட்டது போல் திரும்பிய இடங்களெல்லாம் பள்ளிகளும் கல்லூரிகளுமாக நிறைந்து கிடக்கிறது. அத்தனையிலும் மாணவர் நிறைந்து இருப்பது ஒரு புறம் நிறைவைத் தருகிறது. இத்தனை மாணவர்களும் இத்தனை காலமாய்க் கல்வி கற்க என்ன செய்தார்கள்?
* * * *
இவ்வருடம் மாங்காய் விளைச்சல் அமோகமாய் இருந்திருக்கிறது. சென்ற வீடுகளில் எல்லாம் மாம்பழம் கிடைத்தது. “நந்துவுக்குப் பிடிக்கும்” என்று சொன்னேன்.
“கொண்டு போக முடிஞ்சாக் கூடப் பரவால்லியே” என்று கவலைப்பட்டார்கள். ஒருமுறை செவ்வாழைப் பழம் ‘கிடைக்காதுல்ல’ என்று என்னிடம் கொடுத்துவிட்டதை நானும் யோசிக்காமல் வாங்கி வந்து சுங்க அதிகாரியிடம் மாட்டிய கதையை நன்கு சொல்லி வைத்திருந்தேன்.
“அடுத்த வருசம் போய் சாப்பிட்டுக்கலாம்”, என்று திரும்பி வந்து என் இளைய மகளிடம் சொன்னேன்.
விவசாயம் இவ்வருடம் பரவாயில்லை என்றாலும் பொதுவான கவலை பலரிடத்தே இருக்கிறது. வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை. அதிக முட்டுவலி தேவைப்படுகிறது. மழை, கிணறு, மின்சக்தி, முதலியவைகளை நம்ப வேண்டியிருக்கிறது. பூச்சி, புழுவுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது.
முந்தைய தலைமுறையைக் காட்டில் தோட்டத்தில் விட்டுவிட்டு அடுத்தது நகரங்களுக்குப் பெயர்ந்துவிட்டது. “இனிமே யாரு வந்து வெள்ளாமை செய்யப் போறீங்க?” என்று இருப்பதையும் விற்றுவிடும் எண்ணம் என் சொந்தங்கள் சிலரிடம் மேலிட்டவாறு இருக்கிறது.
* * * *
பெங்களூர் விமான நிலையம் எங்கோ வெளியூரில் இருந்தாலும் சர்வதேசத் தரத்தில் இருக்கிறது. இதுவே வசதியாக இருந்தால் இனிமேல் பெங்களூருக்கே சென்று ஈரோட்டுக்கு இரயில் பிடித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
இரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்தவர்களுக்குக் கையசைக்க, என்னை மட்டும் ஏற்றிக் கொண்ட இரயில், கையை ஆட்டியபடி நிற்கும் அவர்களை விட்டுவிட்டு நகர்கிறது. நழுவும் கணங்களினூடாக, நான் இருந்து நான் இல்லாத அந்தச் சூழலில் நான் இருந்து பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.
* * * *
ஊர் திரும்பி வந்து சுமார் பத்து நாட்கள் ஆகிறது. மீண்டும் உடல்நலம் குன்றி அப்பா மருத்துவமனைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. ஒற்றை மகன்களின் தொலைதூரத்து வாழ்க்கை தரும் குற்றுணர்வுகளைச் சொல்லி மாளாது. எழுத இயலாது.
இன்னும் ஆறுமாதங்கள் கழித்து இன்னொரு நடை போய் வர முடியுமா எனப் பார்க்க வேண்டும். கோடிட்ட இடத்தை நிரப்பும் நட்புக்களுக்கு நன்றி. நன்றி என நேரே சொல்வது கூட நீர்த்துப் போகச் செய்யுமோ என்று தயங்கியபடியே தான் சொல்கிறேன்.
* * * *
இந்த வருஷம் ஊர் பக்கம் போற வேலைய மீதி பண்ணிட்டிங்ணா.
டவுன் பக்கம் எங்கயும் போகலிங்களா? ரொம்ப கெட்டு போச்சாமே..
//நழுவும் கணங்களினூடாக, நான் இருந்து நான் இல்லாத அந்தச் சூழலில் நான் இருந்து பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.//
அழகான வரி.
//ஒற்றை மகன்களின் தொலைதூரத்து வாழ்க்கை தரும் குற்றுணர்வுகளைச் சொல்லி மாளாது.//
முற்றிலும் உண்மை! என் மனதுக்குள் இருப்பதி அப்படியா சொல்லிடிங்க. அருமையான எழுத்து நடை, இனி பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை +1 ஆக்கி கொள்ளவும். கடந்த ஞாயிறு அன்று தங்களையும் மற்றும் குடும்பத்தாரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மீண்டும் சிந்திப்போம்.
-RR
ஒவ்வொருவருக்கும் -எங்கிருந்தாலும்- மனதை நெக்கித் தள்ளுகின்ற பகிரமுடியாச் சோகங்கள் இருக்கின்றது தானில்லையா?
உங்கள் அப்பா விரைவில் இயல்புக்குத் திரும்பட்டுமாக.
நல்லா சொன்னீங்க.
\\சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை.\\
தொலைக்காட்சிகளால் ஏற்படும் கெட்டது இது. அவர்கள் மக்களை மயக்கத்திலேயே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்.
ஊருல வெள்ளாமையும் சரியில்ல தொழிலும் சரியில்ல அப்படிங்கறாங்க. என்னமோ போங்க…..
படிக்கறப்பவே ஈரோடு போன மாதிரி இருக்கு, இருத்தாலும் புகைப்படமும் இருந்தா நல்லா இருக்கும்.
உங்க அப்பா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நன்றி. குறும்பன், படங்கள் அதிகமாக (ஏனோ) இம்முறை எடுக்கவில்லை.
டிசே, உண்மை தான். நேற்றைய பொழுதை விட இன்று நிம்மதியாய் இருக்கிறது.
ராஜன், உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்கள் எண்ணத்திற்கும் நன்றி.
சத்யராஜ்குமார், பாராட்டுக்கு நன்றி. உங்கள் கதைகளையும் படித்துக் கற்றுக்கொள்ள நினைக்கிறேன். (நண்பர்கள் சிலர் கதை எழுதப் பணிக்கின்றனர். இதுவரை அந்தப் பக்கமாக இறங்கவில்லை :-))
இளங்கோ, சென்னையில் கூட இரண்டு நாட்கள் இருந்தேன். ஆனால், நண்பர்களோடு அளவளாவியதோடு சரி. மற்றபடி முழுமையாக ஈரோட்டிலேயே தான் இருந்தேன்.
என்ன்டோ முதல் பதிவர் சந்திப்பு நீங்க தான்… சந்தோசமா இருக்கு..
உங்கள் அப்பா குணமடைய எங்களுடய பிராத்தனைகள்..
உங்கள் எழுத்து நடை சூப்பர்..
//சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //
இது ரொம்ப வேதனையான விஷயம் செல்வா… என்ன பண்றது..
//“அடுத்த வருசம் போய் சாப்பிட்டுக்கலாம்”, என்று திரும்பி வந்து என் இளைய மகளிடம் சொன்னேன். //
எதுக்கெல்லாம் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டியது.. பாருங்க…என்ன அமெரிக்க வாழ்க்கையோ..
தொடர்ந்து எழுதுங்க செல்வா…மீண்டும் சந்திப்போம்…
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.ரொம்ப நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருக்கிறேன்,அருமையாக எழுதியிருந்தீங்க.
நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்க நண்பரே.
செலுவராசு! இத படிச்ச வொடணே எனக்கு ஊர் நியாபகம் வந்துருச்சு போங்க. மொத தடவ நான் ஊருக்கு போனப்ப, எங்க பெரீய மாமா கேட்டாரு, “கவுர்மண்டு வேளதான” அப்படீன்னு. அதுக்கு நான், இல்ல மாமான்னேன். அவரு ரொம்ப upset ஆகிட்டாரு.
அப்பா இப்ப எப்படி இருக்காரு?
அப்பா உடல் நலமாக என் பிரார்த்தனைகள்.
//மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //
வேதனையான செய்தி. என்ன சொல்வது? அதான் தேர்தல் முடிஞ்சு போச்சே… ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் மாதிரி அடுத்த தேர்தலில்தான் இந்தப் பேச்சு வரும் 🙁
//ஒற்றை மகன்களின் தொலைதூரத்து வாழ்க்கை தரும் குற்றுணர்வுகளைச் சொல்லி மாளாது. எழுத இயலாது. //
சரியா சொன்னீங்க. ஆனால் இந்த விஷயத்தில் ஒற்றை, இரண்டு, மூன்று , நான்கு, ஐந்து எல்லோருக்கும் இதே நிலைமைதான்….
//“இனிமே யாரு வந்து வெள்ளாமை செய்யப் போறீங்க?”//
கிராமத்தில் இருக்கும் பூர்வீக வீட்டை எழுதி வைப்பதற்கு ஒரு பேரன் வேண்டும் என்று என் நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வருது 🙂 அவரும் அங்க இல்லை, அவர் மகனும் இங்கே அமெரிக்காவில். பேரந்தான் அந்த வீட்டுல இருக்கப்போற மாதிரி!
நெஞ்சிலிருந்து வருகிறது உங்கள் எழுத்து. நீங்க நிறைய எழுதனும்.
செல்வராஜ்,
ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் எழுத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி எனச் சொல்ல நினைத்துப் படித்துக்கொண்டே வந்தேன் மீண்டும் அப்பாவின் உடல்நலம் குன்றியிருப்பதைப் படிக்கையில் அப்படிச் சொல்ல முடியவில்லை. அவர்களை நேரில் பார்க்கவும், அவர்களின் வெள்ளந்தியான அன்பைப் பெறவும் எனக்கு வாய்த்திருந்த அந்த ஒரு வாய்ப்பை மீண்டும் அசைபோட்டேன். அவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
ஊருக்குச் சென்று வந்த ஒரு உணர்வைத் தருகின்றது இந்தப் பதிவு…
//சென்னையைத் தாண்டிய தமிழகத்தின் உட்புற ஊர்களில், அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பேசுகிற மக்கள் கூட ஈழத்தின் மனித உரிமை மறுப்புக்களும், படுகொலைகளும் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. //
உண்மை… ஆனால், இதற்கும் நீங்கள் மேற்குறிப்பிட்ட ஊடகங்களுக்கும் உள்ள தொடர்பை உற்று நோக்கினால் இந்தச் சந்தேகம் வராது.
//பூச்சி, புழுவுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது. //
உண்மையிலேயே பிரச்சனையான விசயம் தான். இந்த 6 மாத காலத்திற்குள் எனது உறவினர்களில் மட்டும் 2 பாம்புக் கடி சம்பவங்கள். அதில், ஒரு உயிரழப்பு…. மருத்துவத் துறை இன்னமும் கிராம அளவில் முழுவீச்சில் செயல் பட எவ்வளவு காலமாகுமோ?
//“இனிமே யாரு வந்து வெள்ளாமை செய்யப் போறீங்க?”//
எல்லாரும் இதையே சொல்லுறாங்க… ஆனா, நெலத்து வெலையென்னமோ கணக்குவழக்கில்லாம ஏறிக் கெடக்குது.. அது தான் எனக்கும் புரியலை..
உங்கள் அப்பா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…
Selvaraj!
Welcome back.
In India, laptop internet for everyone’s ownership
is impossible. Tamil and other native Indic scripts
will reach masses only via microblog “twits” thru
mobile devices. Govt.-provided kiosks for public net
access can help to read the bit.ly links sent via
cell phones. More in Tamil:
http://bit.ly/tamil_microblogs
N. Ganesan
பாலகுமார், உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி. ஆர்வத் தூண்டுதலுக்கும் நன்றி. மீண்டும் வாய்ப்புக் கிடைக்கையில் சந்திப்போம்.
நாடோடி இலக்கியன் (பெயர் நன்றாக இருக்கிறது), பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மட்டும் எழுதாமல், இன்னும் கொஞ்சம் அதிகம் எழுத நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.
குமார், நீங்க எழுதி இருப்பதும் சுவையாக இருக்கிறது. எனது வேலையை வீட்டில் விளக்க முனைந்தது குறித்தும் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
நாகு, சாரணர் பயணத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.
செல்வநாயகி, உங்களுக்கு மடலிட எண்ணிக் கொண்டிருந்தேன். பிறகு எழுதுகிறேன். அப்பாவுக்கு இப்போது பரவாயில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிடலாம். உங்கள் அன்பிற்கு நன்றி.
பதி, நீங்கள் சொல்வதை எழுதவும் எண்ணி விட்டுவிட்டேன். விவசாய நிலங்கள் கூடப் பல மடங்கு அதிக விலைக்குத் தான் விற்கின்றன. ஏன் எப்படி என்று புரியவில்லை (வெறும் கல்லும் புரடுமாய் இருக்கிற வரக்காடுகள் கூட கொள்ளையாக விற்பதாகக் கேள்விப்பட்டேன்).
நா.க, நன்றி. யு எஸ் பி கார்டு வழியாக இணையம் சுளுவாக கிடைக்கிறது. மடிக்கணினிகள் கூட இனி வரும் தலைமுறையில் அதிகமாகப் பரவும் என்றே தோன்றுகிறது.
அனைவரது விசாரிப்புக்கும், அன்புக்கும் நன்றி.
ஊருக்கு வந்திருக்கீங்க, சென்னைக்கும் வந்திருக்கீங்க. பார்க்க முடியாமப் போச்சுதுங்களே! தொலைபேசியிருக்கலாமே?
நல்லா இருக்கீங்களா?
அப்பா நலமுடைய வேண்டுதல்கள்
அன்புடன்,
இராம.கி.
கடல் கடந்து வந்து பெற்றுச் சென்ற குற்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறதோ திருப்பூருக்கும் காரைக்குடிக்கும் உள்ள 300 கிமீ தொலைவில் பயணம் தொடங்குவது முதல் திரும்பவும் வந்து சேர்வது முதல் கிடைக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது.
குறிப்பாக பிறந்த ஊரில் வளர்ந்து நிற்பவர்களின் பிரம்மாண்டம் எந்த எழுத்திலும் வடிக்க இயலாது.
உங்கள் அப்பா நலமாய் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.
தேவியர் இல்லம் திருப்பூர்