சங்கிலித் தெய்வம்
Jan 3rd, 2009 by இரா. செல்வராசு
ஏழரைச் சனியனுக்குப் பரிகாரம் செய்யத் திருநள்ளாறு போக வேண்டும் என்று சோதிடர் சொன்னதன் காரணத்தால் சிறுவயதில் பல ஊர்களுக்கு ஒரு பயணமாகச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதோடு விட்டுவிடவில்லை சோதிடர். வாரா வாரம் வெள்ளிக் கிழமை மாரியம்மனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கொண்டு போகவேண்டுமென்றும் யோசனையொன்றைச் சொல்லி வைத்தார்.
சோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அந்தச் சோதிடர் மீது ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்தது என்பதாலும், வீட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இரண்டங்குல உயரச் சின்னத் தூக்குப்போசியை மிதிவண்டிக் கைப்பிடிக் கம்பியில் மாட்டிக் கொண்டு பிரப் ரோட்டு மாரியம்மனைத் தரிசிக்கச் சென்று வருவேன்.
நிற்க. கோயிலுக்கு வாரா வாரம் போய் வந்ததன் காரணமென்னவென்று நீங்கள் குறும்பாய்க் கேட்கும் முன் அப்போது நான் சிறுசிறுவன் என்பதும், இதை என் ஆன்மீக அனுபவங்களுக்கு ஒரு உதாரணமாகச் சொன்னேன் என்பதும் மட்டும் நீங்கள் ஏற்றுக் கொண்டு மேலே சென்றுவிட வேண்டும். சரியா?
கண்விழித்து எழுந்தபோதெல்லாம் ‘நல்ல தாயீ, மகமாயீ… ஆத்தா பரமேசுவரியை’ நினைத்து வணங்கி எழுந்த அப்புச்சித் தாத்தாவோடு வளர்ந்த நான் அந்த இறைநிறை காலத்திலும் கூட, ‘ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி துணை; இந்த மடலை இன்னும் பத்து பேருக்கு அனுப்பினீர்களென்றால் அதிர்ஷ்டம் அடிஅடியென்று அடிக்கும்; இல்லையெனில் இரத்தம் கக்கியோ லாரி மோதியோ சாவீர்கள்’ என்று வந்த தபால் அட்டைகளை ஒரு முறை கூட நம்பியதில்லை. பிய்த்துக் குப்பையில் எறிந்திருக்கிறேன். இன்று வரை எந்த லாரியும் மோதவில்லை.
ஆனாலும் அந்த வெங்கடாசலபதிச் சங்கிலியை இத்தனை ஆண்டுகளில் இன்னும் அங்கங்கே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். தபாலட்டையில் வந்த சாமி பின் இன்லாண்டு லெட்டர், கவர் என்று மாறி, இப்போதெல்லாம் காலத்திற்கேற்றாற்போல கணிகளிலும் மின்மடல்களில் தொற்றிக் கொண்டு வண்ணப் படங்களோடும் வந்துவிடுகிறார். என்னைப் போலவே எல்லோரும் குப்பைக்கு அனுப்பியிருந்தால் இந்தச் சங்கிலித் தெய்வத்தை இந்நேரம் அடக்கி இருக்கலாம். என்ன செய்வது? மனிதன் ஒன்று நினைக்க அந்தத் ‘தெய்வம்’ ஒன்று நினைத்து விடுகிறதாய் இருக்கும். இருந்தாலும் இந்தச் சங்கிலியை இன்னும் வளர்க்கும் ஆ-சாமிகளை நினைத்து அவநம்பிக்கையோடும் ஆச்சரியத்தோடும் தலையை ஆட்டாமல் இருக்க முடிவதில்லை.
இப்போதெல்லாம் இந்தச் சங்கிலித் தெய்வம் வேறு வடிவங்களிலும் வர ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் நாள் முன்பு மைக்ரோசாப்ட்டின் பில் கேட்சு எல்லோருக்கும் பணம் கொடுக்கிறார் என்றும் அதற்கு அந்த மின்மடலை எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் அனுப்ப வேண்டும் என்று கேட்டு ஒரு சாமி சுற்றிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் இன்னும் எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்று தான் புரியவில்லை. அய்யா சாமிகளா! எந்தக் கேட்சும் காசு கொடுக்கப் போவதில்லை. இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்ள வெங்கடாசலபதியால் கூட முடியாது.
ஒருவேளை சிலர் இதனை நம்பாமல் இருந்தாலும், ஒரு குறும்பாய் ‘ஆமாம் நேற்று என் வங்கியில் பணம் வந்து சேர்ந்துவிட்டது’ என்று விளையாட்டாகத் தொடர நினைக்கலாம். அவர்களுக்கும் மற்ற பிறருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்று தான். தயவு செய்து இந்தச் சங்கிலிகளை வளர்க்காதீர்கள். தயவு தாட்சண்யமோ வேறு குறும்போ இன்றி வெட்டிப் பொலி போட்டு விடுங்கள். இதனால் எத்தனை பேருக்கு நேரம், வசதி விரயமாகிறது என்று எண்ணிப் பாருங்கள். ‘அனுப்பு’ என்று பொத்தானை ஒரு அமுக்கு அமுக்குவதற்கு நேரம் ஆகாது தான். ஆனால், அந்த மின்மடல் ஊர் சுற்றி வர எவ்வளவு மின்பாட்டை, கணி நேரங்கள், படிப்பவரின் நேரம் என்று எவ்வளவு வீண் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இப்போதெல்லாம் நான் பங்கேற்கும் எந்தக் குழுவிலும் புத்தாண்டு வாழ்த்துக் கூடச் சொல்வதில்லை. பத்து பேரு இருக்கும் குழுவில் ஒவ்வொருவரும் வாழ்த்தும், வாழ்த்துச் சொன்ன ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் நன்றியும் சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை மடல்கள் வீணாகிப் போகின்றன என்று பாருங்கள். அதுவே நூறு பேர் இருக்கும் குழுவானால்?! அதனால் தான் ‘நன்றிங்கண்ணே’, ‘சூப்பருங்கண்ணே’ என்று ஒற்றை வரி ஒற்றைச் சொல் மடல்களைக் கூடத் தவிருங்கள் என்று சில இடங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். (மொக்கைப் பதிவுகளைப் பற்றிக் கருத்துச் சொல்லச் சொல்லாதீர்கள். அப்புறம் கருத்துச் சுதந்திரக் காவலர்களோடு பேசி மாளாது!).
இதே சமயம் போன வருடம் புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்று தமிழ்கூறும் வலையுலகில் ஓட ஆரம்பித்தது. தவறுதலாய் ஒருபதிவர் சேர்த்து வைத்திருந்த எல்லா மின்முகவரிகளுக்கும் அனுப்பிவிட, அதற்கு நன்றி சொல்லியும் மறுவாழ்த்துச் சொல்லியும் அந்தச் சங்கிலி தொடர்ந்து கொண்டிருந்தது. சிறிது நாட்கள் கழித்துப் பலரும் பட்டியலில் என் பெயரை எடுத்து விடவும் என்று எல்லோருக்கும் அனுப்பித் தெரிந்தோ தெரியாமலோ சங்கிலியை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அனுப்பியவரே தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு இனி யாரும் அந்தப் பட்டியலுக்கு அனுப்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போதும் அது தொடர்ந்து கொண்டிருந்தது.
இது போன்றவற்றை நிறுத்த ஒரே வழி, வந்த மடலை அழித்துவிட்டு வாளாவிருப்பது தான். அப்படிப் பலருக்குமாய்ச் சேர்த்து ஒரு மடலை நான் அனுப்பியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பீர்களானால், குறைந்த பட்சம், CC:இல் போடாமல், BCC: என்னும் இருட்டு நகலில் அனுப்புங்கள். பட்டியலில் இருக்கிற எல்லோரும் ‘எல்லோர்க்கும் பதிலிறு’ என்று வீணாய் வளர்க்காமல் இருக்க இது உதவும். தவிர, அவசியமின்றி மின்மடல் முகவரி எரிதக்காரர்களிடம் மாட்டாமல் இருக்கவும் இது உதவும்.
எல்லாம் சரி. எரிதச் சங்கிலி இன்று ஏன் என்னை இத்தனை பாடு படுத்தவேண்டும் என்று பார்க்கிறீர்களா? என் மகள்களிடம், இணையம் கணினி வசதிகளை முழுதும் அறிமுகப்படுத்த முடியாமலும், தவிர்க்க முடியாமலும் ஒரு சமனாட்டம் ஆடிவருகிறேன். இன்று மகள் வழியாக எனக்கு ஒரு மடல் வந்து சேர்ந்தது.
Subject: Sad
Please read this it is REALLY sad and if you don't read this that means you are EXTREMELY mean and selfish
I'm 11 years old.
My mommy worked on the 20th floor in the World Trade Tower.
On Sept. 11 2001 my daddy drove my mom to work.
She was running late so she left her purse in the car.
My daddy saw it so he parked the car and went
to give her the purse.
That day after school my daddy didn't
come to pick me up.
Instead a police man came and took me to foster care .
Finally I found out why my daddy never came...
I really loved him....
They never found his body...
My mom is in the the Hospital since then...
She is losing lots of blood...
She needs to go through surgery...
But since my daddy is gone and no one is working...
We have no money ...
And her surgery cost lots of money...
So the Red Cross said that...
for every time this email is fwd we
Will get 10 cents for my mom's surgery.
So please have a heart and fwd this to everyone you know
I really miss my daddy
and now I don't
want to lose my mommy too.......
R.I.P. Daddy..(James Thomas) (L)
Please forward this e-mail to as many ppl you know, each person you send it to, the red cross will donate 10 cents for mom's operation!
* Please Guys ! If U all spare 2 min. by forwarding it !
செப்டம்பர் 11ல் தந்தையை இழந்த ஒரு இளவயதுப் பெண்ணின் கதையை விவரித்து, உயிருக்குப் போராடியபடி இருக்கும் அவளின் அன்னைக்கு மருத்துவச் செலவிற்கு உதவ அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் இந்த மடலைப் பலருக்கும் அனுப்பினால் மடல் ஒன்றுக்கு பத்து செண்ட் தருவதாகவும் சொல்லி வந்திருந்த ஒரு மடல் தான். இப்படி ஒரு சோகமான உணர்ச்சி நிறைந்த ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படி ஒரு பித்தலாட்ட மடலை எழுத எப்படி ஒருவருக்கு மனம் துணியும்? இம்மடலை முதலில் எழுதியவரின் மனதிலே என்னதான் ஓடியிருக்கும்?
ஒரு ஆறுதல் என்னவென்றால், என் மகள் எனக்கு மட்டும் அனுப்பி விட்டு, இந்தக் கதை சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், முட்டாள்த்தனமாக இருக்கிறது என்றாள். இதையும் எப்படி நம்புகிறார்கள் என்று கேள்வி எழுப்பினாள். அரை குறைச் சந்தேகம் இருந்திருந்தாலும் எனது பேச்சு அதனைத் தெளிவித்திருக்க வேண்டும். முற்காலத்து வெங்கடாசலபதி கதையையும் சொல்லி வைத்தேன். ‘என்ன காசு கொடுத்துத் தபால் அனுப்பினார்களா?’ என்று முன்னோரின் முட்டாள்த்தனத்தையும் எண்ணி வியந்து கொண்டாள்! வாய்ப்பே இல்லை! இவளுக்கும் சங்கிலித் தெய்வம் வெங்கடாசலபதி அருள்பாலிக்கப் போவதே இல்லை.
நீங்கள் சொல்லும் சென்ற வருடம் வந்த புத்தாண்டு வாழ்த்து மடல் எனக்கும் வந்தது. அட – பதிவுலகில் பெரிய ஆளாகிவிட்டோம் – என புல்லரித்துப் போய்விட்டேன். 🙂 அப்புறம் ஆரம்பித்தது மின்மடல் பிரளயம். அதைச் சொல்லி அந்த தங்கம்ஸ் ஆன பதிவரை சிலகாலம் கால்வாரிக் கொண்டு இருந்தேன். ஞாபகப்படுத்தாதீர்கள். அவர் இந்த தடவை நம்மை எல்லாம் ஏன் மறந்தார் என்பது அந்த ஆனைமுகனுக்குத்தான் வெளிச்சம்.
இந்த மாதிரி மின்மடல் தொடர் வந்தால் அதன் சப்ஜெக்டை கூகுளாண்டவரிடம் கொடுத்தால், urbanlegends மாதிரி தளத்தில் அதன் சரித்திரத்தையே பார்க்கலாம்.
நாகு, போதுமான அளவுக்குக் க்ளூ கொடுத்திருக்கிறீர்கள் 🙂 அவர் பதிவை அதிகம் பார்க்கவில்லை இப்போது. திரட்டிக்கு வெளியில் இருப்பார் போல.
நானும் சிலசமயம் சங்கிலி மடல் பற்றிய urbanlegends பற்றித் தேடி மடல் அனுப்பியவருக்கே அனுப்பி வைப்பது வழக்கம். மற்றபடி அழித்துவிடுவதோடு சரி.
🙂 இது போன்ற மடல்களை அனுப்புபவர்களுக்கு சூடான பதில் அனுப்பி அவர்களின் முட்டாள்தனத்தை விளக்குவதை ஒரு கடமையாகவே கொண்டிருக்கிறேன்
//தூக்குப்போசி// Kongu Vattara vazakku keettu romba naalaachu!!
JK (Richmond, VA)
செல்வராஜ்,
இங்கே உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கு! 🙂
http://blog.richmondtamilsangam.org/2009/06/blog-post_6832.html