தொடர்மானம்
Jan 1st, 2009 by இரா. செல்வராசு
“புத்தாண்டுக்கு என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?” என்று சிலர் கேட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்.
“அந்த மாதிரில்லாம் தீர்மானம் பண்றதில்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கேன்”, என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னது கூடப் பழையதாகத் தெரிகிறது, இப்போதெல்லாம்.
தொடரோட்டத்தின் இடையே சில கணப்பொழுதுகளில், இருப்பு இருத்தல் குறித்த கேள்விகளும் அங்கங்கே சிலவற்றிற்கு அர்த்தம் தேடிக் களைப்பதும் திகைப்பதும் விடுப்பதுமாக நகருகின்ற நாட்களுக்கிடையே, புத்தாண்டு என்று ஒரு நாளில் மட்டும் சில தீர்மானங்களைச் செய்து கொள்வதென்பது, எனக்கு, இப்போது, சற்றே பொருள் குறைந்ததாகப் படுகிறது.
ஒரு நாள் தீர்மானங்கள் எனக்கு வேலை செய்வதில்லை. எனக்கு மட்டுமல்ல; பெரும்பாலும் யாருக்குமே அது வேலை செய்வதில்லை என்பதையே குமுக நிகழ்வுகள் செய்திகள் உணர்த்துகின்றன. அதற்குப் பதிலாக அவசர வாழ்வின் இடையே நிதானித்துச் சுய ஆய்வில் ஈடுபடும் நேரங்களைச் சற்றே அதிகரிக்கலாம். இருக்கும் நிலையை இனம் காணுதலே அடுத்துச் செல்லும் திசையையும் வேகத்தையும் தீர்மானிக்க உதவும். புத்தாண்டுத் தீர்மானம் என்பதும் அதற்கு உதவும் என்றாலும், வருடம் ஒருமுறை மட்டுமே செய்துகொள்ளும் ஆய்வுகள் பெரும்பயனைத் தருவதில்லை. தொடர்ந்த தீர்மானங்களும், முன்னேற்றங்களும் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் அவற்றில் மிகுமத்தை எய்தக் குறி வைக்கலாம். விலகீடுகளில் தொய்வுறாமல், ஓய்வுற்று, மறுநாள் விடியலில் மீண்டும் மலரலாம்.
ஒரு உந்தலில் பாய்ந்த வண்டி சற்றே வேகம் குறைந்து ஒரு தேக்க நிலையை நோக்கிச் செல்லும்போது மீண்டும் அதன் பயணத்தை வீறுகொண்டு எழச் செய்ய இன்னும் ஒரு உந்துதல் தேவைப்படுவது போல, இத்தனை நாட்களாகச் செலுத்திய கற்பிதங்கள் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளல்கள் சக்தி குறைந்தது போன்றும், இப்போது வேறு உந்துதல்கள் தேவையெனவும் தேட முற்படுகிறதோ மனம் என்றும் ஐயம் எழுகின்றது. இந்தத் தேடல்களின் விளைவு என்னவாய் இருக்கும் எனச் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களின் வலியுறுத்தலைப் போலப் பலவற்றையும் படிக்கலாம். ஒரு நிலைத்தன்மைக்கான விருப்பும், பிற புற பிணைப்புக்களின் காரணமாயும் பெருமாற்றங்கள் பற்றி எண்ணினாலும் ஏதும் நிகழ்த்த முடியாமற் போகலாம். எந்தவொரு மாறுதலும் இன்றி அவசரங்களிலேயே மீண்டும் ஒன்றுமில்லாமல் கரைந்தும் போகலாம். இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தும் இருக்கலாம். இந்தத் தேடல் நிலையின் எல்லை தான் இடைவாழ்வுச் சிக்கலோ என்று சிறு ஐயம் ஏற்பட்டாலும் அவசரமாய் உதறிக் கொள்கிறேன். அந்தப் பாலத்தை நெருங்கும்போது அதனைக் கடப்பது பற்றிய கவலையை வைத்துக் கொள்ளலாம்.
ஒரு வகையில் பார்த்தால் எல்லாவற்றிற்குமிடையில் யாருக்கும் மகிழ்வற்றிருப்பதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. இல்லையில்லை, காலணியில்லாதவன் காலில்லாதவனைப் பார்த்து நிம்மதி எய்தப் பழக வேண்டுமென்பது பற்றிச் சொல்லவில்லை. அதிலும் ஒரு பாடம் இருப்பினும் கூட. நான் சொல்ல விழைவது, காலில்லாதவனும் கூட நிறைவாய் இருக்க இருக்கும் காரணங்களைப் பார்க்க முடியுமா என்பது பற்றியே.
இருப்பனவற்றிற்கும் இல்லாதவனவற்றிற்குமிடையிலே, மகிழ்வாயிருக்க அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
* * * *
அண்ணே! ரொம்ப புலம்பலாத் தெரியுதே..உங்க வழக்கமான பதிவு மாதிரி இல்லையே. இதுதான் புத்தாண்டு சபதமா? அப்படியிருந்தா நீங்க சொல்ற மாதிரி ஒரு நாள்ல போயிரட்டும்..
மிஞ்சிப்போனா ஒரு மாசம் தாங்குது, தடாலடியா எடுக்கும் இந்தப் புதுவருசத் தீர்மானங்கள் எல்லாம்.
இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
இளா, துளசி நன்றி. வாழ்த்துக்கள். இளா புலம்பலாய் (மட்டும்) சொல்லவில்லை. அதனூடும் பொதிவாய்ப் பார்க்க முனைவதைத் தானே சொல்லி இருக்கிறேன். என்றாலும் வாழ்க்கை எல்லாச் சமயங்களிலும் ஒன்றே போல் இருப்பதில்லையே. எழுத்தும் அதையொட்டிப் பிரதிபலிப்பது இயல்பு தானே.
நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி நான் உண்மையிலேயே கடைப்பிடிக்கிறேன். 🙂 தீர்மானம் எடுக்காவிட்டாலும் எடுத்தாலும் அதே நிலைதான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி, நாகு. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து. தீர்மானமாக எடுக்காவிட்டாலும் தொடர்ந்து சில மேம்பாடுகளை உண்டாக்கிக் கொள்ள முடியுமா என முயல்கிறேன். பார்ப்போம்.