• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« குரங்கே கோபமா?
ஜூரிக் நகரத்துக் கத்தரிக்கா »

ஈரோட்டுக்குச் சென்ற இரவு ரயில்

Sep 2nd, 2005 by இரா. செல்வராசு

வார இறுதியில் தஞ்சாவூர் விரைவு வண்டி ஈரோடு ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்டபோது இரவு மணி ஒன்று. பெங்களூரில் முன்பதிவு செய்யாத ரயில்வண்டியில் ஏறி மூட்டைமுடிச்சு வைக்கும் இடத்தில் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டே வந்துவிட்டேன். கீழே உட்கார்ந்திருந்தவர்களும் இடையில் ஏறியவர்களும் இடத்திற்காக சிறு சிறு சச்சரவுகளும், விட்டுக் கொடுத்தல்களும், சமாதானமான பின் சுமூகமான பயணமுமாய் இருந்த ஊடாடல்களைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சுவாரசியமாய் இருந்தது. யாராவது கேட்டால் மேலே இடம் கொடுக்கவும் சித்தமாய் இருந்தேன். ஆனால் மேலே இடம் பிடிப்பவர்கள் படுத்துக் கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி ஒன்று போலும். யாரும் என்னை அணுகவில்லை.

எளிதில் உணர்ச்சிவயப்பட்ட எதிரில் இருந்த வெள்ளைச் சட்டை வேட்டித் தாத்தா சகட்டுமேனிக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உயரழுத்தக்காரராய் இருக்கும். உடன் வந்தவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். சண்டைக்குப் போன அவரைச் சமாதானப்படுத்தி உடன் வந்தவர்களில் மூன்று பேர் அவரை மேலே அனுப்பக் கைகொடுத்தார்கள். நெரிசலிலும் மக்கள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்ற என் மையலுணர்ச்சியைக் (romantic) கெடுப்பதற்கென்றே அமைந்த மாதிரி வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் சற்றுத் தள்ளி ஒரு பெரிய சண்டை ஆரம்பமாகி இருந்தது. பெரிதாகத் தூக்கம் வரவில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம் பிடித்துக் கொடுப்பதும் கூட ஒரு தொழிலாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஓர இருக்கை இரண்டில் ஒவ்வொரு செருப்பு இருந்ததைப் பார்த்தேன். இருபது ரூபாய்க்கு விலை போயிருக்கின்றன அந்த இருக்கைகள். ஒற்றைச் செருப்புப் பதிவு முறைக்கு இருபது ரூபாய். பரவாயில்லை.

சண்டை வந்த திக்கில் எட்டிப் பார்த்தேன். அங்கு யாரோ நூற்றைம்பது ரூபாய்க்கு படுக்கும் உரிமையை வாங்கி இருந்ததாகவும் அதனால் தாங்கள் படுத்துக் கொண்டு தான் வருவார்கள் என்றும் உட்கார இடம் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது கொஞ்சம் அதிகம். அநியாயம். முறையாகப் பயணச்சீட்டு வாங்கி வருபவர்களுக்கு உட்கார உரிமையுண்டு தானே. தாம் நியாயமின்றி யாருக்கோ காசு கொடுத்துப் படுத்துக் கொண்டு வந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? பேச்சும் சத்தமும் சண்டையும் அதிகரித்துக் கொண்டே வந்து தர்மபுரியில் போலீசார் உள்ளே ஏறும் வரை தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் இடையிலும் சில மகானுபாவர்கள் பழைய செய்தித்தாளைக் கீழே விரித்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் எடுத்துச் சென்ற ஒரு பழைய செய்தித்தாள் கூட பைக்குள் பத்திரமாய் இருந்தது. இப்போதெல்லாம் அந்த வழிமுறை ஒத்துவராது என்று தோன்றியது.

“சாப்பிட்டுட்டீங்களா?” என்று கேட்டபடி எதிர் இருக்கைக்காரர் இட்லியைச் சட்னியில் புரட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்தார். தன் பெரியப்பா மகனைப் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பார்க்கப் போன கதையை நான் கேட்காமலே சொன்னார். பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பெயர் ‘செல்வராஜ்’ என்று அறிந்து “என் பெயரும் அதுதாங்க” என்றேன். ‘ஓஹோ’ என்று திரும்பிப் படுத்துக் கொண்டார்!!

இப்போதெல்லாம் ரயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லை. அடிக்கடி ஏதேனும் ஒன்றை அந்த அர்த்த ராத்திரியிலும் விற்றுக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் மிச்சக் கழிவுகளைப் போடுவதற்கோ, குப்பைகளைச் சேகரிக்கவோ தான் சரியான வழிமுறைகள் இல்லை. சாளரத்தின் வழியாய் ஒவ்வொரு முறையும் யாரேனும் எதையேனும் எறியும் போதெல்லாம் ‘இந்தியா ஒரு பெரிய குப்பைத் தொட்டி’ என்று யாரோ சொன்னது, எங்கோ படித்தது வந்து வந்து குத்தியது.

ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்தே சென்றுவிட முடிவு செய்தேன். சற்று தூரம் அதிகம் தான். ஆனாலும் பகல் நேரத்தில் போனாலே ஆட்டோக்காரர் நாற்பது ரூபாய் கேட்பதுண்டு. இரவிலே இன்னும் இருபது ரூபாயாவது சேர்த்தே கேட்டிருப்பார். பெங்களூரில் இருந்து எழுபத்தாறு ரூபாய்க்கு ஈரோடு வந்துவிட்டு, ‘இவடத்துக்கால’ இருக்கிற வீ.சத்திரத்திற்கு ஐம்பது அறுபது ரூபாய் கொடுக்க மனம் ஒப்பவில்லை என்பது ஒரு பக்கம். சரி, தனியாகத் தானே இருக்கிறோம், அப்படியே ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கட்டுமே என்று எண்ணியது இன்னொரு பக்கம். இந்தப் பக்கமெல்லாம் எப்படி மாறி இருக்கிறது என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

அந்த அகால வேளையில் யாரேனும் எதிர்ப்பட்டு வழிப்பறி முதலியவைகளில் ஈடுபட்டால், கையில் தூக்கிச் சென்ற பழைய மிக்ஸீயைப் போட்டு அடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு சென்ற என் வீர தீரக் கனவுகளுக்கு வேலையில்லை. ஈரோடு அவ்வளவு மோசமாகவில்லை. எலும்பும் தோலுமாய் இருந்த தெருநாய் ஒன்று கூடத் தொந்தரவு செய்யாமல் அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு சீராக ஓடிக் கொண்டிருந்தது. பெரும்பள்ளம் ஓடைப்பாலத்தருகே ஒரு குப்பைத் தொட்டியை நிமிர்த்தி வைத்து விட்டுக் குப்பைகளைக் கீழே போட்டு வைத்திருக்கிறார்கள்.

உள்ளூர்ப் பேருந்துகள் அங்கங்கே பெட்ரோல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. பிரசவங்கள் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் மரகதவல்லி ஒரு பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார். பள்ளியிறுதிப் பரிட்சைக்குப் படித்தபோது நண்பரோடு நான் இரவிலே வந்து டீக்குடித்த நால்ரோட்டுக் கடை இன்னும் திறந்திருக்கிறது. இடையில் நிறுத்திய ஒரு ஆட்டோக்காரர் ‘பத்து ரூபாய் தருகிறேன்’ என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு ‘மினிமமே இருவது ரூவா சார்’ என்று போனார். மணியைப் பார்த்தேன். ஒன்றரை. அரை மணி நேரமாயிற்று. இன்னும் பாதி தூரம் தான்.

இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கிற ஒரு தானியங்கிப் பணம்வழங்கியின் முன்னால் ஒரு காவலாளி தூங்கிக் கொண்டிருந்தார். ஏ.பி.தாமஸ் ஃபர்னிச்சர் கடைக்காரர்கள் பேருந்து நிறுத்த இடம் ஒன்று செய்து கொடுத்துவிட்டு அதன் பின்னாலே ஒரு காட்சியகம் (showroom) அமைத்துத் தங்கள் கடைக்கு விளம்பரம் அமைத்திருந்தார்கள். பேருந்து நிலையத்தருகே இருந்த உணவகங்களின் முன்னால் விடியலுக்குத் தயாராக இருட்டில் ஒரு பெண்மணி பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருந்தார். அந்த முக்கில் நின்று கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தை ஒருவர் நீரூற்றிக் கழுவிக் கொண்டிருந்தார்.

மேட்டூர் ரோடு முழுக்க அளந்து சத்தி ரோட்டில் திரும்பிய போது அங்கும் சாலையில் சில பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. ‘கம்பத்த நேராப் போட்டு டைட் வையுடா’ என்று ஒரு சக்கரத்தின் ‘நட்’டை இரண்டு பேர் இறுக்கிக் கொண்டிருந்தார்கள். இரவில் ஓய்வெடுத்துக் கொள்கிற சொகுசு எல்லோருக்கும் பொதுவானதில்லை. அரசியலில் குதிக்கும் விஜயகாந்த் மதுரை மாநாட்டிற்கு விட்ட அழைப்பு ஒரு சுவற்றிலும், ‘ஆடம்பரத் திருமணங்கள் அவசியமா’ என்று விவேகத்துடன் விவாதிக்கக் கொங்கு வேளாளர் சங்கமொன்று விடுத்த அழைப்பு மறு சுவற்றிலுமாய்த் தெருவிளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தன.

ஊர் கொஞ்சம் மாறி இருக்கிறது. இருந்தாலும் பெரும்பான்மையான அமைப்பு அப்படியே தான் இருக்கிறது. பல நாள் கழித்துப் பார்க்கிற குழந்தையை ‘எவ்ளோ வளந்துருச்சு!’ என்று வியக்கும்போது அதன் உடனேயே இருப்பவர் ‘அப்டீங்களா எங்களுக்குத் தெரியலியே’ என்பது போல் தான் இங்கேயே இருப்பவர்களும் ஊரைப் பற்றிச் சொல்வார்களாய் இருக்கும். வீட்டை நெருங்குகையில் ஒரு மணி நேரமாய் நடந்த அசதி மெல்ல எட்டிப் பார்க்கிறது. மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கதவருகே வந்து இருட்டிலே ‘இங்கே எங்கயோ ஒரு அழைப்பு மணி இருக்குமே’ என்று துழாவி மணியை அடித்த உடனே வந்து திறந்தார் அப்பா.

“என்னங்கப்பா தூங்கலியா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தேன்.

“இப்பத்தான் படுத்தம்” என்று எழுந்து அமர்ந்தார் அம்மா.

இரவில் இவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நடந்தே வந்தால், “நீ வந்துருவேன்னு முழிச்சுக்கிட்டு இருந்தோம். எறங்குன உடனே ஒரு போன் பண்ணி இருந்தீன்னா டேசனுக்கு வந்துருப்பனே!” என்கிறார் அப்பா.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in பயணங்கள், வாழ்க்கை

34 Responses to “ஈரோட்டுக்குச் சென்ற இரவு ரயில்”

  1. on 02 Sep 2005 at 5:45 am1desikan

    செல்வராஜ்,

    நன்றாக இருந்தது. உங்க கூட பயணம் செய்த அனுபவம் கிடைத்தது. என்னுடைய வலைப்பதிவில், படித்தேன் ரசித்தேன் பகுதியில் இந்த பதிவு இடம் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.
    தேசிகன்

  2. on 02 Sep 2005 at 6:18 am2ஜெகதீஸ்வரன்

    முன்பதிவு செய்யாமல் பெங்களுர்க்கு 70 ரூபாயில் போகப்போறோம் என்று,
    இரவு 11 மணிக்கு மேல் சவிதா நிறுத்தத்தில் இருந்து ரயில்நிலையம் வரை நடந்து போன அனுபவம் எனக்கும் உண்டு….

    ஏ.பி.தாமஸ் ஃபர்னிச்சர் பேருந்து நிறுத்தம் இருந்தாலும், பேருந்துகள் எல்லாம் எம்.ஜி.ஆர் சிலை முக்கில் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது என்றும் மாறாது…..

    உங்கள் பதிவை படித்த போது,
    மேட்டூர் ரோட்டில் பர்ஸ்ட் கம்ப்யூட்டரில் வேலை செய்த போது, இரவு 12 மனிக்கு மேல் போஸ்டர் ஒட்ட போனது நினைவுக்கு வந்தது….

    மீண்டும் ஈரோட்டுக்கு வந்த மாதிரி மனதில் ஒரு மகிழ்ச்சி !!!

  3. on 02 Sep 2005 at 6:31 am3சுதர்சன்

    நல்ல நடை உங்களுடையது, எழுத்தையும் தான் சொல்கிறேன். 🙂

  4. on 02 Sep 2005 at 6:47 am4ராசா

    //ஊர் கொஞ்சம் மாறி இருக்கிறது.//

    கொஞ்சமா..?? நாலுவருஷம் கழிச்சு, போன வாரம் ப்ரஃப் ரோட்டையும், பார்க் ரோட்டையும் பார்த்து, நான் ஆடிபோயிட்டேன், நீங்க இப்படிசாதரணமா.. சொல்ரீங்களே.. நிறையவே மாறியிருக்குங்க .. 😉

    ஆனாலுல் ஜங்ஷன்’ல இருந்து வீரப்பன் சத்திரம் இவடத்துக்கால’ங்கிறது கொஞ்சம் ஓவருங்க..

  5. on 02 Sep 2005 at 6:50 am5Dubukku

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

  6. on 02 Sep 2005 at 6:51 am6Dubukku

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

  7. on 02 Sep 2005 at 8:12 am7Padma Arvind

    செல்வராஜ்
    எத்தனையோ நாடுகளில் இரயிலில் பயணித்திருந்தாலும் இந்திய புகைவண்டிகளின் கம்பீரமே தனி. இரண்டு நாள் ஒட்டி களாஇத்து புது டில்லியிலிருந்து சென்னையில் நுழையும்போது புகைவணிடியின் சப்தம் அதன் கம்பீரத்தை சொல்வதாக படும்.
    நாங்கள் ஒருமுறை லக்ஸாரிலிருந்து ஜம்முதாவி சென்றபோது இப்படித்தான் ஊர்மக்கள் இடையில் ஏறிக்கொண்டு கலட்டாச் எய்ததும் சிறிதுநேரம்தானே என்று சகபயனிகள் வாளாவிருந்ததும் உங்கள் கட்டுரையை படித்ததும் நினைவுக்கு வந்தது. அதேபோல எத்தனை நேரம் ஆனாலும் காத்திருக்கும் பெற்றோரும். செல்வநாயகியும் நீங்களும் வாழ்வியலை எழுதுவதில் வல்லவர்கள்.
    கல்கியில் வெளியான கட்டுரையை அருணாவின் பின்னூட்டத்தில் தெரிந்துகொண்டேன். பாராட்டுக்கள்.

  8. on 02 Sep 2005 at 12:36 pm8Balaji Subra

    இனிமையான பகிர்தல். நன்றி செல்வராஜ்.

  9. on 02 Sep 2005 at 1:55 pm9prakash

    செல்வராஜ், அட்டகாசமா எழுதியிருக்கீங்க…

  10. on 02 Sep 2005 at 2:02 pm10சுரேஷ் செல்வா

    அருமையான பதிவு செல்வராஜ்..

  11. on 02 Sep 2005 at 2:20 pm11நாராயணன்

    //ஊர் கொஞ்சம் மாறி இருக்கிறது. இருந்தாலும் பெரும்பான்மையான அமைப்பு அப்படியே தான் இருக்கிறது. பல நாள் கழித்துப் பார்க்கிற குழந்தையை ‘எவ்ளோ வளந்துருச்சு!’ என்று வியக்கும்போது அதன் உடனேயே இருப்பவர் ‘அப்டீங்களா எங்களுக்குத் தெரியலியே’ என்பது போல் தான் இங்கேயே இருப்பவர்களும் ஊரைப் பற்றிச் சொல்வார்களாய் இருக்கும்.//

    :-))

  12. on 02 Sep 2005 at 2:51 pm12என்றென்றும் அன்புடன் பாலா

    அருமையானதொரு பயணக் கட்டுரையை படித்தது போன்ற உணர்வு !!! பாராட்டுக்கள்.

  13. on 02 Sep 2005 at 3:26 pm13Thangamani

    //அந்த அகால வேளையில் யாரேனும் எதிர்ப்பட்டு வழிப்பறி முதலியவைகளில் ஈடுபட்டால், கையில் தூக்கிச் சென்ற பழைய மிக்ஸீயைப் போட்டு அடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு சென்ற என் வீர தீரக் கனவுகளுக்கு வேலையில்லை.//

    :)))

  14. on 02 Sep 2005 at 7:52 pm14Vimala

    அப்பா….எவ்வளவு தூரம் நடக்கிறது, காலே வழிக்குது!! ஈரோடு போய்ட்டு வந்த மாதிரி இருக்குங்கண்ணா.
    இந்தப் பதிவும் நல்லாருக்குங்க.

  15. on 02 Sep 2005 at 9:43 pm15சுந்தரவடிவேல்

    காலையில் நினைத்தேன், இந்த ஊர்ப்பயண அனுபவத்தையெல்லாம் இன்னும் நிறைய பதிவுகளாய் எழுதிக் கட்டி ஒரு புத்தகம் போடலாம். செய்வீர்களா?

  16. on 03 Sep 2005 at 6:26 am16தாணு

    நாங்களெல்லாம் காலையில்தான் நடைப் பயிற்சி செய்வோம்,
    கலெக்டர் அலுவலக வளாகத்தில்.நீங்கள் இரவுச் சூரியன் போலும். சத்திரத்திற்கு சம்பத்நகர் வழியாகச் சென்றிருந்தால்
    இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஊரைச் சுற்றியிருக்கலாம்.

    கொங்குதமிழ் கடல் கடந்து போனாலும் மாறாது போலும்!
    GH எதிரேயிருந்த baaricade ஐச் சுற்றிச் சென்றீர்களா, தாண்டிச்
    சென்றீர்களா இல்லை, தள்ளிவைத்துவிட்டு சென்றீர்களா? ஏனென்றால், `தடையை மீறி நடைப்பயணம்’செல்லுபவர்களுக்கு
    தண்டனை உண்டு எங்கள் ஊரில்!!!!

  17. on 03 Sep 2005 at 5:32 pm17செல்வராஜ்

    நண்பர்கள் அனைவரது கருத்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.

    தேசிகன் உங்கள் சிறப்புத் தெரிவுப் பக்கம் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி.

    ஜெகதீஸ்(ஈரோட்டுல போஸ்டர் எல்லாம் ஒட்டி இருக்கீங்களா, ஆஹா…), சுதர்சன்(சூப்பர் கமெண்டுங்க, சிரிச்சுட்டேன்), ராசா(விளாம்பழ ஜூஸ் நினைவுக்கு வந்துச்சுங்க, ஆனா அங்க போக முடியல்ல), டுபுக்கு (இரட்டை நன்றி:-) ), பாலாஜி, பிரகாஷ், தங்கமணி, நாராயணன், சுரேஷ் செல்வா, பாலா, விமலா (இதுக்கெல்லாம் கால் வழிச்சா எப்படி?)
    எல்லோருக்கும் நன்றி.

    ஈரோடு பக்கம் சம்பந்தம் இருப்பவர்களின் கூட்டம் அதிகமாவது போல் தெரிகிறது.

    தாணு, அதெப்படிங்க கரெக்டா புடிச்சீங்க. GH பக்கம் வேலி தாண்டித் தான் போனேன். சம்பத் நகர் இல்லாமல் இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி வழியாகக் கூடப் போயிருக்கலாம். ஆனால் அகால வேளையில் எதாவது நாய் ‘கீய்’ வந்துட்டா என்ன பன்றதுன்னு தான் அப்படியெல்லாம் போகலை.

    சுந்தரவடிவேல், உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் சொல்லும் யோசனை அருமையாகத் தான் இருக்கிறது. நானா மாட்டேன் என்கிறேன்? 🙂

    பத்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னது மாதிரி வடநாட்டில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ரயில்பயணம் ஒரு தனியிடம் பெற்றிருக்கிறது தான். ஆனால் அதையே இன்னும் சிறக்கச் செய்ய முடியும் தான் என்பதில் ஆதங்கம்.

  18. on 03 Sep 2005 at 10:35 pm18வாசன்

    கூடவே உங்களோடு நடந்து வந்தது போலொரு உணர்வு. போற போக்கை பார்த்தால் என்னை மாதிரி ஆசாமிகளையும் இந்தியாவுக்கு போக வைத்து விடுவீர்கள் போலிருக்கே..

    நிற்க.

    கிளிவ்லாந்திலிருந்து தமிழகம்/இந்தியா திரும்பிய பின் ,சுகாதார வேறுபாடுகள் போன்றவைகளை எப்படி உணர்ந்து வருகிறீர்கள்..

    நன்றி இயல்பான இந்த பதிவுக்கு.

  19. on 06 Sep 2005 at 7:50 am19சோம்பேறி பையன்

    பிரதர் செல்வராஜீ….சும்மா சொல்லக் கூடாது…கலக்கியிருக்கீங்கய்யா…
    எனக்கு எங்கூரு (திருச்சி) ஞாபகம் வந்திருச்சி….

    – சோம்பேறி பையன்

  20. on 06 Sep 2005 at 6:42 pm20செல்வராஜ்

    வாசன் நன்றி. சுகாதாரம் பற்றி நிறையக் கருத்துக்கள் குறைபாடுகள் இருக்கின்றன. நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். விரிவாய் முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

    சோம்பேறிப்பையா, உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

  21. on 04 Oct 2005 at 11:08 pm21kgchairman

    Hi selva,

    Its very nice, since i am also from erode, so very touching bcoz of ‘sontha ooru’ pasam. These kind of articles triggers me also to write something. ( Naanum konjam books-la kathai vitruken..;). Very good one..keep it up…

    Gopi

  22. on 05 Oct 2005 at 12:23 am22துளசி கோபால்

    அருமையா எழுதியிருக்கீங்க. கூடவே உங்க வீட்டுக்கும் வந்துட்டேன்.

    எங்க மாமா இப்படித்தான் சொல்லாமக் கொள்ளாம நினைச்ச நேரத்துக்குக்
    கிளம்பி காலை நாலு நாலரைக்கு வீட்டுக்கு வந்து நிப்பார். சேலம்
    டு அம்பத்தூர். பாஸெஞ்சர் வண்டி!

    நாலுமணிக்குக்கதவைத் தட்டுனாலே இவர்தான்னு ஆகிப் போச்சு.
    நானு முழிச்சுக்கிட்டாலும் ச்சும்மாத் தூங்கறமாதிரி அசையாம இருந்து
    பாட்டி, சித்தி எல்லோரும் அவரோட பேசறதைக் கேட்டுக்கிட்டே இருந்து,
    பொழுது விடிஞ்சதும் ஒப்பிப்பேன்.

  23. on 05 Oct 2005 at 2:22 am23அன்பு

    மீண்டும் அருமையான ஒருபதிவு. ஈரோட்டுப் பக்கம் போய் ரொம்ப நாளாயிட்டதால நண்பர்கள் சிலரிடம் அவ்வபோது ஊர் எப்படியிருக்கு, கல்லூரி எப்படி என்று கதை கேட்டுக்கொள்வேன். இன்னிக்கு மலரும் நினைவுகளை நீங்க ரொம்பக் கிளரி விட்டுட்டீங்க…

    பெங்களூரில் இருந்து எழுபத்தாறு ரூபாய்க்கு ஈரோடு வந்துவிட்டு, ‘இவடத்துக்கால′ இருக்கிற வீ.சத்திரத்திற்கு ஐம்பது அறுபது ரூபாய் கொடுக்க மனம் ஒப்பவில்லை என்பது ஒரு பக்கம்.

    நாங்கள் சிலவேளைகள் நடையும், பல நேரம் வெள்ளி/சனி இரவுகளில் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு ஈரோடு ஆர்ட்ஸ்க்கு அரைபாடி லாரில போவோம் விடுதிக்கு.

    ஆனாலுல் ஜங்ஷன்’ல இருந்து வீரப்பன் சத்திரம் இவடத்துக்கால′ங்கிறது கொஞ்சம் ஓவருங்க..

    ராசா, கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர். ஆனாலும் இதுமாதிரி இடையில வர்ர ஒரு டீக்கடையில் ஒரு டீயைக்குடிச்சுட்டு நள்ளிரவு (வெளிச்சத்தில்) நடப்பது அலாது சுகம்தான்.

    சுந்தரவடிவேல், உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் சொல்லும் யோசனை அருமையாகத் தான் இருக்கிறது. நானா மாட்டேன் என்கிறேன்? 🙂

    கண்டிப்பாக செய்யுங்கள், எங்களுக்கு இன்னொரு ‘துணையெழுத்து’ கிடைக்கும்.

  24. on 05 Oct 2005 at 3:41 am24செல்வராஜ்

    கோபி, நன்றி. வாங்க, வந்து அப்படியே எழுத்துக் குதிரையத் தட்டிவிட்டு ஏறிக்குங்க!

    துளசி, அட எனக்கும் இப்படி நடு ராத்திரியில ரயில்லே போய் இறங்குறது புடிக்கும். சென்னையில் இருந்து இரவு ‘ஏற்காடு’ வரை யார் காத்திருக்கிறதுன்னு பலநாள் திருவனந்தபுரம் விரைவு வண்டியில ஏறி நடுராத்திரியில ஈரோட்டுக்குப் போயிருக்கேன். அதிலயும் அந்த நேரத்துல கீழ் வீட்டுக்காரங்கள எழுப்ப வேண்டாம்னு, இரும்புக் கதவு ஏறிக் குதித்து மேல போனதும் உண்டு 🙂

    ஆகா அன்பு, உங்க அன்புக்கும் நன்றி. இப்பத்தான் அந்தப் பக்கம் கண்ணன் கிட்ட சொல்லிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா துணையெழுத்துன்னெல்லாம் தூண்டி விடுறீங்க! ஈரோட்டுப் பக்கமா நீங்களும் கொண்டாடி இருப்பீங்க போலிருக்கு. ஒரு நாள் சிங்கப்பூர் வந்து (நெனப்ஸ் தான்) உங்க கிட்ட கதை கேட்டுக்கறேன் 🙂

  25. on 05 Oct 2005 at 11:28 am25சரவ்

    அசத்தலா எழுதியிருக்கீங்க செல்வராஜ். நெறைய பழைய நினைவுகள தட்டி எழுப்பி ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’-ன்னு பாட வெச்சுட்டீங்க!! 🙂

    நல்ல பதிவு.

    சரவ்.

  26. on 05 Oct 2005 at 11:25 pm26அன்பு

    //ஒரு நாள் சிங்கப்பூர் வந்து (நெனப்ஸ் தான்) உங்க கிட்ட கதை கேட்டுக்கறேன்

    இதிலென்ன நெனப்பு – எப்பவேணா வாங்க…:)

  27. on 06 Oct 2005 at 1:39 pm27செல்வராஜ்

    சரவ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    அன்பு, சிங்கப்பூர் தானே, ஒருநாள் பார்க்கலாம்.

  28. on 14 Oct 2005 at 2:45 am28andal

    ellorudaya ninaivukalum uyir petru irukkum.anbu mamakkal, thambikal ellorum urimaiyaaga varum neram. ippothu ayalnaadu sendra magalum,magangalum varum neramaagi vittathu. ungal ninaivukkum vadivu koduthathirkkum nandri.

  29. on 19 Oct 2005 at 9:13 pm29Cipher

    Erode-la irunthu inthai pera ?! Ennaiyum antha list-la sethukoonga…

    Selvaraj Railway station-la irunthu V.Chatiram…konjam over thaan…athuvum night 1:00 manikku..too much-a theriyala…

    adutha thadavai pogumpothu.. appadiye namma VOC Park Aanjaneyar-a kettatha sollunga…

    naan antha pakkam poi oru rendu varusam aagapoguthu;-)

    Thanks for bringing back those memories

  30. on 27 Mar 2006 at 6:27 am30கமல்

    செல்வராஜ்,

    பதிவு மிக அருமை. எனக்கும் அடுத்த வருடம் ஊருக்குச் செல்லும்போது நள்ளிரவில் நடக்கனும்னு ஆசை வந்திடுச்சி. ஆனால், ஈரோட்டிலிருந்து கோபிக்கு நடந்தே போகமுடியுமா என்றுதான் யோசிக்கிறேன். சவிதா அருகிலுள்ள கணிணி மையத்தில் பணிபுரிந்தபோது, கவுந்தப்பாடியிலிருந்து எங்கள் கிராமத்திற்கு இரவில் (தனியாக, சுடுகாடு வழியாக) பலமுறை நடந்து போயிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் அதைப்பற்றி எழுதனும்னு தோன்றியதில்லை.

    நம்ம ஊர் மக்கள் நிறைய பேரை இணையத்தில் பார்க்க மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

    நன்றி
    கமல்

  31. on 29 Mar 2006 at 6:40 am31blntechie

    VERY NICE.I HAVE TRIED TO WRITE SIMILAR EXPERIENCES.AANA ENNAKU ONGA MATHIRI NADAI VARALAI!!
    ENNA PANNA MATHAVANGA EZHUDHINATHA PATHU SANTHOSHA PATTUKA VENDIATHUTHAN

    P.S:THAMGLISHLA TYPE PANIRUKENU THAPPA NINACHUKATHINGA.COLLEGE SYTEM,NO TAMIL FONTS OR SOFTWARE.

  32. on 18 Oct 2007 at 11:52 pm32செல்வராஜ் 2.0 » Blog Archive » என் சென்னைக்கு வயது பதினைந்து

    […] பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் […]

  33. on 01 Mar 2009 at 12:21 pm33ஜோதிபாரதி

    உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
    சுட்டி இதோ!
    http://blogintamil.blogspot.com/2009/03/blog-post.html

  34. on 29 Jun 2009 at 11:40 pm34செல்வராஜ் 2.0 » Blog Archive » ஊர் நிலை

    […] இனிமேல் பெங்களூருக்கே சென்று ஈரோட்டுக்கு இரயில் பிடித்துக் கொள்ளலாம் என்று […]

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook