இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

குரங்கே கோபமா?

August 19th, 2005 · 22 Comments

“என்ன கோபமா இருக்கியா?” என்று கேட்டது குரங்கு.

“ம்ம்…, நீ?”

“எனக்குக் கோபம் தான்”

“எனக்கும் கோபம் கன்னாபின்னான்னு இருக்கு” என்றேன். “நெறயா எம் மேல. கொஞ்சம் உம் மேலயும். ‘ரௌத்திரம் பழகு’ன்னு மீசைக்காரன் ரெண்டு வார்த்தைல சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா என்ன பண்றதுன்னு தெரியலே!”

“சரி. விடு. இப்போ எதுக்குக் குதிக்கறே?”

“விடா? நீதானே நான் குதிக்கவே இல்லைன்னு சொன்னே?”

“ஆமா. அதுக்காக என்ன பண்றது? நீ சொல்றதுக்குப் பெரும்பாலும் மாற்றுச் சொல்லத்தானே நான்? எதுவுமே அதீதமாப் போயிட்டா பிரச்சினை தான்”

“அடப் போ குரங்கே. நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கு. அது சிதறும்போது எதையோ பிச்சு எடுக்கிற மாதிரி வலிக்கும். அப்புறம் என்ன பெரிய பிரச்சினை?”

“நான் உனக்கு முன்னாடியே சொன்னேன். ஏன் இப்படி முட்டாளா இருக்கேன்னு?”

“சொன்னே. இல்லைன்னு சொல்லல்லே. ஆனா நான் நல்லதனமா இருக்கணும்னு நெனச்சேன். அதுக்கும் எல்லை இருக்கு தான். ஆனா எனக்கு ரொம்ப பொறுமை. என்னுடைய எல்லை கொஞ்சம் தள்ளின்னு நான் இருமாந்து இருந்தேன். நீ சொன்னதெல்லாம் கேக்கலே. என் அளவுகோல்களின்படி நான் நல்லவனாத் தான் இருக்கேன்னு நீ சொல்றதக் கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு அந்த அளவுகோலின்படிக் கூட நான் இப்படி இருக்கேன்னு தான் எனக்குப் பெரிய சோகம். அதனால் தான் ரௌத்திரம் பழகணும்னு நினைக்கிறேன்”

“என்னைப் பாத்து நெதானமாச் சொல்லு. அப்படி ஒண்ணும் இது திடீர் மாற்றம் இல்லையே”

“நீ சொல்றது சரிதான். இருந்தாலும் எல்லாம் சரியாகிடும்னு ஒரு நப்பாசை. அதான் இப்போ மோசமான வலி. ஆனா பல நாளாக் கொஞ்சம் கொஞ்சமா வந்ததால இப்போ கொஞ்சம் மரத்துத் தான் போச்சு”

“எவ்வளவு தான் நம்பிக்கையான ஆளா இருந்தாலும், பிறர் பொறுப்பற்றுச் செயல்படறப்போ நீ என்ன செய்ய முடியும்? நான் தான் என்ன செய்ய முடியும். என்னைத் திட்டாதே. நொந்துக்காதே”

“சரி விடு குரங்கு. கண்ணனுக்குக் கூடக் கோபம் வந்துச்சாம். எதோ சொல்றார். பார் புரியுதான்னு”

“சரியாய்ட்டார் போல. நீயும் தான் கடசில ‘எல்லாம் நல்லதுக்குத் தான் அப்படீம்பியே. ‘இதுவும் ஒரு பாடம் தான். ஏத்துக்கிட்டு மேல போ’ன்னு எனக்கே அறிவு சொல்வியே”

புன்னகைத்தேன். இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன். சிறுபெண்கள் வரைந்து பரிசாய்க் கொடுத்த ஓவியங்களைப் பார்த்து ரசித்தேன். கோயிலுக்குப் போகவில்லை. காலையில் அலுவலகத்தில் மூன்று மாடிகளை இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி ஏறிவிட்டுக் கடைசிப் பத்துப் படிகளை மூச்சு வாங்கிக் கொண்டு ஏறினேன்.

காலைத் தென்றலில் களிப்புற்ற குரங்கு எனக்கு முன்னால் போயிருந்தது. கனிவாய்ப் பார்த்தது. கண்விழித்ததும் வாழ்த்துச் சொன்னது நினைவுக்கு வந்தது.

நிமிர்ந்து பார்த்து மெல்லச் சொன்னேன், “ஒரு முறை ஆழியாறுக்குப் போய்ட்டு வாயேன் !”

Tags: வாழ்க்கை

22 responses so far ↓

  • 1 ஞானபீடம். // Aug 19, 2005 at 1:04 pm

    குடும்பத்துக்குள் நடக்கும் உரையாடல்களோ!
    😉

  • 2 Jagadhees // Aug 19, 2005 at 1:29 pm

    மனது கொஞ்சம் கணமாக இருக்கும் போது படிக்கட்டுகளில் விளையாட்டுதனமாக ஏறி, அதை மறக்க முயற்சிப்பதுண்டு!

    மனசு 1: கவலைப்படாத எல்லாம் நல்லதுக்குத்தான்…
    மனசு 2: என்னத்த நல்லதோ…
    மனசு 1: சரி என்னவோ பண்ணு…

    புதுச்சட்டை, இனிப்பு இதெல்லாம் படிக்கும் போது, எனக்கு ஒன்றும் இல்லை என வெளிக்காட்டிக் கொள்ள, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் செயல்கள் என நினைக்கிறேன்….

    என் ஊகம் சரி என நினைக்கிறேன்… தவறெனில் மன்னிக்கவும்….

  • 3 karthikramas // Aug 19, 2005 at 1:54 pm

    மலரே மெளனமா?

  • 4 பாலாஜி-பாரி // Aug 19, 2005 at 2:16 pm

    aammaam aazhiyaarkku poganum.
    🙂

  • 5 Thangamani // Aug 19, 2005 at 3:07 pm

    பிறந்த நாள் வாழ்த்துகள்!

  • 6 லதா // Aug 19, 2005 at 3:30 pm

    நிமிர்ந்து பார்த்து மெல்லச் சொன்னேன், “ஒரு முறை ஆழியாறுக்குப் போய்ட்டு வாயேன் !”

    வாழ்க வளமுடன்.

  • 7 Padma Arvind // Aug 19, 2005 at 3:53 pm

    புன்னகைத்தேன். இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன். சிறுபெண்கள் வரைந்து பரிசாய்க் கொடுத்த ஓவியங்களைப் பார்த்து ரசித்தேன். கோயிலுக்குப் போகவில்லை– வாழிய பல்லாண்டு வளமுடன், மகிழ்வுடன்.

  • 8 செல்வராஜ் // Aug 20, 2005 at 1:07 am

    வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி.

    ஞானபீடம் குடும்பத்துள் மட்டும் இல்லை, உள்ளுக்குள் நடக்கும் உரையாடல்களும் தான் (முதன்மையாய் அதுவே). ஜகதீஸ், வாங்க, நன்றி. இதற்காகவென்று அந்தச் செயல்கள் இல்லை. அந்தச் செயல்களால் இதனை உதறிவிட்டுச் செல்லும் முயற்சி. குழப்பிட்டேனா:-)

    கார்த்திக் :-), தங்கமணி, பத்மா நன்றி.

    லதா, நீங்க போயிருக்கீங்க/தெரிஞ்சிருக்கீங்க போலிருக்கு. பாலாஜி, நீங்க எதுக்கு அங்க போகணும். கிருஷ்ணகிரிக்குப் போனாப் பத்தாதா? 🙂

  • 9 ராசா // Aug 20, 2005 at 1:13 am

    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!! 😉

    வாழ்த்துகள் செல்வராஜ்.. (எத்தனையாவது??)

  • 10 Ramya Nageswaran // Aug 20, 2005 at 1:47 am

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்வராஜ்..

    ஒவ்வோரு பிறந்த நாள் வரும் பொழுதும் ‘இப்ப கொண்டாடும் அளவுக்கு என்ன செஞ்சுட்டோம்?’அப்படின்னு கேள்வி முளைக்கும் மனசுலே. நீங்க அதையே வேற மாதிரி கேட்டுக்கிட்டீங்களா? உங்க உரையாடல் முழுக்க புரியலை எனக்கு! 🙁

  • 11 குழலி // Aug 20, 2005 at 1:57 am

    வாழ்த்துக்கள் செல்வராஜ்

  • 12 இராதாகிருஷ்ணன் // Aug 20, 2005 at 3:31 am

    வாழ்த்துகள் செல்வராஜ்!

  • 13 Kannan // Aug 20, 2005 at 3:38 am

    செல்வா,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • 14 செல்வராஜ் // Aug 20, 2005 at 5:24 am

    ராசா, ரம்யா, குழலி, இராதா, கண்ணன் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ராசா, எவ்ளோன்னு உங்க பதிவுப் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கறத வச்சுக் கண்டுபிடிச்சிரலாமே (தளபதி)

    ரம்யா, மன்னிச்சுக்குங்க. பொதுவான விதயம் இல்லாம விதப்பானது இந்தப் பதிவில அதிகம். குரங்கு ஒரு உருவகம். ஒருவகைப் பிளவாளுமையோடு உள்மனப் பேச்சு. மற்றபடி, அதனாலெல்லாம் (ஏமாற்றங்கள்)கொண்டாட்டங்களை விட்டுவிட வேண்டாம் என்னும் நிலை, அதிலும் கொண்டாடவென்று குழந்தைகள் இருக்கும்போது.

  • 15 முகமூடி // Aug 20, 2005 at 12:47 pm

    வாழ்த்துக்கள் செல்வராஜ். உங்கள் பதிவு எழுதப்பட்டவுடன் பார்த்தேன். சரி இதில் “என்னவோ” உள்ளர்த்தம் இருக்கிறது என்று பேசாம இருந்திட்டேன்… ஆனா உங்களுக்கு பிறந்த நாள்னு இத வச்சி கண்டுபிடிச்சி இருக்காங்க நம்ம மக்கள்.. உண்மையிலேயே தமிழ் கத்துக்கணும்தான் போல நான்.

  • 16 செல்வராஜ் // Aug 22, 2005 at 4:36 am

    முகமூடி, உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி. ஓரளவிற்கு எனக்கும் ஆச்சரியம் தான். சந்தோஷமும் கூட.

  • 17 என்றென்றும் அன்புடன் பாலா // Aug 22, 2005 at 5:38 am

    செல்வராஜ்,
    //இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன்.
    //
    இந்த வரிகளை படித்தவுடன், உங்களுக்கு பிறந்த நாள் என்பது (உண்மையிலேயே) விளங்கி விட்டது 🙂 ஆனால், கடந்த 3 நாட்களாக வலைப்பதிவுகள் பக்கம் வராததால், பதிவை இப்போது தான் பார்த்தேன் !!!

    Anyway, belated birthday wishes !!! குரங்கையும் விசாரித்தேன் என்று சொல்லவும் 🙂

  • 18 suresh selva // Aug 25, 2005 at 6:49 am

    வாழ்த்துகள் செல்வராஜ்!

  • 19 Aruna // Sep 1, 2005 at 10:59 pm

    உங்கள் ஜுலை 13 ந் தேதி பதிவை ( விமானத்தில் நீர் மோர்) கல்கி 14.8.05 தேதியிட்ட கல்கியில் போட்டிருக்காங்களே செல்வராஜ். பார்த்தீங்களோ? சென்னையிலிருந்து வந்தவர்கள் கொண்டுவந்த பத்திரிகைகளைப் புரட்டியபோது கண்களில் பட்டது. உங்கள் பதிவு வெகுஜனப் பத்திரிகையில் வருவது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • 20 செல்வராஜ் // Sep 2, 2005 at 4:49 am

    மிக்க நன்றி அருணா. நான் இன்னும் பார்க்கவில்லை. மகிழ்ச்சி தான். போன வாரத்தில் தான் ஊரில் தெரிந்த ஒருவர் கேட்டார் – உங்கள் பதிவுகளைப் பத்திரிக்கைக்கு அனுப்பலாமே என்று.

    முதன்முதலாய் இந்தச் செய்தியைத் தெரிவித்த உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.

    பாலா, சுரேஷ் செல்வா உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  • 21 அன்பு // Sep 2, 2005 at 6:22 am

    //இன்று புதுச் சட்டை போட்டிருக்கிறேன். அளவுக்கதிகமாய் இனிப்பு சாப்பிட்டேன்.

    என்னவென்றே புரியாமல் கீழே ஸ்க்ரோல் செய்து – பின்னூட்டத்தில்தான் மேலே சொல்லியிருக்கிற வரிகள் எல்லாம் இருக்கிறதா தெருஞ்சுகிட்டேன்…

    வாழ்த்துக்கள்.

    பி.கு: தயவுசெய்து இதுபோன்று வருடமொருமுறை ஆக. 19 அன்று மட்டும் எழுதுங்கள்… அல்லது எம்பாடு திண்டாட்டம்.

  • 22 செல்வராஜ் // Sep 4, 2005 at 5:39 am

    அன்பு, நீங்க வேற. இது மாதிரி ஒரு தடவை எழுதுணாப் போதும். வருடம் ஒருமுறை இது மாதிரி உணர வேண்டாம்னு நான் நினைக்கிறேன். அதுனால கவலைய விடுங்க. சும்மா, அப்பப்போ ஒரு பரிசோதனை முயற்சியாவும் இப்படி எழுதறேன்!