மும்பை விமான நிலையம்
Aug 17th, 2005 by இரா. செல்வராசு
ஓ! தயவு செய்து மும்பை விமான நிலையம் பற்றி மட்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள். ‘இந்தியாவின் நுழைவாயில்’ என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாட்டின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வருகிற இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட முதன் முதலில் காலடி எடுத்து வைக்கிற அந்த முதல்க் கணங்களிலே தானே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் உலகமயமாக்கலும், தட்டையாகும் உலகும், கணித்திறன் மற்றும் மாறுகரைப்பணிகளும் இந்தப் பக்கமாய்த் திரும்பிக் கூடப் பார்க்காத பலரையும் உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டாயங்கள் இல்லையெனில் இந்தியாவின் நுழைவாயிலுக்குள் வந்தவுடன் எல்லோரும் வெளிவாயிலைத் தேடி ஓடி விடுவார்கள்!
வளியூர்தியை விட்டிறங்கி நிலையத்துள் நுழைந்து காலடி வைத்தவுடன் முதலில் அடிக்கிற ‘பெனாயில்’ மணத்தைக் கூட விட்டுவிடுவோம். சுத்தப் படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அட, அந்த அழுமூஞ்சிப் பழைய விளக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு ஒரே அளவு ஒளி தரும் விளக்குகளை மட்டுமாவது மாட்டி வைக்கலாமே. கடுகடுவென்ற முகத்துடன் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் குறைந்த பட்சம் கொஞ்சமாவது சிரிக்கச் சொல்லலாமே.
ரத்தாகிப் போன விமானத்தினாலோ, அல்லது சாதாரணமாகவே வேறு பல ஊர்களுக்கு மாற்று விமானங்களில் செல்ல வேண்டியிருப்பவர்களுக்கு கொஞ்சம் தெளிவான குறிப்புக்கள் கொடுக்கலாம். சரியான திசைகளில் கை காட்டலாம். ஒரு ஊருக்குப் போகும் சிலர் விமான நிலையம் மாறாமலும் செல்லலாம், மாறியும் செல்ல வேண்டியிருக்கலாம் என்னும் நிலையை உணர்ந்து அதுபற்றித் தெளிவாய் எடுத்துரைக்கலாம். அதைவிடுத்துச் சும்மா சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆளுங்க இங்கே போ, ட்ரான்சிட் ஆளுங்க அங்கே போ என்று கூவி விற்காமல் இருக்கலாம். வேறு விமானத்தில் ஏறிச் செல்பவர்கள் எல்லாம் ட்ரான்சிட் ஆளுங்க தானே. நான் பெங்களூரும் போகணும், ட்ரான்சிட் ஆளும் தான் என்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று குழம்பி, ஒரு வரிசையில் பல நிமிடங்கள் நின்றபின் ‘இங்கில்லையப்பா, நீ வேறிடம் போ’ என்று துரத்திவிட்டால் என்ன செய்வது?
உள்ளனுப்பிய பெட்டிகள் வரட்டும் என்று காத்திருப்பது ஒரு தனிக்கதை. அப்படி எடுத்து வரும் பெட்டிகளில் அவர்களிடம் சிக்கிப் பணமழும்படியான சரக்குகள் ஒன்றுமில்லை என்றால் உங்களை ‘ஏன்’ என்று கேட்கக் கூட ஒரு நாதி இராது. ‘ஒன்றும் கொண்டு வரவில்லை’ என்று எழுதப்பட்ட சுங்கத் தாளைச் சாதாரணமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் அதைக் கூடக் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள ஆளில்லை. என்னுடைய தாள் என்னுடனேயே நிலையத்திற்கு வெளியே வந்துவிட்டது.
சுங்கம் தாண்டி வெளியே வந்து உள்நாட்டு விமான நிலையம் செல்வதற்கான நிலையப் பேருந்து இருக்கும் இடம் தேடவேண்டும். முன்பெல்லாம் தனியார் விமான நிறுவனங்கள் தமக்கென்று சொந்தமாக மாற்றுப் பேருந்துகள் இயக்கின. இப்போது எந்த யூனியன் மக்கள் சண்டை போட்டார்களோ அவையெல்லாம் இல்லை. எல்லோரும் ஒன்றாக விமான நிலையப் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டும். அந்த இடத்திற்குச் செல்லவும் சரியான வழிகாட்டுதல் இல்லை. சிரமப்பட்டுக் கண்டுபிடித்து நீண்ட இருண்ட பாதைகளில் சென்று கொண்டிருந்தால் ஒரு இடத்தில் இரண்டாகப் பிரியும் வழி! ஒருபக்கம் ‘மாற்றுப் பேருந்துக்குச் செல்லும் வழி’ என்று இருக்கிறது. மறுபக்கம், ‘மாற்றுப் பயணிகள் காத்திருப்பு அறை செல்லும் வழி’ என்கிறது. கேள்வி கேட்க அருகே யாரும் இல்லை. சரி, நமக்கு ‘காத்திருக்கும் அறை’ செல்ல வேண்டியதில்லை. ‘மாற்றுப் பேருந்து’ பார்த்துப் போக வேண்டும் என்று அந்த வழியில் இன்னும் சிறிது தூரம் போனால், அங்கிருந்து அப்போது தான் ஒருவர் ஓடி வருவார். “போய் அந்த அறையில் உட்காருங்கள். பேருந்து வர இன்னும் பத்து நிமிடம் ஆகும்” என்று திருப்பி அனுப்புவார். ஏனப்பா? இதனை முன்பே அங்கொரு ஆளை வைத்துச் சொல்லியிருந்தால் இவ்வளவு தூரம் முன்னும் பின்னும் அலைய வேண்டியதில்லையே. குறைந்தது ஒரு தட்டி வைத்து ‘எல்லோரும் அந்த அறையில் உட்காருங்கள்’ என்று வழிப்படுத்தியிருக்கலாமே.
பேருந்து உள்நாட்டு விமான நிலையத்தில் கொண்டு வந்து விடும்போது எட்டிப் பார்த்தீர்களானால் கட்டிடத்தின் உச்சியில் ‘சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்’ என்று இருப்பதைப் பார்த்துக் குழம்பி விடாதீர்கள். என்னடா உள்நாட்டு நிலையத்திற்குத் தானே வரவேண்டும் என்று முழிக்காதீர்கள். அது ஏதோ பழைய பெயர்ப்பலகை போலிருக்கிறது என்று எண்ணினேன். ஆனால் உண்மையிலேயே இரண்டு நிலையங்களுக்கும் ஒரே பெயர் வைத்திருக்கிறார்களாம்! எங்கே போய்ச் சொல்ல?
உள்ளே வரும்போது தான் என்றில்லை. வெளியே செல்லும் போதும் சில குறைகள் இல்லாமல் இல்லை. மாற்றுப் பேருந்து சர்வதேச விமான நிலையத்தில் சென்று எல்லோரையும் ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறது. இரண்டு மூன்று நுழைவாயில்கள் இருக்கின்றனவே. அந்தந்த விமானங்களில் போகிறவர்களை அந்தந்த வாயிலில் இறக்கி விடலாமே என்கிற கவனிப்புக்கள் கிடையாது. இருக்கிற பெட்டிகளை இழுத்துக் கொண்டு நாமே தான் சரியான வாயிலைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டும்.
என்னவோ ஐ.எஸ்.ஓ சான்றிதழ்கள் வாங்கியிருக்கிறோம் என்று விளம்பரம் போட்டுக் கொள்கிறார்கள். முன்பு இருந்ததை விட இப்போது சற்றுச் சுத்தம் தெரிகிறது என்பது ஒரு சின்ன ஆறுதல். ஆனாலும் கழிவறைகளுக்குச் சென்று வரும்போது கைகழுவி வருபவர்களிடம் அங்கே நின்று கொண்டிருக்கிற ஆள் எதற்கு மலந்துடைதாள் கொடுத்து விட்டுத் தலையைச் சொரிந்து கொண்டு நிற்கிறார் என்று தான் புரியவில்லை.
இவற்றையெல்லாம் விடத் தீவிரமான ஒரு ஓட்டை ஒன்றும் இருப்பதாக எனக்குப் பட்டது. பயணிகள் மட்டும் தான் உள்ளே செல்ல முடியும் என்பது ஒரு பாதுகாப்பு என்றாலும், பயணிகளின் உள்ளனுப்பும் பெட்டிகள் தான் முதலில் சோதனைக்குட்படுத்தப் படுகின்றன. அவற்றைக் கொடுத்தனுப்பிய பின், குடிவெளியேற்றம், சுங்கம் பகுதிகளை எல்லாம் தாண்டிக் கீழே சென்று வாயிலுக்குள் (Gate) நுழையும் வரை கைப்பெட்டிகள் சோதனைக்குட்படுத்தப் படுவதில்லை. இது ஒரு பெருந்தவறு என்று எனக்குப் படுகிறது. மேற்தளத்தில் உள்ளே நுழையும் போதே பெரியபெட்டிகள் சோதனைக்குள்ளாகும் போதே இவற்றையும் சோதனையிட வேண்டும். குறைந்தபட்சம் சுங்கப் பகுதிக்கு முன்னராக இதனைச் செய்ய வேண்டும். கீழே வாயிலில் சோதனை நடக்கிறது என்றாலும், அங்கிருந்து சில அடிகள் தூரமே விமானத்திற்கு இருக்கிறது. நிலையத்தில் குழப்பத்தை உண்டு பண்ண நினைக்கும் தீவிரவாதிகள் ஒரு பயணச்சீட்டு வாங்கினால் போதும். அதிலும் ஒருவருக்கு மேற்பட்டவராகத் திட்டமிட்டால் பெருத்த சேதத்தை விளைவிக்க முடியும். விமானங்களை அழிக்க வேண்டும் என்பதில்லையே. நிலையத்தில் சேதத்தை உண்டு செய்தாலே மும்பையில் பொருளாதார அளவில் அடிக்க முடியுமே. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படும் வரை இது பற்றி யாரும் கவனிக்க மாட்டார்களா?
இரண்டு மூன்று வருடம் முன்பு இல்லாமலே இருந்த ஷாங்காய் விமான நிலையம் (பூடாங்) இன்று சர்வதேச அளவில் சிறப்பாக, ஆம்ஸ்டர்டாம், பிராங்க்ஃபர்ட் போன்ற விமான நிலையங்களுக்கு ஈடாக அமைந்திருக்கிறதாம். சீனாவோடு போட்டி என்றாவது நமது விமான நிலையத் தரங்களை உயர்த்த முற்படலாம். பலமுறை நவீனப்படுத்தப்பட்டும் மும்பை விமான நிலையம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
இத்தனை பிரச்சினைக்கெல்லாம் தான் மும்பை வழியாய் வேண்டாம் என்று பயண ஏற்பாட்டாளனிடம் அடித்துக் கொள்ளாத குறையாய்க் கூறினேன். “இல்லை சார், இது நேரே வரும் ஏர் இந்தியா விமானம். சும்மா அங்கே ஒரு நிறுத்தம். நீங்கள் நிலையம் எல்லாம் மாற வேண்டியதில்லை” என்றார். எப்போதும் போல் நமது ராசி, பலன் காரணமாக, அப்படி நின்று கிளம்பும் விமானம் புறப்பட்ட இடத்திலேயே ரத்தாகிப் போக, மாற்று வண்டியும் மாற வேண்டிய நிலையமும் என்று ஆகிப் போனதில், இப்படி உணர்ச்சிவயப் பட வேண்டியதாகிப் போய்விட்டது!
இருந்தாலும், தயவு செய்து மும்பை விமான நிலையம் பற்றி மட்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள்!
இரண்டு விமான நிலையங்கள் (உள்நாடு, வெளிநாடு) என்றிருந்தாலும் அவை ஒன்றான நிலப்பரப்பிலேயே இருக்கிறது என்று நினைக்கிறேன் (கீழே இறங்கும்போது பார்த்த அளவில்). குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாகத்தான் கட்டிவைத்துள்ளார்கள். பயணிகள் நடத்தப்படும் விதமும், தேவையான வசதிகளும் மிக மோசமான நிலையில்தான் உள்ளன. சர்வதேசத் தரமென்றால் என்ன என்றெல்லாம் அறிந்து கொள்ள முயன்றால்தானே?
விமானநிலைய வசதிகளெல்லாம் ஒரு நாட்டின் பெயரை எடுத்துச்சொல்லக் கூடிய விஷயங்கள். இதிலெல்லாம் பெரும் அக்கறை காட்டாமல் இருக்கிறோம்.
என்னவாயினும், பெரிய்யயயய கும்பிடு மும்பை விமான நிலையத்திற்கு. வேண்டாமய்யா வேண்டாம்.
எல்லா விமான நிலையங்களையும் மாற்றனும் செல்வராஜ். டெல்லியிலும் இதே கதை தான். நம்ம நாட்டைப் பத்தி வெள்ளைக்காரங்களை விடுங்க…நமக்கே எப்பிடி பெருமையா சொல்லிக்கொள்ள முடியும்??
பணம் போனாலும் பரவாயில்லை, ஆனால் மும்பை மட்டும் வேண்டவே வேண்டாம்.
டெல்லி மட்டும் என்ன வாழுதாம்.
சர்வதேசத் தரமா? அப்டீன்னா? International airportன்னு பேர் வச்சாச்சு, வெளிநாட்டு விமானம்லாம் வந்து போகுது. அது போதாதா?
(அதுக்காக சென்னை மட்டும் ஒழுங்குன்னு சொல்ல முடியாதுங்றது வேற விஷயம்.)
சின்ன நிலையமாக இருந்தாலும் சென்னை எவ்வளவோ பரவாயில்லை.
செல்வா,
இது மட்டுமல்ல. மும்பையில் ஒருவேளை நீங்கள் சுங்க வரி கட்டி/அதிகாரிகளுக்கு டாலர் வெட்டி வெளிவந்தால் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் இதர எடுபிடிகள் உங்களிடம் ஏதேனும் கறக்காமல் விடமாட்டார்கள்.
சென்னையில் பல இடர்பாடுகள் இருந்தாலும், சென்னை வழியாக உள்நுழைவது எவ்வளவோ பரவாயில்லை.
// இரண்டு மூன்று வருடம் முன்பு இல்லாமலே இருந்த ஷாங்காய் விமான நிலையம் (பூடாங்) இன்று சர்வதேச அளவில் சிறப்பாக, ஆம்ஸ்டர்டாம், பிராங்க்ஃபர்ட் போன்ற விமான நிலையங்களுக்கு ஈடாக அமைந்திருக்கிறதாம். //
உண்மையிலேயே நன்றாகச் செய்திருக்கிறார்கள். நகரத்தில் இருந்து டாக்ஸியில் சுமார் ஒருமணிநேரம் பயணம் போக வேண்டியுள்ளதை இப்போது அதிவேக ரயில் மூலம் பதினைந்து நிமிடங்களில் சேருமாறு இணைத்துள்ளார்கள். இங்கே(சீனா) சர்வதேச/உள்நாட்டு விமான நிலையங்களில் 500 RMB (ரூ.2500) புறப்படும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப் படுகிறது. இதை செம்மையாகவும் பயன் படுத்துகிறார்கள் போல.
நம்மூரிலும் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரியென்று பெறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்களோ…
இந்தியா மேற்கையும் இதர கீழ்த்தேசங்களையும் இணைக்கும் ஒரு நல்ல hub. சர்வதேசத் தரத்தில் ஒரு விமான நிலையம் வந்தால் இது நல்ல லாபம் தரும் என்றே தோன்றுகிறது. பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் வரும் நிலையங்கள் இந்தத் தரத்தில் வருமென்று எதிர்பார்ப்போம்.
//சென்னையில் பல இடர்பாடுகள் இருந்தாலும், சென்னை வழியாக உள்நுழைவது எவ்வளவோ பரவாயில்லை.//
மும்பைக்கு எவ்வளவோ மேல்தான். ஆனாலும்
இமிகிரேஷன் வரிசையிலே நிக்கறப்பவும் கழிவறை துர்மணம் தொடர்ந்துஅடிக்கிறதைக் கொஞ்சம் கவனிக்கலாம்.
‘குறைபாடுகள் இருந்தா சொல்லுங்க’ன்னு அங்கெ ஒரு போர்டு பார்த்தேன். ஆனா குறையைச் சொல்ல
‘சாஸ்த்திரி பவன்’ போகணுமாம். நமக்கெல்லாம் வேற வேலை இல்லை பாருங்க. ஏன், அங்கெயே
ஒரு புகார் பெட்டியாவது வைக்கலாமுல்லே?
தனியார் சேவைன்னா’ஜெட் ஏர்வேஸ்’ நல்லா இருக்கு. அங்கே ‘எல்லா இடங்களும்’ சுத்தமாவும் இருக்கு.
அதுவும் இந்தியாலெதானே இருக்கு! இல்லே அது இருக்கற இடம் மட்டும் வெளிநாடா?
என்றும் அன்புடன்,
துளசி.
http://specials.rediff.com/news/2005/aug/12sld1.htm
ஒவ்வோரு முறையும் நானும், என் கணவரும் ஆதங்கப்படும் விஷயம். ஒன்றும் இல்லாத நாடுகள் சில முக்கியமான இடங்களில் ‘ஷோ’ காட்டி நல்ல பெயரை தட்டிக் கொண்டுவிடுகின்றன. அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் இருக்கும் நம் நாட்டில் இது போன்ற சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும். முழு aiportஐயும் வேண்டாம், சில பகுதிகளை தனியார் படுத்தலாமே??
டெல்லி பற்றித் தெரியவில்லை. ஆனால், சென்னை பரவாயில்லைன்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனால் துளசி அவர்கள் சொன்ன கழிவறை துர்மணம் மட்டும் அங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அலெக்ஸ், ரீடிப்ஃ படம் மும்பைனு எனக்குத் தோணலை. எங்கோ சுட்டுப் போட்டது மாதிரி இருக்கு. தனியார்ப்படுத்தினால் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது. அரசாங்க மெத்தனம் குறைந்து கொஞ்சம் சுறுசுறுப்பு வரலாம்.
நானும் சென்னை விமான நிலையம் பரவாயில்லை என்றூ தான் நினைக்கிறேன். ஒவ்வொருதரம் ஊருக்குப் போகும்பொழுது ஒரு முன்னேற்றம் தெரிகின்றது.
நம்முர்ல ‘customer service’ சரியில்லைதான், ஆனால் அதுவும் இன்னும் சில வருடங்களிள் மாறும் என்று நினைப்போமே!!