வால்வே மாயம்
Jun 15th, 2010 by இரா. செல்வராசு
அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை.
தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள பேரா.செல்வா ‘அதர்’ என்றால் வழி என்பதை வைத்து அதரி என்று வழிப்படுத்தும் கருவியைச் சொல்லலாம் என்று ஓரிடத்தில் விளக்கியிருந்ததை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.
Valve என்னும் கருவியின் வேலை அது தானே. புழம்பு (பைப்புன்னும் சிலர் சொல்லுவாங்க:-)) ஒன்றின் இணைப்பாக இருந்து அதில் பாயும் பாய்மத்தை தடுத்து நிறுத்தவோ, வேகம்/அழுத்தம் குறைக்கவோ, ஒருவழிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்தப் படும் கருவியே வால்வு.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஊடிதழ் என்றும், தமிழ் விக்சனரி தடுக்கிதழ் என்றும் அண்ணா பல்கலைக்கழக அகராதி அடைப்பிதழ், மடிப்பிதழ், ஊடிதல், தடுப்பிதழ் போன்ற சொற்களையும் முன்வைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் பொதுவான இதழ் எங்கிருந்து வந்தது? ஆன்லைன் எட்டிமாலஜி டிக்சனரி மடக்கு கதவு அல்லது சுழலும் கதவின் ஒரு பாதியைக் குறித்த சொல்லாக வால்வைக் காட்டுகிறது. அங்கிருந்து மருவி வந்த சொல்லாகவே இருக்கிறது. பழைய தமிழ்த் திரைப்படங்களில் மேலாளர் அறைக்கு இப்படி ஒரு மடக்குக் கதவு இரண்டு பகுதியாக இருப்பது நினைவுக்கு வரலாம். அவ்விரண்டு பகுதிகளையும் இரண்டு இதழ்களாகக் கொள்ளலாம்.
வாவி என்ற சொல்லை இராம.கி பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார் என்றாலும் இது பற்றி மேலும் எங்காவது விளக்கி இருக்கிறாரா எனத் தெரியவில்லை. வாவி என்பது ஒரு நீர் நிலையைக் குறிக்கும் சொல்லாக இருப்பதாலும் வேறு எங்கும் பயன்பட்டுள்ளதா என்று தெரியாததாலும் அதனை இப்போது ஒரு பக்கமாக வைத்துவிடுகிறேன்.
கொங்கு நாட்டுப் பக்கம் தென்னை, பனையோலைகளால் வேய்ந்த தடுக்குகள் பந்தல் போட உதவும். இவை காற்றை, வெய்யலை, வெப்பத்தை, (பிறர் பார்வையை :-)), தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ பயன்படுவதால் இந்தத் தடுக்கையே வால்வுக்குப் பயன்படுத்தினால் என்ன என்று எனக்குத் தோன்றுகிறது. தடுக்கிதழ் என்று நீட்டி முழக்கிச் சொன்னால் வால்வின் வழியாகக் கிளைக்கும் பிற சொற்களைச் சொல்லச் சிரமமாக இருக்கலாம்.
ஒருவழி அடைப்புத் தடுக்கு என்னும் ஒன்றையும் அண்ணா பல்கலைக்கழக அகராதி சொல்கிறது. அதனால், வால்வு என்பதற்குத் தடுக்கு என்றே நான் பயன்படுத்த நினைக்கிறேன் (பரிந்துரைக்கிறேன் என்று முதலில் சொல்லிவிட்டு அவசரமாக அழித்துவிட்டேன்:-) ).
இதனால், valve stem = தடுக்குத் தண்டு, steam valve = நீராவித் தடுக்கு, gate valve = கதவுத்தடுக்கு, ball valve = பந்துத் தடுக்கு, valve sizing = தடுக்கு அளவிடுதல், என்று பிற சொற்களையும் சொல்லிவிடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இத்தனைக்கும் நடுவே வால்வு என்பதையே தமிழ்ச்சொல்லாக ஏற்றுக் கொண்டால் என்ன என்று யாராவது கேட்டுவிட்டால் எனக்கும் அறிவு மயக்கம் வந்துவிடக்கூடும். இல்லாத ஒரு சொல்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வால்விற்குத் தமிழில் சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். அதிகம் புழங்காததால் ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருக்கலாம். எனக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரம் திரும்பத் திரும்பத் தடுக்கு என்று எழுதியதில் பழகிப் போக ஆரம்பிக்கிறது.
வலியது நிற்கும் என்னும் அடிப்படையில் அப்படித்தான் வால்வு அமையுமெனில் பிறகு ஏற்றுக் கொள்கிறேன். என்ன! கொங்கு நாட்டிலே லகர, லகர, லகரத்திற்கு வித்தியாசம் தெரியாத சில பிறவிகள் (என்னையும் சேர்த்து) வாழ்க்கையையும், தடுக்கையும் வால்வு என்றே சொல்லும் அபாயம் அப்போது உண்டாகிவிடும்.
:))
புதிய சொல்லொன்றை கொடுத்த அண்ணன் செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள். ஏய்… ஒரு கட்-அவுட் வைங்கப்பா..! :))
நல்லா இருக்கு. ஆனாலும் தமிழில் புதிய சொற்கள் பலவும் மொழிமாற்றம் செய்யப்பட்ட சொற்களாகவே இருப்பது கொஞ்சம் வருத்தமான விசயம் தான். நாம் சரளமாக ஆபிஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறோம்; ஆனால் மராட்டியர்கள் எப்போதுமே காரியாலய்( காரியாலையம்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இப்படி பலதும் சொல்ல முடியும். தமிழனுக்கு அரசியல் பண்ண தெரிஞ்ச அளவுக்கு தன்முனைப்பு இல்லையோன்னு கூட தோணுவதுண்டு. 🙁
அப்புறம் அண்ணன், ரீடரில் படிக்க முழு செய்தி ஓடையை கொடுத்தால் நல்லா இருக்கும். 🙂
தடுக்கு நல்ல சொல்லாதான் இருக்கு. இதை முடிந்தவரையில் பரப்புங்க. நானும் இனி தடுக்கு என்றே புழங்குகிறேன்.
ஏதோ எனக்கு தான் ல, ல, ல (ல, ள, ழ) உச்சரிப்பு சரியா வரலையோன்னு நினைச்சேன். 🙂 உச்சரிப்பு சுத்தம் பார்க்கற ஆளுங்க கிட்ட பேசும் போது வேகமா பேசிடுவேன் அவங்களுக்கு தெரியக்கூடாது பாருங்க. :-)))
புதுகையில் உள்ள எங்கள் ஊரில் அதர் என்னும் சொல் இன்னும் புழக்கத்தில் உண்டு.
பந்தல் வேயும் தடுக்கு என்றால்? கிடுகு மாதிரியா? எனக்கென்னவோ தடுக்கு என்னும் சொல் நிறைவாய் இலை…
பைப்பும், வால்வும் தமிழில்லை என்று சொல்லி தமிழனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்.
அப்புறம், valve என்பது ஒரு கருவியா? அறிவு மயக்கம், வேறொன்றுமில்லை.
பாலபாரதி, முழு இடுகையும் தான் ஓடையில் வரவேண்டும். ஆனால், “மேலும் வாசிக்க” என்னும் வசதியைப் பாவிப்பதால் அதோடு ஓடை வெட்டி விடுகிறது என்று இப்போது பார்த்து அறிந்து கொண்டேன். அடுத்த இற்றைத்தலில் (அப்டேட்-இல்) சரி செய்ய வழி இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.
குறும்பன், இரவி, இருவரும் மாறுபட்ட கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். விக்சனரியில் இருக்கும் தடுக்கிதழின் வழியாகவும் தடுக்கு எனச் சொல்லலாமே இரவி? விக்கிப்பக்கத்திலும் கேட்டுப் பார்க்கிறேன். ஓலைத் தடுக்கு பற்றிய செய்தி/படம் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
இராதா, வாங்க. வால்வு/தடுக்கு பல இடங்களில் புழங்கப்படும் ஒருசொல் என்பதில், வேதிப்பொறியியல், பாய்ம இயல் என்று பார்த்தால் (இணைத்திருக்கும் படத்தைப் போல) இங்கு இது ஒரு கருவி தானே? டிவைசு என்பதைக் கருவி என்கிறேன். ஏதேனும் திருத்தம் இருந்தால் கூறுங்கள்.
ஒன்றை உருவாக்கவோ, பழுதுபார்க்கவோ உதவுவது கருவி. எனவே குறைந்தபட்சம் இதைச் சாதனம் எனலாமா?
/இத்தனைக்கும் நடுவே வால்வு என்பதையே தமிழ்ச்சொல்லாக ஏற்றுக் கொண்டால் என்ன என்று யாராவது கேட்டுவிட்டால் எனக்கும் அறிவு மயக்கம் வந்துவிடக்கூடும். இல்லாத ஒரு சொல்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வால்விற்குத் தமிழில் சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். அதிகம் புழங்காததால் ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருக்கலாம். எனக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரம் திரும்பத் திரும்பத் தடுக்கு என்று எழுதியதில் பழகிப் போக ஆரம்பிக்கிறது. /
:))
வாலப்பலம், வால்க்கை, பலமொலி, தமில்….இதெல்லாம் கொங்கு பகுதி சொல்லாடல்…திருச்சி பகுதியில் ழகரம் சிறப்பாக உச்சரிக்கிறார்கள்…. எனக்கு எப்பவுமே வாழைப்பழம் வாலப்பலம் தான்… ஹிஹி..
கொங்கு நாடு பேசும் தமிழ் கேட்பது இனிமையாக இருக்கும் .கொங்கு நாடும் தமிழ் நாட்டில்தான் உள்ளது,பின் ஏன் அங்கு மட்டும் அருமையான தமிழ் பேசப்படுகின்றது. கொங்கு நாடு சார்ந்த தங்கள் அருமையான கட்டுரை மிக நேர்த்தியாக தமிழின் தனித் தன்மையினை காட்டுகின்றது