இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வாங்க தமிழ் எழுத்த மாத்தீருவோம்

June 15th, 2010 · 16 Comments

Nila Tamil

அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க.

ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன். ‘கேள்’னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் ‘கேன்’னு படிச்சுது பொண்ணு.

என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் அவளக் குழப்பி விட்டுருச்சுன்னு தெரிஞ்சுது. அசப்புல பாத்தா ளகர மெய்யும் னகர மெய்யும் கொஞ்சம் ஒரே மாதிரியாத் தான இருக்கு. இதெல்லாம் பயபுள்ளைங்க படிக்கறதுக்குக் கஷ்டம் இல்லியா?

தனி ஒருத்தனுக்குச் சோறில்லைன்னா உலகத்தையே அழியுங்கன்னு பாரதி சொன்னானேங்கறதுக்காக அவனுக்குச் சோறு கெடைக்க வழி பண்ணாம, உலகத்த அழிக்க எது வசதி, என்ன பண்ணலாம்னு யோசிக்கற வம்சம் இல்லியா தமிழன்?

அயல்நாட்டுல பகுதிநேரமாத் தமிழ் படிக்கிற கொழந்தைக்குக் கஷ்டம்னு ஆயிரம் ஆண்டா இருக்கற எழுத்த மாத்தி உகர ஊகாரத்த ஒடச்சிச் சீர்திருத்தம் பண்ணிடலாம்னு ஒரு கூட்டம் துடிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க கிட்ட எம்புள்ள ஒரு நாள் காலைல பள்ளிக்கூடத்துக்குப் போற அவசரத்துல ளகரத்தையும் னகரத்தையும் போட்டுக் கொழப்பிப் பட்ட கஷ்டத்த யாராவது பாத்தா எடுத்துச் சொல்லுங்க. கையோட இதையும் மாத்திச் சீர்சீர்திருத்தம் செஞ்சுரட்டும். Lன்னு ளகரத்துக்கு வச்சுக்கிட்டா ஆங்கில எழுத்துப் படிக்கிற அவளுக்கு சுலபமா இருக்கும். அடடா… டகரத்தோடு கொழம்பீருமா? சரி டகரத்த Tன்னு மாத்தீரலாமே. ‘உகர ஊகார டகர னகர ளகரச் சீர்திருத்தம்’ ன்னு சொன்னாக் கேக்கறதுக்குக் கூட நல்லா ஒரு கவிதையாட்ட இருக்குல்ல!

ஓரத்துல இருக்கறவன் சும்மா இருங்கப்பா. ஒழுங்காச் சொல்லிக் கொடுத்தா ரெண்டு நாள்ல எல்லா எழுத்தையும் சரியாப் படிச்சுக்கும்னு உங்கள யாரு நூணாயம் பேசச் சொன்னது?

என்னது? இத்தன காலமா அச்சடிச்சு வச்சுருக்குற புத்தகமெல்லாம் வீணாப் போகுமா? யாருக்கும் புரியாமப் போயிருமா? இப்போ இதுக்கெல்லாம் தேவை இல்லியா? எழுத்த மாத்தறதுனால எந்தப் பயனும் இல்லைனு அறிஞர்கள் அனுபவத்துல சொல்லி இருக்காங்களா? சைனா, சப்பான்காரனெல்லாம், படம் படமாப் போட்டு ஆயிரக்கணக்குல எழுதிக்கிட்டு இருக்கானே அவனுக்கு இல்லாத கஷ்டமான்னு கேக்கறீங்களா?

சும்மா இருங்கப்பா. உங்கள எல்லாம் யாரு கேட்டா? கேள்வி கேக்க வந்துட்டீங்க? எங்கைய்யா பெரியாரே சொல்லீட்டுப் போயிட்டாரு. என்னது? நான் சொன்னேங்கறதுக்காகச் செய்யாதீங்க. அது சரின்னு உங்களுக்குப் பட்டாச் செய்யுங்கன்னும் அவரே சொல்லியிருக்காரா?

அடப் போங்கப்பா. கை துருதுருங்குது. எதையாச்சும் செஞ்சே ஆகணும். பெரியாரு பேரச் சொன்னாவாச்சியும் கேள்வி கேட்காமப் போயிருவீங்கன்னு பாத்தா, உடமாட்டேன்னு நிக்கறீங்களே?

தமிழ் என்ன உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?

* * * *
சிறிது தொடர்புடைய இடுகை: கையெழுத்துத் தமிழ்

Tags: தமிழ்

16 responses so far ↓

 • 1 சொல்லமுடியாது // Jun 16, 2010 at 12:02 am

  கையில் விளக்குமாற்று கட்டையுடன் தமிழண்ணை கோவையில் காத்திருக்கிறாள் மிஸ்டர் கருணாநிதி. உங்கள் மொழி சீர்திருத்த மொள்ளமாறித் தனத்தை காண்பிப்பதையும் காண்பிக்காததையும் பொறுத்துதான் நீர் அவளிடம் அடி வாங்குவதும் வாங்காமல் திரும்புவதும் உள்ளது. வாழ்த்துக்கள்!

 • 2 ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். // Jun 16, 2010 at 2:23 pm

  என்னாச்சு?

  உங்கள் நடை உடை பாவனை நோக்கம் எதுவுமே இந்த அவசர எழுத்தில் இல்லையே?

  அந்த படம் போல இங்கும் சேமித்த பொக்கிஷங்கள் நிறைய வைத்துள்ளேன்.

 • 3 இரா. செல்வராசு // Jun 16, 2010 at 10:07 pm

  சொல்லமுடியாதவரே, அப்படி ஏதும் நிகழ்ந்து விடாதென்றே நினைக்கிறேன்.

  ஜோதிஜி, அண்மையில் சில மடற்குழுக்களில் நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தம்/சீரழிப்பு பற்றிய விவாதங்களைக் கவனித்து வருவதில் ஏற்பட்ட மனச்சோர்வின் வெளிப்பாடு இது. எத்தனையோ இருக்க, எப்படி எல்லாம் நேரமும் ஆற்றலும் வீணாகிறது என்று ஆயாசமும் ஏற்படுகிறது. தவிர, சற்று எள்ளல் கலந்த நடையில் – அதிகம் இல்லையென்றாலும் – ஒன்றிரண்டு முன்னரும் எழுதி இருக்கிறேன்.

 • 4 நாகு // Jun 16, 2010 at 11:25 pm

  சென்னைல வளருகிற குழந்தைகள் எல்லாம் அப்படியே தமிழ படிச்சி கிழிச்சிட்டாங்க. வந்துட்டாங்க அயல்நாட்டு குழந்தைகள் பத்தி கவலப்பட…

  சென்னைல இருக்கற அஞ்சாங்கிளாஸ் பொண்ணுக்கு சில தமிழ் புத்தகங்கள் அனுப்பினேன். அந்த கட்டிடத்துலயே தமிழ் படிக்க தெரிஞ்ச குழந்தை கிடையாது…

  அத பத்தி நமக்கு என்ன கவலை. சில்லறை சேத்தோமா, ஓட்டு(காசு கொடுத்து) வாங்கினாமோ – அத்தோட விடனும்…

 • 5 ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். // Jun 19, 2010 at 12:41 pm

  திரு செல்வராஜ்

  பதில் அளித்தமைக்கு முதலில் நன்றி.

  மனச்சோர்வு வருகின்றது என்றால் இன்னமும் உணர்ச்சிகளின் ஆளுமை நம்மிடம் இருக்கிறது என்று அர்த்தம். நண்பர் ஒருவர் சமீபத்தில் கலைஞருக்கு போட்ட ஜிங்ஜாங் தாங்க முடியாமல் சில கேள்விகளை கேட்டுப் பார்த்தால் போய் உங்கள் வீட்டில் முட்டிக் கொள்ளுங்கள் என்கிறார். உங்கள் மனச்சோர்வு போல் இந்த மடத்தனத்தை எவ்வாறு பொறுத்துக்கொள்வீர்கள்?

  நாகு சொன்னது பொதுப்படையான விமர்சனம். இது போலவே போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்க் கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம். தமிழ்நாட்டில் கிராமத்தில் கடைசி மனிதன் வாழும் வரைக்கும் இந்த தமிழ் வாழும்.

  என்னுடைய மூன்று குழந்தைகளின் ஒருவர் வந்து மிஸ் எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்கிறார்கள் என்றார். இரண்டு நாட்கள் முழுமையாக புரியவைத்தேன். பள்ளியில் அவர்கள் விரும்பும் படி நடந்து கொள். வீட்டுக்கு வந்ததும் நாம் எப்போது போல இயல்பாகவே இருப்போம். ரெண்டு கண்ணு நல்லதா? இல்ல ஒரு கண்ணு மட்டும் போதுமா?

  ஏற்கனவே புரிந்து ஒத்துழைப்பு வழங்குபவர்கள் இப்போது மிகச் சிறப்பாகவே ஒத்துழைப்பு தருகிறார்கள். இங்கேயே இத்தனை கடினமாக இருக்கும் போது உங்கள் ஆர்வம் உழைப்பும் வீணாகிப் போய் விடக்கூடாது.

  இறக்கும் போது உங்கள் குழந்தைக்கு நல்ல தந்தையாக இருந்து இருக்கிறோமோ என்ற கேள்வி உங்களுக்குள் வரும் போது ஆமாம் என்பதைப் போல தாய் மொழிக்கும் அவ்வாறு இருந்து இருக்கிறீர்கள் என்பதை உள்மனம் உணர்ந்தால் போதுமானது.

  உங்கள் பழைய நடையில் உங்கள் எழுத்தை எதிர்பார்க்கின்றேன்.

 • 6 -/பெயரிலி. // Jun 19, 2010 at 1:10 pm

  தமிழ்ச்சீர்திருத்தம் வேண்டாமா? நீங்களும் நவீனதமிழன்னைக்கு எதிரான தமிழ்வெறியரா? கோவைக்கு இலவசப்பயணச்சீட்டும் சீற்றும் கிடைக்கவில்லையே என்ற பொறாமையா? நீங்கள் பெட்னா கிட்னா போவதாகவிருந்தால், அதற்கும் சேர்த்து இரண்டு கொசுறாக இதோ வாங்கிக்கொள்ளுங்கள் 🙂

  தமிழ் என்ன உங்க பாட்டன் சொத்தா? நாட்டுடமையாகவிருந்ததை நாம் சூரியகுடும்பச்சொத்துரிமையாக்கிறோம் என்று இத்தால் அறியத்தருகிறோம் 🙂

 • 7 இரா. செல்வராசு // Jun 20, 2010 at 12:42 am

  ஜோதிஜி, பள்ளியில் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்னும் வற்புறுத்தல் இன்றும் இருப்பது ஆச்சரியம் தரவில்லை. இருபது ஆண்டுகள் முன்னர் நான் படித்த பள்ளியிலும் தமிழில் பேசினால் அபராதம் கட்ட வேண்டும் என்று சில காலம் நிலைமை இருந்தது. ஆனாலும் அன்றைய சமூகத்தில் இப்போது இருக்கும் அளவு மொழியின் நிலை சீர்குறைந்து இருந்தது எனத் தோன்றவில்லை.

  இக்கட்டுரை, நீங்களும் நாகுவும் குறித்தது போல அயலகக் குழந்தைகள் மற்றும் தமிழகக் குழந்தைகளிடம் உள்ள மொழியறிவு குறித்தது அல்ல. அயலகக் குழந்தைகளின் சிரமம் என்னும் நொண்டிச் சாக்குக் கொண்டு தமிழ்ச்சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று சொல்லித் திரிபவர்களுக்குச் சொல்லிக் கொள்ளும் பதிவு. கற்றுக் கொள்ளச் சிரமம் என்று கணிதமோ, அறிவியலோ விட்டுவிடப் படுகிறதா? மாற்றப் படுகிறதா? தமிழுக்கு மட்டுமேன் இந்த நிலை?

  சொல்லப் போனால், எந்த மாற்றத்திற்கும் முற்றிலும் எதிரானவன் கூட அல்ல நான். ஆனால், நியாயமற்ற காரணங்கள் கொண்டு சிலர் தாம் நினைத்ததைப் பிறரை உதாசீனப்படுத்திவிட்டிச் செய்ய முனைவது தரும் ஒவ்வாமை தான். இந்த எழுத்துச் சீரமைப்புக்கு, சீரமைப்புக்காரர்கள் சொல்லும் காரணங்கள் ஏதும் ஏற்புடையதாக இல்லாமல் போனதாலும், அதனை மறுப்பவர்கள் சொல்லும் காரணங்கள் மிகவும் நியாயமாகப் படுவதாலும், எனது மனம் மறுப்பாளர் பக்கமே சாய்கிறது.

  இந்த நடையும் எழுத்தும் கூட எனக்குரியது தான். இது உங்கள் விருப்புக்கு இல்லாமல் இருப்பதற்கு மன்னிக்க. வேறு இடுகைகளில் சந்திப்போம்.

  பெயரிலி, செம்மொழி மாநாட்டுக்கும் போகவில்லை. பெட்னாவுக்கும் அப்படியே. ஆனால் கனெக்டிக்கட்டுப் பயணம் உண்டு.

  தமிழ்வெறியர் என்று நாலு தடவை திருப்பிச் சாத்தினீர்கள் என்றால் அப்படித் தானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன். 🙂 இன்று தான் கச்சா எண்ணெய்யைக் கரட்டு நெய் என்று நான் எழுதுவதைச் சிலர் உதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது பழசு. நான் எழுதியது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இடிப்பதும் இன்றுவரை எனக்குந் தெரியாதிருந்தது.

 • 8 கண்ணன் // Jun 25, 2010 at 12:28 am

  செல்வா,
  படம் அருமை – குழந்தைகளுக்கு என் அன்பு.
  பிந்தியதானாலும் மனம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்!
  -கண்ணன்

 • 9 செல்வராஜ் // Jun 25, 2010 at 11:20 pm

  நன்றி, கண்ணன். பழைய படம் தான். நலமாய் இருக்கிறீர்களா? உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

 • 10 திகழ் // Jul 1, 2010 at 9:31 pm

  த‌ங்க‌ளின் இடுகை வாயிலாக‌ மீண்டும் காண்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.

 • 11 செல்வராஜ் // Jul 2, 2010 at 7:24 pm

  நன்றி திகழ். மீண்டும் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தொடர முயல்வேன்.

 • 12 குறும்பன் // Jul 2, 2010 at 9:21 pm

  தமிழை இனி தமிழ்நாட்டில் யாரும் படிக்கமாட்டார்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் படித்தால் தான் உண்டு என்று உணர்ந்து அவர்களுக்கு தகுந்த மாதிரி அவர்கள் சுலபமாக படிக்க ஏதுவாக இந்த எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது தொடக்கம் தான் மேலும் பல எழுத்து சீர்திருத்தங்கள் வரும்.

  ரோமன் எழுத்துகளில் எழுதி தமிழ் படித்தால் வெளிநாட்டு வாழ் குழந்தைகள் சுலபத்தில் தமிழ் படிப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களுக்கு பதிலாக தமிழை ரோமன் எழுத்து கொண்டு எழுதவேண்டும் என்று அரசாணை வாங்குவதற்கும் முயற்சி நடக்கிறது.

  valiya semmolli vaaliya thamil.

 • 13 Cheena (சீனா) // Jul 20, 2010 at 8:54 pm

  அன்பின் செல்வராசு

  ஆதங்கம் / கோபம் புரிகிறது. எல்லாம் சரியாய் விடும்

  நல்வாழ்த்துகள் செல்வராசு
  நட்புடன் சீனா

 • 14 இரா. செல்வராசு // Jul 21, 2010 at 7:21 am

  சீனா, நன்றி. செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு சீரழிப்பு நிகழாமல் இருந்தது நன்றே. அது சமயம் ஏரணமில்லாமல் முரண்டுபிடித்துக் கொண்டு எழுதப்பட்ட சில மடலாடற்குழுமங்களைப் பார்த்ததில் எழுந்த சீற்றம் இது. (இப்போது நேர விரயம் செய்யும் அக்குழும மடல்களைப் படிப்பதில்லை – அதனால் சில நல்ல எழுத்துக்களை இழக்க வேண்டியிருக்கும் என்றாலும்).

  குறும்பன், பார்த்து எழுதுங்கள் 🙂 இதை உண்மை என நம்பிவிடப்போகிறார்கள். நீங்கள் சொல்லும் முயற்சிகளை நானும் அறிவேன். இருக்கும் ரோம எழுத்து முறைகள் போதாவென்று இன்னும் கூடப் புதிய ரோம எழுத்து முறைகளை முன் வைக்க வேலைகள் நடக்கின்றன. அவை நிச்சயம் தோல்வியில் முடியும். முடியவேண்டும்.

 • 15 kovainews24x7 // Nov 16, 2010 at 12:14 pm

  அடேங்கப்பா.. நக்கலும் நகைசுவையும் கலந்து எழுதுவது, குறிப்பாக கொங்கு தமிழில் எழுதுவது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள். இந்தப்பதிவை அட்டாலி மேல ஏறி எடுத்தேன்.

 • 16 Rajarajeswari // Apr 29, 2011 at 4:24 am

  குழந்தைக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு பாராட்டுக்கள்.