கையெழுத்துத் தமிழ்
Jan 15th, 2005 by இரா. செல்வராசு
சிக்கல் மாண்ட்ரீஸர் கையெழுத்துத் தமிழ் பற்றி முக்கியமான கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பி இருக்கிறார். ஆங்கில ஒலியியல் வழியாய்த் தமிழில் தட்டச்சு செய்வது (புதிதாகத் தமிழ் கற்றுக் கொள்பவர்களது) மொழிவளத்தைக் குறைக்குமா? கையெழுத்துத் தமிழே கற்றுக் கொள்வது அவசியந்தானா? தமிழ்நாட்டிலேயே வளரும் இந்தத் தலைமுறையினர் கணினி வழியாகவேனும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதா?
புதிதாய் எழுதப் பழகுபவர்கள் ஆங்கில ஒலிவடிவத்தின்படி எ-கலப்பை மூலம் எழுதுவது குறையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அப்படிப் பழகும் போது ஒலிவடிவிலேயே அமைந்திருக்கிற தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புப் பற்றியும் அறிவின்றி, மனதில் ஆங்கில எழுத்து வடிவம் மூலமே தமிழைக் காண்கிற முறை பதிந்து போய் மொழிக் கல்விக்கும் மொழி வளத்திற்கும் அது ஊறாகத் தடையாக அமைந்து போகும் என்பது என் கருத்து.
எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. (உயர்நிலைப்பள்ளி ஆண்டிறுதியில் ஒருமுறை தட்டச்சு வகுப்பிற்குப் பல மாதங்கள் சென்று வந்ததில் இதுவும் ஒரு பெரும் பயன். வேறு என்ன பயன் என்று கேட்காதீர்கள் 🙂 ).
TamilNet99 என்ற விசைப்பலகையை (அதுவும் எ-கலப்பை மூலம் தான்) கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஓரிரு முறைகள் முயன்று விட்டுப் பிறகு மறந்துவிட்டேன். தொடர்ந்து பயின்றிருந்தால் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது. வேறு யாரேனும் இரு முறைகளும் (அஞ்சல், தமிழ்நெட்99) தெரிந்தவர்கள் இருந்தால் அதன் நிறை குறைகளை அலசினால் பயனுள்ளதாய் இருக்கும்.
Soc.Culture.Tamil நாட்களில் இருந்தே மதுரை போன்ற அஞ்சலுக்கு முன்னிருந்த முறைகளில் இருந்து ஆங்கில வழியாகவே தட்டச்சிப் பழகியதால் இப்போது மாறப் பெரும் உள்ளெதிர்ப்பு உண்டாகிறது. அதோடு அன்று ஆங்கில எழுத்துக்களிலேயே பார்த்த கண்களுக்கு இப்போது தட்டச்சுகிற நேரத்திலேயே கண் முன் தமிழில் எழுத்துக்கள் வந்து விழுவது பெரிய சுகமாய் இருக்கிறது.
* * * *
ஒரு காட்டாகக் கணித அறிவை எடுத்துக் கொள்வோம். சிறு வயது முதலே கற்றுக் கொள்வதால் பெரும்பாலான இந்தியர்களுக்குச் சாதாரணக் கூட்டல், கழித்தல் முதலிய கணக்குகள் மிகவும் எளிமையானவை. ஆனால், அதையே அதிகமாகக் கைக்கணினிகள், கணனிகள் கொண்டு கற்றுக் கொள்ளும் மேலை நாட்டவர்கள், சிறு கணக்குகளைச் செய்யவும் தடுமாறுவதைக் காணலாம். சிறு வயதில் தாத்தாவிடம் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்க நேர்ந்தது இன்றும் பல முறை கை கொடுக்கிறது. அதே சமயம் இங்கே கடைகளில் வேலை செய்பவர்களுக்குச் சில்லறை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது கூட அவர்களுடைய கணியியந்திரத்தைப் பார்த்தால் தான் தெரியும். பழக்கப் படுத்தப் படாத மூளை மழுங்கிப் போகும் என்பது போல. இதுபோலவே சரியாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு ஆரம்ப நிலையாளர் கணினி வழியாக இன்றித் தானே எழுதிப் பழக வேண்டும் என்று நினைக்கிறேன்.
கையெழுத்துத் தமிழே வேண்டுமா என்ற கேள்விக்கும் ‘நிச்சயமாய் வேண்டும்’ என்பது தான் என் பதில். எந்த அறிவும் ஒலி வடிவில் இருப்பது மட்டுமல்லாமல் காட்சி வடிவில் இருப்பதும் அவசியம் என்று தோன்றுகிறது. காட்சி வடிவம் வேறு ஏதோ புலன்களுக்குத் தீனி போடக் கூடும். ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு ஓவியம் சமம் என்று அதனால் தானே சொல்கிறார்கள்.
கணிதப் பாடங்களையே சும்மா படித்துவிட்டுச் செல்வதை விட ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கிப் படித்துச் செல்வது நினைவிலிருத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது. பிற பாடங்கள் கூட முக்கியமான குறிப்புக்களை எழுதிக் குறித்து வைத்துக் கொள்வது எனக்கு உதவியிருக்கிறது. ஒரு முறை எனது அலுவலக நூலகத்தில் அமர்ந்து சில குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்த நூலகர், “இங்கே இலவசமாகவே பிரதி எடுத்துக் கொள்ளலாமே” என்று கூறியும், “பரவாயில்லை. நான் கொஞ்சம் எழுதிக் கொள்கிறேன்” என்று நான் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருந்ததைச் சற்று விநோதமாகப் பார்த்துச் சென்றிருப்பார். ஆனால், எழுதிக் காட்சி வடிவில் பார்க்கின்ற ஒன்றிற்கும், வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்டுக் கொள்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால், கையால் எழுதியும் கற்றுக் கொள்ளப் படும் தமிழ் அதிக மொழிவளத்தையும் புலமையையும் தரும் என்று நான் நம்புகிறேன்.
அந்த நம்பிக்கையின் காரணமாகவே அமெரிக்கச் சூழலில் வளரும் எனது குழந்தைகளும் தமிழை எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ( “அ” -வைத் திருப்பிப் போட்டிருப்பது கூட அழகாகத் தான் இருக்கிறது – எந்த எ-கலப்பையால் இந்த எழுத்தைக் கொண்டு வர முடியும்?)
மற்றபடி தமிழகத்திலேயே வளர்கிற இந்தத் தலைமுறையினர் தமிழ் கற்றுக் கொள்வது பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு சாக்கும் நியாயமில்லாத ஓன்று என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.
//( “அ” -வைத் திருப்பிப் போட்டிருப்பது கூட அழகாகத் தான் இருக்கிறது – எந்த எ-கலப்பையால் இந்த எழுத்தைக் கொண்டு வர முடியும்?)//
உள்ளது.
“அ” – அருமை!
கைப்பட எழுதிப்பழகாமல் மொழி கற்பதா? நினைத்தே பார்க்கமுடியவில்லை. கையால் எழுதும்போது கிடைக்கும் ஞாபகப் பதிவு என்றும் அழியாமல் நமக்குள் இருக்கும். அது இல்லாமல் எப்படி மொழி மனதில் தங்கும் என்று கேள்வியாக இருக்கிறது.
காசி உங்களுக்கு எழுந்த கேள்வியே எனக்கும் எழுந்ததன் விளைவு தான் இந்தப் பதிவு. மாண்ட்ரீஸர் சொல்வது போல் எழுத்துக்கு முன் பேச்சு வந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்றாலும் அது ஆதி கால நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்து விட்ட மொழியில் எழுத்துக்கும் இன்றியமையாத பங்குண்டு. இன்று நிலைத்து நிற்காத மொழிகள் எல்லாம் தமக்கென்று ஒரு எழுத்து வடிவம் இல்லாததாலோ, இருப்பதை ஆங்கிலப் படுத்தியமையாலோ (romanized) தான் அழிவைச் சந்தித்திருக்கின்றன (அ) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழர்களும் இதனை மனதில் கொள்ள வேண்டும்.
மீனா, கண்ணன், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. வாய்ப்பாடு ஒப்பித்தது அழியாத ஒரு நினைவு. இதைப் பற்றியே பல இடங்களில் எழுதிவிட்டேன் என்று எண்ணுகிறேன் (உ-ம்: சுனந்தா).
நிறைய ஸ- தெரிவது எதாவது எழுத்துருப் பிரச்சினை என்று நினைக்கிறேன். நான் வெளியிடங்களில் பார்வையிடும்போதும் சில சமயம் அப்படித் தெரியும். இயங்குதளத்தில் தமிழ் யூனிகோடு முறையைச் சரியாகச் செய்தால் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்.
//கணிதப் பாடங்களையே சும்மா படித்துவிட்டுச் செல்வதை விட ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கிப் படித்துச் செல்வது நினைவிலிருத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.//
உண்மை; பள்ளிக் காலங்களில், எழுதிப் பார்ப்பது என்பது நினைவிலிருத்திக்கொள்ள மிகவும் உதவியாயிருந்த ஒரு யுக்தி. முதலில், கையெழுத்து கற்றுக்கொள்ளாமல் வார்த்தைகளே நினைவில் தங்குமா என்று தெரியவில்லை (அப்படியானால் எனக்குத் தெரிந்த வார்த்தைகளனைத்தையும் ஒருமுறையாவது எழுதிப்பார்த்திருக்கிறேனா என்றும் கேட்கத் தோன்றுகிறது). எழுத்துக்குமுன் பேச்சு வந்ததா பேச்சுக்குமுன் எழுத்து வந்ததா என்ற கேள்வி இன்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்னதற்கே ஆதரவுக்குரல்கள் அதிகமிருப்பினும்,பின்னதும் உண்மையாக இருக்கச் சாத்தியமுள்ளது.
//சிறு வயதில் தாத்தாவிடம் பெருக்கல்
வாய்ப்பாடு ஒப்பிக்க நேர்ந்தது இன்றும்
பல முறை கை கொடுக்கிறது//
நீட்டி முழக்கி ஓ…ரோனொண்ணு….,ஓ…ரெண்டு ரெண்..டு…. இரெண்டு நா…லு மூவிரெண்டா….று
கையைக் கட்டிக்கொண்டு.. ராகமெடுத்து ஒப்பிப்பது!
என்னது புள்ளிகளெல்லாம் ‘ஸ’ வாக மாறி உள்ளது?!
‘அ’ கத்துக் கொள்ளும் எல்லா குழந்தைகளுமே
முதன் முதல்ல ‘அ’ எழுதும் போது இப்படித்தான்
அழகாக கச்சிதமா தலைகீழா! ‘அ’எழுதுவார்கள் போல்!
‘அ’வைப் பார்க்கும் போது நிவேதிதாவையே பார்ப்பது போல்!
க்யூட்டாக!
//எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. //
ஒரு முறை கண்ணை மூடி வெற்றுத் தாளில் கையால் தமிழில் எழுதுவது போல் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தட்டச்சும் வரிசை ஆங்கில எழுத்துகள் மனதில் ஓடுகின்றனவா? இல்லை, தமிழ் வடிவ எழுத்துகளா? எனக்கு ஆங்கில எழுத்துகளே வந்தன. உண்மையிலேயே கையால் எழுதும் போது கூட தடையாக இருந்தது. அதன் பிறகே தமிழ்99 க்கு மாறினேன்.
இரவி, நீங்கள் சொல்வது புரிகிறது. சிலருக்கு அவ்வாறு அமையலாம். ஆனால், எனக்கு இந்தச் சிக்கல் சிறிதும் இல்லை. இதோ இப்போது தட்டச்சும் போது கூட, எந்த விசையை அழுத்துகிறோம் என்று கவனிக்க முனைந்தால், தப்பும் தவறுமாக வருகிறது. ஆனால், திரையைப் பார்த்துக் கொண்டே தட்டும்போது தமிழே நினைவிலும் மனதிலும் கரத்திலும் எழுகிறது. அதனால் தான் இந்தப் புள்ளியில் நமது கருத்துக்கள் எதிரெதிராய் அமைந்திருக்கிறது.
ஓ.. சரி. எல்லாருக்கும் இந்தச் சிக்கல் வருவதில்லை என்பது செய்தி. எனினும் , கூடுதல் திறன், வேகம், அயர்வின்மை கருதி நேரம் கிடைக்கும் போது தமிழ்99 முயன்று பாருங்கள். முழு வேகம் வர 2 வாரமாவது ஆகும். உங்களைப் போல் நிறைய தமிழில் எழுதுவோருக்குப் பயன்படும்.