அன்புடையார்
Jan 19th, 2005 by இரா. செல்வராசு
அப்படி ஒன்றும் பெரிய உடல் நலக் கேடில்லை. வருடம் இருமுறை பருவத்திற்கொன்றாய் வந்து போகிற சாதாரணச் சளி மற்றும் மூக்கொழுகல் தான். இருந்தாலும் சற்றே மிதமான தலைவலியும் இருக்க, அலுவலுக்கு விடுப்புச் சொல்லி விட்டு இன்று வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஒரு நாள் ஓய்வு நலம் பயக்கும் என்று.
மகள்கள் பள்ளிக்குச் சென்று வரவும், மனைவி அவர்களை அழைத்துக் கொண்டு சில வகுப்புக்களுக்குக் கொட்டும் பனியில் சென்று வரவுமாய் இருக்க, நான் மட்டும் வீட்டில் சுகமாக அமர்ந்து கொண்டு வேளாவேளைக்கு வந்த சூடான தேநீர் பருகிக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தேன். இதைத் தான் அரச வாழ்வு என்பார்களோ ?
பல சமயங்களில் வாழ்க்கையில் நடக்கிற சின்னச் சின்ன விஷயங்களில் பெருஞ்சுவை கிட்டும். அவற்றை நிதானமாய்க் கவனித்துப் பார்க்கத் தவறிவிடக் கூடாது. ஒரு சிறு நிகழ்வு தான். இருந்தாலும், அப்படி ஒரு சுவையை நினைவை இன்று எனக்கு ஏற்படுத்தித் தந்தனர் என் மக்கள்.
“அப்பா கொஞ்ச நேரம் நீங்க கோடியரைக்கு கோடியறைக்கு வரக்கூடாது”
“சரிம்மா” – எனக்கு இவள் என்ன செய்கிறாள் என்று உத்தேசமாகத் தெரிந்துவிட்டது.
“உங்களுக்காக ஒரு ஆச்சரியம் வைத்திருக்கிறேன்”
இன்று மட்டுமல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு உடல்நிலை சரியில்லை என்றான ஒரு நாள் எனக்காகச் சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஒரு படம் வரைந்து கொடுத்தாளே! அன்பு நிறைந்தவள் இவள். எங்கோ ஒரு சுவரில் இன்னும் அந்தப் படம் தொங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
சற்று நேரம் கழித்து இன்று வந்ததோ “விரைவில் குணமாகுங்கள்” என்று ஒரு இனிய வாழ்த்தட்டை. அந்த அன்பில் மகிழ்ந்தேன். இப்படி அன்புகள் என்னைச் சுற்றி இருக்கையில் எனக்கு என்ன கவலை?
“இதுவா அப்பா உங்கள் விருப்பம்?” என்று கேட்டுத் தன் கற்பனையில் உருவான ஒரு காட்சிப்படம் போட்டுத் தந்தாள். படுக்கையில் படுத்து நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, தலைமாட்டில் அவர்களது அம்மா காலை மடக்கி அமர்ந்திருக்க, உதவிக்கு ஒன்றும் அன்பிற்கு ஒன்றுமாய் இரு தேவதைகள் கட்டிலுக்கு இரு புறமும் காத்திருக்க, பெண்கள் இருவரும் சிரித்து நடனமாடி எனக்கு உற்சாகமூட்ட ஒரு அரங்கேற்றமே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர் ! தன் பங்குக்குச் சிறியவளும் எங்கள் வீட்டையும் குடும்பத்தினரையும் படம் போட்டுக் கொடுத்தாள். நன்றி என் செல்லங்களா! (இவை தவிர இன்னும் பல கலைப்படங்கள் 🙂 வந்து சேர்ந்தன. அவற்றை விட்டுவிடுகிறேன்!)
உடன் இருப்பவர்களுக்கு நமது உணர்ச்சிகள் பரவும் வண்ணம் நமது மூளை நரம்பியல் இணைப்புக்கள் அமைந்திருக்கின்றன என்றும் நல்ல உணர்ச்சியறிவு (Emotional Intelligence) வேண்டுவோர் நல்ல பொதிவான (positive – நன்றி இராம.கி) உணர்ச்சிகளின் ஊற்றுக்களாய் இருக்க வேண்டும் என்றும் இன்று தான் படித்துக் கொண்டிருந்தேன். தாம் சார்ந்த குழுவிலோ, குடும்பத்திலோ, நட்பிடத்தோ, இப்படிப் பட்ட நல்ல உணர்ச்சிகளைப் பரவ விடுவது உணர்ச்சியறிவு வளர்ந்த ஒரு நிலை என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் தான் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் கூட ஆதரவாய் அன்புடையோர் அருகிருந்தால் விரைவில் நலம் பெறுவர் என்று எழுதியிருந்தார்கள். எனக்கு அற்பச் சளி தானே. மக்கள் அன்பில் பாதியும் ஒரு மிடறு தண்ணீரில் உண்ட மாத்திரையில் மீதியும் சரியாகி விட நாளை அலுவலகம் சென்றுவிட வேண்டியது தான்.
எனது உணர்ச்சியறிவையும் வளர்த்துக் கொண்டு நல்லுணர்ச்சிகளின் ஊற்றுக் கண்ணாய் மாற வேண்டும். வீட்டிலே, வெளியிலே, அலுவலகத்திலே எல்லா இடத்தும். அன்பை வெளிக்காட்டச் சிறு பெண்களிடம் இருந்தும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒற்றைப் பையனைப் பெற்று அனுப்பி விட்டு ஊரில் இருக்கிற பெற்றோருடன் பேசி நாளாகி விட்டதே – இந்த வார இறுதியிலாவது மறக்காமல் அழைக்க வேண்டும்!
நல்ல பதிவு, நல்ல படங்கள். உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும் வாழ்த்துகள்!
பெண் குழந்தைகள் பெற்ற நம் போன்றோர் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். படிக்கப் படிக்க மனம் நிறைவானப் பதிப்பு.
ஆனால் ஒரே ஒரு சிறு குறை. சில இடங்களில் படம் எழுத்துக்களையே மறைத்து விட்டன. அதனால் என்ன, ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றுக் கருதுகிறீர்களா? அதுவும் சரிதான்.
இதை எழுதும் போது என் மகள் தடாடியாக உள்ளே நுழைந்து “ரொம்பத்தான் கணினியியைக் கொஞ்சியாகிறது. சற்று ஓய்வெடுங்கள். மாப்பிள்ளையிடமிருந்து எனக்கு ஏதும் ஃபோன் வரவில்லையா” என்று மூச்சு விடாமல் பேசி என்னை அதட்டிச் சென்றாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஊரிலே, வீட்டின் அறைகளிலே ஆகக் கடைசியாக (முன் வாசலிலேயிருந்து) இருக்கும் அறையை இப்படியாக என் அப்பாச்சி / அம்மம்மா சொல்வார்கள். இப்போது, அந்த அறையும் இல்லை; அவர்களும் இல்லை; இங்கே இருப்பதோ ஓர் அறை 🙁
தற்போது குணமடைந்துவிட்டீர்களா? பூரணமாய்க் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன்.
குழந்தைகளின் உலகம் தனியானது. அதிலே அவ்வப்போதாவது பங்குகிடைக்கின்றவர்கள் பாக்கியவான்கள் என்று தோன்றுகிறது.
‘கோடியறை’
– நெடுங்காலம் பின்னாலே இந்தப்பதத்தினைக் கேட்கிறேன் (வாசிக்கிறேன்).
நன்றி தங்கமணி.
ராகவன் – பெரியவர்களாகி விட்ட போதும் அவர்களுடன் கலந்துரையாடல் இன்பம் தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைத் தந்திருக்கிறீர்கள். அப்படியான ஒரு நிலையையே (இன்னும் பலகாலம் கழித்து) நானும் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் கணினித்திரை அமைப்பு 800×600 புள்ளிகளாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் சில எழுத்துக்கள் படச்சந்தில் மறைந்து விடுகிறது. அதற்கு அடுத்த அதிகப் புள்ளியமைப்பில் இருந்தால் பிரச்சினை இல்லை.
மூர்த்தி – நன்றி. சாதாரணச் சளி தானே. இதற்கெல்லாம் போய் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறீர்களே. இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி.
பெயரிலி – நீங்கள் சொல்லாமல் சொல்லிய தவறைத் திருத்திக் கொண்டேன். நன்றி. ‘Den’க்கு அப்படி ஒரு பதம் சரிதானே?