வீட்டுக்குள்ளே கேஸடியா
Jan 21st, 2005 by இரா. செல்வராசு
ஏதேனும் மெக்ஸிக்கோ வகை உணவகத்துக்குப் போயிருக்கிறீர்களென்றால் கேஸடியா (Quesadillas) என்று ஒன்று சாப்பிட்டிருப்பீர்கள். இரு புறமும் சுட்ட சப்பாத்திக்கு இடையே உதிர் பாலாடைக்கட்டியும்(?) (சீஸ்), தக்காளிக் கார சல்சாவும், கொஞ்சமாய் வெங்காயமும், இன்னும் சில இலைதழைகளும், வேண்டுமானால் வறுத்த/பொரித்த கோழித் துண்டுகளும் சேர்ந்து ஒரு தனிச்சுவையாய் இருக்கும். அதையும் சிறு சிறு முக்கோணத் துண்டுகளாக்கி சவர் க்ரீம் (Sour Cream) என்னும் செயற்கைத் தயிர் வகையறா ஒன்றில் தொட்டுச் சாப்பிடுவது பற்றி இங்கே எழுதும்போது எனக்கே உண்டாவதைப் போல படிக்கும் எவருக்கும் நாநீர் ஊறினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன் 🙂 !
சரி, இதற்காக மெக்ஸிக்கோ உணவகத்திற்கெல்லாம் சென்று சிரமப்படாமல் வீட்டிலேயே செய்யலாம் வாருங்கள். உதவிக்கு இரண்டு வாண்டுகள் இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு. என்ன, இடையிடையே திருட்டுத் தனமாய் வாயினுள் போகும் சீஸைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேவையான பொருட்கள்:
- சுட்ட சோளச் சப்பாத்தி [டொர்ட்டியா (Tortillas)] – ஒரு கேஸடியாவிற்கு இரண்டு
- பேஸ் சல்சா – வேண்டுமளவு (காரத்தில் குறைந்தது மூன்று அளவாவது இருக்கிறது – விருப்பப்படி தெரிவு செய்துகொள்ளவும்)
- உதிரிச் சீஸ் – ஒரு பாக்கெட் (செட்டர், மோட்ஜரல்லா, அல்லது கலவை) (கொழுப்புக் குறைந்த ஒன்றே போதும்)
- சவர் க்ரீம் – வேண்டுமளவு (இதை விரல் நுனியில் எடுத்து அப்படியேவும் சாப்பிடலாம்)
- வெங்காயம்
- கொத்தமல்லித் தழை
- பிற உங்கள் வசதி/விருப்பம் படி (ஒரு முறை நான் பீன்ஸ் போட்டதாய் நினைவு!)
செய்முறை:
- ஏற்கனவே சுட்ட டொர்ட்டியா தானே. அதனால், இரண்டை எடுத்து ஒரு நிமிடம் மிதமாகச் சூடு செய்து ஒரு தட்டில் தனியே வைத்து வாண்டு எண் ஒன்றிடம் கொடுத்து விடவும்.
- முதலில் சல்சாவைக் கொஞ்சம் எடுத்து வெத்தலைக்குச் சுண்ணாம்பு தடவுவது போல ஒரு பக்கத்தில் தடவிக் கொள்ளவும். அல்லது அந்த வாண்டு எப்படித் தடவுகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும். நீங்கள் கார விரும்பியாக இருந்தால் கொஞ்சம் தாராளமாகவே சல்சாவைக் காட்டலாம்.
- எப்படி வேண்டுமானாலும் வெட்டி வைத்த வெங்காயத்தையும் (இதெல்லாஞ் சொல்லித் தரணுமா போங்க!) இதரப் பொருட்களையும் பரப்பி விடவும். (சவர் க்ரீம் தவிர்த்து).
- கடைசியாகச் சிறுசுகள் திருடித் தின்றது போக மிச்சம் இருக்கிற உதிரிச் சீஸையும் பரவலாகத் தூவி விடவும்.
- இன்னொரு பக்கட் டொர்ட்டியாவை எடுத்துக் கவனமாய் மூடவும்.
- இந்த அலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கிற போது அடுத்த இரண்டு டொர்ட்டியாவைச் சூடு செய்து வாண்டு எண் இரண்டிடம் கொடுக்கவும்.
- மூடித் தயாராய் இருக்கிற முதல்த் தயாரிப்பை மொத்தத்தையும் எடுத்து தோசைக்கல்லில் வைத்து மிதமான சூட்டில் சுடவும்.
- உரைந்த சீஸ் சூட்டில் மெதுவாக உருகி மிருதுவான டொர்ட்டியாவின் இரு புறங்களிலும் ஒட்டிக் கொள்ளத் தொடங்கும். இரண்டு புறங்களிலும் மாறி மாறிக் கொஞ்ச நேரம் சுடவும். குத்துமதிப்பான ஒரு நேரத்திற்குப் பிறகு இறக்கிச் சற்று ஆற விடவும்.
- வட்டமாய் இருப்பதைப் பாதியாக வெட்டி, ஒவ்வொரு அரை வட்டத்தையும் மூன்றாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு தட்டில் வைத்து, (வேண்டுமானால்) சவர் க்ரீம் போட்டுத் தொட்டுக் கொண்டு, ஜொள்ளு விட்டுக் கொண்டு, போட்டி போட்டு ஒருவர் பங்கை ஒருவர் பிடுங்கிக் கொண்டு சாப்பிடவும். சுவை எப்படி இருந்தாலும் “சூப்பர்” என்று சொல்லிக் கொள்ளவும்.
என்ன செய்வது? இப்படியாய் அதையும் இதையும் கலந்து கிறுக்காய் எதையாவது செய்வது தான் இந்தப் பெண்களுக்குப் பிடிக்கிறது. அது தான் மீண்டும் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, “போங்க, அதெல்லாம் அப்பாவுக்குத் தான் செய்யத் தெரியும். அவரையே கேளுங்க” என்று தப்பித்துக் கொள்கிறார் மனைவி! ‘அப்பாவின் கேஸடியா’ என்று பெயரே வந்துவிட்டது இதற்கு. இது போன்றே இன்னும் ‘அப்பாவின் சிக்கன்’, அப்பாவின் நொறுக்குத் தீனி’ என்று சில சரக்குகள் இருக்கின்றன. பேசாமல் Paul Newman போல ஒரு பிராண்டு (விளம்பரச் சின்னம்?) உருவாக்கி விடலாம் போலிருக்கிறது. அவசரப்படாதீர்கள். ‘அப்பாவின்…’ (Appa’s) என்கிற பிராண்டின் காப்புரிமை எனக்கே சொந்தம் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!
நீங்கள் ஒன்று செய்யலாம் செல்வராஜ்.வருகிற ஜூலை 4-5 போது டலஸ் டெக்சஸில் அமேரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் விழா நடைபெறவுள்ளது.அச்சமயம் இந்த பக்கம் வந்தீர்களேயானால்,விழாவுக்கு போய்விட்டு எங்களூர் பக்கமும் வந்துவிட்டு போகலாம்.
தஞ்சாவூர் டிகிரி காஃபி,நெல்லை அல்வா என்றெல்லாம் சொல்வார்களே அதுபோல,நியு மெக்சிக்கொ-மெக்சிக்கன் உணவுக்கு.கிளிவ்லாந்த் மெக்சிக்கென் உணவு எல்லாம் சேர்த்தியில்லை.அதிலும் நியு மெக்சிக்கன் உணவுமுறை தனி.கேசடியா என்ன,விதவிதமாய் முயற்சி பண்ணி பார்க்கலாம்,உணவுத்தடைகள் ஏதுமில்லாமலிருந்தால்.
சிம்மி சாங்கா கார்னே அடவாடா’– (என்னடா இவன் திடிரென்று மரியாதை இல்லாமல் எழுதறானேன்னு நினைக்காதீங்க.) இது இந்த ஊர்-மாநில சிறப்பு மெக்சிக்கன் உணவுகளிலொன்று.காரவெறியரென்றால் உங்களுக்குப் ரொம்ப பிடித்துப் போகும்.
அப்புறம் இந்த pace picante salsa வை விட்டொழியுங்கள்.இதை வாங்கிப் பாருங்கள் வேறுபாடு உடன் தெரியும்.
பெயரிலி – சும்மா அஞ்சு நிமிஷம் தான் ஆகும். பயப்படாம செஞ்சு பாருங்க. ஆனா, அதுக்கான பொருட்கள் எல்லாமே வீட்டில் முதல்லியே வாங்கி வச்சுருந்தாங்கன்னாத் தான் அது முடியும். 🙂
கார்த்திக் – கெடுத்தீங்களே காரியத்தை! வீட்டில் என்னைத் தவிர எல்லோரும் புட் சானலுக்கு ரசிகர்கள் தான். எதையும் பாத்து எல்லாம் நம்மால செய்ய முடியாது. கொஞ்சம் பாத்து, படிச்சுட்டு, எல்லாம் குத்துமதிப்பாத் தான் செய்யறது வழக்கம். தனியாளா இருக்கும் போதிருந்து கைக்கு கெடச்ச பொடியெல்லாம் போட்டுச் சாம்பார்/குழம்புன்னு வச்ச பழக்கம் (சமைத்துப்பார் மீனாட்சியம்மாவைச் சென்னையில இருந்து கூட்டி வந்திருந்தேன்).
தாரா. முக்கியமான ஒன்றை நல்லா நினைவு வச்சுக்குங்க. “சுவை எப்படி இருந்தாலும் “சூப்பர்” என்று சொல்லிக் கொள்ளவும்.” 🙂
இந்த கேஸிடியா -வை கேஸிடில்லா என்று முதல் முறை சொல்லி, ஒரு ஏபிஸிடி இந்தியப் பெண் ,
“-ல்லா வெல்லாம் கிடையாது ; அது கேஸிடியா” என்று சொல்லிக்கொடுத்தாள். இருந்தாலும் “-ல்லா”
மொத்தமாய் முழுங்குவது போங்கு.
புட் சேனலில், பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு வாண்டு அந்த பெரியம்மாவைவிட நன்றாய்
குக்கீஸ் செய்து அசத்தியது. எடிட் பண்ண முடியாமல் வழிந்து கொண்டே, அதை ஒத்துக் கொண்டது பெரிசு. 🙂
புட் சேனல் தொடர்ந்து பாருங்களேன்; அப்பா பிராண்ட்க்கும் வாண்டுகளுக்கும் நிறைய தின்னக் கிடைக்கும்!
அடியேன் அடிக்கடி இல்லாவிட்டாலும் மாதத்துக்கு ஒரு தடவை Quesadillas உண்பதுண்டு. அதை உச்சரிப்பதிலே இன்னும் சிக்கலிருந்தாலுங்கூட, உண்பதிலே இல்லை. கூடவே avocado சட்னி வகை ஒன்றும் இங்கே தருகின்றார்கள். கிட்டத்தட்ட ஊரிலே உண்டு கிழங்கு/கோழி உரொட்டியைத் தின்பதுபோன்ற உண(ர்)வு. செய்வழிமுறை தெரியாது; சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால், செய்துபார்க்கும் ஆபத்தான காரியத்திலெல்லாம் ஈடுபடப்போவதில்லை.
படிக்கும் போதே உடனே செய்து சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது. வாண்டுகள் இல்லாவிட்டால், சுவையில் பாதி கம்மியகிவிடும் போலிருக்கிறதே?
தாரா.
காசி, பல முறை வந்துவிட்ட உங்க பின்னூட்டத்த சரி பண்ணிட்டேன். கொஞ்சம் எரிதங்களோடு போராடிக்கிட்டிருக்கிறதால பிரச்சினைன்னு நினைக்கிறேன். தினமும் ரெண்டு வேளை கொசுவடிக்கிற மாதிரி எரிதங்களக் களைய வேண்டியிருக்கு!
இந்தப் பதிவ எழுதறதுக்கு முன்னாடி நம்ம ரவாதோசைப் பதிவப் போய்ப் பார்த்து வந்தேன்!
அன்பு வாசன், டல்லஸ், நியூமெக்ஸிக்கோ எல்லாம் பக்கமா இருந்தால் பரவாயில்லை. அவ்வளவு தூரத்தில் இருக்குதே. அதனால் எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் கொஞ்சம் அமெரிக்கப்படுத்தப் பட்ட மெக்ஸிக்கன் உணவு வகை தான். அதிலும் வீட்டிலேயே செய்தது என்பது சும்மா பெயருக்கு மெக்ஸிக்கன் என்று அறிவேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதிலிருந்து அந்தப் பக்கமாய் ஒரு நாள் வரவேண்டும் என்று ஆவல் எழுகிறது. வந்தால் உங்களுக்குச் சொல்லுகிறேன். 🙂
நல்லா இருக்கு செல்வராஜ். செய்து பார்க்கலாம். வாண்டு கம்பெனிதான் இதுல முக்கியம்னு நினைக்கிறேன். நன்றி!
நல்லா இருக்கு பாக்க. நாளைக்கு செய்து பாத்திடலாம். எல்லாமே சாபிடற வஸ்துகள்தான், (வெந்தாலும் வேகாட்டியுமே) எனவே வீணாப்போகாது. சப்பிடும்போது இதை //சுவை எப்படி இருந்தாலும் “சூப்பர்” என்று சொல்லிக் கொள்ளவும். // சொல்லிவிடவேண்டியதுதான். செல்வராஜ் நகைச்சுவை ஜாலியா இருக்குங்க.
குழந்தைகளுடன் குதூகலமாய் உண்ட உணவுக்கு எதுவும் ஈடாகாது .
நான் சரிவர சொல்லவில்லை.க்ளீவ்லாந்த் உணவகங்களில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவு என எழுதியிருக்க வேண்டும்.
இங்கு நீங்கள் மற்ற பிற அமேரிக்கா வாழ் வலைத்தமிழன்பர்கள் வரவியன்றால் மிக்க மகிழ்ச்சிதான்.