Jan 21st, 2012 by இரா. செல்வராசு
புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! "
பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?

"அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்"
Continue Reading »
Tags: SkyVenture, தமிழ்மணம், நட்சத்திரம்
Posted in கண்மணிகள், பயணங்கள், வாழ்க்கை | 9 Comments »
Jan 20th, 2012 by இரா. செல்வராசு
"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான்.
Continue Reading »
Tags: கிரந்தம் தவிர், தமிழ்மணம், நட்சத்திரம்
Posted in சமூகம், தமிழ் | 37 Comments »
Jan 19th, 2012 by இரா. செல்வராசு
எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.

Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள்.
கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் – என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி.
Continue Reading »
Tags: Just Lather, கொலம்பியா, மொழிக்கல்வி
Posted in இலக்கியம், சிறுகதை, தமிழ் | 13 Comments »
Jan 18th, 2012 by இரா. செல்வராசு

உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, "வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு" என்று நாற்காலியில் அமர்ந்தான்.
அவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள்! வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது.
"குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்" என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
"ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க".
"எத்தன பேரப் பிடிச்சீங்க?"
"பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட".
Continue Reading »
Tags: Hernando_Tellez, Translation, மொழிபெயர்ப்பு
Posted in இலக்கியம், சிறுகதை | 16 Comments »
Jan 17th, 2012 by இரா. செல்வராசு
"பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ" என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது கதை இங்கு செல்லவும் செல்லாது. தேவையும் இல்லை.

நன்னூல்க்காரர் இதை எனக்கென்றே எழுதி வைத்திருக்கவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. எதையும் எளிதில் விட்டுவிட முடியாமல் சேர்த்து வைக்க முயலும் நான், அண்மையில் இந்தப் பழையன விட்டுவிடுதலில் கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒரு சுதந்திர உணர்வு. பழந்தமிழன் சொல்லி வைத்துப் போன ஒன்றை இப்படியாகச் செய்ய வைத்த பழி பாவத்தை எனது அலுவத்தார் மீது தான் போட வேண்டும்.
Continue Reading »
Tags: தமிழ்மணம், நட்சத்திரம், பழையன
Posted in பொது, வாழ்க்கை | 24 Comments »