இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

புதியன புகுதலும்

January 21st, 2012 · 9 Comments

புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! "

பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?

clip_image001

"அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்"

எப்போதோ ஒரு முறை இயூஸ்டன் நாசாவிற்குச் (NASA, Houston, Texas) சுற்றுப் பயணம் போயிருந்தபோது அது போன்ற இடத்தைப் பார்த்ததாய் மங்கலாய் நினைவு. அப்போது அவள் பிறந்திருக்கவில்லை.

ஈர்ப்பின்றி ஓரிடம் புவியில் எப்படி இருக்க முடியும்? ஈர்ப்பற்ற தன்மைக்கு நெருக்கமாகச் சமன்படுத்திக் கொடுக்கும் சமலாக்கி (simulator) இருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை. என் சிந்தையைக் கலைத்துச் சத்தம் வந்தது.

"அப்படி ஒரு இடம் இருந்தா அங்க போலாம்ப்பா… எங்களக் கூட்டிட்டுப் போங்க!"

"சரி, சரி. தேடிப் பாக்கறேன். இல்லாட்டி இயூஸ்டன் பக்கத்துல இருக்கற நண்பர்கள் கிட்டக் கேட்டுப் பாக்கறன்".

இப்படித் தான் பல விசயங்கள் செய்கிறேன், பார்க்கிறேன், என்றும், பிறகு என்றும் தள்ளிப் போட்டுத் தள்ளிப் போட்டு, இதெல்லாம் இப்போது இவர்களுக்கு ஒரே கிண்டலாகப் போய்விட்டது. அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால், சிலசமயம், "மறந்துட்டீங்களா அப்பா?" என்றால், "இல்லடா, என் பட்டியல்ல போட்டு வச்சுருக்கேன்" என்று சொன்னால், "ஓ! போச்சு! அந்தப் பட்டியலுக்குப் போச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான். மறந்துரலாம்" என்று நக்கல் பேச்சால் என்னை அடிப்பார்கள்! புதியதாகச் செய்ய வேண்டியது ஒன்றைப் பற்றிய பேச்சென்றால், "ஓ! வேண்டாம்ப்பா. தயவு செஞ்சு அந்தப் பட்டியல்ல மட்டும் போட்டறாதீங்க", என்பர்.

இதனாலேயே மறவாமல் அது பற்றித் தேடிப் பார்த்தாலும், நாசாவிலோ வேறெங்குமோ அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை அலுவல் காரணமாகக் கனடா சென்று திரும்புகையில் தற்செயலாகக் குளோபு & மெயில் (The Globe and Mail) என்னும் அந்நாட்டுச் செய்தித்தாளில் காற்றுத் தூம்பு (Wind Tube/Tunnel) பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். ஸ்கை-வென்ச்சர் என்று ஓரிடம் கியூபக் மாநிலத்தின் மொன்ட்ரியால் நகரில் இருப்பதாக அறிந்தேன். இணையத்தில் மீண்டும் தேடியதில் அது போல் ஃபுளோரிடாவில் கூட உண்டு என்பது தெரிய வந்தது.

இரண்டுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதும் செலவு அதிகமாகும் என்றும் தயங்கினேன். என்னவோ இவள் தான் பொறுப்பேற்றுக் கொள்வது போல், "செலவு பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. Spare no expense" என்கிறாள். அந்த விளையாட்டுப் பேச்சும் எனக்குப் பிடித்திருந்தது. சென்ற வேனிற்கால விடுப்பில் மொன்ட்ரியாலுக்கு ஒரு பயணத் திட்டம் போட்டோம்.

clip_image002

மகள்களை விட நான் தான் உற்சாகமாக இருந்தேனோ தெரியவில்லை. அல்லது அவர்களது உற்சாகம் தான் என் மீது தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை. கனடாவின் குடிவரவு வாயிலில் "கனடாவில் என்ன பண்ணப் போறீங்க?" என்றதற்குக் கூட நான் "ஸ்கை-வென்ச்சருக்குப் போறோம்" என்று சொன்னேன். என்னவென்று தெரியாமல் சற்று யோசனையாய் விழியுருட்டிப் பார்த்தவரிடம், பக்கத்தில் இருந்த மனைவி தான், "ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்" என்று சொல்லி எங்கள் இருவரையுமே காத்தார். தங்கும் விடுதியில் கூட "ஸ்கை-வென்ச்சர்"க்கு வழி சொல்லுங்க என்று கேட்டபோது, "எந்தப் பகுதியிலங்க இருக்கு?" என்று எங்களிடமே திருப்பிக் கேட்டபோதே எனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இடமென்று நான் நினைத்தால், உள்ளூரிலேயே யாருக்கும் தெரியவில்லையே.

stviateurbagel

ஒருவழியாகக் காலையில் நேரமே கிளம்பிச் சாப்பிடாமல் கூட, மொன்ட்ரியாலின் புகழ்பெற்ற செயிண்ட் வியட்டர் பேகல் (St.Viateur Bagel) வாங்கிக் கொண்டு வழியிலேயே சாப்பிட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தால்,

"இன்னிக்கு நீங்க தான் முதல்ல வந்திருக்கீங்க. உங்களத் தவிர இன்னும் ஒரு குழு தான் இருக்கு. ஆனா, இன்னொரு அரை மணி கழிச்சு வாங்க, இன்னும் திறக்கவே இல்லை", என்று எம் ஆர்வத்திற்கு அணைபோட்டுத் தடுத்தார்கள்.

மணிக்கு நூறு மைல் வேகத்தில் காற்றூதி (blower) கொண்டு செலுத்தப்படும் காற்றில் பறப்பது போல் மிதப்பது பரவசமாகத் தான் இருந்தது. விண்வீழ் விளையாட்டு வீரர்கள் இது போல் தான் உணர்வராம். மொத்தமாக, பாடங்கேட்டதும், நாலு பேரும் இரண்டு முறை மிதந்ததும், சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

"இந்தச் செலவு செஞ்சு இங்க வந்ததுக்கு, பேசாம, இலண்டன், பரீ (Paris)னு போயிருக்கலாமாட்ட இருக்குதே", என்றார் மனைவி.

வெளியே வரும்போது பிடித்திருந்ததா என்று கேட்டபோது, "நான் நெனச்ச மாதிரி இல்லப்பா; ஆனா இதுவும் நல்லாத் தான் இருந்துச்சு" என்றாள் மகள். மற்றவளோ தோளை மட்டும் குலுக்கினாள்!

"ஆமாங்க. அவ்வளவு ஒண்ணும் மோசமில்ல" என்றார் மனைவி. எனக்கென்னவோ, "நான் மொதல்லயே சொன்னேன்" என்று தான் கேட்டது 🙂

"அடப் போங்கப்பா, புதியன புகுதல் பற்றி எங்காளுங்க அன்னிக்கே சொல்லி இருக்காங்க. புதிய அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை", என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

உங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்ள, இங்கே:

Tags: கண்மணிகள் · பயணங்கள் · வாழ்க்கை

9 responses so far ↓

 • 1 Amarabharathi // Jan 21, 2012 at 1:30 pm

  Nice.

 • 2 நாகு // Jan 21, 2012 at 5:54 pm

  நான் போட்டிருக்கும் பட்டியலும் மிக நீளம்தான். என்ன செய்வது.

  ஆமாம் நீங்கள் மிதக்கிறீர்கள் அந்த மனிதர் நிற்கிறார்? 🙂

  /இலண்டன், பரீ/ உங்க மனைவி பாண்டிச்சேரிகாரவுகளா? 🙂

 • 3 இரா. செல்வராசு // Jan 21, 2012 at 11:05 pm

  நன்றி அமரபாரதி, நாகு. ஆமாம், நீங்கள் கூட வர்ஜீனியா வரலாறு பற்றி எழுத வேண்டும் (மகன் பள்ளிப் புத்தகத்தில் இருந்து) என்பது போல் எப்போதோ சொன்ன நினைவு!

  பரீ….பாண்டிச்சேரி… 🙂 இல்லைங்க. நான் தான் பாரீசுக்காரங்க சொல்ற மாதிரியே எழுதலாம்னு நினைச்சு எழுதினேன்.

 • 4 sandanamullai // Jan 22, 2012 at 12:07 am

  மிகவும் சுவாரசியம்…எப்படி மிதக்க முடியும்ன்னு எனக்கும் சந்தேகமா இருந்தது..காணொளி பார்த்ததும் புரிந்தது.

 • 5 ஜோதிஜி திருப்பூர் // Jan 22, 2012 at 1:05 am

  ரொம்ப சுருக்கி எழுதினாப்ல போல இருக்குங்க.

 • 6 இரா. செல்வராசு // Jan 22, 2012 at 2:22 pm

  சந்தனமுல்லை, எங்களுக்கு அனுபவம் கொஞ்சம் சுமாராத் தான் இருந்துச்சு. வேறு சிலரோட அசைபடங்களப் பாத்தா இன்னும் நல்லா மிதந்திருக்காங்க. அதனால, சொல்லிக் குடுத்தவர் மேல நான் பழியப் போட்டுக்கறன். 🙂 கியூபக்/மான்ட்ரியால் கொஞ்சம் ஃபிரான்சியச் சாயல் அடிக்கிற பேச்சா இருக்கும். அதுனால, அவர் சொன்னது எங்களுக்குத் தான் சரியாப் புரியாம கொஞ்சம் ஆடிட்டோமாட்ட இருக்குது.

  ஜோதிஜி, கடைசில இன்னும் கொஞ்சம் விரிச்சிருக்கலாம். நான் சிலசமயம் சுருக்கமா எழுதறதில்லன்னும் கொஞ்சம் புகார் இருக்குங்க. அதனால, கொஞ்சம் சமன்படுத்தப் போய் ரொம்ப சுருக்கிட்டேனோ என்னவோ?!

 • 7 இரா. செல்வராசு // Jan 22, 2012 at 2:25 pm

  நாகு, பட்டியல் பற்றி நீங்களும் சொல்றீங்க. அது பற்றிய விரிவான பதிவு அடுத்து

 • 8 இரா. செல்வராசு » Blog Archive » பழையன கழிதலும் // Jan 22, 2012 at 9:16 pm

  […] கூடச் செய்து பார்க்கலாம். நடக்கலாம். பறக்கலாம். […]

 • 9 இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை // Jan 22, 2012 at 9:17 pm

  […] இப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும்.    […]