கிரந்தம் (இயன்றவரை) தவிர்
Jan 20th, 2012 by இரா. செல்வராசு
"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான்.
தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் பழக்கத்தில் நான் பார்த்திராத என் தாத்தாவின் பெயரான ‘ராசா’ வை ஒட்டித் தான் எனக்கும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், முப்பது நாற்பது வருசத்திற்கும் முன்பே நவீனமாகிப் போன நாட்டில் என் பெயரிலும் ராஜ் என்று தான் அந்த ஒட்டு சேர்ந்து கொண்டது. உண்மையில், எனக்குப் பெயரை வைக்கும்போது ராசு என்று சொன்னார்களா ராஜு என்று சொன்னார்களா எனத் தெரியவில்லை.
எனது ஆத்தா, அம்மாயி, தாத்தா எல்லோரும் என்னைச் ‘செல்வராசு’ என்று தான் அழைப்பார்கள். தம் காலத்தின் கடைசி நாட்கள் வரைக்கும் "செல்வராசு, எப்பாயா வருவ?" என்று கேட்டுக்கொண்டே இருந்த அந்தக் குரல்களில் ஒரு வாஞ்சை இருக்கும். மிக நெருக்கம் தரும். எனது வீட்டில் மட்டுமல்ல. என் நண்பர்களின் வீட்டிலும் ஆத்தாக்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள். பள்ளி விடுப்பு நாட்களில் நண்பன் செந்தில் வீட்டுக்குப் போனால், அவனது ஆத்தாவும் அம்மாயியும் கூட என்னைச் ‘செல்வராசு’ என்று தான் சொல்வார்கள்.
"டேய் செந்திலு, செல்வராசு வந்துருக்கான். சீக்கிரமா வாடா" என்று சத்தமிட்டு அவனை அழைப்பார்கள். இன்னொருவன் என் வீட்டுக்கு வரும்போது, "டேய் ஷிவா" என்று யாரும் இதுவரையும் அழைத்ததில்லை. "என்ன சங்கரு? அம்மா நல்லாருக்காங்களா?" என்று தான் பேசுவார்கள்.
இப்போதும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் ராசாவையன் கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். அருகில் தான் சொந்த ஊர், சனம், அப்பா வாழ்ந்து இப்போது குட்டிச் சுவராய் இருக்கும் வீடு எல்லாம் இருக்கும்.
அங்கும் நேரில் பார்த்தவுடன் ஊர்ச்சனம், "வாங்காயா, வாப்பா" என்று வரவேற்பார்கள். "செல்வராசு, எப்பாயா வந்த?" என்று விசாரிப்பார்கள்.
இருந்தும் பழகிப் போனதால் செல்வராஜ் என்றே நான் எழுதி வந்தேன்.
நான் பள்ளியில் படித்த போது ‘சுதந்திரம்’ என்றொரு தமிழ் ஆசிரியர் இருந்தார். இந்தியா சுதந்திரம் வாங்கிய அன்று பிறந்தார் என அவர் வீட்டில் அப்படிப் பெயர் வைத்தார்களாம். சுதந்திரமாக வளர்ந்த தமிழய்யா நன்கு நெடுநெடுவென்று வளர்ந்து நெட்டையாக இருப்பார். அவரின் பேச்சும், சிரிப்பும், கிண்டலும், கலகலப்பும் அவருடைய வகுப்பைச் சுவாரசியமாக வைத்திருக்கும். இப்போது அவர் பற்றி நிறைய மறந்து விட்டது. எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. சுதந்திரம் ஐயா ஒரு முறை எனக்குப் பேச்சுப் போட்டிக்குப் படிக்க எழுதிக் கொடுத்தவர், அந்தத் தாளில் என் பெயரைச் செல்வராசு என்றோ செல்வராசன் என்றோ எழுதியிருந்த ஞாபகம். அப்போது தான் முதலில் வடமொழி நீக்கி எழுதுதல் என்னும் கருத்தைப் பற்றித் தெரிந்தது.
அப்புறமும் என் பெயரில் ராஜ் என்றே தான் இருந்தது. எதையும் அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்கிற ஆள் அல்லனே நான். அதோடு, அது பற்றியெல்லாம் நான் அதிகம் யோசித்துப் பார்க்கவில்லை. கல்லூரி முடித்து அமெரிக்க வந்தபிறகு ஒருநாள் நான் ‘சந்தோஷம்’ என்று எழுதியிருந்த ஒரு கட்டுரை/கடிதம் பார்த்துவிட்டு நானறிந்த அக்கா ஒருவர்:
"ஏப்பா? நல்லா எழுதற ஆனா ஏன் வடமொழியில எல்லாம் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கே?" என்று கேட்டார்கள். எனக்குச் சற்றுக் குழப்பம் தான். அவரிடமே கேட்டேன்:
"மொத்தமா வடமொழி எழுத்துன்னு எப்படிங்க்கா ஒதுக்கறது. எம் பேர எழுதறதுக்கே வேணுமே". பரணியக்காவுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டுவிட்டார்கள்.
பிறகும் பெரிதாக நான் இது பற்றி ஆராய்ந்தோ எண்ணியோ பார்க்காமல் இருந்தேன். இருப்பினும், இணையம் வழியாகப் படித்ததிலும் கவனித்ததிலும், மணிப்பிரவாள நடை பற்றியும், சில மக்கள் தேவையில்லா இடத்திலும் இக் கிரந்த எழுத்துக்களத் தூவி விடுவதையும் பார்த்தேன். சிலர் அறிந்தேயும் பலர் அறியாமலும் அப்பழக்கத்தை அடைந்திருக்கலாம்.
பிறமொழியில் இருந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்வதையும், கடன் வாங்கிக் கொள்வதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால், முதலில் தமிழிலேயே அதற்கு இணையான சொல் இருக்கிறதா? அதனையே ஆள முடியுமா? இல்லை ஆக்க முடியுமா? என்று பார்த்துவிட்டுப் ஏற்றுக் கொள்ளலாம். தொல்காப்பியனே வடசொல், திசைச்சொல் என்று அவற்றை ஏற்றுக் கொள்ளும் வழிமுறையைக் காட்டி இருப்பது போல், தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதுவதும் புளங்குவதும் புழங்குவதும் போதுமே?
இல்லையெனில், இன்னும் செயலாளர் போன்ற நல்ல சொற்களுக்குக் காரியஸ்தன் என்று எழுதுவதைத் தான் பார்க்க வேண்டியிருக்கும். அவஸ்யம் ஸ்வாமி என்பது போல், என்னுடைய பதிவுக்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் நண்பர் கூட எழுதுவதைக் கண்டிருக்கிறேன். அவசியம் அப்படித்தான் எழுத வேண்டுமா சாமி? என்று எனக்குத் தோன்றும். ஆனால், ஒன்றும் சொல்வதில்லை.
ஆக, கிரந்தம் என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்துச் சரியே என்று எனக்கும் பட்டதால் அதை ஏற்றுக் கொண்டு இயன்றவரை அதனைத் தவிர்த்து எழுத ஆரம்பித்தேன். குறைந்தபட்சம் தமிழை எழுதக் கிரந்தம் தேவையில்லை. இப்படி ஒரு எழுத்து முறையும், அந்த ஐந்தாறு எழுத்துக்களும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? எப்படியேனும் தமிழ் எழுத்துக்களை வைத்தே Jefferson–ஐச் செஃபர்சன் என்று எழுதியிருக்க மாட்டோமா?
இருப்பினும் அயலகப் பெயர்கள், அறிவியல் சொற்கள் இவற்றை எழுதப் பல இடங்களில் கிரந்தப் பயன்பாட்டிற்குப் பழகிவிட்டோம் என்பதால் ஐதரசன் என்று எழுதினால் குழப்பமாகத் தான் இருக்கும். ஒரு கட்டுரையில் ஏரி பாட்டர் என்று எழுதிப் பார்த்தபோது குழப்பம் தரும் என்று ஹேரி பாட்டர் என்று மாற்றிக் கொண்டேன். கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு ஹைட்ரசன் என்று எழுதலாம், ஹைட்ரஜன் என எழுதத் தேவையில்லை. இதுபோன்ற சுவாரசியமான உரையாடல்களையும் கருத்துக்களையும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அவ்வப்போது பார்க்க முடியும். கிரந்தம் தவிர்த்து எழுத நினைப்பவர்கள் அங்கு எழுதும்போது அவர்கள் தமிழ்த்தாலிபான்கள் என்பன போன்று எதிர்கொள்ளும் தாக்குதல்களும் அதிகம். அவற்றையும் மீறித் தமிழ்ச்சூழலில் கிரந்தம் தவிர்த்து எழுதுவோர் இன்று அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். பார்க்க: புல்வெளி.காம்
முடிந்தவரை கிரந்தம் கலக்காத தமிழில் எழுத எல்லோரும் முயலலாமே. அட! ஒரு நிமிடம் பொறுங்கள். அதெல்லாம் முடியாது என்பீர்களானால் நான் உங்களை ஒன்றும் சொல்லப் போவதில்லை. இயன்ற வரை நான் அப்படி இருக்கப் போகிறேன். அது பற்றி நீங்கள் பெரிது பண்ண வேண்டாம் எனவும் கேட்கிறேன். இதனால் எல்லாம் தான் எனது பெயரையும் தமிழில் எழுதுவதைச் செல்வராசு என்று அண்மையில் மாற்றிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால், பழகிப் போன ஒன்றில் இருந்து மாறுவது முதலில் எளிதாய் இல்லை. ஆனால், இப்போதெல்லாம் எந்த வித்தியாசமும் தெரியாமல் மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் என்னைச் செல்வராஜ் என்றோ செல்வராசு என்றோ உங்கள் விருப்பம் போல் விளித்துக் கொள்ளலாம்.
குழந்தைகளின் பெயர் என்ன?
ஆங்கிலட்தில் selvarasu என்று பாஸ்போர்ட்டிலும் மாற்றியாகி விட்டதா?
வாழ்க! இந்தக் கருத்து கொஞ்சங் கொஞ்சமாய்ப் பரவட்டும். ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.
மிக நன்றாக மண்ணின் மணம் கமிழ கட்டுரை எழுதியுள்ளீர்கள். தமிழகத்தில் இருந்தவரை தமிழில் ஆர்வம் உண்டே தவிர அதைச் சரியாக எழுத வேண்டும் ஒரு போதும் நினைத்தது இல்லை. ஆனால், அமெரிக்க மண்ணை மிதித்த பிறகு, தமிழ்ப் பேய் என்னைப் பிடித்து நன்றாக ஆட்டுகிறது. இயன்ற அளவில், நல்ல தமிழில் எழுதினால், இவனுக்கு ஆங்கிலம் தெரியாததல் இப்படி ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என கூறுகின்றனர். தமிழை சரியாக எழுதினாலும் குற்றம் காண்பர். பிழையாக எழுதினாலும் குற்றம் குற்றமே என்று நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
அன்புடன்,
செந்தில்
வருத்தப்படாலும் உண்மையைச் சொல்லிடுறேன்.
தமிழை இயல்பாக பேசும் போது நாம் மற்றவர்கள் பார்வையில் தெரியும் வித்யாசங்களை நீங்கள் உணர்வீர்களா?
உங்கள் ஆசையும் அக்கறையும் அதிகப்படியான ஆர்வம் என்றாலும் நீங்கள் சென்ற பதிவில் சொன்ன மாதிரி மொழி சோறு போடுமா? என்று கேட்கும் (பொருள்) உலகில் இது போன்ற விசயங்களை எப்படி எதிர்கொள்வது?
சோதி கணேசன் என்பதா? சோதி கணேசா என்பதா?
முதலில் தன்னுடைய இன்சியல் என்பதை தமிழிலில் எழுத தமிழர்கள் கற்றுக் கொண்டால் போதுமானது என்பேன். அதற்கே இங்கு பலருக்கும் விருப்பமில்லை?
முந்தைய பதிவில் உங்கள் மத்துறுத்தலுக்காலக் காத்திருக்கும் பின்னுட்டம் இங்க பொருந்துவதால்
கிரந்தம் கலக்காமல் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது. நம்முடைய எல்லைகளுக்குள் இருந்த வரை கிரந்தம் தேவையில்லாமல் இருந்தது. தற்போது தேவைப் படுகிறது, அவ்வளவே. ஒரு உதாரணத்துக்கு ஒருவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றும் அந்நிய பெயர்ச் சொற்களின் சரியான உச்சரிப்புத் தெரியாது என்ற நிலையில், ஆங்கிலத்தில் உரையாற்றும் போது “சரியான தமிழில்” எழுதப் பட்ட பெயர்ககளை அதே உச்சரிப்பின் சொன்னால் சரியாகுமா?
ஆனால் இயன்ற வரை என்று சொன்னமைக்கு பாராத்துக்கள்
அமரபாரதி, கிரந்தம் பற்றிச் சென்ற இடுகையில் நீங்கள் இட்ட கருத்துக்கும் சேர்த்து இங்கு எழுதுகிறேன். பல விசயங்களில், சரி தவறு என்று தெளிவாக வரையறை செய்து கொள்ள முடியாதபோது இருபக்கமும் இருந்து உரையாடுவதைச் சற்று நிதானமாகத் தான் செய்யவேண்டும். குறிப்பாக உணர்வு பூர்வமான விசயங்களில் அது இன்னும் பொருந்தும். இங்கே கிரந்தம் தவிர்த்து எழுதினா நீங்க அறிவாளியா என்று சற்று மேலிருந்து மட்டம் தட்டிப் பேசி ஆரம்பித்தது நீங்கள் தான். கிரந்தம் தவிர்ப்போருக்கும் இருக்கும் உணர்ச்சிகளை இது உரசிப் பார்க்காதா? அதனால் சங்கரின் காரமான மறுமொழியை நான் புரிந்துகொள்கிறேன். அவரது பின்னூட்டம் உங்களுக்கான மறுமொழியாக மட்டும் பார்க்காதீர்கள். இன்றைய குமுக நிலையில் கிரந்தத்தவிர்ப்பு எதிர்ப்பாளர்களின் முகமாய் உங்கள் கேள்வி அமைந்திருந்ததால் அதை நோக்கி வைக்கப்படும் ஒரு விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு, பெப்டோபிசுமால் வாங்கச் சொல்லி அறிவுறுத்தி உரையாடலை ஆரோக்கிய திசையில் இருந்து விலக்க வேண்டாம். அது யாருக்கும் எந்தப் பயனையும் தராது.
இங்கு நடக்கும் உரையாடல்கள் பல இடங்களில் பல தளங்களில் பல காலங்களில் நடப்பது தான். சற்றுப் புதுப்பித்துக் கொள்கிறோம். அவ்வளவே. புதியவர்கள் இச்சிக்கலுக்குள், குழப்பத்தினுள் நுழையும்போது எனது பதிவும் அவர்களுக்கான ஒரு தரவுப்புள்ளியாக அமையும் என நம்புகிறேன். எனது எண்ணங்களைச் செப்பனிட எப்படி இராம.கி, நாக.இளங்கோவன், பேரா.செல்வா, மற்றும் பல விக்கிப்பீடிய நண்பர்கள் அவர்களது கருத்து உதவியதோ, அதுபோல இனி வரும் தலைமுறையினர் ஒருவேளை என்னுடைய கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கலாம்.
கிரந்தம் கலந்து எழுதுவதைத் தவிர்க்க முடியாது என்னும் கருத்தை நீங்கள் கொண்டிருக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்வேன். அதே சமயம், அதனைத் தவிர்த்து எழுத எண்ணும் என் போன்ற பலருக்கும் அதே உரிமையையும் மரியாதையையும் கொடுங்கள். எமது கருத்து உங்களுக்குச் சரியெனப் பட்டாலோ, உமது கருத்து எங்களுக்குச் சரியெனப் பட்டாலோ ஏற்றுக் கொள்வோம். முழுவதுமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமானாலும் சரி. இல்லையா, வேறு வேறு திசைதான் எனில் விட்டுவிடுவோம்.
இனி, பெப்டோபிசுமால் என்று எளிமையாக எழுதலாமே, அதையேன் பெப்புட்டோ பிச்சுமால் என்று சிரமப்பட்டு எழுத வேண்டும். கிரந்தம் சில இடங்களில் தேவை என்பதற்கு வேறு வலுவான காரணங்கள் உள்ளன நண்பரே. அதை வையுங்கள். இப்படி உப்புக்குச் சப்பில்லாதனவற்றை வைக்க வேண்டாம். ஏன், எனது இந்த இடுகையிலேயே அதற்கான சில காட்டுக்களைத் தந்திருக்கிறேனே? அதனால் தான் இயன்றவரை என்று சொல்லி இருந்தேன். (அதை நீங்களும் உணர்ந்து முதிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன்).
பார்மஸியும் அப்படித்தான். எளிமையாகப் பார்மசி எனலாம். அதைவிட எளிதாக மருந்துக்கடை எனலாம். ‘மெடிக்கல்சு’ என்பதே கூடத் தமிழாகும் அளவிற்குப் புழக்கத்தில் இருக்கிறது! 🙂
இறுதியாக இரண்டு: 1. நான் இரட்டை வேடம் என்றது உங்களையன்று. சங்கர் சொல்லியிருந்த கூட்டத்தில் பேசிய பேராசிரியர் பற்றியது. ஆங்கிலத்தைச் சரியாகத் தமிழில் எழுதச் சில எழுத்துக்கள் சேர்க்க வேண்டும் என்பவர், தமிழ்ப்பெயர்களைச் சரியாக உச்சரிக்க இயலாமைக்கு ஆங்கிலத்தில் எழுத்துக்களைச் சேர்க்கலாமா என்று கேட்டதற்கு ‘நீங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னது இரட்டை வேடம் இல்லையா?
2. உச்சரிப்பைச் சரியாக எழுதக் கிரந்தம் வேண்டும் என்னும் உங்கள் கருத்தை மறுக்க ஒரு எளிய உதாரணம். Apple என்பதைச் சரியாக எந்த எழுத்தைக் கொண்டு எழுதுவீர்கள். ஏப்பிள், ஆப்பிள் என்றோ தான் தமிழில் எழுத முடியுமே தவிர Apple என்பதைக் கிரந்தத்தை வைத்துக் கொண்டும் எழுதவே முடியாது. அதனால் என்ன? ஆப்பிள் என்று சொல்லிவிட்டால் அதன் சுவை மாறிவிடுகிறதா என்ன?
முதலில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. கிரந்த ஆதரவு எதிர்ப்பு என்பதெல்லாம் என் பணியல்ல, ஆனாலும் அந்நிய மொழிச் சொற்கள் எல்லாவற்றையும் கிரந்தம் இல்லாமமல் எழுத முடியாது என்பது என் நிலைப் பாடு.
சொல்லப்பட்ட உதாரணத்துக்கும் பின்னூட்ட தரத்துக்கும் இயைந்தே நானும் பதிலிட முடியும். புரிந்து கொள்வீர்கள் தானே. நான் கலாச்சாரக் காவலன் அல்ல. கிரந்த எழுத்து எழுதுபவன் முட்டளுமல்ல.
//மெடிக்கல்சு’ என்பதே கூடத் தமிழாகும் அளவிற்குப் புழக்கத்தில் இருக்கிறது// அது சரி 😉
// ஆப்பிள் என்று சொல்லிவிட்டால் அதன் சுவை மாறிவிடுகிறதா என்ன?// நிச்சயமாக இல்லை. ஆனால் அதை அப்பிளையம் என்று எழுதினால் மாறி விடும். 😉 (நகைப்பான் இட்டிருக்கிறேன்)
//அதையேன் பெப்புட்டோ பிச்சுமால் என்று சிரமப்பட்டு எழுத வேண்டும்.// சரியான தமிழை மிகச் சரியான தமிழில் எழுதும் முயற்சிதான். பெப்டோ பிசுமால் என்ற சொல்லின் வேர்ச் சொல்லைத் தேடிப் புறப்பட்டதின் விளைவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். 🙂
அமரபாரதி – விட்டுட்டீங்கன்னு பாத்தேன். இல்லையாட்டருக்கு 🙂 சரி, நான் சொல்ல நினைத்து மறந்து போன ஒன்னையும் சேத்து ரெண்டு விசயம் சொல்லிடறேன்.
பின்னூட்டத் தரத்துக்கு இயைந்தே பதிலிட முடியும்னு நீங்க சொல்லியிருக்கீங்க. ஆனா, ‘அறிவாளியா’ன்னு சொல்லி ஆரம்பிச்சது நீங்க தான்னு சொன்னதுக்கு நீங்க ஒன்னையும் சொல்லக் காணோம்.
மொழிங்கறது சிலருக்குச் சட்டை மாதிரி. சிலருக்கு உயிர். சட்டை சரியில்லன்னு தூக்கிப்போட்டுட்டு வேற போட்டுக்கலாம்னு சிலர் நினைக்கலாம். உயிர் தான் நம்ம உடல இயக்கறதுன்னு இன்னும் சிலர் நினைக்கலாம். உருவகங்கள் சக்திவாய்ந்தவை. உயிர்னு உருவகிச்சுக்கறவங்களுக்கும் உரிமை இருக்கிறது தானே.
//ஆனா, ‘அறிவாளியா’ன்னு சொல்லி ஆரம்பிச்சது நீங்க தான்னு சொன்னதுக்கு நீங்க ஒன்னையும் சொல்லக் காணோம்.// அது அவ்வளவு பெரிய குற்றமா. மேலும் அது நேரடியாகக் கேட்கப்ட்டதல்லவே. புண் படுத்தியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். சென்ஸிடிவிட்டி எனக்கு சிறிது குறைவு. 😉
செந்தில், சொல்பவர்கள் இருக்கட்டும். உங்களுக்கு விருப்பம் இருப்பின் எழுதுங்கள். எழுத எழுதப் பழகும். இப்போ நானெல்லாம் அந்த நம்பிக்கையில தான இயங்கிட்டிருக்கேன் 🙂
ஜோதிஜி, உங்களைச் சோதி.க என்று தான் எழுத நினைத்தேன். அப்படி முற்றிலும் கிரந்தத்தைத் தவிர்க்க இன்னும் நான் முனையவில்லை. நான் விளிப்பவருக்கு ஆட்சேபம் இல்லையென்றால் சில சமயம் அப்படித் தவிர்த்தும் எழுதுவேன். (அவஸ்யம் எடுத்துக்காட்டு கவனிச்சீங்களா? 🙂 )
இராம.கி ஐயா. ஆம் குறைந்தபட்சம் இது போல் சிந்திக்கும் சிறுபான்மையினருக்கு ஒத்த கருத்துகள் உள என்று ஊக்கமாவது அளிப்பதில் தொடங்கலாம்.
நியாயஸ்தரே: உங்கள் கேள்விகள் நேர்மையாக இருந்திருப்பின், அவை பற்றியும் கூடப் பேசியிருக்கலாம். 🙁
//ஆனா, ‘அறிவாளியா’ன்னு சொல்லி ஆரம்பிச்சது நீங்க தான்னு சொன்னதுக்கு நீங்க ஒன்னையும் சொல்லக் காணோம்.// நமக்கு சவுகரியமானதுக்குத்தானெ பதில் சொல்லனும்? 😉 நானும் பின்னூட்டரா மத்தும் இல்லாம பெரிய பதிவரா மாற முயற்சி செஞ்சா விட மாட்டீங்கறீங்களே 😉
என் சித்தப்பா பேரு ராஜூ. எனக்கு தெரிந்து என் உறவினர்கள் எல்லோரும் அவரை இராசு என்று தான் கூப்பிடுகிறார்கள். என் பாட்டன் போன்றோர் ஜ என்பதை ச என்று தான் எப்பவும் சொல்வார்கள்.
அமரபாரதி, 🙂 இல்லீங்க. அறிவாளின்னு சொன்னது பெரிய குத்தமுன்னு நான் சொல்லல. இந்த உரையாடலுக்கு அது ஒரு தொனிய அமச்சுக் கொடுத்துச்சு. அதன் எதிரான முட்டாளுன்னு கருத்து வந்தப்ப, அதுக்கு இசைஞ்ச மாதிரி தானே பதில் சொல்ல முடியும்னு சொன்னீங்க. நீங்க மத்தவங்களக் குத்தம் சொல்லாம, பொறுப்ப ஏத்துக்கணும்ங்கறாதுக்காக அதச் சுட்டிக் காட்டினேன். அவ்வளவே.
பதிவும் தொடங்கி எழுதலாமே நீங்க?
நல்லது செல்வராசு அவர்களே. நன்றி
குறும்பன், வரலாறு மாறிப் போச்சுங்க.
செயா டிவியில் எங்கசாமி (8:15 நிமிடத்தில் இருந்து) http://www.youtube.com/watch?v=5F6ZCv0Jshs “ராஜலிங்கமூர்த்தி கோயிலைப்பேச்சு வழக்கில் ராசாக்கோயில்-னு” அழைக்கிறோமாம்.
நேரக்கோட்டில் 8:50 – 9:00 பார்க்க.
தலைகீழ்!
(ஆனா, ஆரம்பிக்கறப்பச் சரியா ராசாக்கோயில்னு தான் சொல்றாங்க)
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை சரோசா என்று அழைத்துக்கொண்டவர் இப்போது தனது மருமகளை சானகி என்றுதான் அழைக்கிறார். அதுதான் இயல்பு போலிருக்கிறது.
அருமையான பதிவு ! இவ்வளவு இனிமையாகவும் நிதானத்துடனும் கருத்துகளை கூறுபவர்கள் தமிழர்கள் மத்தியில் குறைவு தங்களின் இந்த முயற்சியின் மூலம் தமிழ் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
வணக்கம்,
அருமையான கட்டுரை.. அறிவான பின்னூட்டங்கள்.
கிரந்தம் தவிர்ப்பதென்பது தமிழ் மொழியின் சிதைவை இயன்றவரை தடுக்க விழையும் ஆர்வம் என்பதாகப் புரிகிறேன். நன்று.
நீங்கள் சுட்டிய புல்வெளி தளத்தையும் பார்த்தேன். நல்ல முயற்சி.
அதைப் பார்க்கும்போது நாம் தமிழே பேசுவதில்லையோ என்ற மெல்லதிர்ச்சி கூட உண்டாகிறது! இயல்பாக உபயோகிக்கும் பல சொற்கள் வடமொழிச் சொற்களாக உள்ளன.
அதே நேரம் ரிஷி என்ற என் பெயரை உச்சரிக்கும்போது கிடைக்கும் ஒரு அதிர்வு, ரிசி என்று சொல்லும்போது கிடைக்கவில்லை.
//எனது எண்ணங்களைச் செப்பனிட எப்படி இராம.கி, நாக.இளங்கோவன், பேரா.செல்வா, மற்றும் பல விக்கிப்பீடிய நண்பர்கள் அவர்களது கருத்து உதவியதோ, அதுபோல இனி வரும் தலைமுறையினர் ஒருவேளை என்னுடைய கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கலாம்.
கிரந்தம் கலந்து எழுதுவதைத் தவிர்க்க முடியாது என்னும் கருத்தை நீங்கள் கொண்டிருக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்வேன். அதே சமயம், அதனைத் தவிர்த்து எழுத எண்ணும் என் போன்ற பலருக்கும் அதே உரிமையையும் மரியாதையையும் கொடுங்கள்.//
+1
கிரந்தம் தவிர்ப்பதை அழகாக வலியுறுத்தியுள்ளீர்கள். கிரந்தம் தவிர்ப்பதை விடுங்கள். தேவையில்லாமல் கிரந்தம் சேர்ப்பது இன்னும் எரிச்சலூட்டும் விஷயம். அழகாக ஆஞ்சநேயர் என்று எழுதாமல் சில கோயில்களில் ஆஞ்ஜநேயர் என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அனுமார் என்றால் அந்தக் குழப்பம் வராதோ? அதையும் ஹனுமார் என்பார்கள்.
ரிஷி – தலைப்பில் (இயன்றவரை) என்று சேர்த்திருப்பது உங்களுக்காகத்தான். 🙂
ஞ்ஜ என்று எழுதுவது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல. உச்சரிக்கவே முடியாத எழுத்துப் பிழையும் கூட.
ஜோதிஜி, உங்களைச் சோதி.க என்று தான் எழுத நினைத்தேன். அப்படி முற்றிலும் கிரந்தத்தைத் தவிர்க்க இன்னும் நான் முனையவில்லை. நான் விளிப்பவருக்கு ஆட்சேபம் இல்லையென்றால் சில சமயம் அப்படித் தவிர்த்தும் எழுதுவேன். (அவஸ்யம் எடுத்துக்காட்டு கவனிச்சீங்களா? )
கோவி கண்ணன் சொன்னதும் இப்போது அவசியம் என்று தான் எழுதுகின்றேன். பெரும்பாலும் வாய்ப்புண்டு. ஆனால் நண்பர் சொன்னது போல ரிசி என்னும் போது ஒரு மாதிரியாக இருக்கிறது.
சோதி க என்பதை விட சோதிகா என்றால் மகிழ்ச்சியாக உள்ளது. சிவகுமார் மருமகளாச்சே?
சுந்தரவடிவேல், கருத்தபாண்டியன், நன்றி.
ரிஷி, உங்கள் பெயரை மாற்றி எழுதுவது சிரமம் தான். அதுவும் கூடப் பழகிப் போகலாம். ஈரோட்டுப் பதிவர் ஒருவர் (ஏன் எனப் பின்னணி தெரியாது), தனது பெயரைப் பாலாசி என்று எழுதுகிறார். பார்த்துப் பழகிவிட்டது. இருப்பினும் நாகு சுட்டியது போல இயன்றவரை என்பது இது போன்ற சமயங்களுக்காகத் தான்.
நாகு, ‘ஆஞ்ஜநேயர்’ வலியக்கிரந்தச்சேர்ப்பிற்குச் சரியான காட்டு. இவற்றைப் பொறுத்துக் கொண்டால், பிறகு பஞ்ஜு, மஞ்ஜு, நெஞ்ஜு, பிஞ்ஜு என நோய் பரவும்! இடம் பொருத்துச் சகர உச்சரிப்பு மாறும் என்பதும், அதனால் தான் தமிழில் ஒரு சகரம், ஒரு ககரம்… போதும் என்னும் சிறப்புகளும் தெரியாமல் போய்விடும். இரவி, இதனை இன்னும் விரிவாகச் சொல்லியதற்கு நன்றி.
சோதிகணேசன், உங்கள் பெயரைப் பல வழிகளில் எழுதலாம். சோதிகா தான் பிடித்திருக்கிறது என்றால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம் 🙂 🙂
//நியாயஸ்தரே: உங்கள் கேள்விகள் நேர்மையாக இருந்திருப்பின், அவை பற்றியும் கூடப் பேசியிருக்கலாம்//
கேள்வி உங்களை பாதிப்பின் அது நேர்மை இல்லாத கேள்வி என்று எடுத்துக் கொள்ளப்படுமோ?
பதில் சொல்லுங்களேன் நீர் நேர்மையானவராக இருந்தால்.
முதலில் என்னைப்பற்றி: tanglish எனக்குப் பிடிக்காது, கேட்கும்போது கொலைவெறி வரும். விஷயத்துக்கு வருவோம். செல்வராசு என்பதில் பாச நெருக்கம் தெரிகிறது, செல்வராஜ் என்பதில் கம்பீரம் தொனிக்கிறது. எது வேண்டுமோ அதை அவர் வைத்துக் கொள்ளட்டும். க்ரந்த எழுத்துக்களைத் தவிர்த்தாலும் அவை குறிக்கும் ஒலிகள் சிலவற்றைத் தவிர்க்க முடியாது. ஜ. ஸ, க்ஷ, ச, ஷ என்ற ஐந்து ஒலிவடிவங்களில் க்ஷவையும் சவையும் தவிர்க்கலாம் – ட்ச, ச வைப் பயன்படுத்தி. ஆனால் ச பல ஒலிகளை அளிக்க வல்லது: சமம், சிவம்(shivam), பஞ்சம் , பசை மற்றும் பச்சை. நமசிவாய நமச்சிவாய ஆகி விடுகிறது. ஏழு ஸ்வரத்தைக் குறிக்கும் sapthaswaram – சப்தஸ்வரம் – என்பதை s(h)abdhaSwaram என்று ஒலிச்வரம் என்ற பொருளில் உச்சரிக்கிறார்கள்.
ஷ வுக்குப் பதிலாக நெருங்கியுள்ள ழவை விட்டுத் தொடர்பே இல்லாத ட எதற்கு?எழும்பூர் இந்தியில் எஷும்பூர் என்றே எழுதப்படுகிறது. விடம், வீடணன், கிருட்டிணன் என்பதெல்லாம் அபத்தம்.
அகல், பகல், முருகா போன்ற சொற்களில் ஹ ஒலிக்கிறது. கட்சி, காட்சி முதலியவற்றில் க்ஷ ஒலிக்கிறது. அஞ்சு, நஞ்சு, பஞ்சம் – இவற்றில் ஜ ஒலிக்கிறது. பேசு, பசை இவற்றில் ஸ ஒலிக்கிறது. தேவைப்படும் இடங்களில் இவ்வோலிகளுக்கான க்ரந்த எழுத்துக்களை ஏற்கலாம். முஸ்லிம் பெயர்களான முஹம்மது, ஜீனத் போன்றவற்றையும் அப்படியே
ஏற்கலாம். இன்றேல், ஜீனத் அமன் ‘சீனத்த(ம்)மன்’ ஆகி விடுவார்.
மொழியை வளப்படுத்தி நம் கருத்துக்களைப் பிறருக்கு விளங்க வைப்பது தான் நல்லது. ஏற்கெனவே தமிழர்களின் மோசமான ஆங்கில உச்சரிப்பை மேலும் கெடுக்கும் வழியைக் காட்டக் கூடாது. ப்லேயர், டேபில், மனி போன்றவற்றை ப்ளேயர், டேபிள், மணி என்று ஏன் உச்சரிக்கிறோம்? ல, ன தமிழில் இல்லையா? அதென்ன கூகுள் (kooguL)? கூகுல் சற்றே பொருத்தமாகத் தெரியவில்லை?
ரா. நரசிம்மன்
நரசிம்மன், விரிவான விளக்கமான கருத்துகளுக்கு நன்றி. இடம்பொருத்து தமிழ் எழுத்துகள் வேறு வேறு உச்சரிப்பைப் பெரும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள், ஷ, ழ தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளது சரியாகப் புரியவில்லை. அவை ஒலியளவில் எப்படி நெருக்கமானவை? அதோடு ஷவுக்கு டகரப் பயன்பாடு கம்பன் காலத்தில் இருந்து வருவது தானே. அது ஏன் அபத்தம். நானோ இப்போது ஷவைப் பல இடங்களில் சகரத்தை வைத்தே எழுதுகிறேன். விசம், விசயம், என்று எழுதினாலும் சரியாகவே இருக்கிறது.
லகர, ளகர வித்தியாசமும் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்று தான். பெரும்பாலும் le என்று முடியும் ஆங்கிலச் சொற்களுக்கு ளகரம் போடுவது தான் இயல்பாக இருக்கிறது. ஒருவேளை apple=ஆப்பிள் என்று எழுதிப் பழகியதால் கூட இருக்கலாம். அதனால் தான் google=கூகுள், maple=மேப்பிள் போன்று எழுதுவது இயல்பாக இருக்கிறது.
இணையத் தேடலில் இரவியின் இடுகை ஒன்று ( கூகுல் x கூகுள்) இதைப் பற்றியே பேசுகிறது. ஆங்கில உயிரெழுத்துக்களை அடுத்து வந்தால் லகரமும், பிற இடங்களில் ளகரமும் போடுவது தான் சரி என்று சுட்டி இருக்கிறார். அந்தச் சு.சீனிவாசன் சுட்டி வேலை செய்யவில்லை. (இரவி, பார்த்தால் சரி செய்யவும், நன்றி).
நியாயஸ்தன், நான் சொல்ல வந்தது, உங்களுக்கு உண்மையில் அக்கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமாயின் அவற்றை வேறு விதமாகக் கேட்டிருப்பீர்கள் என்பதே. இருப்பினும், நீங்கள் மீண்டும் கேட்பதால் ஒரு பதில்: இந்த இடுகை தமிழ் மொழியில் கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்ததும், இயன்றவரை அதைத் தவிர்க்க முயலலாம் என்பது பற்றியதும் என்னும் பின்னணியில்
1- எனது குழந்தைகளின் பெயரில் கிரந்தம் இல்லை.
2- ஆங்கிலத்தில் எனது பெயர் எழுதுவது பற்றிய கேள்விக்கு இங்கு நேரடிச் சம்பந்தமில்லை.
செல்வராசு, ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கும்போது ள, ண வேண்டாம் என்கிறேன். உயிரெழுத்துக்குப்பின் ல, பிற இடங்களில் ள – வாம், ஏன்? ள வை விட ல சற்றே இனிமை கூடியில்லை?
ஷ, ழ, ட – வைச் சொல்லும்போது நாக்கின் இடத்தைக் கவனியுங்கள், ஷ-ழ வின் நெருக்கம் தெரியும். கம்பன் சொன்னாலும் எந்தக் கொம்பனாயினும் பகுத்தறிவுக்கு ஏற்புடையதல்லாதவர்றை நான் ஏற்க மாட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழக்கத்திலிருந்த எழுத்து முறைகள் சிலவற்றைப் பெரியார் மாற்றச்சொல்லி நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆனால் ழவினால் வரும் பிரச்சினை புரிகிறது – பாண்டிய நாட்டவர்க்கு ழ வாயில் ‘நுளையாது’!வடநாட்டு ‘ஹிந்தியர்’ பலருக்கும் ஷ வராது, அதற்குப் பதில் ஸ தான். ஷ வுக்கும் ச ஆனால், பாவம், ச வின் சுமை மேலும் கூடும்!
நரசிம்மன்
மேலும் எனக்கு நினைவுக்கு வருகிறது – உள்ளூர் மின்வண்டிகளில் கூவி விற்பவர்கள் ஆப்பல் என்று apple ஐ அழைப்பது. அவர்களே plum ஐ blum எனவும் உச்சரிப்பார்கள், palm oil பலருக்கு baam ஆயல்.
நரசிம்மன்
ஐயா, ளகரப் பயன்பாட்டில் அவ்வளவு பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. le என்று முடியும் இடங்களில் அதைப் பயன்படுத்துவது எனக்கு மிக இயல்பாக இருக்கிறது. காட்டாக, opal என்பதை ஓப்பல் என்றும் maple என்பதை மேப்பிள் என்றுமே எழுத விரும்புகிறேன். அதுவே சரியென ஒரு உள்ளுணர்வு.
மற்றபடி நான் மொழியியல் மாணவன் அல்லன் என்பதால் எனது அனுபவம்/அறிவு எல்லைக்குட்பட்டது.
இந்த விவாதத்தைத் தொடர வேண்டாம் என நினைத்திருந்தேன். People take such hard positions and are sentimental. ஆயினும், தற்போது சர்ச்சையில் உள்ள சொல்லான ஜல்லிக்கட்டு நினைவுக்கு வந்தது. இது எந்தப் ‘பாடை’? இதை எப்படி உச்சரிக்கிறார்கள்? சல்லிக்கட்டு என்று எழுதி ஜல்லிக்கட்டு என்று சொல்கிறார்களோ?
நரசிம்மன்
சல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல். ஜல்லிக் கட்டு என்பது அதன் திரிந்த உச்சரிப்பு. விவரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறுதழுவல் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.
நன்றி இரவி. நரசிம்மன் இவ்விவாதத்தைத் தொடர வேண்டாம் என்று பார்த்ததால் நானும் பதிலேதும் சொல்லாமல் விட்டிருந்தேன்.
ஆனாலும், ‘பாடை’ என்னும் கிண்டலை நான் இரசிக்கவில்லை. பாசை என்றே எழுதியிருக்கலாம்; ஆனால், ‘மொழி’ என்று எழுதுமிடத்துப் பாஷை என்று எழுத நினைத்து, அங்கே கிரந்தம் தவிர்க்கச் சொல்வோருக்காக எனப் ‘பாடை’ என்று எழுதுவதில் இருப்பது என்ன அங்கதமா, கிண்டலா? இது போன்ற இடங்களிலே தமிழ்ச்சொற்கள் நீக்கி எழுதுதலைத் தவிர்ப்பதுமே கிரந்தம் தவிர் என்பதன் நோக்கம் என்பது பலருக்கும் தெரியவேண்டும்.
கோகுல் என்பது தமிழ் பெயரா?