இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ராசாக் கோயில்

October 27th, 2004 · 5 Comments

கூட்டம் கூட்டமாய் வௌவால்கள் தொங்கும் மரத்தை அங்கு மட்டும் தான் பார்த்திருக்கிறேன். கோடந்தூர் ராசாக் கோயிலைச் சிலர் வௌவால் கோயில் என்று கூறும் அளவிற்கு அது பிரபலம். யாரோ ஒரு முறை கல்விட்டு எறிய, கோபங்கொண்ட வௌவால்கள் வேறிடம் எங்கோ சென்று விட, பிறகு ஊர் மக்கள் மங்கல இசை முழங்கக் கூட்டமாய்ச் சென்று, சீர் செய்து அப்பறவைகளை மீண்டும் வருமாறு வருந்தி அழைத்து வந்தார்கள் என்று ஒரு பேச்சு வழக்குக் கதை கூட இருக்கிறது. அது தவிர ஏன் அந்த இடத்தில் அந்த மரத்தில் மட்டும் அத்தனை வௌவால்கள் என்று எனக்கும் புரிந்ததே இல்லை.

“நம்ம ராசாக்கோய(ல்) கும்பாபிசேவம் ஆவணி மாசத்துல வச்சுருக்காங்க. நம்ம பங்குக்கு ரெண்டு ட்யூப் லைட் போட்டுத் தரோம்னு சொல்லி இருக்கோம்”.

தொலைபேசியில் அம்மா கூறியபோது, எங்கள் குலதெய்வம் கோயிலில் பார்த்த குழல் விளக்குகளும் பிறவும் கண் முன் விரிந்தன. சிவப்பு வண்ணத்தில் கொட்டை எழுத்தில் உபயம் போட்டு, இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இந்த ஊர்க்காரர் பேரனும் இவரின் மகனுமான இவர் வழங்கியது என்று பட்டையடித்திருக்கும் பலகைகளைக் கண்டு முன்பும் யோசித்திருக்கிறேன். இவற்றின் நோக்கம் கோயில் சேவையா, சுயவிளம்பரப் படுத்திக் கொள்ளலா என்று.

இன்று என் பெற்றோரும் இப்படித் தங்கள் பெயர்களைப் போட்டுக் கொள்ள முயலலாம். ஒருவேளை எனது பெயரும் கூட அடைப்புக் குறிக்குள் அமெரிக்காவோடு அங்கு சேருமாய் இருக்கும். இருந்தாலும் நான் அது பற்றி ஒன்றும் கேட்கவில்லை. போட்டுக் கொள்ளட்டுமே. இத்தனை வருடங்களில் இப்போது அது முடிகிறது. அது அவர்களுக்கு ஒரு நிறைவைத் தருமானால் நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும் ?

rk1.JPG

கோவையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வெள்ளகோயிலைத் தாண்டி ஒரு எட்டு மைல் தொலைவில் வைரமடையிலோ நாலுகால் குட்டையிலோ வலது பக்கமாய்த் திரும்பி சிறு/மண் சாலைகளில் இன்னும் ஒரு நாலைந்து மைல் சென்றால் ஒரு தூக்கக் கலக்கத்தில் இருக்கிற கோடந்தூரை எட்டிவிடலாம். ஒரு பத்து முப்பது வீடு; சுற்றிலும் காடு தோட்டம்; அங்கங்கு எட்டிப் பார்க்கிற பனைமரங்கள். நடுவில் அமைந்திருக்கும் அந்த ராசாக் கோயில் எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று. சராசரியாய் வருடத்திற்கு ஒருமுறை தான் சென்றிருப்பேன் என்றாலும், எனது வேர் தொடங்கிய இடம் அது என்றோ என்னவோ அந்த இடத்தின் மீது ஒரு கவர்ச்சி.

கும்பாபிஷேகத்திற்கு இம்முறை பராமரிப்பு வேலைகளும் கோபுரம் புதுப்பித்தலும் காரணம். பழங்காலத்துக் கோயில்கள் இதுபோல் பராமரிக்கப் படுவது அவசியம் தான். ஆனால் இப்படி அத்தியாவசியமில்லாத சில கட்டிடங்கள்/மண்டபங்கள் இதற்கு முன்னர் எழுந்தது உண்டு. ஏற்கனவே இருக்கிற மண்டபத்தை உபயோகிக்க இருக்கிற வெகு சில பேர் தங்களுக்குள் சண்டை/தகராறு போட்டுக் கொண்டு, தனியாய் ரெண்டு ஊர்க்காரர்கள் மட்டும் தங்களுக்கென்று ஒரு மண்டபம், சமையலறை என்று கட்டிக் கொண்டு – இருக்கிற துளியூண்டு கோயிலுக்கும் மண்டபத்திற்குமே ஏன் இத்தனை சண்டை? ஏன் இங்கு ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போகக் கூடாது?

“மண்டப வேலைக்கு நம்ம ஊரில் எல்லா வீட்டுக்கும் வரிப் போட்டிருக்காங்க. நாம அஞ்சாயிரம் குடுக்கணும்”, என்று அம்மா சில மாதங்கள் முன்பு சொன்னபோதே விளையாட்டாய்க் கேட்டேன்.

“இவங்களுக்கு வேறு வேலை இல்லையா ? இதுக்கு பதிலா ஒரு பள்ளிக் கூடம் கட்டலாமே. அதெல்லாம் குடுக்க முடியாதுண்ணு சொல்லிடுங்க”

இந்தச் சீண்டல்கள் அம்மாவுடன் எனக்கிருக்கும் தொடர்பிலும் உரையாடலிலும் ஒரு முக்கிய பகுதி.

“அதெப்படி அப்படிச் சொல்ல முடியும். ஊர்ல எல்லாரும் குடுக்குறப்போ நாமளும் தான் தரணும். நீ ஒருத்தன் மட்டும் பள்ளிக் கூடத்துக்குத் தந்து சாதிச்சிட்டியா ?”

அம்மா சொல்கிற ஊர் அந்தக் கோயிலை ஒட்டி இருக்கிற பல கிராமங்களில் ஒன்று. கொக்குமடைப்பாளையம் என்று அழகான பெயர். ஆனால் நான் கொக்குகளையும் பார்த்ததில்லை. பெரிதாய் மடைகளையும் பார்த்ததில்லை. ஊரை விட்டு எங்கள் குடும்பம் வந்து ‘என்வயது’ வருடங்கள் ஓடிவிட்டன. எனக்குத் தெரிந்து என் அப்பா தன் அம்மாவுடனும் இரண்டு உடன்பிறந்தோருடனும் வாழ்ந்த இடத்தில் இன்று ஒரு குட்டிச் சுவர் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது.

குட்டிச் சுவருக்குச் சொந்தக்காரர்களுக்குக் இன்று கோயில் வரி ! இருந்தாலும் அம்மா விட்டுக் கொடுப்பதாய் இல்லை.

“செல்வராசு, என்ன இருந்தாலும் நாம இன்னும் அந்த ஊர்க்காரங்க தானே…”

வாழ்க்கை நம்மைப் பல திசைகளிலும் அழைத்துச் சென்றாலும், எல்லோருமே மனதின் ஒரு மூலையில் அதன் ஆரம்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அறியாத எதிர்காலத் திசையை விட உறுதியான கடந்த கால நிகழ்வுகளோடு அதிகமாய் ஒன்றிப் போவது இயல்பு தான். கடந்த காலத்தின் நினைவுகளோடு நம்மை இணைத்துக் கொள்வதில் தான் நமது இருப்பு நிலைப்படுகிறதோ?

‘ராஜலிங்கமூர்த்தி’ என் வீட்டினரின் மனதில் தன்னை நன்றாக நிலைப்படுத்திக் கொண்டிருந்தார். குழந்தைகளின் பெயரில் ‘ராஜ’ என்று வரவேண்டும் என்றும் கூட ஒரு ஆசை இன்னும் பலருக்கு உண்டு. பள்ளியில் ஆண்டுத் தேர்வாய் இருந்தாலும் சரி, அமெரிக்கப் பயணமாய் இருந்தாலும் சரி, அம்மாவோ ஆத்தாவோ மறக்காமல் சொல்வதுண்டு:

“ராசாவையனை மனசுக்குள்ள நெனச்சுக்கோ. தைரியமாப் போயிட்டு வா!”

ராஜலிங்கமூர்த்தி என்கிற இந்தப் பெயர் சிவனைத் தானே குறிக்க வேண்டும், ஆனாலும் இங்கு ஏன் முருகக் கடவுள் தான் பிரதான கடவுளாய் இருக்கிறார் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. இந்த விலகீடு உருவானதற்குக் கூட ஏதாவது ஒரு சுவாரசியமான கதை இருக்கக் கூடும்.

கோயிலின் உயரப் படியைத் தாண்டி உள்ளே நுழைகையில், கிணற்றில் தண்ணீர் சேந்தி கைகால் முகம் கழுவிச் செல்லும் நாட்கள் போய், இன்று ஆழ்துளைக் குழாய்த்தண்ணீரை உந்தித் தரும் குழாய்களில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“தென்ன மரத்துக்குக் கூட “போர்” போட்டுத் தான் தண்ணி உடறோம். தண்ணி இல்லைன்னு வேற ஒரு வெள்ளாமையும் பண்றதில்ல”

ஊரில் இருக்கிற ஒரு சித்தி சென்ற முறை சென்றிருந்த போது சொன்னதைக் கேட்கச் சோகமாய் இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை இளநீர் போட்டுக் கொள்ள எங்களுக்குக் கூட இரண்டு தென்னை மரங்கள் சொந்தமாய் இருந்தன. இப்போது அவை செத்துப் போயிருக்கக் கூடும்.

எல்லா மாற்றங்களுக்கிடையிலும் ராசாக்கோயிலும் வௌவால்களும் மட்டும் நிலையாய் அதே இடத்தில். ஆண்டாண்டு காலமாய், சந்திரசேகர பிடாரி போன்ற வித்தியாசமான பெயர் கொண்ட சாமிகள் கல்மண்டபத்தினுள் உட்கார்ந்து கொண்டு பூசாரி கொண்டு வரும் ஆராதனை வெளிச்சத்திற்காக இன்றும் காத்திருக்கிறார்கள். சுமார் ஒரு அடி உயரமே இருக்கும் கூளக் (குள்ளக்?) கருப்பணசாமியும் தன் குறுகிய மண்டபத்தில் இருந்து பூசாரி அடிக்கிற தீர்த்தத்தில் சிலிர்த்துக் கொள்பவர்களைக் கண்டு களித்தபடி இருக்கிறார். வேண்டுதல்களுக்கான பொட்லி என்னும் நாட்டு வெடிச் சத்தங்களும், அடசல் இட்ட கோழிக்குழம்பின் மிச்சங்களும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கும்.

தலைமுறை தலைமுறையாய் என் சொந்தங்களும் முன்னோர்களும் இங்கு உலவியிருப்பார்கள். அவர்களின் எண்ணங்கள், கஷ்டங்கள், நிறைவுகள், களிப்புணர்ச்சிகள் எல்லாம் வேண்டுதலாய் நன்றியுணர்ச்சியாய் இங்கு சுற்றி வந்திருக்கும். பகற்பொழுதின் வயல்வேலை அயர்வு நீங்க எனது தாத்தாக்கள் இந்த மண்டபங்களில் அமர்ந்து காற்று வாங்கியபடி கதைகள் பேசியிருக்கக் கூடும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பெயர்களைக் கொண்ட கற்சுவர்கள் இன்னும் இங்கு உண்டு. அந்தத் தொன்மை தானே இங்கு முக்கியம். அது தானே உயிர். வெறும் எலும்பும் கூடுமான கட்டிடங்களை ஒவ்வொருவரின் சுயவீம்பிற்காகவும் மீண்டும் மீண்டும் எழுப்பி என்ன பயன்? உட்கார்ந்து வெற்று விருந்து சாப்பிட எதற்கு இத்தனை மண்டபங்கள் ?

பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும், கோயிலின் சுற்றுவெளி மண்ணையும் குத்தும் கற்களையும் எழும்பி நிற்கும் குதிரை வீரர் பொம்மைகளையும், கோபுரத்தையும், சுற்றி என் மனசு ஒரு வௌவாலாய்த் தொங்கிக் கிடக்கிறது. காலப்போக்கில் கட்டிடங்களும் மண்டபங்களும் மாறலாம். உணர்வுகள் மட்டும் என்றும் மாறாது நிலைத்திருக்கும்.

Tags: வாழ்க்கை

5 responses so far ↓

 • 1 செல்வராஜ் // Nov 1, 2004 at 8:11 am

  சென்ற முறை சில பல காரணங்களால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை காசி. நீங்கள் சொன்ன வரலாறு பற்றிய ஆதங்கங்கள் எனக்கும் உண்டு. இம்முறை விழாவின் போது ஏதோ புத்தகம் வெளியிட்டிருப்பதாய் அறிந்தேன். பார்க்க வேண்டும் – எதேனும் அதிக விவரங்கள் இருக்கிறதா என்று.

 • 2 காசி // Nov 1, 2004 at 6:11 am

  செல்வா,

  வௌவால்களை முதன்முதலில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தான் பார்த்தேன். கோயில் பிரகாரத்தில் கூரையில். ஒரு வித வீச்சமும் அருவெருப்பும் இருந்தது. மரங்களில் கண்டதில்லை.

  குலதெய்வங்கள் என்றுமே சுவாரசியமானவை, புதிரானவை, இன்னும் கொஞ்சம் முறையான வரலாறை ஏன் இவர்கள் வைத்துச் சென்றிருக்கக்கூடாது என்று ஆதங்கத்தை ஏற்படுத்துபவை.

  சென்ற முறை ஊருக்குப் போனபொது போனீர்களா?

 • 3 ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். // May 30, 2010 at 11:54 am

  விபரம் தெரிந்து இந்த குலதெய்வ வழிபாடு கட்டாயம் தேவை என்று உணர்வு ஊட்டப்பட்டது போது எனக்கும் தோன்றிய அதே உணர்வு தான். எத்தனை தலைமுறைகள் இங்கு வந்து பேசி சிரித்து சண்டை போட்டு போய் இருப்பார்கள். எத்தனை முக்கினாலும் குடும்பத்தில் முன்னால் உள்ள மூன்றாவது தலைமுறைகளை அவர்களைக் குறித்து வாழ்ந்த வாழ்க்கை குறித்து வௌவால் போல் தொங்கினாலும் திரட்ட முடியவில்லை. கோவில் இருக்கிறது. மக்கள் மனதில் பழமை இருக்கிறது. வளராத எண்ணங்களுடன் வாய்ப்புகளை உருவாக்காமலே வாழ்ந்தும் முடிந்து இருக்கிறார்கள். இன்று கேள்விகள் அதிகம் வரும் போது அவஸ்த்தையாய் தெரிகின்றோம்.

  மற்றொரு ஆச்சரியம் கழிப்பறை, பள்ளிக்கூடம், சாலை போன்ற வசதிகளுக்கு அரசாங்கத்தை மட்டும் நம்பும் மக்கள் எப்படித்தான் இந்த கோவில் திருப்பணிகளில் சொல்லி வைத்தாற் போல் இத்தனை ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்று தினமும் ஆச்சரியப்பட்டுக் கொள்வதுண்டு.

 • 4 இரா. செல்வராசு // Jan 20, 2012 at 12:13 am

  இன்று தான் பார்த்தேன். ராசாவையன் செயா டி.வி. வரைக்கும் போய்ட்டார். கீழே இருக்கும் யூட்யூப் துண்டில் 8:15க்கு மேல் ராசாக் கோயில் விவரங்கள் வருகின்றன.

 • 5 இரா. செல்வராசு » Blog Archive » கிரந்தம் (இயன்றவரை) தவிர் // Jan 20, 2012 at 12:20 am

  […] கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சா