சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்
Oct 31st, 2004 by இரா. செல்வராசு
சில வாரங்களுக்கு முன் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பலவற்றைப் பற்றி பத்ரி ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார். முறைசாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சீட்டு, பைனான்ஸ் நிறுவனங்கள் முதலிய பல நிறுவனங்களைத் தொட்டுச் சென்றிருந்தார். ஒரு சீட்டு நிறுவன நிர்வாகத்தில் சில காலம் சிறு பங்காற்றி இருக்கிற அனுபவத்தில் அவற்றில் சிலவற்றைப் பற்றி என்னுடைய சில கருத்துக்கள். குறிப்பாகச் சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள் பற்றி.
சமீப ஆண்டுகளில் சில சீட்டுக் கம்பெனிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் கெட்ட பெயர் வாங்கிய காரணத்தால், பல நல்ல நிறுவனங்களும் இன்று சீரிழந்து கிடக்கின்றன. வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பொதுவாகவே பொருளாதாரத்திற்கு உதவியிருக்கிறது என்பதை ஒரு பக்கம் ஏற்றுக் கொண்டாலும், இன்னொரு வகையில் தனிமனிதப் பொருளாதார ஒழுங்கீனத்திற்கும் அது வித்திட்டு இருக்கிறது. பொருளாதார நிலையில் கீழ்த்தட்டில் இருக்கிற மக்களுக்கும் கூட முதலுக்கு இவை வழி வகுத்தன என்பது உண்மை தான். தெரு முக்கில் பெட்டிக் கடை வைத்து வெற்றிலை-பாக்கு, பீடி-சிகரெட் விற்றுக் கொண்டிருந்தவர், தினமும் பத்து ரூபாய் அளவில் சீட்டுப் போட்டு, காலப்போக்கில் பெரிய கடைக்குச் சொந்தக்காரராகி, இன்னும் பெரிய சீட்டுப் போட்டு அதில் கிடைத்த முதலை வைத்து ஓட்டல் ஒன்றை ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்திருந்ததைக் கண்டிருக்கிறேன். ஒரு கட்டாயச் சேமிப்புத் திட்டம் போல் செயல்பட்டு இது பலருக்குப் பெரும் பயன் தருவதாய் இருந்தது.
சீட்டு, பைனான்ஸ், கந்து மூலம் சுலபமாய்க் கிடைத்த முதல் சரியாகப் பயன்படுத்தப் பட்டதா, அது குறித்த விவேகம், கல்வி மக்களுக்கு இருந்ததா என்பது சந்தேகமே. அளவின்றிக் கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டுப் பிறகு அதனைத் திருப்பிக் கட்ட முடியாமல் போனவர்கள் பலர். உண்மையாகத் தொழில் தொடங்க முனைந்து வெற்றி பெற முடியாமல் போனது கூடப் பரவாயில்லை (அதற்கும் சரியான மானகை அறிவும் முனைப்பும் இல்லாதது காரணமாய் இருக்கலாம்). ஆனால் சிலர், வெறும் செலவுகளுக்கும், வீண் ஆடம்பரச் செலவுகளுக்கும் கடன் வாங்கி அழிந்து போயினர். அட, வட்டி கட்டமுடியவில்லையா, அதற்கும் வாங்கு கடனை என்று, முதலில் வட்டிக்குக் கடன் வாங்கிப் பின் வட்டி கட்டக் கடன் வாங்கி, பின் மொத்தக் கடனையும் திருப்பிக் கட்ட வழியின்றிக் காடு தோட்டம் வீடு விற்றவர்கள் சிலரை நானறிவேன்.
பைனான்ஸ் கம்பெனிகளை எடுத்துக் கொண்டால், இந்த நிறுவனங்கள் கடன் கொடுக்க ஒரு வரைமுறை ஏதும் இன்றிச் செயல்பட்டதும் ஒரு தவறு. கடனுக்கு விண்ணப்பிப்பவரின் பின்னணி என்ன, எதற்காகக் கடன் வாங்குகிறார், புதிய தொழில் தொடங்க என்றால் அதில் அவருடைய முன் அனுபவம் என்ன, அவர் நிலைத்திருக்கச் சாத்தியக்கூறுகள் என்ன, அவர் சொத்துக்கள், வருவாய், இதரக் கடன் சுமை என்ன என்கிற எந்த விவரமும் இன்றி, வட்டி வருமானத்தை மட்டுமே எண்ணிக் கடன் கொடுத்துவிட்டுப் பிறகு வசூலிக்க முடியாமல் மொத்தமாய் முதலை இழந்த சில நிறுவனங்களையும் நானறிவேன். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து எல்லாம் வாங்கி வைத்தும் தான் என்ன பயன் ? மஞ்சள் கடுதாசி (திவால் நோட்டீஸ்) கொடுத்து விட்டுப் போய் விடுபவரிடம் ஒன்றும் வசூலிக்க முடியாது.
ஒரு காலத்தில் விவசாயம் சரிவரவில்லை (மழை இல்லை) என்று எங்கள் ஊர்ப்பக்கம் இருந்தவர்கள் காடு தோட்டம் எல்லாவற்றையும் விற்றுவிட்டுப் பக்கத்து நகருக்கு வந்து பைனான்ஸ் நிறுவனம் ஆரம்பித்து உட்கார்ந்து விட்டார்கள். வெள்ளகோயிலில் அந்தச் சாலையில் இப்படி வரிசையாய் வட்டிக் கடை ஆரம்பித்து, அதன் பெயரையே “முத்தூர் ரோடு” என்பதில் இருந்து “பைனான்ஸ் ரோடு” என்று ஆக்கி விட்டார்கள். இன்றைக்கும் “பைனான்ஸ் ரோடு” என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். எல்லாம் சரி தான். ஆனால் எல்லோரும் வட்டிக்குப் பணம் கொடுக்க ஆரம்பித்து விட்ட பின் அதனை வாங்கி யார் முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்குவது ? விவசாயமோ, தொழிற்சாலையோ எதிலேனும் ஈடுபட்டு இப்படி உற்பத்தியைப் பெருக்கக் கடன் வாங்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால், பிறருக்குக் கடன் கொடுக்க இன்னொரு இடத்தில் வாங்குவதும், வாங்குபவர் வேறிடத்தில் கடன் கொடுப்பதும், இப்படியாய் வட்டி மட்டுமே கை மாறிய நிலை எத்தனை நாளைக்குத் தாங்கும் ?
தாங்கவில்லை. பணம், கடன் கைமாற்று என்று சொந்தத்திற்குள்ளேயே கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டு, நாளடைவில் அதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அன்பும் ஆதரவுமாய் இருந்த அக்கா-தம்பி, மாமன்-மச்சினன் என்று உறவு கெட்டுப் போய்ப் பேச்சு வார்த்தை அற்றுக் கிடப்பவர்கள் ஏராளம். ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு கோர்ட்டு வாசல்களில் கிடப்பவர்களும் நிறைய உண்டு! பள்ளியில் இருந்து நெருங்கிப் பழகிய நண்பன் கூடப் பணம் வாங்கி விட்டுத் திரும்பக் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடி விட்ட கதைகளும் கேட்டிருக்கிறேன். காலகாலமாய் சிறந்து விளங்கிய தொழிலதிபர்கள் கூடத் தொழில் நொடிந்துபோய் ஊரை விட்டு, நாட்டை விட்டு இரவோடு இரவாய் ஓடித் தலைமறைவானது எல்லாம் பழைய கதை. சென்ற முறை ஊரில் சந்தித்த என் நண்பன் ஒருவன் அவனுக்கு ஒருவர் இப்படி அறிவுரை வழங்கியதாய்க் கூறினான்.
“காசு பணம் இருந்தா கம்முனு வங்கியில போட்டு வெச்சுருங்கடா. சீட்டு, டெபாஸிட்னு ஒருத்தன் கிட்டக் கொடுத்து ஏண்டா அநாவசியமா ஒருத்தன் ஊர விட்டுத் தலைமறைவாய் ஓடக் காரணமாய் இருக்கீங்க ?”
பணப்புழக்கத்திற்கும் உற்பத்திப் பெருக்க முதலீட்டிற்கும் உதவியாய் இருந்த இந்தத் தொழில்கள் இப்படிக் கெட்ட பெயர் எடுத்து நலிவடைந்து வருவது சோகம் தான். ஒரு கட்டுப்பாடு தேவை தான். ஆனால், ஜெயலலிதா அரசின் 9% உச்ச வரம்பு வட்டிச் சட்டம் சரியானது அல்ல என்று நானும் எண்ணுகிறேன். (அதிலும் சிட்டிபாங்க் காரன் 30% வாங்கும் போது!). இந்த உச்ச வரம்புச் சட்டம் எவ்வளவு தூரம் உதவும் ? அந்தக் காலத்திலேயே “மூணு வட்டி” என்று ஆண்டுக்கு 36% வட்டி வாங்கிக் கொண்டிருந்த பைனான்ஸ் கம்பெனிகள் அதிகார பூர்வ ரசீது கொடுக்கும் போது அதில் 8% (சரியாய் நினைவில்லை, ஆனால் இப்படிக் குறைந்த ஒரு வட்டி) என்று குறைத்துக் கணக்குக் காட்டுவார்கள். கறுப்புப் பணம் இப்படியெல்லாம் பெருத்துக் கொண்டிருந்ததற்கு என்ன கட்டுப்பாடு இருந்தது ? அந்த முறையே கொண்டு இன்னும் அந்த 9% உச்சவரம்புச் சட்டத்தையும் ஏய்க்கத் தெரியாத ஆட்களா நாம் ?
இவற்றில் கந்து வட்டித் தொழிலில் தான் நானறிந்த வகையில் அநியாய வட்டி இருந்தது. தமிழ்நாட்டில் கந்துவட்டித் தொழிலுக்குச் சிக்கல் என்று கடன் கொடுத்தவர்கள் எல்லாம் இன்று கேரளா ஆந்திரா என்று “லைனுக்கு”ப் போகிறார்கள். அங்கிருக்கிற ஆட்கள் எப்படிச் சமாளிக்கிறார்களோ ? அநியாயக் கந்துவட்டியும் தவறு, அதே சமயம் செயற்கையான வட்டி உச்ச வரம்பும் தவறு.
சரியான சமன்பட்ட தீர்வு உருவாக வேண்டும். நியாயமான வட்டி உச்ச வரம்பு (36% ?) அமைக்க வேண்டும். கடன் கொடுப்பவர்களும் சரி, கடன் வாங்குபவர்களும் சரி சற்று விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தனியொரு ஆளுக்குக் கொடுக்கும் கடனுக்கு உச்ச வரம்பு வைத்துக் கொள்ள வேண்டும். திருப்பிக் கட்டும் வரலாறு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்குத் தகுந்தபடி நம்பிக்கையானவரா இல்லையா என்று மீண்டும் கடன் விண்ணப்பிக்கும் போது அந்த அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எழுதுவது சுலபமாகத் தான் இருக்கிறது. ஆனால் இவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றித் தான் தெரியவில்லை.
அன்புள்ள செல்வராஜ்,
நீண்ட நாட்களுக்கு பிறகு cmt எழுத வந்தாலும், நேற்று கூட உங்கள் முந்தைய பதிவான முரடாய் மிரட்டாதே படித்தேன்.
சரி. இன்று நீங்கள் எழுதிய விவரம் குறித்து என் எண்ணங்கள். finance காரர்களின் நடவடிக்கைகள் குறித்து ஒரு சட்டம் தேவை என்று தோன்றுகின்றது. அது எவ்வாறு இருக்க வேண்டும்?. கடன் வாங்கிய ஒருவர், தவணைமுறையில் அதை செலுத்தும் போது, அந்த தவணையில் ஒரு பகுதி முதலுக்கு கணக்காக வேண்டும். இதனால், ஏதேனும் ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவர் முதல் மற்றும் வட்டியையும் திருப்பி கொடுக்க இயலும். சுரண்டலை தவிர்க்கவும் இது உதவும். அந்த வட்டி விகிதமும் கடன் வழ்ங்கப்படும் போது சரியாக நிர்ணயிக்கப் பட வேண்டும். இதன் மூலம், கடன் கொடுத்தவர், வட்டியும் அசலும் திரும்ப பெற ஏதுவாகும்.
இன்னொன்று, கட்டாய சேமிப்பு. நமது PDS மையங்கள் மூலம் இத்தகைய சேமிப்பு முறை ஒழுங்கு படுத்தபட வேண்டும். இதன் மூலம், அரசாங்கம், சில தொழில்களுக்கு உதவ முடியும்.
மேற்கூறிய இரு எண்ணங்களும் மேலோட்டமாக சொல்லப்பட்டவைதான். அரசு இத்தகைய நிதி நிறுவனங்கள் குறித்த, பொதுமக்களின் தேவைகளை கவனம் வைத்து, ஓர் ஆய்வு செய்து அதன் படி சட்டங்கள் இயற்ற வேண்டும். இதுதான் இப்போதைய தேவை என தொன்றுகின்றது.
இப்பதிவுக்கு நன்றி.
அன்புடன்
பாலாஜி
பாலாஜி, நீங்கள் கூறுவது சரிதான். தற்போதைய நிலவரம் என்னவென்றால், பைனான்ஸ், குறிப்பாகக் கந்துக் கடைக்காரர்கள், முதலிலேயே மொத்த வட்டியையும் எடுத்துக் கொள்வார்கள். முக்கிய பிரச்சினை கடன் வாங்குபவரின் சக்திக்கு மீறிக் கடன் கொடுத்துவிட்டு அவர் திருப்பிக் கட்டத் தவறும்போது, நிறுவனங்கள் தாங்கள் டெபாஸிட் வாங்கியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதும் தான். அதோடு இந்த நிறுவனங்கள் சில சக்திக்கு மீறிய வட்டி தருவதாகச் சத்தியம் செய்வதும் தவறான ஒன்று.
இப்போதெல்லாம் விவஸ்தையில்லாமல் போன் கால்கள் வருகின்றன. அவை முக்கால்வாசி நேரம் சிடி பேங்கிடமிருந்தோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கிடமிருந்தோ வருகின்றன. உங்களுக்கு கடன் வேண்டுமோ என்றுக் கேட்டுத் தொந்திரவு செய்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த நாட்டில்? இந்த அழகில் இவர்களாவது கடன் கேட்பவர்களைப் பற்றி விசாரித்து அறிவதாவது?
டோண்டு, உங்கள் கருத்துக்கு நன்றி. உண்மை தான். அமெரிக்காவில் பொருளாதாரம் மக்கள் வாங்கும் கடன்களின் அடிப்படையில் தான் இருக்கிறது (credit cards); இந்தியப் பொருளாதாரம் சேமிப்பில் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை விடுத்து அமெரிக்காவைக் காப்பியடித்துக் கடன் சுமையை மக்கள் மீது ஏற்றுவது எவ்வளவு பிரச்சினையை உண்டாக்குமோ தெரியவில்லை. எனக்கு இங்கு 0% APR (வருட வட்டி விகிதம்) (ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை) என்று வரும் கடனட்டை விண்ணப்பங்கள் ஏராளம்.
குறைந்த பட்சம் இங்காவது சமூகக் காப்பு எண் கொண்டு ஒருவருடைய கடன் வரலாறைக் கவனிக்க, எதிர்காலத்தில் அவருடைய திருப்பிக் கட்டும் திறனைக் கணிக்க, இது போல் மதிப்பீட்டை உருவாக்க என்றே மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன (credit agencies). எந்தக் கடன் கொடுக்கப் படும் முன்னரும் இந்த வரலாறு பரிசீலிக்கப் படுகிறது. இந்தியாவில் இது போன்ற எந்த ஒரு ஏற்பாடும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.
திருப்பூரில் மூன்று மாதங்களுக்கு முன் மூடப்பட்ட தனியார் நிதி நிறுவனம் திரட்டிய தொகை 1300 கோடி. மொத்தமாக நாமம். இதில் மற்றொரு ஆச்சரியம். ஏமாற்றியவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார். அவருக்கு மற்றும் சார்ந்த பங்குதார்களுக்கு அவர்களின் வீட்டும் இரவு பகல் மூன்று காவல்காரர்கள் உயிருக்கும் உடைமைக்கு பாதுகாப்பாய் அரசு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இயக்குநர் வீட்டின் முன் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டு காந்திய போராட்டத்தை நான்கு வாரங்களாக செய்து கொண்டுருக்கிறார்கள்.
Dear sir மாதச் சீட்டு நடத்துவதற்கு எந்த துறையில் லைசென்ஸ் பெற வேண்டும் அதற்கான Form எங்கு கிடைக்கும் லைசென்ஸ் இல்லாமல் இந்த தொழில் புரிந்தால் அதற்கான தண்டனை என்ன இவற்றை பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறவும் Pls
மன்னிக்கவும் இராசா. நீங்கள் கேட்டதற்கான சரியான விடையைத் தற்போது நான் அறிந்திருக்கவில்லை. சீட்டுக் கம்பெனிகளுக்கான தமிழக அரசு சட்டவிதிகள் பற்றி விசாரித்துப் பாருங்கள்.
மாதாந்திர சீட்டு நடத்துவது சட்டப்படி தவறு. இவ்வாறு சீட்டு நடத்தி வரும்போது பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் சீட்டு போட்டவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தால் காவல்துறை குற்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் தற்போது நடத்தி வரும் சீட்டை பதிவு செய்து நடத்த இயலாது. சீட்டுத் தொழிலை தமிழ்நாடு சிட்பண்ட் சட்டத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தி வர வேண்டும்.
தனிநபர் மேற்படி சட்டத்தின் கீழ் பதிவு செய்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சீட்டு மட்டுமே நடத்த இயலும். கூட்டு நிறுவனமெனில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சீட்டுகளை நடத்திக் கொள்ளலாம். லிமிடெட் கம்பெனியெனில் பங்கு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு 10 மடங்கு அளவில் சீட்டுகளை நடத்திக் கொள்ளலாம். மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சீட்டு பதிவாளரை அணுகி இதற்கான வழிமுறைகளை கேட்டு சீட்டுத் தொழிலை பதிவு செய்து நடத்தி வரவும்.”
வணக்கம் பிரதர்.
மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மைக்ரோ பைனான்ஸ் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறன். மிக மிக குறைந்த வட்டியில் பணம் வழங்க முடிபு செய்துள்ளேன் .டிரஸ்ட் ஆக மாற்றலாம் என்று நினைக்கின்றேன் இவற்றிக்கு நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் .