விமானப் பயணமும் குழந்தைகளின் பிரிவும்
Nov 8th, 2004 by இரா. செல்வராசு
க்ளீவ்லாண்டில் இருந்து ஆஸ்டின் செல்லும் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் மேகக் கூட்டங்களுக்கு மேலெழும்பிப் பறந்து கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே பிரகாசமாய்ச் சூரிய ஒளி சுள்ளென்று உள்ளே பாய்ந்து கொண்டிருக்கிறது. மேலே தெளிந்த நீல வானம், கீழே வெண்பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டங்கள். விமானம் இன்னும் மேலே செல்லச் செல்ல அந்தப் பஞ்சுப் பொதிகள் வெகு தொலைவில் இப்போது மிருதுவாய் வெறும் அலைகளாகத் தெரிகின்றன.
இது வேறு உலகம். சிலுசிலுவென்று மழை தூறி மப்பும் மந்தாரமுமாய் ஒளி குறைந்து ஒரு உலகம் தரையளவில் கிடக்கிறது. அதே நிகழ்கணத்தில் மேலே, மேகங்களையெல்லாம் தாண்டி உன்னதமான ஒரு உலகம் இங்கே ஒளி சூழ்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களுக்கு முன் பின்னிருக்கைக் குழந்தை ஒன்று “ஆ…ஊ..” என்று ஆனந்த ராகமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதன் சத்தத்தைக் காணோம். காதிலே நிறையும் பறக்கும் விமான இயந்திர ஒலி தாலாட்டாகித் தூங்க வைத்திருக்கும்.
நேற்றிரவு நான் வீட்டுக்குச் செல்லும் முன் நந்திதா தூங்கியிருந்தாள். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப வழக்கத்தை விடத் தாமதம் ஆகியிருந்தது. “அப்பா எங்கே அம்மா ?” என்று கேட்டபடி தூங்கியிருக்கிறாள் பாவம். பெரியவள் நிவேதிதா மட்டும் அப்பாவிற்குக் “குட் நைட்” சொல்ல வேண்டும் என்று கண் விழித்தபடி இன்னும் உறக்கத்தைத் தள்ளி வைத்துக் கொண்டிருந்தாள். அள்ளி அரவணைத்தபடி சொன்னேன்,
“அப்பா நாளைக்கு ஊருக்குப் போறேன் செல்லம்”.
“தெரியும்”, என்றபடி தலையசைத்தது செல்லம். “அம்மா சொன்னாங்க… என்னவோ Aவில் ஆரம்பிக்குமே ஒரு ஊர்?”
“ஆஸ்டின்”
“ம்ம்”, அம்மா சொல்லிக் கொடுத்திருந்த ஊர்ப் பெயர் நினைவுக்கு வர முகத்தில் ஒரு சந்தோஷக் கீற்று. சின்ன விஷயங்களுக்குக் கூடச் சந்தோஷப் பட்டுக் கொள்வதைக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
“வெள்ளிக் கிழமை இரவு தான் வருவேன்”
“சனிக்கிழமைன்னு அம்மா சொன்னாங்களே?”
வியாழன் கிளம்பிச் சென்று வெள்ளி திரும்புகிற இரண்டு நாள் பயணம் தான். ஆனால் திரும்பும் விமானத்தைக் குறைந்த நேரத்தில் தவற விடும் சிறு சாத்தியம் இருக்கிறதென்பதால் ஒருவேளை நான் சனிக்கிழமை தான் வரமுடியும் என்று சொல்லி இருந்தேன். அப்படியே வர முடிந்தாலும் வெள்ளி இரவு 12 மணிக்குத் தானே வருவேன். “எங்கே இன்னும் அப்பாவைக் காணோம்” என்று எழப் போகும் கேள்விகளுக்குத் தயாராய் இப்போதே மனைவி சொல்லி வைத்திருக்கிறார். இந்த அம்மாக்கள் விவேகமானவர்கள்.
“ஆம். சனிக்கிழமை தான் வருவேன்” – சமாளிக்கச் சற்றுத் தாமதமாகி விட்டது – வெள்ளி சனியாக மாறியது குறித்துக் கேள்விகள் எழும்பும் முன் முழுக்கதையையும் கூற வேண்டியதாகிவிட்டது.
“ஆஸ்டின் அமெரிக்காவில் இருந்து ரொம்ப தூரமா அப்பா, இந்தியா மாதிரி? ”
“இல்லம்மா, அமெரிக்காவில் தான் இருக்கு. கொலராடோ போனோமில்லையா? – அது மாதிரி தூரம்”
“ஓ, அப்போ ஒரு flight மட்டும் தான்”. தனக்குரிய ஒரு வழியில் எப்படியோ அவள் புரிந்து வைத்திருக்கிறாள். மூன்று விமானங்களில் ஏறி இறங்கி, ரயில், கார் என்றெல்லாம், இரண்டு நாட்களுக்குப் பயணம் செய்யத் தேவை இல்லாத ஒரு குறும்பயணம். அமெரிக்க மற்றும் உலக வரைபடத்தை வீட்டில் ஒட்டி வைக்க வேண்டும் என்று மீண்டும் எண்ணிக் கொண்டேன்.
“சரி, தூங்குமா – நேரமாச்சு”. அன்பானவளை விட்டகல மனமின்றி எழுந்து வந்தேன்.
நல்ல வேளை. அடிக்கடி விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிடுகிற வேலை இல்லை. குழந்தைகள் “பொக்குனு” போய் விடுவார்கள். ஒரு வகையில் எல்லா உறவுகளுக்கும் இப்படி ஒரு தற்காலிகப் பிரிவு நல்லது தான். ஆனால், நெடுநாள் நெடுந்தொலைவுப் பிரிவிற்கு நான் தயாராய் இல்லை. ஊரில் ஆத்தா, தாத்தா, அம்மாயி, அப்பச்சியாகிய எனது மற்றும் மனைவியின் பெற்றோர்கள் பேத்திகளை ஊரில் விட்டு விட்டுப் போங்கள் என்று அவர்கள் பிறந்த நாள் முதலாய் ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் எங்கள் மகள்களே முதல் பேரக் குழந்தைகள். பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி, இது பேரிழப்புத் தான் என்று நான் அறிந்தே இருக்கிறேன். என்னுடைய கடந்த கால நினைவுகளிலும் அனுபவங்களிலும் அப்பச்சி அம்மாயி பெரிய அளவில் இடம் பெற்றிருக்கிறார்களே! அதனால், இந்தியப் பயணங்களின் போது வேண்டுமானால் குழந்தைகள் இன்னும் சில வாரங்கள் அதிகமாக இருந்து வரட்டும் என்று நானும் ஆசைப் படுகிறேன். அந்த நோக்கில் சில வாரங்கள் அவர்களைப் பிரிந்திருக்கச் சித்தமாயிருக்கிறேன்.
காலையில் கிளம்பிக் கொண்டிருக்கிற போது நந்திதா அருகில் வந்தாள். இவளுக்கு நான்கு வயது பூர்த்தியாகி ஒரு மாதம் ஆயிற்று. இருந்தாலும், இதே வயதில் முதலாமவளைப் போலின்றி இவள் இன்னும் எங்களுக்குச் சிறு குழந்தை தான்.
“நந்து, நான் இன்னிக்கு ஊருக்குப் போறேன்”
“ஓ, அப்பா, ஐ வில் மிஸ் யூ! நானும் வருகிறேன். என்னையும் கூட்டிக் கொண்டு போங்க!”
“நந்து, அப்படி திடீர்னு எல்லாம் போக முடியாது. எப்படியும் விமானத்தில் ஒரு டிக்கெட் தான் இருக்கு. ஒரு சீட் தான்…”
நான் பேச்சை முடிக்கும் முன் பதில் வந்தது. “பரவாயில்லை அப்பா. நான் உங்கள் மடியில் உட்கார்ந்து கொள்வேன் – I will sit in your lap”, முகத்தில் லேசான ஒரு எதிர்பார்ப்புக் கலந்த முறுவல்.
“இல்ல கண்ணு. அதெல்லாம் விட மாட்டாங்க. நீ இப்போ பெரிய பொண்ணு ஆயிட்டே இல்லியா?”
“…”
“அதோட இல்லாம, நான் ஆபீஸ் வேலையாப் போறேன். நீ வந்து என்ன பண்ணுவே? உனக்குப் போரடிக்குமே”
“இல்லை அப்பா. நான் போர்னு எல்லாம் சொல்ல மாட்டேன். உங்களோடயே நானும் ஆபீஸுக்கும் வந்துடுவேன்”
“நோ நந்து… நான் மட்டும் போயிட்டுச் சீக்கிரம் வந்துடறேன்”. அப்படியே பேச்சை மாற்றினால் தான் வேலையாகும் என்று,
“பார். நீ இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகணுமே. அப்புறம் மிஸ்.நிக்கோல், மிஸ். மெல்லிஸா எல்லாம் உன்னத் தேடுவாங்களே – நந்து எங்கேன்னு?”
தனக்குத் தெரிந்த காட்சி கண்ணுக்கு வர, அதோடு என்னுடன் வரும் பேச்சும் நின்றது.
விமானம் சீராகப் பறந்து கொண்டிருக்கிறது. இடையில் ஏதோ ஊர் வந்த சமயத்தில் மேகங்கள் விலகி இருந்தன. எட்டிப் பார்த்தேன். பாத்தி கட்டி விட்டது போல் நிலப் பரப்பு. மழை பெய்திருக்க வேண்டும். அங்கங்கே நீர்த்தேக்கங்களும், நனைந்த சாலைகளும் வெள்ளிக் கம்பிகளாய் மின்னிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு சிற்றூராய் இருக்க வேண்டும். அதிகம் வீடுகள் கட்டிடங்கள் இல்லை. ஒன்றிரண்டு கார்கள் ஊர்வது மட்டும் கண்ணுக்குத் தென்பட்டது.
நந்திதாவைக் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நேரத்திற்கு நினைவு திரும்புகிறது. பயணம் பற்றிய பேச்சு மீண்டும் எழுந்தது.
“நீங்கள் ஏன் விமானத்தில் போக வேண்டும்? ஏன் காரிலேயே போகக் கூடாது?”
சாலைத் திருப்பத்தில் காத்திருந்த போது பதில் சொன்னேன்.
“நான் போற ஊர் ரொம்ப தூரம்மா. கார்ல போனா ரொம்ப நேரம் – 24 மணி நேரம் – ஆகும். விமானத்தில போனா மூணு மணி நேரம் தான்”
நீண்ட பதிலுக்கு அவள் காத்திருக்கவில்லை. அதற்குள் காட்சியும் கேள்வியும் மாறி விட்டிருந்தது.
“அப்பா, காருக்குள்ளே ஏன் பச்சை நிற அம்பு விட்டு விட்டு எரியுது?”
மனதிற்குள் சிரித்துக் கொண்டு பதில் சொல்லிவிட்டு மௌனமானேன். பள்ளியில் “போய் வருகிறேன்” என்று சொன்னவனை ஒரு விநாடி கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் (இது நிச்சயம் என் கற்பனையாகத் தான் இருக்க வேண்டும்!). அதற்குள் கரடி பொம்மை ஒன்றைக் கொண்டு வந்திருந்த நண்பனின் பால் கவனம் திரும்ப, நான் கிளம்பியதைக் கூடக் கவனிக்கவில்லை அவள். வெளியே வந்து, திரும்பிப் பார்ப்பாளா என்று அரை நிமிடம் எட்டிப் பார்த்தபடி நின்றேன். அவள் திரும்பவும் இல்லை. அதனால் எனக்கு ஏமாற்றமும் ஒன்றில்லை.
இன்றிரவு நிச்சயமாய் வீட்டில் இல்லாத அப்பா பற்றிய பேச்சு எழும். மாலை தொலைபேசியில் பேச வேண்டும். பெரிதாய்க் காரணம் ஒன்றும் இல்லாமலேயே விமானப் பயணம் இனிமையாக இருக்கிறது. மணிக்குச் சுமார் ஐநூறு மைல் வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது விமானம்.
* * * *
பி.கு.
1. விமானத்தில் எழுதியதை வலையேற்ற வீட்டுக்கு வந்துவிட்டேன்.
2. மகள்களின் ஆங்கிலப் பேச்சுக்கள் தமிழாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன.
ரொம்ப ரசித்து, பிரமித்து வாசித்தேன். மிகவும் நன்றி, வாசிப்பு இதமாக, சந்தோசமாக இருக்கிறது மனதுக்கு… வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.
very good post.. wish read more posts like this in future too.
– sakaran.
அன்பு, சாகரன், உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.
குழந்தைகள் வேறொரு வழியில் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டுருக்கிறார்கள். வெறுப்பும், வேதனையும், இனியும் வாழ்ந்து தான் ஆக வேண்டுமா? என்று யோசிக்கும் போதெல்லாம் உரையாடும் உரையாடல்கள் அத்தனையும் வென்று நின்று விட வேண்டும் என்ற புதிய உத்வேக சக்தி ஒவ்வொரு முறையும் வந்து விடுகின்றது.
இரவில் தாமதமாக உள்ளே வந்து பார்க்கும் போது தூங்கி விட்டார்கள் என்று இல்லத்தரவி சொல்கின்ற போதும் அவர்களை பார்த்துக் கொண்டே இரவில் அவஸ்த்தையுடன் கழிக்கும் போது பண வாழ்க்கை தேடல் அர்த்தம் இழந்து என்னைப் பார்த்து சிரிக்கின்றது.
நன்றாக எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் நன்றாக யோசித்து அக்கறையுடன் படைப்புகளை உருவாக்கத் தெரிந்தவர்கள் அதிகம் எழுதுவதில்லை என்பதில் நீங்கள் மட்டுமா விதிவிலக்கு? சாகரன் போல் எனக்குள் வருத்தம் உள்ளே வரும் போது வந்து போய்க் கொண்டேயிருக்கிறது??? உந்து சக்தி படைத்த உங்கள் எழுத்துப் பயணம் நின்று விட்டதோ? என்று அதிகம் வருத்தமடைவதில் நானும் ஒருவனாகத் தான் இருக்கின்றேன்.
இல்லத்தரசி என்று வாசிக்கவும். மன்னிக்க.