அமெரிக்க நூலகத்தில் தமிழ்
Nov 14th, 2004 by இரா. செல்வராசு
ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் வழியாகத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியும் என்று அறிந்து முயன்று சிலவற்றை (நூலக இடைப் பரிமாற்றம் – Inter Library Loan – வழியாக) வாங்கிப் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகங்கள் குறிப்பாகச் சிகாகோ மற்றும் ஆஸ்டின் பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருக்கின்றன என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.
அந்நாட்களில் இணையம் இப்போது போலில்லை. வைய விரிவு வலை என்று ஒன்று இருக்கவில்லை. ரோமன் (transliterated) ஆடைகளை அணிந்துகொண்டு தான் கொஞ்சம் நஞ்சம் தமிழும் இணையத்தில் காணக் கிடைத்தது. அறிவிலித் திரைகளின் (dumb terminals) வழியே தூர வழங்கி ஒன்றில் டெல்நெட் வசதி மூலம் இந்த நூலகத் தரவுதளத்தில் உள்நுழைந்து தமிழ் நூல் விவரங்கள் தேடி எடுக்க வேண்டும். அந்த நூல் வேண்டும் என்று எழுதிக் கொடுத்து இரண்டு மூன்று வாரங்கள் பொறுத்திருந்தால், அவை நம்மைத் தேடி வரும்.
தமிழ் எழுத்துக்கள், புத்தகங்கள் காண்பது அரிதாக இருந்த அந்தச் சூழலில் சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே சில குறிப்புக்கள்” போன்ற நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கக் கையிலேயே கிடைத்தது மிகப் பெரிய விஷயமாக இருந்தது ! அதற்காக இந்தப் பல்கலைக்கழக நூலகங்களுக்கு நான் என்றும் நன்றி சொல்வேன். ஆஸ்டினில் வசித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்!
அவ்வாறு ஒரு காலத்தில் என் தமிழ்த் தாகம் தீர்க்க உதவிய ஒரு நூலகம் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று பார்த்து வர வாய்ப்புக் கிட்டுமா என்கிற சந்தேகத்தோடே சென்று கொண்டிருந்தேன். அப்படியே நூலகத்தைக் கண்டுபிடித்தாலும், ஒருவேளை உள்ளே செல்ல முடிந்தாலும், அதனால் யாதொரு பயனும் இல்லை என்று தெரியும். இங்கிருந்து புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாது. உட்கார்ந்து படிக்கவும் நேரம் இல்லை. இருந்தாலும், தொடர்புடைய ஒருவரைப் பலகாலம் கழித்துப் பார்க்க இருக்கும்போது ஏற்படும் பரபரப்பு என்னுள் உண்டாயிருந்தது. அளவளாவ வார்த்தைகள் தேவையின்றிக் கண்களாலேயே அன்பைப் பரிமாறிக் கொள்வது போல, இந்த நூலகத்துத் தமிழ் புத்தகங்களைக் கண்களாலாவது கண்டுவிட வேண்டும் என்னும் ஆவல் மனதுள்.
ஒரு துப்பும் இல்லாமல் எங்கே என்று தேடுவது? இருந்தாலும், பொதுவாய் வரைபடத்தைப் பார்த்து பல்கலைக்கழகத்தின் மார்க்கமாய்ச் சென்றேன். அங்கு போய் விசாரித்துக் கொள்ளலாம். அட, கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும் “இந்த இடத்தில் நான் இருந்தேன், இந்தப் பல்கலைக்கழகக் காற்றோடு ஒருநாள் என் மூச்சுக் காற்று கலந்திருந்தது” என்று சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணியபடியே சென்றேன். டெக்ஸஸ் மாநிலத் தலைநகர்க் கட்டிடங்களைத் தாண்டி மிக அருகே அமைந்திருந்தது பல்கலைக்கழக வளாகம்.
“எங்கே போறோம், என்ன செய்கிறோம் என்றேல்லாம் ஒரு இலக்கு, திட்டம் எதுவும் இல்லாம எப்படித் தான், எதற்குத் தான் இப்படிப் போறோமோ?” என்கிற (நியாயமான) கண்டனத்தைத் தெரிவிக்க மனைவி அருகில் இல்லாத சுதந்திரத்தில் பல்கலைக்கழகத்தை அடைந்து இரண்டு மூன்று தெருக்களில் சுற்றியலைந்தபடி சென்றுகொண்டிருக்க, ஒரு சாலை முகப்பில் வாயிற்காவலர் நிலையம் ஒன்றில் தடுத்து நிறுத்தப் பட்டேன்.
“இதற்கு மேலே போக அனுமதி வேண்டும். சார், எங்கே போறீங்க ?”
“சும்மா இங்குள்ள நூலகத்திற்குப் போக வேண்டும்”
“எந்த நூலகம்? இங்கே பல நூலகங்கள் இருக்கின்றன”
தமிழ்ப்புத்தகங்களைப் பற்றி இவரிடம் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதில் பயனும் ஒன்றும் இருக்கப் போவதில்லை. “எதாவது ஒரு நூலகம்”. சொல்லி முடித்த மறு நிமிடம் இந்தப் பதில் சிக்கலை உருவாக்கக் கூடும் என்று “பிரதான நூலகம்” என்று திருத்திக் கொண்டேன்.
பிரதான நூலகக் கட்டிடம் பெரிதாக இருந்தது. கணினி அறைப் பக்கம் சென்று வலைப்பதிவுகளில் ஒரு மேய்ச்சல் விடலாமா என்று எண்ணினேன். சுமார் நூறு கணினிகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் ஆட்கள் இருக்கவே, வேறொரு அட்டவணை தேடியில் சென்று “Tamil” என்று அடித்துத் தேடினேன். அவை இருப்பது “Collections Deposit Library” என்று வேறொரு கட்டிடம் என்று கை காட்டினார்கள். அருகில் தான் இருந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு இருந்தேன்.
பிரதான நூலகம் போலின்றி இந்த நூலகம் வளாகத்தின் ஒரு மூலையில் இருந்தது. ஆளரவம் அதிகமில்லை. உள்ளே யாராவது இருப்பார்களா என்ற சந்தேகத்துடனேயே சென்றேன். யாருமில்லை. இரண்டு தளங்கள் இருந்தாலும், மேல்தளம் இருண்டே கிடந்தது. கீழேயும் புத்தக அலமாரிகள் இரு மருங்கே இருக்க, நடுவே இருந்த பாதையில் கூடச் சில புத்தகங்கள் இருந்தன. இந்த நூலகம் முழுவதும் வேற்று நாட்டு, வேற்று மொழிப் புத்தகங்கள் இருக்கும் போலும். பைண்டு செய்யப்பட்ட புத்தகங்கள் வரிசையாக இருந்தன. உடனடியாகச் சில வட இந்தியப் புத்தகங்கள் கண்ணுக்குத் தென்பட்டன். மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பக்கத்துப் புத்தகங்கள் இருந்தாலும், தமிழைத் தேடிக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது நான் அதிகக் கவனம் செலுத்தவில்லை.
சட்டென்று கண்ணில் பட்டது “ஆய்வுத் தொகை – ஆய்வு மலர் – பாகம்-2” என்றொரு புத்தகம். எடுத்துப் புரட்டினால், அது கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு என்று இருந்தது. (தொகுப்பாளர்: டாக்டர். ச.வே. சுப்பிரமணியன், 1974, விற்பனை: ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் வீதி, நாகர்கோயில்-1 ). கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையா? இதுவே எனக்குப் புதிய செய்தி! இந்த ஆய்வு நூலினுள் அருமையான கட்டுரைகள் இருக்கக் கண்டேன். (உ-ம்: சிலம்பு காட்டும் தமிழர் வாழ்க்கைத் தரம் – எழுதியவர்: சா.லைசாள், வீர ராசேந்திர சோழன் கி.பி.1062 கல்வேட்டு இப்படி).
குறிப்பெழுதிக் கொண்டிருந்த போது அங்கு வேலை செய்பவர் உள்ளே வந்தார். என்னைப் பார்த்து அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். யாரும் உள்ளே வருவது அரிது போலும். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது, வாரம் ஓரிரண்டு பேர் மட்டும் வந்து இந்தியப் புத்தகங்கள் எடுத்துச் செல்வர் என்றார். ஒரு காரணம், இப்போது நூலகம் வாரநாட்களில் மட்டும் தான் திறந்திருக்கும், சனி-ஞாயிறு விடுமுறை என்பதால் இருக்கலாம் என்றார். மேலே இரண்டாம் தளத்தில் இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன என்று காட்டி, மேலே சென்றால் விளக்குகளைப் போட்டுக் கொள்ளும்படியும் கூறினார்.
மேலே நாலைந்து வரிசைகளில் தமிழ்ப் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டு மனது மிகவும் பரவசப் பட்டது. ஒரு பேராசைக்காரனுக்குக் கிடைத்த புதையலைப் போல அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் கூட இத்தனை புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருந்த ஒரு நூலகத்தை நான் கண்டதில்லை.
ஜெயகாந்தன், தி.ஜானகிராமனில் (மரப்பசு, மோகமுள், சிவஞானம், பிடி கருணை, வடிவேல் வாத்தியார்…) இருந்து அண்ணா, கருணாநிதி வரை பலரது புத்தகங்கள். நான் கண்ட இன்னும் புத்தகங்களில் இன்னும் சில – டொமினிக் ஜீவாவின் ஈழட்தில் இருந்து ஒரு இலக்கியக் குரல், மலையகம் வளர்த்த தமிழ், மலேசிய நாட்டுப் புறப் பாடல்கள், கொங்குச் சிறுகதைகள், தேவனின் துப்பறியும் சாம்பு, கார்த்திகேசுவின் வானத்து வேலிகள், நர்மதா தமிழ் அகராதி, கம்பராமாயணம், இன்னும் ஏராளம் ஏராளம். சுற்றிச் சுற்றிப் பலமுறை வலம் வந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறித்துக் கொண்டேன். மணி மூன்றைத் தாண்டி விட்டது. பசியறியாமல் நேரம் போனது தெரியாமல் எண்ணியதை விட அதிக நேரம் இருந்துவிட்டேன். மீண்டும் ஊருக்கு வந்த பின் உள்ளூர் சமூக நூலகத்தில் InterLibrary Loan வசதி பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
ஆஸ்டினில் இருந்திருந்தால் இங்கு அதிகம் வந்திருப்பேனோ என்று எண்ணினேன். ஒருவேளை “மதுரையில் இருப்பவன் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனதில்லை” என்ற கதையாக நானும் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்களைப் போல இந்த நூலகத்தைப் பற்றி அறியாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளாமலுமோ தான் இருந்திருப்பேனோ என்னவோ ?
இப்போது இணையம் வழியாகவே ஆஸ்டின் நூலகத் தரவுத்தளத்தை நீங்கள் காணலாம். தேடலாம். உதாரணத்துக்கு கல்கி எழுதிய புத்தகங்கள் இருக்கிறதா என்று சோதித்தால் எண்ணிக்கை நாற்பத்து ஒன்பது என்று வருகிறது. சுஜாதா எழுதியவற்றுள் இங்கு இருப்பது எண்பத்தி மூன்று (சுஜாதாவை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்பதை நன்கு கவனியுங்கள் – வேறு மாதிரி எழுதினால் தேடல் வெற்றி பெறாது).
திரும்பி வந்தபின் எங்கள் உள்ளூர் சமூக நூலகத்தில் இருந்து WorldCat என்றொரு நூலகத் தரவுதளத்தில் தேடி இந்தப் புத்தகங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிந்தேன். சிலசமயம் அஞ்சல் செலவுகளுக்கு நம்மிடம் பணம் கேட்கலாம். சிலசமயம் அவர்களே அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினர். சுண்டக்காய் கால்பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்பது போல் அஞ்சல் செலவுகள் அமைந்துவிடுமோ என்று அச்சம் இருக்கிறது. முதலில் ஒரு புத்தகம் கேட்டுப் பார்ப்போம் என்று இப்போது ஆதவனின் “முதலில் இரவு வரும்” கேட்டு வைத்திருக்கிறேன். எவ்வளவு செலவு ஆகும் என்று முன்னரே தெரிவித்து அனுமதி பெற்ற பின் தான் தருவித்துத் தருவார்கள். சுமைக்கூலி முக்கால் பணம் என்றால் சுண்டைக்ககாய் வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்றிருக்கிறேன். இல்லாவிட்டால், அவ்வப்போது நல்ல தமிழ்ப் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.
ஆதவன், புதுமைப்பித்தன், அசோகமித்ரன், தி.ஜா என்று ஒரு பட்டியலே இருக்கிறது. வேறு சிபாரிசுகள் இருந்தால் சொல்லுங்கள். நீங்களும் ஆர்வமிருந்தால் உங்களூர் நூலகத்தின் வழியாகத் தமிழ் படிக்க இயலுமா என்று பாருங்கள். இந்தத் தேடுதலுக்கு ஏதேனும் உதவி வேண்டுமாயின் தெரியப்படுத்துங்கள். உதாரணத்திற்கு, புதுமைப்பித்தனை PUTUMAIPPITTAN என்று போட்டுத் தேட வேண்டும்.
தகவல் மிக பயனுள்ளதாக இருந்தது.எனது தந்தையார் வெளியிட்ட புத்தகம் ஒன்று பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
உங்கள் தகவல் மூலம் அது இருக்குமிடத்தை கண்டுபிடித்துள்ளேன்.
http://utdirect.utexas.edu/lib/utnetcat/index2.WBX?search_type=TB&search_text=elilmiku
தகவலுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
சுரதா
தமிழ் நூல்களை மின் எழுத்து வடிவிலாக்கும் மதுரைத் திட்டம் தங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை சுமார் 200 நூல்கள் (ஜெயகாந்தன், கல்கி, ஈழத் தமிழ் எழுத்துக்கள் உட்பட) அங்கே படிக்கக் கிடைக்கின்றன. அதற்கான சுட்டி: http://www.tamil.net/projectmadurai/pmfinish.html
Archtype Tamil Immigrant story – The Search For Tamil Books. We are lucky here in Canada. Public Libraries carry a lot of Tamil books, and Tamil is among the top ciculated languagues in Toronto PL.
சுரதா, உங்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி.
ஆச்சிமகன், மதுரைத் திட்டம் பற்றித் தெரியும். ஆரம்ப காலத்தில் (பத்து வருடங்கள் முன்பு) நானும் கூட சிறிது தட்டச்ச முயன்றேன். பிறகு இணையத் தொடர்பில்லாது போனதால் அந்த முயற்சி நின்று போனது.
நட்கீரன், டொராண்டோ நூலகத் தளம் சென்று பார்த்தேன். உண்மை தான் – அங்கு நிறையத் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் போலிருக்கிறது. உங்களுக்கு வசதி தான்.
My goodness. Selvaraj, thanks for this article. I wasn’t aware of this when I lived in Austin for 2 yrs. I used to drive down to Meenaakshi Amman temple in Houston to get tamil books. Temple library had a good collections too.
Thanks for such a wonderful tip.
Regds.
Muthu
எனக்குள் ஒவ்வொரு முறையும் ஆச்சரியம் வந்து போய்க்கொண்டேயிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் அதிலும் தங்களைப் போன்ற நல்ல உயர் பதவிகளில் இருப்பவர்கள் வீடு தொடங்கி அலுவலகம் மற்றும் நட்பு வட்டாரங்கள் வரைக்கும் ஆங்கிலத்தையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டும் என்று கட்டாய நிர்ப்பந்தத்தில் வாழ்பவர்கள் எவ்வாறு தாய் மொழியை தனக்குள் வைத்து இருப்பார்கள்?
அப்துல் கலாம் கூட தன்னுடைய சுய சரிதையை ஆங்கிலத்தில் குறிப்பாகச் சொல்லி அதற்குப் பிறகு தான் தமிழில் ஏறக்குறைய மொழிபெயர்ப்பு போல வந்தது. அவரே காரணமும் சொன்னார். ஆங்கிலத்திலே பேசி பழகி வேகமாக தமிழ் மொழியில் எழுத முடியவில்லை என்று.
இங்கு உங்கள் தேடல், வார்த்தைகள், ஆர்வம் போன்றவற்றை பார்க்கும் போது உள்ளுற நெருப்பு இருந்தால் எதுவும் சாத்யம் என்று புரிகிறது.
பணத்திற்கும் மேலே ஏதோ ஒன்றை உங்கள் வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டுருக்கும் ஆர்வமும் ஆசையும் புரிகிறது.