தம்மக்கள் தம்பட்டம்
Nov 17th, 2004 by இரா. செல்வராசு
எனது பெரிய மகளின் (Kinder Garten) பள்ளியில் இன்று முதன் முறையாக ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு. நான் செல்லவில்லை எனினும் மனைவி கூறத் தெரிந்துகொண்டேன். எல்லா மதிப்பீடுகளிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாள் நிவேதிதா. வகுப்பிலேயே சிறப்பானவர்களுள் ஒருவராய் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறாள் என் மகள். நுழைவு மதிப்பீட்டின் போதே திறமையானவர்களுள் ஒருவர் என்று தனக்குச் சுட்டிக் காட்டப் பட்டதாகவும் வகுப்பில் இவளுக்குச் சுவாரசியக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குச் சொல்லப் பட்டதாகவும் ஆசிரியை கூறியிருக்கிறார். என் உள்ளத்தில் ஆனந்தம். பெருமை. பூரிப்பு.
“ஆகா, உணர்ச்சிவயத்தில் ஆனந்தக் கண்ணீரே வருகிறது” என்று மனைவியிடம் வசனம் பேசினேன். அதில் சிறிதாவது உண்மை இல்லாமல் இல்லை.
“இப்போ என்ன உங்க மக ஐ.ஏ.எஸ்-ஆ பாஸ் பண்ணிட்டா? இந்தக் குதி குதிக்கிறீங்க?”
என்னவோ. அவசியம் இருக்கிறதோ இல்லையோ. நியாயமோ இல்லையோ. எனக்கு நிறைவாய் இருக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். நான் மகிழ்ந்து கொள்கிறேன்.
இவளுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளப் போதுமான வாய்ப்புக்களை உருவாக்கித் தர முடிந்தால் போதும். அதே சமயம் இவளது குழந்தைமை தொலையாமலும் இருக்க வேண்டும். சில பல வகுப்புக்களுக்கு அனுப்பினாலும், அவளுக்கு வருத்தம் தருவதாய் இருந்தால் வேண்டாம் என்று யோசிக்கிறேன். வீட்டில் பயிற்சி செய்யச் சொல்லாதவரை இவளுக்குப் பரத வகுப்பு பிடித்திருக்கிறது. தண்ணீரினுள் சும்மா மேலும் கீழும் குதிக்க மட்டும் தெரிந்திருந்தவள் இப்போது தலையை நீரினுள் விடக் கற்றுக் கொண்டு நீச்சல் வகுப்பில் இரண்டாம் நிலைக்குச் செல்லத் தயாராய் இருக்கிறாள். தமிழில் எழுத்துக்களைச் சுமாராக எழுத முயல்கிறாள். ஆசையாய்க் கேட்டால் தொடர்ந்து இரண்டு நிமிடம் தமிழிலேயே பேசுகிறாள்! கூமான் வகுப்புக்களுக்கு அனுப்புவதில்லை. ஆனால் அன்பை நிறைக்க முயல்கிறேன். நேற்று மாலை குதிகயிறு (skip/jump rope) பாவிக்கக் கற்றுக் கொண்டாள். கால்களைப் பிடித்துத் தூக்கித் தலைகீழாகத் தொங்கவிட்டால் இவள் பெரிதும் ரசிக்கிறாள்! வாரம் ஒரு முறையாவது மொனாப்பொலியோ வேறு ஏதேனுமோ விளையாட முயற்சி செய்கிறேன். ஒரு போர்வையில் அமர வைத்து ஊஞ்சலாட்டினால் உன்னதம் அடைகிறாள்.
கோமாளியாய் விளையாட நான். எல்லா இடங்களுக்கும் வகுப்புக்களுக்கும் பொறுப்பாய்ப் பதிவு செய்து அழைத்துச் சென்று வர மனைவி 🙂
வகுப்பில் இவ்வருடக் கடைசியில் ஆங்கில எழுத்துக்களை எழுதத் தெரிந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்க, இவள் இப்போதே பெரிய வார்த்தைப் புத்தகங்களைப் படிக்கவும், அவ்வப்போது நாட்குறிப்புக்கள் எழுதவும் செய்கிறாள். அடிக்கடி நூலகங்கள் அழைத்துச் சென்றது காரணமாய் இருக்கலாம். அல்லது இயல்பாய் அவளுள் இருக்கும் ஆர்வம் காரணமாய் இருக்கலாம். இப்போது, தானே படம் வரைந்து புத்தகங்கள் செய்து கொண்டிருக்கிறாள்.
ஒரு பள்ளி ஆசிரியையாகவும், ஓவியக் கலைஞராகவும், சிற்பக் கலைஞராகவும் வரவேண்டுமாம். எல்லாமும் ஆவது எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்டால், காலையில் மட்டும் ஆசிரியையாகவும், மதியம் சில நாட்கள் சிற்பமும் சில நாட்கள் ஓவியமும், வார இறுதிகளில் விளையாடுவதும் செய்யலாமே என்று திட்டஞ் செய்கிறாள்! முன்பு விழைந்த குழந்தை மருத்துவர், ராக்கெட் விஞ்ஞானி இவர்களெல்லாம் பின்னாலே சென்று விட்டார்கள். இன்னும் வளர்கையில் எத்தனை அவதாரங்களோ !
நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இவள் தானாய்ப் பொங்கும் அருவி.
ஈன்ற பொழுதிற் பெரிதுவப்பாள்
தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்
தந்தையும்தான்.
செல்வராஜ் உங்கள் குழந்தை மிகத் திறமையும் ஆர்வமும் உடையவளாய் தெரிகிறாள்.
உங்களாலான ஊக்கங்களையும் உதவிகளையும் கொடுத்து அவளை இதே உணர்வுடன் வளர விடுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா
வாழ்த்துக்கள்.
தாங்கள் சொல்வது போலத் திறமை வளரும்போது குழந்தைத் தனத்தை இழக்காமல் இருப்பது கடினம் தான்.
“அறிதலில் விஞ்சி நிற்பது சோகம் தான். அறியாமையே இன்பம்” என்றெல்லாம் சொல்கிறார்களே.
எதையும் வற்புறுத்தித் திணிக்காமல் குழந்தையின் போக்கில் வளரச் செய்வது நலம் பயக்கும்.
எனது மகிழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு நன்றி சந்திரவதனா, ஆச்சிமகன். நீங்கள் சொல்வது போல் எதையும் வற்புறுத்தித் திணிக்காமல், அதே சமயம் ஊக்கப்படுத்திச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணி இருக்கிறேன். சில சமயம் அப்படிச் செய்ய முடியுமா என்பது மலைப்பாக இருக்கும். அவ்வப்போது இப்படி நினைவுறுத்திக் கொள்வது நன்றாக இருக்கிறது.
சும்மாவா.. யாரோட பொண்ணு அது! உங்களை மாதிரி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகனும்னு சொல்லலியா? சிலபேரோட குழந்தைப்பருவ ஆசை ட்ரெயின்ல கார்ட் ஆகனும்னுட்டு!!
—