கலாச்சார ஆதிக்கங்களும் அறிவுப் பரவல்களும்
Nov 18th, 2004 by இரா. செல்வராசு
தீவாளியும் துளசியும் ஆரம்பித்து வைத்துக் கடந்த சில நாட்களாகச் சுந்தரும் வெங்கட்டும் ஈடுபட்டிருக்கும் விவாதம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. துளசியைத் தெய்வமாக்கும் கலாச்சார ஆதிக்கம் மேற்குடியில் இருந்து பரவுகிறது. அர்த்தம் புரியாமலே அறியாமையின் காரணத்தால் பிற குடிகள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. அதனால் தமக்கென ஒரு கலாச்சார அடையாளமின்றித் தொலைந்து போகின்றன என்கிறார் சுந்தர். இதையே மேற்குடியாக்கம், சமஸ்கிருதமயமாக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று தங்கமணி கருத்துச் சொல்லி இருக்கிறார்.
இவற்றில் எல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. மேற்குடி ஆதிக்கம் சரி, சமஸ்கிருதம் எங்கிருந்து வருகிறது என்று வெங்கட் கேட்கிறார். என்னால் அதற்குச் சரியான ஒரு உதாரணம் காட்ட முடியும். காணித் தெய்வமும் கருப்பணசாமியும் இருக்கிற எங்கள் கோயில் குடமுழுக்கு விழாவில் கூடச் சமஸ்கிருதம் தனது வீச்சை அதிகரிக்கப் பார்க்கிறது. இந்தக் கோயிலில் என்றுமே வெறும் மேலும் இடுப்பில் துண்டும் கட்டிய, கருத்த மேனிப் பூசாரியின் பூசை தான். என்னவோ வேண்டுதலாகத் தமிழில் முணுமுணுத்த மந்திரம் சொல்லித் தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால், திருப்பணி, குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்று வந்த போது அவர் ஓரம் கட்டப் பட்டிருப்பார். ஏதோ ஒரு சுவாமிகளும், அடிகளாரும், ஆதீனமும் எல்லோரும் வந்து வேதபாராயணமும், பூர்ணாகுதிம், மிருத்சங்கிரகணமும், இன்னும் புரியாத என்னவெல்லாமோ பண்ணிச் சென்றிருக்கின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்த சந்திரசேகர பிடாரி அம்மனும், கருப்பணசாமியும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன விழாவில் வெலவெலத்துத் தான் போயிருப்பார்கள்!
சரி. இதற்கு முழுதுமாக மேற்குடியைக் குறை சொல்லிவிடுதல் நியாயந்தானா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் குமுகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த ஆதிக்கம் பரவுவதற்கு அவர்கள் முக்கிய காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது. வேலூர்ச்சாமி ஜெயேந்திரர் தமிழில் குடமுழுக்குப் பூசை செய்வது தீட்டு என்று சொன்னவர் தானே!
* * *
இதுபோன்ற கலாச்சார ஆதிக்கங்கங்களுக்கு மேற்குடிகளும் பார்ப்பனீயமும் மட்டுமே காரணமல்ல. ஒரு வேளை மூன்று தலைமுறைகளுக்கு முன் அப்படி இருந்திருக்கலாம். இப்போது இல்லை. இப்போதெல்லாம் வாணிகமும் செல்வமும் தான் பெரும் காரணம். இருப்பவன் இல்லாதவனிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். அதனால் எல்லாவற்றிற்கும் பார்ப்பனீயத்தைக் குறை சொல்ல வேண்டாம் என்கிறார் வெங்கட். தனது மூதாதையர்கள் நிச்சயம் தவறு இழைத்திருப்பார்கள் என்று அதற்காக வேதனைப்படுவதாகவும் வெங்கட் கூறியிருப்பது மிகவும் மதிக்கத் தக்கது. தனது கட்டில் இல்லாத தனது மூதாதையர்கள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்பது அரிய குணம். அதற்காக அவருக்கு வந்தனம்.
ஆதிக்கம் செலுத்தியது பிறரும் தான். பார்ப்பனீயத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்று அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. சிறு வயதில் கிராமம் ஒன்றில் நான் ஒரு அண்ணனுடன் விளையாடிவிட்டு வந்தேன் என்று சொன்னபோது வீட்டில் பெருசுகள் “அவனைப்” போய் அண்னன் என்றா சொல்வது என்று என்னிடம் கோபித்துக் கொண்டதன் பின்னணியில் அதே ஆதிக்க மனப்பான்மை இருந்தது. சிறுவயதிலேயே இந்த மனப்பான்மை ஏற்றப்படுகிறது. இன்றும் சில ஊர்களுக்குப் போகும் போது “சாமீ” என்று விளிக்கப் படும்போது உடம்பு கூசத் தான் செய்கிறது. நன்கு படித்தவர்களே இன்றும் “அவனுங்க எல்லாம் இப்போ சங்கம் வச்சுக்கிட்டு லொள்ளுப் பன்றானுங்க” என்று கீழ்க்குடியை எதிர்ப்பதிலும் ஆதிக்கம் இருக்கிறது. பார்ப்பனீயம் இல்லை.
ஆதிக்கம் செலுத்தியவன், ஆதிக்கம் செலுத்தப் பட்டவன் என்று இரு பிரிவுகள் உண்டு. இரு பக்கமும் சாதி, மதம், செல்வம், வாணிகம் என்று பல காரணங்களால் ஒருவர் மற்றவரை ஏய்த்த அவலம் இன்னும் முழுதும் நீங்கிய பாடில்லை. அது நீங்க அறிவுப் பரவலே வழி என்று கூறும் வெங்கட், சுந்தர் உடன் நானும் ஒத்துப் போகிறேன். இருவரும் வேறு வேறு திக்கில் இருந்து ஒன்றையே நோக்கி இருக்கிறார்கள், சார்ந்த இடத்தின் சாயம் கொஞ்சம் ஒட்டி இருக்கலாம். அந்தச் சாயத்தை மட்டுமே பார்த்துச் சாடிக் கொள்ளாமல், தெளிவான எண்ண ஓட்டத்தைச் சொல்லி இருக்கிறார்கள். ஆரோக்கியமான இந்த விவாதத்தை வெற்றுப் பிரசங்கம் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.
என் மேல் ஆதிக்கம் செலுத்த முனைபவனை எதிர்ப்பதும், என்னுள் இருக்கும் ஆதிக்க உணர்வுகளைக் களைந்து கொள்வதும் தனிப்பட்ட முறையில் அந்த வழியில் என்னைச் செலுத்திக் கொள்ள உதவும். அந்தக் கல்வி, அறிவுப் பரவல் முதலில் நம்மில் ஆரம்பிக்க வேண்டும்.
செல்வராஜ், உங்களுக்கேயுரிய நிதானத்துடன் பார்த்திருக்கிறீர்கள். நன்றி.
செல்வராஜ் – நன்றி. பின்தொடர்பு சமாச்சாரத்தை வார இறுதியில் கவனிக்கிறேன்.
சுந்தர் சொல்லிய அதையேதான் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. தனித்தனியான ஆதாரங்களை எடுத்துத் தருவது நம்மிடையே தேவையில்லாத ஒன்று என்று கருதுகிறேன். ஏன் சமஸ்கிருதமயமாக்கல் நிகழ்கிறது? அறியாமையால். ஜீரணோத்தாரனம் என்றால் என்ன, அஸ்டபந்தனம் என்றால் என்ன என்று மக்களுக்கு விளங்காத நிலையில் இதையேதான் செய்வார்கள். (நான் ஊரிலிருந்தால் எங்கள் ஊர் ஆரோக்கிய மாதா கோவில் ‘கும்பாபிஷேகப்” பத்திரிக்கையையும் ஸ்கேன் செய்து போடமுடியும். பெங்களூரில் கிடக்கிறது). இது இந்துத்துவம் சார்ந்த தனி விஷயமாக ஏன் சிறப்பிக்கப்படுகிறது என்று தெரியவில்லை? பள்ளிவாசலிலும் மௌலானா பாத்தியாதான் ஓதுவார். மக்களின் மடத்தனத்தை மதவாதிகள் பயன்படுத்திக் கொள்ளும் இது காலம் காலமாக நடந்துதான் வருகிறது. (சென்ற வருடம் டொராண்டோ வந்த போப் – ஆங்கிலம், பிரஞ்சு நன்றாகத் தெரிந்த போப் – லாத்தினில்தான் செர்மன் நடத்தினார்). பிரமிப்பூட்டி அடிமைப்படுத்தும் உத்தி இது. இதை இந்துக்களுக்கு மட்டுமான அயோக்கியத்தனமாக காட்டுவது தவறான தகவல். அறிவுப் பரவலாக்கம் பற்றி பேசும் நாமும் இதேபோல தகவலைத் திரித்துத் தர முயற்சிப்பது உங்களுக்கு வியப்பூட்டவில்லை?
செல்வராஜ் – மன்னிக்கவும்.
நான் மேலே இட்டிருந்த கருத்து உங்கள் முகப்பை மட்டுமே படித்து (மொத்தமுமே அவ்வளவுதான் என்று எண்ணிக்கொண்டு) அவசரத்தில் கிறுக்கியது. நீங்கள் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சுந்தரின் துளசி குறித்த முதல் இடுகையையும் அதற்கு நான் காட்டிய தொனியையும் பாருங்கள், இப்பொழுது நீங்கள், நான், தங்கமணி, சுந்தர் எழுதுவதைப் பாருங்கள். நாமெல்லோருமே ஒத்துக் கொள்கிறோம் – பிரச்சினையின் அடிவேரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரை ஒருவர் மதிப்பதால் வரும் மனப்பாங்கு. இன்னும்கூட எனக்கும் தங்கமணிக்கும், சுந்தருக்கும் இடையில் பார்வையில் சில வித்தியாசங்கள் இருக்கிறது, கட்டாயம் இருக்கவேண்டும், அதுதான் பன்முகத்தின் அழகு. சிறுவயதில் அப்பாவின் பூணுல் அறுபடும் என்று ஒரத்தநாட்டில் வீட்டுக்குள்ளே அடைந்திருந்த பயம், அடுத்த வீட்டுப் பேராசிரியர் ராமசேஷன், புல்லுக்கும் பூண்டுக்கும் தீங்குநினையாத அந்த உத்தமர் நெஞ்சில் கடப்பாறையால் குத்தப்பட்டு இறந்ததைப் பார்த்தது போன்றவை என் பார்வைகளைக் கட்டாயம் பாதிக்கும். ஆனால் நன்றி என் தந்தைக்குத்தான். கடப்பாறை குத்தியவர்களை எதிர்க்க என்னை சங்கபரிவாரத்தின் பக்கம் திருப்பவில்லை. தி.கவின் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றால், குத்தப் பணித்தவனின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று எனக்குத் தெரியுமென்று அங்கே அழைத்துச் செல்வார். அந்த வயதில் மாற்று கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் தந்தை எல்லோருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
Hello Selvaraj:
You can get new insights into how the caste system works, if you consider the Eelam Tamils case.
Imagine, at one point you were the Controllers or the High Caste or the Power Players. Then war. Immigration to West. Then in a new social space, you are the Underclass or the Untouchables. You work as the dish washers, cleaners and workers. Worse: you are the illegals, smugglers, terrorists, criminals, free loaders, welfare bums, etc etc.
(Ironically enough, those at the bottom at Eelam Tamil society due to high value for their labour get ahead or get a fresh start or a new opportunity, and they mobilize them self quickly in the new immigrated social space. But, not many in the real bottom get to immigrate. They end up in the ranks of the LTTE, or end up as the collateral damages.)
Going from civil servants, business men, traders, farmers, to the lowest possible. (Not everyone of course.) But, majority.
Why?
No social network.
Education not recognized.
No capital.
How would you feel?
Would you resent?
Would you re-asses your view of the caste system, and social structures?
Would you accept, and conclude that you really are the low things?
Frankly, that kind of soul searching rarely happens. Eelam Tamils don’t like their position. But happy that they survived, they are in the West. They can see a better life status for their children, and they are content with it. Moreover, caste lines are preserved in close ethnic networks through marriages, but I don’t think they will stand as integration with the mainstream society takes a hold.
But, it is interesting to note that Eelam Tamils reverence for their family or village Iyar is no longer exist as once it did. Iyars are highly commercial men now. Putting God on sale. We have seen how the “pompous” image of religious institutions get created.
In sum, what is the total effect of war, and immigration.
As a society, Eelam Tamils are more secular, internationally minded, and mobile. Iyar’s and caste, are not irrelevant even here, but only plain ritualistic. (For good or bad, the minority Catholic priests play vital role in Eelam Tamil politics, than the majority Hindu priests.)
Look through the lenses of Eelam Tamils and you will get a fresh prospective on caste, class, domination, obedience, survival, and humanity.
நன்றி செல்வராஜ் உங்கள் அன்புக்கு.
அன்புள்ள வெங்கட், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. (நல்ல வேளை முழுவதையும் படித்தீர்கள்:-) ). முக்கியமான ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதுவும் முக்கியமானது. பன்முகத்தன்மை நல்லது என்று. நீங்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளின் தாக்கம் உங்களிடம் இருக்கும். அதுவும் உதாசீனப் படுத்தப் படாமல் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று தான். உங்கள் தந்தை அருமையானவராய் இருந்திருப்பார் போலும். நன்று. நீங்களோ பிறரோ எதிர்கொண்டது போன்ற சூழலில் இன்றிப் பெரும்பாலும் அமைதியான வாழ்க்கையையே கொண்டிருந்ததால், அது போன்ற நிகழ்வுகளின் தாக்கத்தை இந்தக் கலந்துரையாடல்களின் மூலம் அறிய முடிகிறது. அது எனது புரிதலையும் அதிகமாக்குகிறது. நன்றி.
சுந்தர், தங்கமணி, உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. உண்மையில் இந்தச் சுற்று விவாதம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. இது மட்டுமே பெரும் பயனைத் தராது போகலாம். ஆனால் இது சரியான திசையில் பயணம். எல்லோருமாய்த் தொடரலாம்.
நட்கீரன், உங்கள் விரிவான கருத்துக்களும் எனக்கு நிறைய விஷயத்தைச் சொல்கின்றன. போர், புலப்பெயர்ச்சி போன்ற சுயகட்டில்லாத கட்டாய மாற்றங்கள் நமது அடிப்படை நம்பிக்கைகளைத் (அவை நல்லவையோ கெட்டவையோ) தகர்க்க வல்லவை. (எனக்கு நேரடித் தாக்கம் இருந்ததில்லை). முந்தைய ஆதிக்க நிலை மாறும் போது இந்த ஏற்ற தாழ்வுகள் பற்றிக் கேள்வியும், சமனிலை அடைய வாய்ப்புக்களும் எழக் கூடும் தான். கல்வியும், அறிவுப் பரவலும் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். கல்வி என்பது இங்கு ஏட்டுக் கல்வியல்ல, சமூகச் சிந்தனைகள் மூலமும், இதுபோன்ற விவாதங்களின் பின்னணியிலும் உண்டாகும் சுய மாற்றங்களே. நன்றி.
One of the impressive, neutral analysis ..Thanks selvaraj.
Regards,Arun vaidyanathan