இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

நான்காவது வீடும் நிலையான முகவரியும்

September 27th, 2004 · 3 Comments

வருக வருக !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வணக்கம். வலைப்பதிவு தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாகத் தாண்டாத நிலையில் மூன்று இடங்கள் மாறி இன்று நான்காவதாக ஒரு இடம் பார்த்து வந்திருக்கிறேன்.

“எத்தனை நாளைக்குத் தான் சட்டி பானையெல்லாம் தூக்கிக்கிட்டு அலையறது ? நமக்குன்னு ஒரு சொந்த இடம் வேணுமப்பா”, வாடகை வீட்டிலேயே பல வருடங்கள் கழித்துவிட்ட அம்மா சில வருடங்களுக்கு முன் ஒருநாள் இப்படிக் கூறியது நினைவுக்கு வருகிறது.

பொதுவாக வசதியாக இருந்தாலும் நம்முடையது என்று ஒரு உரிமை இல்லாத ஒரு இடத்தில் என்றேனும் ஒரு நாள் சிக்கல் வருவது பெரும்பாலும் தவிர்க்க இயலாதது தானோ? இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் பிரச்சினை இல்லையோ என்னவோ ? ஆனாலும் அவ்வளவு சுலபமாய்த் திருப்தி அடைந்து கிடக்கவும் முடியவில்லை. ஆர்வக் கோளாறு! என் செய்ய?

எனது வலைப்பதிவும் இப்படித் தான் இரண்டு மாதங்களுக்கு முன் அல்லலுற்றது. Weblogs.Us தளத்தில் சில மாதங்கள் பிரச்சினை இன்றித் தான் சென்றது. ஆனால் அங்கும் வழங்கிக்குச் சோதனை வர, வேறு வழங்கிக்கு மாற்றும்போது நிர்வாகிகள் UTF-8ல் அமைக்காமல் விட்டுவிட என் தமிழுக்கும் வந்தது சோதனை. எனது ஆலோசனைகளின் பேரில் சரியான மாற்றங்கள் செய்யப்பட்டுத் தற்போது சரியாக அமைந்துவிட்டது என்றாலும், (பிற காரணங்கள் இருந்த போதும்) இந்த மாற்றங்களால் எனது பதிவுகளுக்கு ஒரு இரண்டரை மாதத் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

இடையில் இடமாற்ற வேலைகள் செய்து கொண்டிருந்தபோது, இம்முறை சொந்த வீடு இல்லாவிட்டாலும் சொந்தமாய் ஒர் முகவரியாவது வாங்கி வைத்து விடலாம் என்று முடிவு செய்து பதிந்து, இதோ இன்று திறப்பு விழா ! இனிமேல், தளத்தில் பிரச்சினை என்று வேறிடம் செல்ல நேரிட்டாலும், இதே முகவரியை வைத்துக் கொள்ளலாம்.

இம்முறை WordPress என்னும் வலைப்பதிவுச் செயலிக்கு மாறி இருக்கிறேன். Bloggerல் இருந்து MovableTypeற்கு முதலில் மாறிய காரணங்கள் சில – செய்தியோடை, பதிவுப் பகுதிகள், சொந்தக் கருத்துப்பெட்டி.. இப்படி. இப்போது Bloggerலேயே அவை பெரும்பாலும் வந்து விட்டாலும், WordPress ஒரு திறவூற்றுச் செயலி என்பதாலும், PHP, MySQL போன்ற நுட்ப அடிப்படையில் அமைந்திருப்பதாலும், தமிழோடு மட்டுமன்றி கணினி நுட்பங்களோடும் விளையாடுவதும் எனது வலைப்பதிவு முயற்சியின் குறிக்கோள்கள் என்பதாலும், இதோ இந்த நான்காவது அடி எடுத்து வைக்கிறேன்.

இந்தச் செயலியின் இன்னொரு நன்மை – இயங்கு பக்கங்கள் (dynamic pages). MovableTypeல் பதிவுகள் ஒவ்வொரு முறையும் நிலைப்பக்கங்களாய்க் (static pages) கட்டப்பட்டுக் காண்பிக்கப் படும். அது சில சமயங்கள் மிகவும் மெதுவாக வேலை செய்தது. கருத்துக்கள்/பின்னூட்டங்கள் இட்டவர்கள் பலமுறை இது வேலை செய்கிறதா என்று தெரியாமல் இரண்டு மூன்று முறைகள் செலுத்தி ஏமாந்த கதையும் உண்டு. அந்த வகையில் WordPressல் பிரச்சினைகள் இருக்காது என்று எண்ணுகிறேன்.

முகவரி சொந்தமானாலும், இன்னும் மூன்றாம் மனிதரின் இடம் தான். இருந்தாலும், இங்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரமாய் மூச்சு வருகிறது. பார்க்கலாம் இங்கேயே இருக்க முடிகிறதா என்று !

Tags: கணிநுட்பம் · பொது

3 responses so far ↓

 • 1 Pari // Oct 7, 2004 at 5:10 am

  அப்பாடா, ஒரு வழியாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது!

  blogspot->Rediff->Blogdrive->kirukkalgal.com இதுதான் நான் கடந்து வந்த பாதை 🙂

 • 2 காசி // Oct 14, 2004 at 8:10 pm

  என்ன எல்லாம் சரியாப்போச்சா?

 • 3 Dondu // Nov 12, 2004 at 12:11 pm

  எல்லாம் சரிதான். ஆனால் பின்னூட்ட எழுத்துக்கள் ஏன் மங்கலாகத் தெரிகின்றன?