பூமணியின் வெக்கை
Mar 26th, 2021 by இரா. செல்வராசு
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு இந்த வாரம் நடுவண் அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. படம் வந்தபோது பார்த்து, அதனால் உந்தப்பட்டு அதன் மூலக்கதையான பூமணியின் வெக்கையைப் படித்து, அதுபற்றிய ஒரு பதிவையும் எழுதிவிட்டு, ஏனோ வெளியிடாமல் இருந்துவிட்டேன். 2020ஆம் ஆண்டின் போக்கு இப்படியாகத் தான் இருந்தது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட இந்தக் காலத்தின் பொறுத்தப்பாட்டை எண்ணி அதனை இப்போது வெளியிட்டு விடலாம் என்று துணிந்துவிட்டேன்.
* * * *
‘கையைத்தான் வெட்ட நினைத்தான். ஆனால் சற்று எட்ட விழுந்ததில் விலா எழும்பில் பாய்ந்து ஆளே காலி’, என்று எடுத்தவுடனேயே உச்சநிலையைத் தொட்டுவிடுவதில் சட்டென நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது கதை. பூமணியின் "வெக்கை" புதினம் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இதுவரை தேடிச் சென்று படிக்க முனைந்ததில்லை.
வெற்றிமாறனும் தனுசும் உருவாக்கியிருக்கும் அசுரனைச் சில காலம் முன்பு பார்த்தது பிடித்திருந்தது. அதன் மூலக் கதையாய் அமைந்திருந்த வெக்கையைப் பெரிதும் சிதைக்காமல் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்னும் கருத்துகள் செவிகளுக்கெட்டவே அதனையும் படிக்கலாமே என்று தோன்றியது. புத்தாண்டில் புதுப்பிக்க நினைக்கும் நூல்வாசிக்கும் பழக்கத்திற்கு இதனை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன்.
வெக்கையின் மூலத்திற்கு நெருக்கமாய் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு திரைக்கதைக்கும் ஓர் இலக்கியப்படைப்புக்குமான களங்கள் வேறு வேறு என்பதை விரைவில் உணர்ந்துகொள்ளலாம். வெவ்வேறு வகைப்பாட்டில் எனக்கு இரண்டும் பிடித்திருந்தது. திரைக்கதையின் தாக்கத்தில் நூலின் கதைப்போக்குத் தொடக்கத்தில் சற்றுத் தளைப்பட்டிருந்தாலும், பூமணியின் எழுத்தின் வீரியம் விரைவில் அதனை உடைத்துத் தனக்கான இருப்பை நிலைநாட்டிவிடுகிறது. முதற்சில பக்கங்களில் சீரோட்டம் சற்றுத் தடைப்படத் தான் செய்தது. சிறுசிறு துண்டாய் இருந்த வாக்கியப் பயன்பாடுகளா? பெரும்பகுதியில் உரையாடலிலேயே நகரும் கதையின் சில செயற்கைத் தனங்களா? அல்லது கரிசற்காட்டு வட்டார வழக்கிற்குப் பழக்கமில்லா அந்நிய உணர்வா? ஆனால், இவையெல்லாம் சில பக்கங்களுக்குத் தான். கதாசிரியனும் விரைவில் அமைந்துவிடுகிறான். நமக்கும் அதனுள் ஆழ்ந்துவிடும் தன்மை அமைந்துவிடுகிறது.