குந்தவை
Jul 13th, 2020 by இரா. செல்வராசு
"குந்தவை என்னும் பெயருக்குக் குறிப்பாக ஏதேனும் பொருள் இருக்கிறதா?", என வினவியிருந்தார் நண்பரொருவர். சோழப்பேரசில் புகழ்வாய்ந்த ஒரு பெண்ணும், மாமன்னன் இராசராசனின் தமக்கையும், வந்தியத்தேவனின் மனைவியுமானவரின் பெயருக்குக் காரணம் என்னவென்று இதுகாரும் நான் சிந்தித்ததில்லை. ஆனால், இப்படியொரு புதிய தேடல் பலவாறாக என்னைச் செலுத்தியதன் விளைவே இப்பதிவு.
குந்தவையின் பெயர்க்காரணம் என்ன? ஒரு பகுபதமாய்க் கொண்டு அப்பெயரைப் பிரித்து எழுதினால் ‘குந்தம்+ஐ’ என்றோ, ‘குந்தம்+அவ்வை’ என்றோ கருத இடம் இருக்கிறது.
தமிழில் ‘ஐ’ என்னும் பெயர்ச்சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். அதனைப் பால்பொதுவினதாக்கித் தலைமைப் பண்புள்ளவர், பெருமைக்குரியவர் என்று கொள்ளலாம். மீண்டும் ஆண்பால் பெயர்விகுதியாக ‘அன்’ சேர்த்து ஓர் ஆணுக்கு ஐ+(ய்)+அன்=ஐயன் என்றாக்குவோம். எனது தாய்தந்தைத் தலைமுறையினர் தமது தந்தையை ஐயன், ஐயா, என்று தான் அழைத்துவந்தனர். ஐயனார், ஐயப்பன் எல்லாம் இதன்வழி வந்ததே என்று விக்கி விளக்கும். இன்றும் மரியாதைக்குரிய ஒருவரை ஐயா என்று தானே அழைக்கிறோம்? ஆனால், குந்தவையின் ஈற்று ஐகாரத்திற்கு இது பொருளன்று. அது, பகுதியாக அன்றி விகுதியாக வருகிறது.
பெண்பாலுக்குரிய பொதுவான பெயர்விகுதிகள் அள், ஆள், இ, ஐ என்பனவாம். தலைமைப்பண்பும், பெருமையும் சிறப்பும் உடைய பெண் ஒருவரை ஐ+(ய்)+ஐ=ஐயை என்று வழங்குகிறோம். ஐயை என்பவர் மாண்பிற்குரிய ஒரு பெண். எனது பள்ளிப்பருவ ஆசிரியைகளை ‘மிஸ்’ என்று அழைத்தது வழக்கமாகிப் போன ஒன்று. இன்றும் நேரில் சந்திக்கும்போது அவர்களை அவ்வாறே பேச்சுவாக்கில் அழைத்தாலும், அவர்களுக்கு எழுதும் போது ஐயை என்று மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன். சார்’ஐயும் மிஸ்’ஐயும் போக்கினால் ஐயனும் ஐயையும் இயல்பாக வந்துவிடுவார்கள். இவன் ஏன் இப்படி விளிக்கிறான் என்று இத்தனை நாளாகக் குழம்பிப்போயிருக்ககூடும் எனது ஐயைகள் இதைப் படிக்க நேரும்போது புரிந்துகொள்வார்கள் 🙂 என்று நம்புகிறேன்.
ஈற்று ஐகாரம் பெண்பால் விகுதியாக இருப்பதைப் பரவலாகப் பல சொற்களில் காணலாம். அக்கை, அம்மை, அன்னை, தங்கை, நங்கை, நடிகை, ஆசிரியை, பாவை, பூவை, அரிவை…இவ்வாறு. அரி என்னும் உரிச்சொல்லுக்கு அழகு என்று பொருள் என்று தொல்காப்பியம் காட்டுகிறது. அழகான பிடர்த்தலையுடைய விலங்கு தான் அரி-மா. ‘அரிவை கூந்தலின் நறுமணம்’ பற்றித் தேடி அஞ்சிறைத் தும்பித் தேனீக்களிடம் பித்துற்றுப் பேசிக்கொண்டிருந்த பாண்டியனின் மனைவி எவ்வளவு அழகானவளாய் இருந்திருக்க வேண்டும்! 🙂 அரி+(வ்)+ஐ என்று உயிர் உயிர்ப் புணர்ச்சியில் இடையில் உடம்படுமெய் வகரம் தோன்ற அரிவை என்றாகும்.
ஆகா! குந்தவைப் பெயராய்வில் தொடங்கி எங்கோ சென்றுவிட்டோம். பாண்டியன் மனைவியிடம் இருந்து நீங்கி மீண்டும் சோழர் தலைவியிடமே வருவோம். இங்கும் குந்தம்+ஐ என்பதில், மகரவீற்றுப் புணர்ச்சியில் ‘ம்’ நீங்க, உடம்படுமெய் ‘வ்’ தோன்ற, குந்தம்+ஐ–>குந்த+ஐ–>குந்த+வ்+ஐ=குந்தவை என்றாகும்.