Feed on
Posts
Comments

பேச்சுத்தமிழில் ‘சுத்தியும் முத்தியும் பாத்தேன்’ என்று சொல்வதை எழுத்தில் எப்படிக் காட்டுவது என்னும் சிக்கல் எழுந்தது எனக்கு. வேறொன்றுமில்லை. புத்தாண்டை முறித்துக் கொண்டு தயங்கியே வந்த முதற்சனிக்கிழமை. என்ன செய்யலாம் என்று ‘சுற்றும் முற்றும்’ (சரிதானா?) பார்த்தேன். பல மாதங்களுக்கு முன்னர் வாங்கி வந்த இராகிமாவு கொஞ்சம் கண்ணில் பட்டது. ஆரோக்கியவாழ்வுக்கு அரிசியைக் குறைக்கச் சொல்கிறார்களே என்று இன்று இராகிக்களி செய்துவிடுவோம் என்று இறங்கிவிட்டேன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவுஇணையத்தில் ஒரு கண்ணம்மாவிடம் -kannammacooks- ஆலோசனை கேட்டுவிட்டுச் செய்து பார்த்தேன். ஆனால் களியோ என்னம்மா செய்வதுபோல் வரவில்லை. இத்தனைக்கும் அம்மாவிடமும் தொலைப்பேசியில் பேசும்போது கேட்டும் வைத்தேன்.

"என்னப்பா? களி சாப்பிடலாம்னு ஆச வந்துருச்சா?"

"இல்லீங்மா. கொஞ்சோம் மாவு இருந்துச்சு. சரி சும்மா செஞ்சு பாக்கலாமேன்னு…", என்று இழுத்தேன்.

"செய்யு. செய்யு. என்ன வேணுமோ செஞ்சு சாப்புடு. ஆனா களிக்கு நல்லாக் கட்டி உழுகாமக் கெளறோணும். திடுப்பு இருக்குதா?"

Continue Reading »

நேற்றுக் காலை ஒரு அலுவ இடைவெளியில் தேநீர் கொள்ளச் சென்றபோது அவர் பதற்றமாய்த் தன் பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். சக ஊழியர்.

“எப்படி இருக்கீங்க”, வழக்கமான முகமன் உரைத்தேன்.

முகத்தில் கவலையைப் பார்க்க முடிந்தது.  “என் மகளோடு பேச முடியுமாவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. பூட்டுநிலை அறிவிச்சிருக்காங்கலாம். துப்பாக்கியோடு ஒரு ஆள் அந்தப் பகுதியில் சுத்திக்கிட்டிருக்காராம்”.

Image from Internet: Fairuse

“அப்படியா? அப்ப எனக்கும் வந்திருக்கணுமே”, என்று அவசரமாய் எனது பேசியை எடுத்துப் பார்த்தேன். அவரது மகள் பயிலும் அதே பள்ளியில் தான் எனது மகளும் பயின்று வருகிறாள். ஆம். எனக்கும் ஒரு மணிநேரம் முன்பு அந்தச் செய்தி வந்திருந்தது. அலுவல் மிகுதியில் பார்க்காமல் விட்டிருந்தேன். ஆனால், அவரைப் போல ஏனோ எனக்குப் பதற்றம் ஏற்படவில்லை. ஏதோ ஒரு உளமறுப்பு. அப்படி ஏதும் தீயூழ் நிகழ்வுகள் இங்கு ஏற்படா என்று குருட்டு நம்பிக்கை. Continue Reading »

ஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது.

TN GO thamiz thaai vaazththuதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது  வெளிப்படையான  சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது அவையின் மரபும், மரியாதையும் ஆகும். காட்டவேண்டிய பண்பும் பணிவுமாம்.  எந்த ஒன்றிலும் ஒரு நன்மை இருக்கிறது என்றாற்போல, இதனால் தான் 1970ல் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றைப் பற்றியும் இன்னும் விரிவாக அறிந்து கொள்ள நேர்ந்தது. எல்லா அரசு, ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவன நிகழ்வுகளிலும் ‘தொடக்கத்திலேயே’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்வது.

மனோன்மணீயப் பாட்டில், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன்’ என்னும் வரியுட்படச் சில வரிகளை நீக்கிச் செய்தது தான் இந்த வாழ்த்துப்பாடல் என்பதை அறிந்திருந்தாலும், அது பற்றிய சில வரலாற்றுச் செய்திகளையும் இது வெளிக்கொணர்ந்திருக்கிறது. விகடனில் கி.வா.ச எதிர்த்து எழுதியதும், பிறகு, மு.வ, அப்பாத்துரையார், ம.பொ.சி போன்றோர் ஆதரித்தும் வெளியிட்ட கருத்துகள் பற்றியும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி வழியாகப் படிக்க நேர்ந்தது. தமிழ்மொழியின் சிறப்பும் சீரிளமையும் குறித்துப் பாடவேண்டிய இடத்தில் வேற்றொருமொழியின் அழிவுபற்றிப் பேசவேண்டாமே என்னும் நல்லியல்பில் அவ்வரிகளை விடுத்துத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டதும் நல்லதே. கடந்த சுமார் ஐம்பதாண்டுகளாக ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கித் தமிழணங்கை நாம் வாழ்த்தியே வந்திருக்கிறோம்.

Continue Reading »

andal garland

கோதை நாச்சியார் ஆண்டாள் குறித்துக் கவிஞர் வைரமுத்து எழுதியதன்பால் எழுந்த சர்ச்சை என்னைப்பொருத்தவரை அவசியமில்லாதது. ஆனால், இப்படியொரு சர்ச்சை எழுந்த காரணத்தால் தான் இந்தக் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதோடு, ஆண்டாள், ஆழ்வார், திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப் பலதும் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆண்டாளை அவதூறாகப் பேசிவிட்டார் என்று அடிக்கும் தலைக்குமாய்க் குதிக்கும் பலர் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தும்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்பது தான் சோகம். அப்படியே படிக்க முனைந்திருந்தாலும் அது எவ்வளவு தூரம் அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்பதும் ஐயப்பாடே.

ஒரு புறம் இந்துமதவெறியர்கள் (அறிந்தே தான் கடுஞ்சொல்லைப் பயன்படுத்துகிறேன்) இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வன்முறைதூண்டும் எதிர்வினையை ஆற்றுகின்றனர். இது தான் சமயம் என்று கருத்துரிமையை நெரிப்பது, பிற மதத்தினரை ஏசுவது, கையை காலை வெட்டுவது, நாக்கை அறுப்பது என்று தீயைத் தூண்டிவிட்டு அதற்கு நெய்யும் வார்க்கிறார்கள்.

நித்யானந்தித்த சீடர்பெண்கள் வாயைத் திறந்து கக்கும் அசிங்கங்களைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவர்களுக்காக மனம் வலிக்கிறது. அறிவுசார் நிலமாக, சகிப்புத்தன்மை வாய்ந்த நிலமாக, சுதந்திரமாகப் பல்வேறு கருத்துகளையும் பகிரக்கூடிய நிலமாக அல்லாமல் தமிழகத்தை இந்த மூடர்கூடம் பின்னுக்குத் தள்ளுகிறதே என்னும் ஆதங்கமும் எனக்குண்டு.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

இன்னொரு புறம், அறிவுசார் சமூகமானது, வைரமுத்து எழுதியதில் அவதூறு இல்லை என்றாலும் அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்கிறது. அல்லது, இதை எழுத, பேச, இது இடமும் காலமும் அல்ல என்று போதிக்கிறது. வைரமுத்து என்னும் தனிநபரின் மீது கொண்ட முன்முடிபுகளால் எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துகளை வைக்கிறது. இந்த எழுத்துக்கு அவரது ஆணாதிக்கத் திமிர் என்றோ, தெரியாத ஒன்று பற்றி இந்தாள் எதற்கு எழுத வேண்டும் என்றோ அவர் மீது விமர்சனங்களைச் சுமத்துகிறது. பாப்கார்ன்/சோளப்பொறி எழுத்து அவரது என்று எள்ளிநகையாடுகிறது. செயமோகன் போன்றவர்களை வைத்து இது வைரமுத்துவுக்கான இடம் அல்ல என்று தகுதியைப் பற்றிப் பேசுகிறது. அவருக்கு அவ்வளவாக இலக்கிய அறிவு இல்லை என்றும் கூட அளந்து பார்க்கிறது.

Continue Reading »

ஒபாமாவை  ஒரு நல்ல பேச்சாளராக எண்ணியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட என்பதை இப்போது உணர்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபராக எட்டாண்டுகள் முடிந்து இன்று ஆட்சியில் இருந்து கீழிறங்கிச் செல்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் வலையில் சுற்றிக்கொண்டிருந்த பழைய காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது.  இல்லரி கிளிண்டனுக்காக வாக்குக் கேட்கும் கூட்டமொன்றில், தான் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கதையைச் சுவைபடக் கூறுகிறார். Fired up? Ready to go! என்னும் போர்க்குரலைத் தன் மந்திரமாகக் கொண்டதன் பின்னணிக் கதை.

சோவென்று மழைகொட்டிய நாளொன்றில், உடலும் உள்ளமும் தொய்வுற்றிருக்கையில் தன் போட்டிகு ஆதரவு தேடி எங்கோ தென் கரோலினாக் கிராமம் ஒன்றிற்கு பயணித்து, அங்கு இருபது பேர் கொண்ட கூட்டம் ஒன்றை மட்டும் சந்தித்து அயர்வோடு இருந்த நேரத்தில் அக்கூட்டத்தில் இருந்து நடுத்தர வயதுப் பெண்ணொருவர் இவ்வாறு திரும்பத் திரும்ப, Fired up? Ready to go! என்று தானும் சொல்லிக் கூட்டத்தினரையும் சொல்ல வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தானும் உத்வேகம் கொண்டதைச் சுவைபட விவரிப்பார்.

இது ஒரு நல்ல கதை தான். அதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் இக்கதையை மீண்டும் மீண்டும் கூறுகிறார் போலும். Fired up? Ready to go! என்று தேடினால் இதையே முன்னொரு முறையும் எட்டாண்டுகள் முன்னர் சொன்ன விழியம் ஒன்றையும் பார்த்தேன். சின்ன சின்ன விவரங்கள் மாறி இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலும் அக்கதையின் உணர்ச்சிகளும், அதை விரிவாகச் சொல்லுமுறையும், பெரிதும் மாறவில்லை. மீண்டும் கேட்கவைக்கும் ஈர்ப்பு அதில் கலந்திருக்கிறது. எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் இதையே சொல்லியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் இதை வைத்து சில சித்திரப் பட விழியங்களும் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த எட்டாண்டில் இடையில் ஒபாமாவின் செயல்பாட்டில் சில இடங்களில் அதிருப்தி அடைந்திருந்தேன் என்றாலும் மொத்தத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்திருந்தார் என்பதில் ஐயமில்லை.  கூட்டத்தினரை ஈர்க்கும் ஓருத்தியாக இக்கதையைப் பயன்படுத்திக் கொண்டாலும் அதன் சிறப்புக் கருதி அதை மன்னித்துவிடலாம். இக்கதையின் சாரமாக அவர் சொல்வதாய் நான் எடுத்துக் கொள்வது, ‘எவ்வாறு ஓர் ஒற்றைக்குரல் அந்த அறையை மாற்றும்; ஊரை மாற்றும்; சமுதாயத்தை, உலகத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தது’, என்பதைத் தான். 

* * *

கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் இளையோர் தன்னெழுச்சியைக் கண்டு குதூகலம் அடைந்து கிடக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணொளிகளைக் கண்டும், வலையில் மேய்ந்து படித்தும் உணர்ச்சி வயப்பட்டும், யாருமறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டும் மெய் சிலிர்த்துக் கிடக்கிறேன்.

இது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் என்றாலும் இது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மட்டுமல்ல. இது ஒரு தமிழருரிமைக் குரல். இந்தியத் தேசியத்தில் தனக்கான மதிப்பையும் மரியாதையையும் கோரும் குரல். பன்னெடுங்காலமாகத் தமிழர் ஊட்டி வந்த உணர்வுகளின் விளைவுதான் இது.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! "
-பாரதிதாசன்.

சங்ககாலந்தொட்டு இதுநாட்சமூகவலைக் குறிப்புகள் வரை தூண்டப்பெற்ற உணர்ச்சிகளும், வைக்கப்பட்ட கருத்துகளும், பொதுப்புத்தியில் உண்டாக்கிய தெளிவின் விளைவுதான். அரசியல் இல்லை எனலாம்; ஆனால் இதில் அரசியல் உண்டு. சுய உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு ஒற்றைக் குரலும் அரசியல் கலந்ததே.

சிறுகுழந்தை, பள்ளிச்சிறார் முதற்கொண்டு, இளைஞர், முதியோர் என்று ஒவ்வொரு குரலிலும் தெறித்திடும் உணர்ச்சியில் திளைத்திருந்த எனக்கு(ம்) இந்தத் தங்கையின் குரலும் முகத்தின் உற்சாகமும் தொற்றிக் கொள்வதாய் இருக்கிறது. புன்முறுவலோடு பார்த்துக் களிப்புக்கொள்ள வைக்கிறது. அதனால் நானும் ‘உள்ளே வந்து கத்துகிறேன்’.

புதிய தோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்

– பாரதிதாசன்

« Newer Posts - Older Posts »