Feed on
Posts
Comments

சென்றவாரம் சிங்கப்பூரில் இருந்தபோது, குழு விருந்து ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கட்டுறுத்தப் பொறிஞர் (control engineers) கூட்டத்தாரின் நற்செயல்களைப் பாராட்டி மேலாளர் கூட்டம் வழங்கிய மதிய உணவு. ஒரு கூட்டுவேலைக்காக வந்திருந்த என்னையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டார்கள்.

கிழக்காசிய உணவை அள்ளுகுச்சிகளின் (chopsticks) வழியே உண்ணும் கலை இன்னும் கைவரப்பெற்றிருக்கவில்லை என்பதால், நான் பெரும்பாலும் எளிதாக உண்ணக்கூடிய வறுசாதம் போன்றவற்றையே தெரிவு செய்வதுண்டு. நெளியுணவு முதலியவற்றை முட்கரண்டிவழி உண்பதும்கூடச் சிக்கலான ஒன்றே. ஆனாலும் வலியவிதி ‘இங்கே என்ன நல்லா இருக்கும்’ என்று என்னை அருகிருந்தவரைக் கேட்கவைத்துவிட்டது. அவரும் சரியாக ஒரு நெளியுணவும் கோழிச்சாறும் எனக் கைகாட்டிவிட்டார். ‘ஆகா’வென அதையும் ஒரு துணிவுடன் ஏற்றுக்கொண்டேன். ‘முயற்சியில் மனம் தளரா விக்கிரமாதித்தா, துச்சமிது துச்சமிது’ எனக் களத்தில் இறங்கினேன்.

அடுத்தவர் உணவு வரும்வரை காத்திருக்கையில், கோழிச்சாற்றில் ஊறி உணவுச்சரடுகள் ஒன்றுடனொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க நண்பரின் யோசனைப்படி அள்ளுகுச்சிகொண்டு விட்டுவிட்டு அளைந்துகொண்டிருந்தேன். பிறகு அப்படியே வைத்துவிட்டேன். ஏதோ சுவையாரமாய்ப் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென நிறுத்தி என்னைப்பார்த்து அவசரமாய்த் தோளைத்தட்டி, படக்கென்று குண்டாவினுள் கிடந்த அள்ளுகுச்சிகளை வெளியே எடுத்துக் கிடைமட்டமாக வைத்து ஏதோ சொல்ல, சுற்றியிருந்தோர் மிதமாகச்சிரித்துவைத்தனர். ‘என்ன என்ன?’ எனக்கேட்ட என்னிடம் பிறகு சொல்வதாகச் சொன்னதில் ஏதோ பண்பாட்டுக்கீறலை (cultural boo boo) உண்டாக்கிவிட்டேன் போலும் என உணர்ந்துகொண்டேன். அறியாமை கலந்த ஒரு பெருமிதத்தோடு மெதுவாகச் சிரித்தும் வைத்தேன்.

சிறிதுநேரம் கழித்து விளக்கினார் நண்பர். நீத்தார்க்குப் படையல் போன்ற ஒரு சடங்கில் யாருமற்ற மேசையில் இவ்வாறு ஒரு உணவில் உள்ளே அள்ளுகுச்சியைப் போட்டுவைத்துவிடுவார்களாம். அதனால் வேறெப்போதும் அவ்வாறு செய்யக்கூடாதாம். நல்லது. இதுவும் எதுவும் ஒரு கற்கும் வாய்ப்பே!

பிறகொருநேரம் ஊரிலிருக்கும் மனையாளை அழைத்து ‘இப்படியிப்படியாச்சு…இப்படியிப்படியாம்’ என்று கதை சொன்னால், “ஆமா. இது தெரியாதா? இதையெல்லாம் குவோரால படிச்சுட்டுப் போகலையா?” என்கிறார்.

இட்டவித்த கோழிப் போண்டா (steamed chicken dumpling)


பூண்டுக்கீரை (garlic spinach)

பி.கு.: படங்கள் வேறொரு நேரம் எடுக்கப்பட்டவை.

தமிழில் உயிரெழுத்துகள் எல்லாம் ஒரு வட்டச்சுருளில் தொடங்குவதன் சிறப்பை முகநூலில் குறித்திருந்தார் கவிஞர் மகுடேசுவரன்.

அ  ஆ  இ  ஈ  உ  ஊ  எ  ஏ  ஐ  ஒ  ஓ  ஔ

எல்லா எழுத்துகளையும் அந்த வட்டச்சுருளில் தொடங்கித்தான் எழுதுகிறோம் என்பதில் ஏதேனும் ஒரு செய்தியும் இருக்கலாம் என்பது சுவையான ஒரு தகவல்.

நிற்க. இதிலே ஈகாரம் மட்டும் வேறுபட்டு இருக்கிறதே என்றால், முன்னர் இதனையும் இகரம் போன்றே எழுதி மேலே சுழித்துவிட்டு ஈகாரமாக்கி எழுதும் வழக்கம் இருந்தது என்று குறிப்பிட்டு அதனைக் கைப்படம் இட்டும் காட்டியிருந்தார்.

இதைப் படித்தவுடன் முன்னர் இணைய மேய்ச்சலில் ஒருமுறை இதனைக் கண்ட நினைவு வந்தது.  இன்று அதனைத் தேடிப் போனதில், 1842-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட “பெயரகராதி”  – A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society என்னும் நூலில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பிடிக்க முடிந்தது.

பழைய ஈகார எழுதுமுறை

இதில் சுவையான இன்னொரு விசயம் என்னவென்றால் இதிலேயே தற்போதைய ஈகார வடிவமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் (சிவப்பு வட்டத்தினுள் காண்க).

தற்கால ஈகார வடிவமும் பழகிப்போன ஒன்றென்பதால் அதனை மாற்ற அவசியமில்லை.  பழைய முறையில் எழுதினால் படிக்கத் தடுமாற்றமாக இருக்கும் என்றும் நினைத்தேன். ஆனால் மேலுள்ள அகராதியின் ஈகாரங்கொண்ட சொற்களைப் படிப்பதில் எந்தத் தடங்கலும் உண்டாகவில்லை என்பதும் ஆச்சரியமளிக்கிறது.  வரலாற்றுப் பூர்வமாக இவ்வெழுத்து (மட்டும்) எதனால் எப்போது இவ்வடிவம் பெற்றது என்பதை அறிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

திருமதி. வைதேகி எர்பர்ட்டு அம்மையாரின் சங்கத்தமிழ்க் கலந்துரையாடல் இன்றைய பொழுதை மிகவும் அருமையாக ஆக்கித் தந்திருந்தது. அவரை இன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த இயூசுட்டன் பெருநகரத்துத் தமிழார்வலர்களுக்கு மிக்க நன்றி.

வைதேகி அம்மையாரின் குரலில் இருக்கும் ஆர்வமும், காட்சிகளை விவரிக்கும் உடல்மொழியும், சுவைமிகுந்த விவரங்களும், நேரம்போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்க வைத்தன. அவரிடம் சொன்னால், ‘நான் எதுவும் சொல்லலைங்க; எல்லாம் இதிலேயே இருக்கு; இதன் தொடர்ச்சி தான் இன்றுவரை எல்லாமே’ என்பதாகத் தான் பதிலிறுப்பார் என்று தோன்றுகிறது.

அவர் சொன்ன செய்திகளில் சில:

 • சங்க காலத்தில் சாதி இல்லை. தமிழர்களிடையே மதப்பிரிவினைகள் இல்லை. ஏன், கொற்றவை, முருகன் பற்றிய சிறுகுறிப்புகள் தவிரக் கடவுள் என்பதே கூட இல்லை. இறந்துபட்ட முன்னோர் வழிபாடு தான் இருந்தது.
 • சங்க காலப் புலவர்களுள் ~15% தான் பெண்கள் என்றாலும், பெரும்பாலான பாடல்கள் (75%) அகத்திணை பற்றியவையே; ஆண்பாற்புலவர்களாலும் அவ்வளவு நுணுக்கமாகப் பெண்ணுணர்வையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பெரும் ஆச்சரியமான ஒன்று.
 • பாணர்களும் விறலிகளும் தமிழுக்குப் பெருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் தமிழ் இசை இல்லை, ஏன் தமிழே கூட இல்லை என்றாகியிருக்கலாம் (என்று முனைவர் இராசம் கூற்றாகக் கூறினார்).
 • குறுநில மன்னர்கள் மக்களோடு மக்களாய் இருந்து அன்பு கொண்டு வழிப்படுத்தினர் என்றும் மூவேந்தப் பேரரசுகள் அவர்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர். தமிழ்ப்புலவர்கள் அம்மன்னர்களோடு நெருக்கம் கொண்டிருந்தனர். அவர்களை இடித்துரைக்கும் வாய்ப்பும் கொண்டிருந்தனர் (“நான் சொல்றதச் சொல்லீட்டன். அதுக்கப்புறம் உன் விருப்பப்படி செஞ்சுக்கோ”, என்று அவர்களால் சொல்ல முடிந்தது).
 • வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அன்றும் எல்லாத் திசைகளிலும் இருந்து வந்த சமயங்கள், அவற்றின் தொன்மங்கள், இனக்குழுக்கள், அரசுகள் என்று எல்லாவற்றிலும் இருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. இவை அனைத்தையும் மீறி இன்றும் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதே அதன் பெருஞ்சாதனை என்றும், இப்படியானதொரு மொழியின் பெருமையை அறியாமல் நாம் அலட்சியமாய் இருக்கிறோம் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

அனைவரும் இவற்றைப் படிக்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்திய அவர் ஆவலைத் தூண்டும் பல பாடல்களையும் அவற்றின் பொழிப்புரையையும் மொழியாக்கத்தையும் வழங்கினார். ஓரிரு நாள் பயிற்சியாகப் பயிலரங்கமாக நடத்திக் கொடுக்க இசைவு தெரிவித்தார். அவரது ஆர்வம் என்னுடைய அரைகுறை ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவே படிக்கவேண்டியவற்றின் பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். சங்கத் தமிழ்ப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஆர்வத்தையும் கூட்டிக் கொள்கிறேன்.

(ஏற்கனவே டிசி பகுதியில் நடந்த பயிலரங்கைப் பயணத்தின் காரணமாகத் தவற விட்டவனுக்கு இன்னுமோர் வாய்ப்பாக இது அமையும்).

சாவடி என்றால் தெரியும். காவடி… தெரியும். ‘டாவடி’ என்றால் கூட என்னவென்று சொல்லிவிடலாம்.  ஆனால், “தாவடி” என்றால் என்ன சொல் பார்க்கலாம் என்று நண்பர் மடக்கியபோது சற்றே அயர்ந்துதான் போனேன்.

தமிழிற் கொஞ்சம் ஆர்வம்/புலமை உண்டு எனப் படம் காட்டிக்கொண்டிருப்போனைச் சோதிக்கவென்று இருக்கும் இக்குழு அவ்வப்போது இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்பதுண்டு. அரைகுறையாகத் தெரிந்தாலும் சரியான விடை பகரவேண்டுமே என்று இன்னும் கொஞ்சம் ஆராய்வதும், அதில் கிளை பிரிந்து போய் வேறு சில தெரிந்து கொள்வதுமாய் இருப்பதால் எனக்கும் இது பிடித்த ஓர் ஆட்டம் தான்.

ஆனால் ‘தாவடி’ என்னும் ஒரு சொல்லைக் கேட்டதே இல்லையாதலால், அதெல்லாம் தமிழ்ச்சொல்லாய் இருக்காது என்றோ, தட்டுப்பிழை என்றோ கூற எத்தனிக்கையில், “பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருக்கிறார், வீரர்கள் தங்கும் பாசறை போன்ற ஒன்று” என்று தான் விசாரித்து அறிந்துகொண்டதையும் சொன்னார்.

நான் தேடிப் பார்த்தவரையில் ‘தாவடி’ என்று இலங்கையில் ஓர் ஊர் இருப்பது போல் தெரிகிறது. அருள்மொழிவர்மன் இலங்கையில் இருக்கும்போது தான் இந்தப் பேச்சு வருகிறது என்பதால் அதனோடு ஏதேனும் தொடர்பிருக்குமோ எனத் தோன்றியது. ஆனால், பல அகர முதலிகளும் போர், பயணம் அல்லது தாண்டுகால் (stride) என்னும் பொருள்களையே முன் வைக்கின்றன.

கல்கியின் பயன்பாட்டிலோ இப்பொருள்கள் பொருந்துவதாகத் தெரியவில்லை.

 • தாவடி போட்டுக் கொண்டு தங்கியிருந்தோம்
 • தாவடிக்குச் சமீபத்தில் ஒரு குரல்
 • தாவடியின் ஓரத்தில் இருந்த வீரர்கள்
 • தாவடியைச் சுற்றி
 • தாவடியைக் கிளப்பிக் கொண்டு
 • தாவடியைப் பெயர்த்துக் கொண்டு
 • தாவடிக்கு அருகில்

போர்ச்சூழல், போர்வீரர் குறித்த பாவனை என்றாலும், நேரடியாக, போர், பயணம் போன்ற அகரமுதலிப் பொருள்களில் இவை வழங்கப்பெறவில்லை. மேற்சொன்ன பயன்பாடுகளைப் பார்க்கும் போது, போர்வீரர்கள் கூடாரம்/கொட்டகை அமைத்துத் தங்கியிருக்கும் தற்காலிகப் பாசறை என்னும் பொருள் தான் தெரிகிறது.

பொன்னியின் செல்வனிலும் வேறு எங்கும் மீண்டும் இச்சொல் ஆளப்படவில்லை. வேறு கூகுள் தேடலிலும் இச்சொல் புழங்கிய விவரங்கள் பிடிபடவில்லை.

பல கேள்விகள் எழுகின்றன.

 • எந்த அகரமுதலிகளிலும் காணப் பெறாத பொருளில் கல்கி தாவடி என்னும் சொல்லைக் கையாண்டிருப்பது எங்கனம்?
 • கல்கியே மீண்டும் வேறு எங்குமோ, வேறு யாரும் பிற இடங்களிலோ இது போன்ற சொல்லையும் பொருளையும் காட்டியதில்லையே, ஏன்?
 • தாவடி என்ற சொல்லை அறிந்தவர்கள் உண்டா? மேற்காட்டிய இரண்டு வகைப் பொருளில் ஏதேனும் ஒன்றைக் கண்டிருந்தாலும் அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலுமா?

(தாவடியாட்டம் தாவடியாட்டம் தாவடீ…யாட்டம் என்று தான் எனக்குப் பாட்டுத் தோன்றுகிறது Smile  ).

tawiki10

தமிழ் சார்ந்த ஈடுபாடுகள் பலவற்றுள் மனநிறைவு தரும் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவினைச் சென்னையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நண்பர்கள். எல்லோருக்கும் ஒரு பயனராகவும் பங்களிப்பாளராகவும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய கூட்டுழைப்பாளர்கள் பலரை நான் நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடைய பெயரையோ, படத்தையோ, விக்கித்தொடர்பு பற்றிய குறிப்பையோ கண்டால், ‘அட இவங்க நம்மாளு’ என்று ஒரு சொந்தம் கொண்டாடவும் தோன்றுகிறது.

பத்தாண்டுகளாகவும் நான் ஒரு பயனராக இவ்விக்கிப்பீடியாவினை அறிவேன் என்றாலும், முதல் மூன்றாண்டுகள் எழுத்துப் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாகவும் வாசகனாகவும் இருந்து வந்திருக்கிறேன்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »