• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகள்
இயூசுட்டனில் சங்கத்தமிழ்க் கலந்துரையாடல் »

தாவடி

Oct 14th, 2014 by இரா. செல்வராசு

சாவடி என்றால் தெரியும். காவடி… தெரியும். ‘டாவடி’ என்றால் கூட என்னவென்று சொல்லிவிடலாம்.  ஆனால், “தாவடி” என்றால் என்ன சொல் பார்க்கலாம் என்று நண்பர் மடக்கியபோது சற்றே அயர்ந்துதான் போனேன்.

தமிழிற் கொஞ்சம் ஆர்வம்/புலமை உண்டு எனப் படம் காட்டிக்கொண்டிருப்போனைச் சோதிக்கவென்று இருக்கும் இக்குழு அவ்வப்போது இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்பதுண்டு. அரைகுறையாகத் தெரிந்தாலும் சரியான விடை பகரவேண்டுமே என்று இன்னும் கொஞ்சம் ஆராய்வதும், அதில் கிளை பிரிந்து போய் வேறு சில தெரிந்து கொள்வதுமாய் இருப்பதால் எனக்கும் இது பிடித்த ஓர் ஆட்டம் தான்.

ஆனால் ‘தாவடி’ என்னும் ஒரு சொல்லைக் கேட்டதே இல்லையாதலால், அதெல்லாம் தமிழ்ச்சொல்லாய் இருக்காது என்றோ, தட்டுப்பிழை என்றோ கூற எத்தனிக்கையில், “பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருக்கிறார், வீரர்கள் தங்கும் பாசறை போன்ற ஒன்று” என்று தான் விசாரித்து அறிந்துகொண்டதையும் சொன்னார்.

நான் தேடிப் பார்த்தவரையில் ‘தாவடி’ என்று இலங்கையில் ஓர் ஊர் இருப்பது போல் தெரிகிறது. அருள்மொழிவர்மன் இலங்கையில் இருக்கும்போது தான் இந்தப் பேச்சு வருகிறது என்பதால் அதனோடு ஏதேனும் தொடர்பிருக்குமோ எனத் தோன்றியது. ஆனால், பல அகர முதலிகளும் போர், பயணம் அல்லது தாண்டுகால் (stride) என்னும் பொருள்களையே முன் வைக்கின்றன.

கல்கியின் பயன்பாட்டிலோ இப்பொருள்கள் பொருந்துவதாகத் தெரியவில்லை.

  • தாவடி போட்டுக் கொண்டு தங்கியிருந்தோம்
  • தாவடிக்குச் சமீபத்தில் ஒரு குரல்
  • தாவடியின் ஓரத்தில் இருந்த வீரர்கள்
  • தாவடியைச் சுற்றி
  • தாவடியைக் கிளப்பிக் கொண்டு
  • தாவடியைப் பெயர்த்துக் கொண்டு
  • தாவடிக்கு அருகில்

போர்ச்சூழல், போர்வீரர் குறித்த பாவனை என்றாலும், நேரடியாக, போர், பயணம் போன்ற அகரமுதலிப் பொருள்களில் இவை வழங்கப்பெறவில்லை. மேற்சொன்ன பயன்பாடுகளைப் பார்க்கும் போது, போர்வீரர்கள் கூடாரம்/கொட்டகை அமைத்துத் தங்கியிருக்கும் தற்காலிகப் பாசறை என்னும் பொருள் தான் தெரிகிறது.

பொன்னியின் செல்வனிலும் வேறு எங்கும் மீண்டும் இச்சொல் ஆளப்படவில்லை. வேறு கூகுள் தேடலிலும் இச்சொல் புழங்கிய விவரங்கள் பிடிபடவில்லை.

பல கேள்விகள் எழுகின்றன.

  • எந்த அகரமுதலிகளிலும் காணப் பெறாத பொருளில் கல்கி தாவடி என்னும் சொல்லைக் கையாண்டிருப்பது எங்கனம்?
  • கல்கியே மீண்டும் வேறு எங்குமோ, வேறு யாரும் பிற இடங்களிலோ இது போன்ற சொல்லையும் பொருளையும் காட்டியதில்லையே, ஏன்?
  • தாவடி என்ற சொல்லை அறிந்தவர்கள் உண்டா? மேற்காட்டிய இரண்டு வகைப் பொருளில் ஏதேனும் ஒன்றைக் கண்டிருந்தாலும் அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலுமா?

(தாவடியாட்டம் தாவடியாட்டம் தாவடீ…யாட்டம் என்று தான் எனக்குப் பாட்டுத் தோன்றுகிறது Smile  ).

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in இலக்கியம், தமிழ்

5 Responses to “தாவடி”

  1. on 15 Oct 2014 at 8:23 am1Bala Vigneswaran

    சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை என்பன யாஜ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஊர்கள்.

    அப்படியானால், இப்பாடல் சொல்வது என்ன?

    “முடிவிலாதுறை சுன்னாகத்தான்
    முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
    அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
    ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
    உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
    உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
    இடைவிடாதனையென்று பலாலிகண்
    சோரவந்தனள் ஓர் இளவாலையே”

    பார்க்க: http://ta.wikipedia.org/wiki/சிலேடை

  2. on 15 Oct 2014 at 9:09 pm2இரா. செல்வராசு

    முகநூல் சொல்லாய்வுக் குழு வழியாக வந்த சில தொடர்பான கருத்துகள்: (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)

    Sri Sritharan:
    Thaavadi – War camp (Thirumoolar 181); Movement of an invading military (Tamil, inscriptions, SII, vii, 863); Deployment of invading military (Tamil, inscription, 1068 CE, SII, iii, 30); Journey (Tamil, Jaffna Dictionary, MTL); Battle, fight, skirmish (Tamil, Jaffna Dictionary, MTL); Thaavadi-poathal: Making a military expedition (Tamil, MTL, Nannool 51, Mayilainaathar commentary); Thaavadith-thoa’ni: Boat going near the shore to cut out the vessels of an enemy (Tamil, Winslow, MTL); Thaavadam: Lodging, place of residence, equivalent to Thaava’lam (Tamil, Jaffna Dictionary, MTL); Thaavaadi: A ruined tank, the fields of which are cultivated by people who do not live there, but travel from other places (Tamil, Vanni usage, Mayilangkoodal P. Nadarajan, 2012, p. 59) http://tamilnet.com/art.html?catid=98&artid=37050

    செ. இரா. செல்வக்குமார்:
    சிறீதரன் அவர்களின் தகவல் நறுக்கென்று விளக்குகின்றது. தொல்காப்பியத்தில் தாவே வலியும் வருத்தமும் என்று ஓரு நூற்பா உண்டு. தா என்றால் வலியும் வருத்தமும். தாவு தணிய என்றால் நம்மிடம் இருக்கும் வலிமை போகும் அளவுக்கும் பாடுபடுதல் என்று பொருள். எனவே தாவடி என்பது இடர்ப்பாடு மிகுந்த சுழல் உள்ள இடம் என்பது போல பொருள் தரும் என்பது வியப்பாக இல்லை. தாவடி என்றால், போர் நிகழிடக் கூடாரம் என்பது போன்ற பொருள் தெளிவாக வருகின்றது.

    Ramasamy Selvaraj:
    தாவு தீர்ந்தது/தீர்ந்துவிடும்போலிருக்கிறது என்று முழுப்பொருள் உணராமலே பயன்படுத்தி வந்திருக்கிறேன். தாவு என்றால் வலிமை என்று நீங்கள் சுட்டும்போது தாவு தீர்வது என்றால் வலிமை குறைவது என்று பொருள் அழகாக விளங்குகிறது. தமிழ்ச்சொற்களின் ஆழம் அறிவதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது. 🙂

    திருவள்ளுவன் இலக்குவனார்:
    செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் ‘தாவடி’ என்ற இடத்தில் உரிய பொருள்களுடன் ‘தாவளம் காண்க’ என்றும் இருக்கும். ‘தாவளம்’ என்பது ‘தங்குமிடம்’ என அகராதிகளில் குறிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். எனவே, ‘தாவளம்’ என்பதும் ‘தாவடி’ என மாறியுள்ளது. சிலர் அறியாமல் ஒரு சொல்லைத் தவறான பயன்பாட்டில் கையாண்டிருப்பர். அத்தகைய நேர்வுகளில் தவறான பயன்பாடு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  3. on 04 Mar 2015 at 2:07 pm3P.CHELLAMUTHU

    செல்வராஜ் அவர்களே! பொன்னியின் செல்வனில் படித்தபோது இது பற்றிய எண்ணம் எனக்கும் எழுந்தது. இப்போது மாட்டுத்தாவணி என்ற சொல்லைக்கேள்விப்பட்டிருப்பீர்கள். தாவடிதான் தாவணியாக மாறிவிட்டதோ? என்று எண்ணினேன். இப்போது தாவணி என்பது மட்டுச்சந்தை என்ற பொருளில் வருவதைக்காண்கிறோம். ஆனல், மாட்டுத்தாவணிக்குப்போவோர் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் தங்கள் தாவணியென்றே அழைக்கின்றனர். ஆக இது அக்காலதில் போர் வீரர்கள் தங்கும் இடமாகவே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

  4. on 15 Jan 2016 at 7:53 am4visvanathan

    கந்தன் அலங்காரத்தில் “தாவடி” என்ற சொல் வருகிறது. “தாவும் +அடி” என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வருகிறது. முழுப் பாடலும் இதோ:

    தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
    பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
    மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
    சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.

  5. on 15 Jan 2016 at 7:54 am5visvanathan

    கந்தர் அலங்காரத்தில் “தாவடி” என்ற சொல் வருகிறது. “தாவும் +அடி” என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வருகிறது. முழுப் பாடலும் இதோ:

    தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
    பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
    மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
    சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2023 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook