தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகள்
Oct 1st, 2013 by இரா. செல்வராசு
தமிழ் சார்ந்த ஈடுபாடுகள் பலவற்றுள் மனநிறைவு தரும் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவினைச் சென்னையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நண்பர்கள். எல்லோருக்கும் ஒரு பயனராகவும் பங்களிப்பாளராகவும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய கூட்டுழைப்பாளர்கள் பலரை நான் நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடைய பெயரையோ, படத்தையோ, விக்கித்தொடர்பு பற்றிய குறிப்பையோ கண்டால், ‘அட இவங்க நம்மாளு’ என்று ஒரு சொந்தம் கொண்டாடவும் தோன்றுகிறது.
பத்தாண்டுகளாகவும் நான் ஒரு பயனராக இவ்விக்கிப்பீடியாவினை அறிவேன் என்றாலும், முதல் மூன்றாண்டுகள் எழுத்துப் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாகவும் வாசகனாகவும் இருந்து வந்திருக்கிறேன்.
தற்போது எழுதத் தொடங்கி ஏழாண்டு காலம் ஆனாலும் என்னுடைய பங்களிப்பு சிறிது தான். இன்றைய தேதியில் தமிழ் விக்கியில் சுமார் 56000 கட்டுரைகளும், நான் தொடங்கியவை 56-ஆகவும் இருப்பது தற்செயலானது தானே தவிர, ‘ஆயிரத்தில் ஒருவனடா நான்’ என்று பாடத் திட்டமிட்டுச் செய்த ஒன்றன்று :-).
சொல்லப் போனால் அன்றொன்றும் இன்றொன்றுமாய் எழுதியபடியே தலை நூறு பதிவர்களுள் ஒருவனாகப் பலகாலம் இருந்து வந்திருக்கிறேன். இதில் பெருமை எனக்கொன்றும் இல்லை. பெரும்பாலான பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சிலரே (ஒரு பத்திருபது பேர்) காரணம் என்று அவர்களது பெருமையைத் தான் இது எடுத்துரைக்கிறது. ஆனால், இப்போது அந்தச் சீரிய விக்கியர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்பதோடு, சில இளம் மாணவர்களும் உந்துதலோடு செயல்படுவதில் என்னையும் தலை நூறு பட்டியலில் இருந்து தள்ளி விட்டார்கள் என எண்ணுகிறேன்!
தமிழில் ஆர்வமும் எழுதுதிறனும் இருக்கும் பலர் இணையத்தில் இயங்கியபடி இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கலைக்களஞ்சியத்திற்குள் நுழைய ஏனோ தயங்கியே இருந்திருக்கிறார்கள்.
வலைப்பதிவிலோ, வேறு இதழ்களிலோ எழுதுவது போல் சற்று வேடிக்கையாகவோ, தளர் நடையிலோ எழுத இயலாமல் ஒரு சீரிய நடையில் எழுத வேண்டியிருப்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தவிர, எழுதும் ஒருவர் ஒரு கட்டுரையை முழுதும் தன்னுடையதாகச் சொந்தம் கொண்டாட முடியாமல் இருப்பதும் தடையாக இருக்கலாம். ஆனால் விக்கிப்பீடியாவின் ஒரு பலமே அது தான். கூட்டுழைப்பும் கூட்டாக்கமும் இதன் முக்கிய அம்சங்கள். நான் எழுதும் கட்டுரைகள் அனாதையாக நிற்காமல் இன்னும் இரண்டு பேர் கைவைத்துத் திருத்திச் செம்மைப்படுத்திச் சீரமைக்கும்போது மகிழ்வு அதிகமாகிறது. இப்படியாகத் தான் தூய்விப்பாலை, இயற்கை எரிவளி என்று நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளைப் பிறரும் சேர்ந்து தட்டிச் சோடித்துச் சிறந்த கட்டுரையாக வளர்த்தெடுத்துவிட்டனர்.
பலர் விக்கியில் எழுதத் தயங்கும் இன்னொரு காரணம் கலைச்சொல்லாக்கத் தேடல் என்று நினைக்கிறேன். நான் பெரும்பாலும் அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த கட்டுரைகளையே எழுத முயல்கிறேன். ஆனால், ஆங்கில நுட்பச் சொற்களுக்குத் தமிழில் சரியான கலைச்சொற்களைத் தேடித் தொலைந்து போவதும் உண்டு என்பதால் அதுவும் என் குறைவான வெளிப்பாட்டிற்கு ஒரு காரணம் (என்று நானே சாக்குச் சொல்லிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்!). ஆனால், இப்போது விக்கியின் இணைத்திட்டமான விக்சனரியில் பெரும்பாலான கலைச்சொல் தேடலுக்கு முடிவு கிட்டிவிடுகிறது. தவிரவும் இணையத்தில் பல தளங்கள் இத்தேவையை ஓரளவிற்குப் பூர்த்தி செய்துவிடுகின்றன.
நேரம் பற்றாக்குறை என்று சொல்லலாமா என்று பார்த்தால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரை எழுதியவர்களுக்கும் ஒரு நாளில் அதே நேரம் தானே இருக்கிறது என்று ஒரு கூற்றுத் தலையைக் குட்டும் என்பதால் அதையும் விட்டுவிட வேண்டியது தான்.
எதிர்வரும் காலத்தில் நிலைத்து நிற்கக் கூடியதான இந்தக் கலைக்களஞ்சியத்திற்குச் சிறிதானாலும் நமது பங்களிப்பைச் சேர்ப்பது நமக்கும் பெருமை தரக் கூடிய ஒன்று. நம்மால் ஆன ஒரு பயனை, அறிவுப் பகிர்வைத் தலைமுறைகளுக்குச் செய்து சேர்த்து வைக்கிறோம் என்னும் நிறைவு தரும் ஒன்று என்பதால், எல்லோருமாய்ச் சேர்ந்து இன்னும் பல பத்து ஆண்டுகள் இதனைச் செழித்தோங்கச் செய்வோம். என்னுடைய செயலூக்கத்தையும் இனிப் பெருக்கிக் கொண்டு இன்னும் அதிகரித்த ஈடுபாட்டைத் தர முயலலாம் என்றும் இருக்கிறேன். நூறு கட்டுரைகளை எட்டும் நாளைச் சுய இலக்காக வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் (அது எப்போது என்று வெளியே சொல்லி விட்டால் கேள்வி கேட்பீர்கள் என்பதால் இப்போதைக்கு மறைவாகவே வைத்துக் கொள்கிறேன்).
(குறைவாக எழுதி இருப்பதில் ஒரு வசதி – இப்படிப் பட்டியல் போட்டுக் கொள்ளலாம். மூவாயிரம் கட்டுரை எழுதியவர்களை இப்படிப் பட்டியல் போடச் சொல்லுங்கள் பார்க்கலாம் 🙂 )
Pages created by Rselvaraj:
- நெய்யோவியம்
- அணுவியல்_கொள்கை
- பொறிமுறைச்_சமநிலை
- வெப்ப_இயக்கவியல்_சமநிலை
- நிலைச்_சார்பு
- தெ._பொ._மீனாட்சிசுந்தரம்
- மூலக்கூற்று_உள்விசை
- மூலக்கூற்று_இடைவிசை
- வேதிப்பண்பு
- நிறை_மாற்றவியல்
- மின்னியக்கு_விசை
- மின்காந்தத்_தூண்டல்
- எண்ணெய்
- அமுக்கப்பட்ட_இயற்கை_எரிவளி
- களிப்பாறை_வளிமம்
- இனிப்பு_வளிமம்
- புளிப்பு_வளிமம்
- களிப்பாறை
- நேரியல்_சமன்பாடுகளின்_தொகுப்பு
- கொட்டை
- பவுண்டு
- கலோரி
- சூழ்_அழுத்தம்
- கார்பனோரொக்சைட்டு
- பீப்பாய்
- ராயல்_டச்சு_ஷெல்
- பீ.பி
- சூழல்_வெப்பநிலை
- வெப்பப்_பாய்மம்
- கொதிகலன்
- நெய்தை
- புரோக்குளோரோக்காக்கசு
- எட்டக_எண்
- ஆக்டேன்
- வடித்திறக்கல்
- ஓப்பெக்
- மாவிய_எத்தனால்
- மாவியம்
- வெப்ப_ஆற்றல்
- எரிவளி
- ஒரு_குழந்தைக்கு_ஒரு_மடிக்கணினி
- ஒவ்வாமை
- எரிநெய்
- அழுத்தம்
- இயக்க_ஆற்றல்
- புதைபடிவ_எரிமம்
- மாபெரும்_எண்ணெய்_நிறுவனங்கள்
- ஏ.பி.ஐ_ஒப்படர்த்தி
- நீராவிச்சுழலி
- நைதரசன்_ஆக்சைடு
- பாறைநெய்_தூய்விப்பாலை
- எரிவளிச்_சுழலி
- எத்தனால்
- உயிரி_எரிபொருள்
- இயற்கை_எரிவளி
- பிசுக்குமை
பட்டியலுக்கு நன்றி…
ஆயிரத்தில் ஒருவருக்கு பாராட்டுக்கள் 🙂
நம்ம மக்களுக்கு ஊர் பாசம் கொஞ்சம் எச்சு. அவங்க ஊரை பத்தியாவது எழுதலாம், படம் எடுத்து இணைக்கலாம். பெரிய கட்டுரை தேவையில்லை சிறிதாக எழுதலாம். இதற்கு கலைச்சொல் தேவையில்லை. என் அலுவலகத்தில் நான் நன்கு தமிழறிந்தவன் என்று நினைத்து எந்த ஆங்கில பதத்திற்காவது தமிழில் பொருள் கேட்டால் நான் உடனே போவது விக்சனரி தான். மக்கள்கிட்டயும் சொன்னேன் ஆனா அவங்க என்கிட்ட தான் கேட்பேன்னு அடம் பிடிக்கறப்ப என்ன பண்றது. நானும் தமிழ் புலவன் பேரு கிடைக்குதுங்கறதுக்காக அவங்க கேட்டா விக்சனரியை பாத்து சொல்லிடுவேன் 🙂
நன்றி குறும்பன். எல்லாம் கிடைத்தாலும் எளிய வழியைத் தேடுவது தான் உலக இயல்பு:-). அதனைத் தாண்டிச் செயல்பட ஒரு சுய உந்தம் தேவை. அதன் சிறப்புச் சொல்லித் தெரிவதில்லை. உய்ந்து அறியவேண்டிய ஒன்று.
இந்தப் பக்கமாக ஒரு பட்டறை/கொண்டாட்டம் போட்டால் என்ன? நீங்கள் அறிந்து வேறு விக்கியர் அருகில் இருக்கிறார்களா?
மண்டைய கசக்கினதுல எனக்கு தெரிந்து செல்வராசுன்னு ஒருத்தர் தான் இங்க இருக்கிற மாதிரி தெரியுது. வேற யாரும் நினைவுக்கு வரவில்லை. 10ம் ஆண்டு கொண்டாட்டத்தை பட்டறையாக இங்க போட வேண்டியது தான்.
செல்வராசு, இரத்தினச் சுருக்கமாகவும் ஆர்வத்தைக் கிளருமாறும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள் இந்த 10-ஆவது ஆண்டுநிறைவை! நன்றி!
//இப்போது அந்தச் சீரிய விக்கியர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்பதோடு, சில இளம் மாணவர்களும் உந்துதலோடு செயல்படுவதில் என்னையும் தலை நூறு பட்டியலில் இருந்து தள்ளி விட்டார்கள் என எண்ணுகிறேன்!// இது இனிய அறைகூவல் மீண்டும் முதல் 100 இல் ஒருவராக வர. இளம் மாணவர்களின் வரவு பெரும் நம்பிக்கையித் தருகின்றது! அடுத்த 5 ஆன்டுகளில் இன்னும் பெரிய அளவில் த-வி வளர வேண்டும்!
நன்றி செல்வா. அறைகூவலை ஏற்கிறேன். பணிகளுக்கும் பிறவற்றிற்கும் இடையில் மீண்டும் முதல் நூற்றுவராக முயல்வேன். தற்போது 13 இடங்கள் கீழே தள்ளி விட்டார்கள். 🙂
திரு இராம.கி அவர்களின் சொல்லாக்கத் தொகுப்பை கீழ்கண்ட பதிவில் காணலாம்.
http://thamizhchol.blogspot.in/
இந்த வலைத்தொகுப்பை உண்டாக்குவதற்கு நீங்களும் ஒரு வகையில் தூண்டுகோலாக இருந்தீர்கள். அந்த வகையில் உங்களுக்கு என் நன்றி.
ஆம் இந்தியன். உங்கள் பணி மகத்தானது. முன்பே தளத்தைக் குறித்து வைத்துள்ளேன். இது பற்றிச் சென்ற ஆண்டும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். http://blog.selvaraj.us/archives/378/comment-page-1#comment-51165
சொல்லாக்கத்திற்கு இராம.கி அவர்களின் சொற்களையும் முதன்மையாக நான் தேடுவதுண்டு. வேதிப்பொறிஞர் என்னும் ஒற்றுமையையும் தாண்டிப் பல புலங்களில் அவருடைய சொல்லாக்கங்கள் என்னைக் கவர்வன. உங்களுடைய பணிக்கு நானும் தூண்டுகோலாக இருந்தேன் என்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. நன்றி.
[இப்போது உங்கள் தளத்தை இங்கு முகப்பிலும் ஒரு தொடுப்பு இட்டு வைத்திருக்கிறேன்]
செல்வராஜ் அவர்களே! தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் பேசுவதே பாவம் என்று எண்ணுவோருக்கு மத்தியில் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழில் நீங்கள் ஆற்றும் தமிழ் எழுத்துப்பணி போற்றர்குறியது.