இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

அயற்சூழலில் தமிழ்க்கல்வி

September 7th, 2013 · 3 Comments

"அங்க்கிள்… இது ஏன் தப்புன்னு போட்டிருக்கீங்க?"

அண்மையில் எங்கள் தமிழ்ப்பள்ளியின் நிலை-4 மாணவி ஒருவர் தேர்வு முடிவினைப் பார்த்து விட்டுக் கேட்டார். ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொற்றொடரைத் தமிழாக்கம் செய்திருந்ததில் சில ஒற்றுப் பிழைகளைச் சுழித்திருந்தேன்.

"ஓ! அதுவா… அந்த இடத்துல ஒற்று வரவேண்டும். (கதவைத் திறந்தான்). இது பத்தி அடுத்த வருசம் இன்னும் விரிவாப் படிப்போம்"

"ஆனா… இதுக்கு மார்க் குறைக்கலியே?"

"இல்லம்மா… பரவாயில்ல. இத நீங்க தெரிஞ்சுக்கணும்னு தான் குறிச்சிருக்கேன். பெரியவங்களே பல பேரு இதச் சரியாச் செய்யறதில்ல! அதனால இதுக்கு நான் முழு மதிப்பெண்ணும் கொடுத்துட்டேன்.

இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. நாம அப்புறம் படிக்கலாம். இப்போதைக்கு, ஒரு object -அ எழுதும்போது அதுக்கப்புறம் வரும் ‘ஐ’க்கு அடுத்துக் க, ச, த, ப எழுத்து வந்தா அப்போ அந்த எழுத்த இரட்டிச்சு எழுதணும். அத மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க"

ATA Nilai4ஆர்வமாகக் கற்றுக் கொள்கின்றனர் அயலகத்துத் தமிழ்ச் சிறார்கள். வெறும் தமிழ்ச்சூழலும், அறிமுகத் தமிழும் தாண்டி அமெரிக்கத் தமிழ்க்கல்வி இலக்கணமும், சற்றே இலக்கியமும் கற்றுத் தரவும் தொடங்கியிருக்கிறது. ஆரம்பக் கட்டங்கள் தான். ஆனால் வளர்முகமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அயற்சூழலில் தமிழ்க்கல்வி என்பது அதன் தனிச் சவால்களைக் கொண்டது என்பதைக் கற்றுத் தருவோர் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம். இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புகள் பெரும் உதவியாக இருக்கின்றன. தனித்தனியே ஆங்காங்கே நண்பர்கள் தமிழ் அறிமுகம் செய்து வைத்தது போய், அனைவரது உழைப்பையும் அனுபவத்தையும் பகிர்ந்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது வழிவகை செய்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு இது அவசியமும் கூட.

தமிழகத் தமிழ்ச்சூழலில் மொழிக்கலப்புகள் அதிகரித்திருந்தாலும், சூழல் தமிழாக இருக்கையில் மாணவர்கள் தமிழோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். அதை அவர்கள் உதறிவிட்டு வேற்று மொழி மோகத்தோடு வளர்வதும், அதனைச் சமூகம் கண்டுகொள்ளாததும், ஏன் சில சமயங்களில் அதனை ஊக்குவிப்பதும் வேறு விசயங்கள். தனியே விவாதிக்கப் பட வேண்டியவை. ஆனால், ஒரு ஒப்புமைக்கு இச்சூழலையும் அயற்சூழலையும் நோக்குங்கால், சுற்றிலும் ஆங்கிலமோ பிறமொழியோ பேசி வாழும் வாழ்க்கைக்கு இடையே, வார இறுதியில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடக்கும் தமிழ் வகுப்பு நேரத்தில் தமிழோடு ஒன்றுவது சற்றுச் சிரமமானது தான். அச்சிரமத்தைப் போக்கவும் தான் தமிழ்க்கல்வியோடு, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், வேடிக்கைக் கதைகள், விளையாட்டுகள் என்று பல வகையாகவும் முயல வேண்டியிருக்கிறது. ஏன், இங்கிருக்கும் பள்ளியில் இசுப்பானியம், பிரெஞ்சு போன்ற வேற்று மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பார்த்துச் சில சமயம் அவற்றில் இருந்தும் பாடங்களை எடுத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம் ஆகிறது.

மொழி என்பது நீண்ட நெடுவேர் கொண்ட ஒரு மரத்தைப் போன்றது. பல திசைகளில் படர்ந்திருக்கும் அதன் கிளைகளில் எங்கோ ஒரு சிறு இலையாக ஒட்டியிருப்பவர்கள் நாம். இலையால் மரத்துக்கும், மரத்தால் இலைக்கும் பயன் இருப்பதைப் போல, மொழியால் நாமும், நம்மால் மொழியும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். தொன்மையும் வரலாறும் கொண்ட செம்மொழியாம் தமிழின் வேர் மிகவும் ஆழமானது. அந்தப் பெருமிதத்தோடு அதன் தொடர்ச்சிக்கு நம்மால் ஆன சிலவற்றைச் செய்யவும் முயல வேண்டும்.

"என்னங்க? நாமெல்லாம் பள்ளியில தமிழ் படிக்கலையா? அஞ்சாறு வருசம் படிச்சத வச்சு இவங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட முடியாதா?" என்று சற்றும் மெனக்கெடாத சில குரல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துக்களை அறிமுகம் செய்வதைத் தாண்டிச் சொற்களும், அதன் வகைப்பாடுகளும், பிறகு சொற்றொடர்களும், அடுத்தடுத்த நிலைகளில் சொல்லிக் கொடுப்பது என்பது அப்படி அலட்சியமாகச் செய்து விடக் கூடிய ஒன்றல்ல என்பதை விரைவில் புரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலச் சாய்வோடு உறழ்ந்து தமிழை ஒலித்துக் கொண்டே சிலர், "ப்ரொனன்ஷியேஷன் ரொம்போ முக்யம்னு என் பையன்கிட்டே சொல்லிட்டேன்" என்பார்கள். "சாரிங்க, நான் டமிள் பேசி ரொம்ப வர்ஷம் ஆச்சு", என்பாரின் பிள்ளைகள் எவ்வளவு தூரம் சரியாகப் பேச இயலும்?

imageமாணவர்கள் ஆர்வமாகக் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தருவதற்கு நமக்கு நிறைய உழைப்பு தேவைப்படலாம். அன்றாடம் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றுக்கு, ‘அது ஏன் எப்படி எதற்கு’ என்று கேள்விகளை அயலக மாணவர்கள் எழுப்பும்போது அவற்றுக்கு விடை கூறத் தடுமாற வேண்டியிருக்கும்போது, "அடடா… நமது மொழியைப் பற்றி நாம் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் போனோமே!" என்ற ஒரு வருத்தம் உண்டாகும். இணையத் தேடலிலும் இலக்கணப் பாடங்களிலும் நாம் புரிந்து கொண்டாலும், அதனை எளிமைப் படுத்தி இவர்களுக்குப் புரிய வைப்பதெப்படி என்று மனம் ஓடும்.

"அப்பா… உங்க கிட்ட ஒரு கேள்வி"

எனது இரு மகள்களும் எனது தமிழ் வகுப்பில் தான் இருக்கிறார்கள். வினைச்சொற்களும் அதன் வகைப்பாடுகளும் குறித்து இவ்வருடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

" ‘I ate fruit’ ன்னா, ‘நான் பழம் சாப்பிட்டேன்’ அப்படின்னு சொல்லும்போது, ‘I like fruit’ அப்படின்னா மட்டும் ஏன் ‘எனக்குப் பழம் பிடிக்கும்’ னு சொல்லணும்?"

"அது வந்து… அது…"

‘கேள்வி கேட்பது மிகவும் எளிது மகளே’ என்று மனதில் பட்டதைச் சொல்லவா முடியும்?

"சொல்லுங்க அப்பா. ஏன், ‘நான் பழம் பிடிச்சேன்’ or ”நான் பழம் பிடிக்கும்’ னு சொல்லக் கூடாது"

குறும்புக்கேள்வி அல்ல இது. உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம். அது அப்படித் தான் என்று சொல்லிக் கடந்து விட விருப்பம் இல்லை எனக்கு.

"அது ஏன்னு பாத்துச் சொல்றென். அது அப்படித் தான்னு இப்போதைக்கு வச்சுக்கோ" என்று தேட ஆரம்பிக்கிறேன். சிலசமயம் விடை கண்டுபிடிக்காமல் போகும் கேள்விகள் இப்படிப் பல. பள்ளியில் இசுப்பானியம் படிக்கிறவள், "ஸ்பானிஷ்ல கூட இப்படித் தான். சில இடத்துல இப்படி மாறி வருது. அது எப்படின்னு இன்னும் சரியாப் புரியல்லே" என்பாள். சில இடங்களில் ஆங்கிலம் அல்லாத இரு மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கொண்டு அவளாகப் புரிந்து கொள்வாள்.

ஆகா! இசுப்பானியம் தெரிந்திருந்தால் ஒருவேளை இதற்கு நமக்குத் தமிழிலும் விடை தெரிந்திருக்குமோ? சரி விடுங்கள். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைப்பது தானே நமது கதை. தொன்மையான இலக்கணம், எண்ணிலடங்கா உரை என்று பலதும் தமிழில் கிடைக்கிறது. அதனைப் படிப்போம் என்று இப்போதைக்கு இசுப்பானியத்தை மூட்டை கட்டி வைக்கிறேன்.

அயலகத் தமிழ் மாணவர்களின் மொழிக் கல்விக்குப் பெற்றோர் உதவியும் உறுதுணையும் மிகவும் தேவை. வீட்டுச் சூழலில் தமிழில் பேச வைக்க வேண்டும் என்பது எளிதான ஒன்றல்ல. அன்றாட வாழ்வில் நாமே அடிக்கடி மறந்து விட்டு ஆங்கிலத்துக்குத் தாவி விடும்போது அவர்களைத் தமிழில் பேச வைப்பதெப்படி?

சிறு வயதிலேயே தமிழ்ப்பள்ளியில் மாணவர்களை ஈடுபடுத்தினால், வீட்டில் பெற்றோர் ஆங்கிலத்தில் பேசும்போது, "நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்?" என்று அவர்கள் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்பதாகச் சிலர் சொன்னபோது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்படித்தான் சிறு வயது முதலே இந்த ஆர்வத்தை ஊட்ட வேண்டும். நண்பர் ஒருவரின் மகன் ஆரம்பப் பள்ளிச் சுவரில் ஒட்டி வைத்திருக்கும் StarFish, Whale படங்களைப் பார்த்து ‘நட்சத்திர மீன், திமிங்கலம்’ என்று தன்னியல்பாகச் சொல்லிக் கொள்வதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார்.

ஒரு புறம், சில பெற்றோர், "என் பையன் அங்கங்க கொஞ்சம் பேசினாப் போதுங்க. பெரிய எளுத்தாலனா வர வேண்டியதில்ல; இலக்கியம் படைக்க வேண்டியதில்ல" என்று எண்ணத்தைக் குறுக்கிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. தாத்தா பாட்டியுடன் வாரமோ மாதமோ ஒரு முறை தொலைபேசியில் பேசினால் போதும் என்னும் குறுகிய நோக்கம் எட்ட முடியாக் குறிக்கோள்.

மறுபுறம், சில ஆர்வமிகுதி ஆர்வலர்கள், சங்ககாலந்தொட்டுத் தமிழில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் முதல், நவீனகால அறிவியல், பொறியியல், நுட்பியல் கருத்துகள் வரை அனைத்தையும் தமிழில் இன்றே அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என்று பதைப்பதையும் காண முடிகிறது.

இவ்விரண்டு நிலைகளுக்கும் இடையேயான இடைவெளி பெரிது. பலக்கியது. அதனைக் கடக்க நடைமுறைச் சாத்தியங்கள் என்னவென்று ஆய்ந்து சில சமரசங்களை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இலக்கு என்ன, பயணம் எப்படி என்று திட்டம் கொண்டு, சற்றே உந்துதலை அதிகரிக்கலாம். தவறில்லை.

image தற்போதைக்குத் தமிழ்ப்பள்ளியில் தினமும் ஒரு பக்கம் தான் என்று வீட்டுப்பாடம் கொடுத்தாலும் ‘அது ரொம்ப அதிகம்’ என்று புகார் செய்வதை விடுத்து, மாணவர்களுக்கு அதனைச் செய்ய உதவப் பெற்றோர் முன்வரவும் வேண்டும். அவர்களுக்குக் கற்றுத் தர, அப்பாடங்களைப் பெற்றோரும் தெரிந்து கொள்வது முக்கியமானது. நம்மில் சிலர் நம் மக்களின் அன்றாடப் பாடங்களைச் சொல்லித் தருவதற்கு அறிவியல், கணிதப் பாடங்களைப் பற்றி மீளாய்வு செய்து கொள்வதில்லையா? அதைப் போலத் தானே தமிழும் என்று நமது மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும் முனைய வேண்டும்.

ஒரு வகையில் பார்த்தால், வாரம் ஒரு பக்கம் என்றால் கூட அது அதிகம் தான். நமது குறிக்கோள் அவர்களுக்கு மொழியைக் கற்றுத் தருவது என்றால், அதற்கான வழிமுறைகள் என்ன என்று இன்னும் ஆர்வமாக முன்வர வேண்டும். மொழியைக் கற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒரு இலை உதிர்வதால் மரத்துக்கு நட்டமில்லை. ஆனால், அவ்விலைக்கு அடையாளத்தைத் தரவும் அதன் இருப்பிற்கு ஒரு இலக்கைக் காட்டுவதற்கும் அம்மரம் உதவுகிறது. அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அனைவருமாகச் சேர்ந்து அம்மரத்திற்கு ஒளிசேர்த்துத் தருவோம். உதிர்ந்தாலும் இம்மரத்திற்கு உரமாவோம் என்று எண்ணி உழைத்து, அயற்சூழலிலும் தமிழைத் தழைத்தோங்கச் செய்வோம்.

ooOoo

பி.கு.1:  இவ்வாண்டு டொரான்டோவில் நடைபெற்ற ஃபெட்னா விழாவின் சிறப்பு மலரில் (2013 சூலை) வெளிவந்த எனது கட்டுரை.

பி.கு.2: எங்கள் தமிழ்ப்பள்ளியின் 2013/14 கல்வியாண்டு இன்று முதல் ஆரம்பம்.

பி.கு.3: சுமார் 30~40 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி மூன்றாம் ஆண்டான இன்று 240க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கண்டிருக்கிறது! அனைத்து ஆர்வலர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

image

Tags: தமிழ்

3 responses so far ↓

 • 1 இrராம.கி. // Sep 7, 2013 at 9:25 pm

  சிறார்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பது பாராட்ட வேண்டிய முயற்சி. வாசிங்டன் அன்பர்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அயலகத் தமிழர்கள் முயற்சிகளாற் கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழ் மரபுகள் விளங்கட்டும். வாழ்க! வளர்க!! தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் தம் மரபை தொலைத்துவிடாது காப்பாற்ற வேண்டும். இந்தத் தமிங்கிலப் பழக்கம் நம் சீரைக் குலைத்துவிடும்.

  ‘I ate fruit’ என்னும் போது ’நான் பழம் சாப்பிட்டேன்’ என்று சொல்லும் நாம், ’I like fruit’ என்னும் போது ’எனக்குப் பழம் பிடிக்கும்’ என்று ஏன் சொல்லுகிறோம்? – என்று தங்கள் மக்கள் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான விடை நம்மைச் சற்று குத்தும். இந்தக்காலத் தமிழில் நாம் பல (வினை, பெயர் என்று) சொற்களைத் தொலைத்து இருப்பதை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். மொழியாளுமையைத் தொலைப்பதற்குக் காரணமே நம்மோடு ஊடிக்கூடிவரும் தமிங்கில எழுச்சி தான். (சங்கதத்திற்கு மாறாய் அந்த இடத்தில் ஆங்கிலம் இப்பொழுது ஆட்சி செய்கிறது.)

  தமிழிற் சிந்திப்பதே இப்பொழுது பலருக்குங் குறைந்துபோனது. எங்கு தமிழ்ச் சொற்கள் தெரியவில்லையோ, அங்கு ஆங்கிலச் சொற்களைச் சகட்டு மேனிக்குக் கடன் வாங்குகிறோம். எங்கு தமிழ் மரபு தெரியவில்லையோ, அங்கு கூச்ச நாச்சமில்லாது ஆங்கில மரபைக் கடன் வாங்குகிறோம். 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் பட்டுவ வாக்கைப் (வேறொன்றுமில்லைங்க. இது தான் passive voice. ”நான் குறள் படித்தேன்” என்பது active voice. ”குறள் என்னாற் படிக்கப் பட்டது” என்பது passive voice. எங்கெல்லாம் ”பட்டு” வருகிறது அது பட்டுவ வாக்காகும்.) பயன்படுத்துவது பெரிதுங் குறைவு. பெரும்பாலும் ஆற்றுவ வாக்கையே (active voice) தமிழிற் பயன்படுத்திச் சொல்லுவோம். இன்றோ, கன்னாப் பின்னாவென்று பட்டுவ வாக்கைப் பயன்படுத்தி நம் பேச்சுநடையை ஆங்கிலம் போல் மாற்றுகிறோம். ஆற்றுவ ஒழுக்கே குறைந்து போனது. எத்தனை ஊர்களில் தானியில் ஒலிபெருக்கி வைத்து “மக்கள் கோரப்படுகிறார்கள்” என்று நாராசமாய் அலறுகிறார்கள். தன்வினை, பிறவினை என்பதிலும் ஒன்று மாற்றி இன்னொன்றைப் பயன்படுத்துகிறோம். ”எங்கே செல்லுதல் வரும்? எங்கே செலுத்துதல் வரும்?” என்று வேறுபாட்டையும் நாம் கவனிப்பதில்லை.

  தமிழாசிரியர்கள் தமிழ் மரபு சொல்லித் தருவதும் பெரிதுங் குறைந்துவிட்டது. அவர்களிற் பலருங் கூட மொழிநடையிற் தடுமாறுகிறார்கள். சங்கத் தமிழில் இருந்தும் பற்றியியக்கத் தமிழில் இருந்தும், கம்பன் தமிழில் இருந்தும் நாம் பெரிதும் விலகிவிட்டோம். அது நல்லதிற்கில்லை.

  ”நான் பழம் சாப்பிட்டேன்” என்பது போல் ”நான் பழம் விழைகிறேன் (/விழைந்தேன்)” என்பது தான் அந்தக் காலத் தமிழ் மரபு. ஆனால் இந்தக் காலத்தில் அது தொலைந்ததால், ’விழைதல்’ (like இன் நேரடி மொழிபெயர்ப்பு அது தான்) அரிதாகிப் போய் ’விரும்புதல்’ பகரியாய் உட்கார்ந்து [’நான் பழம் விரும்புகிறேன் (/விரும்பினேன்) என்று சொல்லலாம்], அதையும் விடுத்து இப்பொழுது தமிங்கிலச் சிந்தனை மேலுங் கூடி fruit is agreeable/pleasing to me என்று திருத்தி அதை அச்சடித்தது போற் தமிழில் மொழியாக்கி “பழம் எனக்குப் பிடிக்கும்” என்று சொல்லி எழுவாயைச் செய்யப்படு பொருளாகவும், செயப்படு பொருளை எழுவாயாகவும் மாற்றுகிறோம். ”நான் பழத்தை விழைகிறேன்” என்ற வாக்கிய அமைப்பைக் கேட்டு ஓரிரு மாமாங்கள் ஆகிவிட்டன.

  தமிழை வன்மையாய் நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

  அன்புடன்,
  இராம.கி.

 • 2 மஞ்சு ஈஸ்வரன் // Oct 21, 2013 at 8:36 am

  /*ஒரு இலை உதிர்வதால் மரத்துக்கு நட்டமில்லை. ஆனால், அவ்விலைக்கு அடையாளத்தைத் தரவும் அதன் இருப்பிற்கு ஒரு இலக்கைக் காட்டுவதற்கும் அம்மரம் உதவுகிறது. அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அனைவருமாகச் சேர்ந்து அம்மரத்திற்கு ஒளிசேர்த்துத் தருவோம். உதிர்ந்தாலும் இம்மரத்திற்கு உரமாவோம் என்று எண்ணி உழைத்து, அயற்சூழலிலும் தமிழைத் தழைத்தோங்கச் செய்வோம்./*

  பதிவிலுள்ள ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் படித்தேன்.
  குறிப்பாக மேற்கோள் காட்டப்பட்ட வரிகள், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்கு தக்க சான்று.
  அன்புடன்
  மஞ்சு.

 • 3 இரா. செல்வராசு // Oct 22, 2013 at 9:02 pm

  மிக்க நன்றி மஞ்சு. உங்கள் அன்பில் இன்னும் ஊக்கம் பெறுகிறேன்.