அப்பாவின் கதை.
Aug 23rd, 2013 by இரா. செல்வராசு
பூரண குணம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி, மருத்துவமனை நீங்கி வீடு வந்த பின்னொரு நாள், பின்னொரு பொழுதொன்றில் சொல்லுவார் அப்பா, "பரவால்லப்பா! பெரிய கண்டத்துல இருந்து இந்தத் தடவ தப்பிச்சாச்சு. பெரிய ஆபத்தே நீங்கிடுச்சு போ!"
நிம்மதி கலந்த பெருமூச்சொன்றோடு முன்னறைச் சோபா இருக்கையில் அமர்ந்திருப்பார். முகத்தில் ஒரு அமைதியான நிறைவு மலர்ந்திருக்கும். அவருக்கும், அருகே அமர்ந்திருக்கும் எனக்குமாகக் காப்பியோ தேநீரோ கொண்டு வந்து, மேலே சுழலும் மின்விசிறியின் காற்றில், ‘சித்த ஆறட்டும்’ என்றபடி கீழே அமர்வார் அம்மா.
"ஏதோ… கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். வேற என்னாலும் ஆயிருந்தா என்ன பண்றது!" என்று நடந்துவிட்டதும், நடந்துவிடக் கூடாததுமாக எண்ணி அசை போட்டுக் கொண்டிருப்பார் அம்மா.
ஒரு பார்வை. ஒரு சிரிப்பு. ஒரு தலையசைப்பு. அவ்வளவு தான். அப்பா காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார். "நான் அப்படியே அந்தப் பொட்டிக் கட வரை போய்ட்டு வரேன்". கட்டில் மெத்தையடியில் மடித்து வைத்திருந்த சட்டையை மாட்டிக் கொண்டு அதில் கண்டுபிடித்துவிட்ட சிறு சுருக்கம் ஒன்றை நீவி விட்டபடி வெளியே செல்வார் அப்பா.
சில காலமாகவே என் அப்பாவின் உலகம் சுருங்கி இருந்தது. நான்காண்டுகளுக்கு முன் உண்டான ஒரு இதயக் கோளாறின் காரணமாக அதன் இறைப்புக் கொண்மை குறைந்திருந்தது. ‘அதிக அலைச்சல் வேண்டாம்’ என்னும் மருத்துவ அறிவுரையின்படி வெளியூர், பண்டிகை, விழா என்று எதுவும் இல்லாமல் வீடும், வீட்டை ஒட்டிய ஐந்து நிமிட நடைச் சுற்றளவும் மட்டுமே அவருடைய உலகமாக இருந்தது.
ஒரு பெட்டிக் கடை, வங்கி, இரண்டு கோயில், மருந்துக் கடை, கடிகாரக் கடை என்று தன்னுலகம் சுருங்கி இருந்தாலும் அது பற்றி எந்தக் கவலையையும் வெளிக் காட்டிக் கொண்டவரில்லை அப்பா. வருடம் ஒரு முறை நான் விடுப்பில் ஊர் வரும்போது மட்டும் இராசாக் கோயிலுக்கும் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கும் போய் உறவுகளைப் பார்த்து வரலாம் என்று இருப்பார்.
அழுத்தக்காரர் அவர் என்பார் அம்மா. "எதையாச்சும் சொல்லுதா இந்த மனுசன்? ஒரு கவலை உண்டுமா? ஆசை, சந்தோசம்; ஒரு வருத்தம், கோபம்; ஒண்ணயும் சொல்றதில்ல! நான் தான் இப்படிக் கவலப் பட்டுக்கிட்டு, ஆத்திரப் பட்டுக்கிட்டு… இப்படிக் கெடக்குறன். எதையாச்சும் சொல்லலாமுல்ல?"
"ஏங்ப்பா? அம்மா இப்படிச் சொல்றாங்களே?" என்று நான் கேட்டால், ‘இப்ப என்ன ஆயிருச்சு?’ என்றாற்போல் உதறி எறிந்து விட்டு, "கெடக்குது உடு. அதையும் இதையும் நெனச்சுக் கொழப்பிக்கிட்டு இருந்தா என்ன வரப் போவுது?" என்பார்.
"பார்றா! மாப்ளையாட்டம் பேண்ட்டும் சட்டையும் போட்டுக்கிட்டுப் போரதப் பாரு! இத்தன நாள் ஆசுப்பத்திரியில கெடந்தப்பச் சீரழிஞ்சது யாராம்?" அம்மாவின் சீற்றத்தில் தெரியும் அன்பை உணர்ந்தவாறு, அவருக்கான நன்றியையும் உள்ளடக்கி ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு, "அதான் இப்ப எல்லாம் சரியாப் போச்சே!" என்றவாறு போவார்.
இப்படித்தான் தனது கவலைகள் எதையும் தேக்கி வைத்துக் கொள்ளாமல் உதறிவிட்டு இயல்பாக இருக்க முடிவது தான் அவருடைய நீண்ட கால வாழ்வின் சூத்திரம் என்று எனக்குத் தோன்றும். ஆனால், இப்படிப் பட்ட அப்பா தான் சில வாரங்கள் முன் நான் தொலைப்பேசியபோது ‘எப்படி இருக்கறீங்க’ என்னும் என் எப்போதைக்குமான கேள்விக்கு என்றுமில்லாத ஒரு பதிலைச் சொன்னார். அப்போது அம்மா வீட்டில் இல்லை.
"நான் ரொம்ப நல்லாத் தான் இருக்கறேன். அம்மா தான் பாவம். கால்வலின்னு ரொம்பக் கசுட்டப் படறா. பாக்கவே முடியல. பாவம்!" இந்த விசனத்தை அம்மாவிடம் நேரடியாகச் சொல்லி இருக்க மாட்டார். ஆனால் அம்மாவுக்கு வேண்டும் உதவிகள் அனைத்தையும், குறிப்பாகப் பணியோய்வு பெற்ற தற்காலத்தில் எந்தத் தயக்கமும் இன்றிச் செய்துவிடுவார். அவர்கள் இருவரும் காலம் பூராவும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களுக்குள்ளான ஓர் உகந்த இயைபு நிலையைக் கண்டுகொண்டிருந்தார்கள் என்று சொல்லலாம்.
இப்படியாகத் தானும் தன் உலகும் உள்ளுணர்ச்சிகளுமாக இருந்த அவர்மீது சில வாரங்கள் முன்பு வீட்டருகே இருந்த விநாயகர் கோயிலின் முன், பின்னோக்கி வந்த ஒரு கார் மோதியதில் ஆரம்பித்தது வினை.
"சனிக்கெழமையும் அதுவுமா கூத்துவன் வந்து உக்காந்துக்கிட்டான் பாரேன்!" வினை தீர்ப்பவனின் வாசலில் கூற்றுவனின் தரிசனம் என்று விசனப்பட்டார் அம்மா. கீழே விழுந்தவரின் ஒரு காலில் எலும்பு முறிவு என்று கட்டுப்போட்டு ஆறு வாரங்கள் கிடப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
விடுமுறைக்கு மனைவி மகள்களோடு ஊர் சென்று வர இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன அப்போது. "சரி விடுங்க அம்மா! நான் வந்து நாலு வாரம் இருப்பன்ல. ஆறு வாரம் முடிஞ்சுரும். அப்புறம் எல்லாம் சரியாகிடும்". ஆறு வாரம் கட்டுப்போட்ட காலுடன் வீட்டில் இருப்பதும் சிரமம் தான் என்றாலும் அதோடு போனதே என்ற ஒரு நிம்மதி.
"அடடா! மவராசனுக்குக் கீழ உழுந்து எந்திரிக்கரதுன்னா அப்படி ஒரு இராசி போ! சகுட்டுக்கு உழுந்து எந்திருச்சுருச்சு இந்த மனுசன்!" என்பார் அம்மா. வேடிக்கைப் பேச்சாக இருந்தாலும் அது தான் உண்மையும் கூட என்று உணர்கையில் ஒரு முறுவல் தோன்றும்.
மிதிவண்டியில் போன போது ஒரு முறை, டிவியெசில் ஒரு முறை, பேருந்தில் இருந்து இறங்கும்போது, வீட்டில் குப்பை அடிக்கும்போது, கண்ணாடியைத் துடைக்கும்போது, கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கும்போது, வாசலில் வழுக்கி விழுந்து, மாவெந்திர மின்வடம் தடுக்கி விட்டு என்று பலமுறை விழுந்து எழுந்திருக்கிறார் என் அப்பா. அப்போதெல்லாம் சின்னச் சின்னக் காயம், மருந்து, ஊசி, கட்டு என்று கடந்து வந்திருக்கிறார். இம்முறையோ, காலுக்குக் கட்டுப்போட்டு வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களில் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல நேர்ந்ததில், அடி கொஞ்சம் பலம் தான் என்று உணர வைத்தது.
ஊர் கிளம்பும் இரண்டு நாள் முன்பு அழைப்பு வந்தது.
"அவருக்குக் கால்ல இரத்த ஓட்டம் தடையாய் இருக்குதுப்பா. ஒரு அடைப்பை அறுவை சிகிச்சைல நீக்கி இருக்காங்க. அது சரியாகிட்டாப் பரவாயில்ல. இல்லன்னா காலையே எடுக்க வேண்டியிருக்கும்கிறாங்க. இல்லன்னா உயிருக்கு ஆபத்தாம்! என்ன பண்ணலாம்?"
இயலாமையில் மனது திக்கறியாமல் திகைத்தது. காக்க வேண்டியது காலா, உயிரா என்று ஒரு முடிவை எப்படி எடுப்பது எனத் தெரியவில்லை. இத்தனை வயதில் ஒரு காலின்றிச் சிரமப்படுவதை விட உயிர் போனாலே பரவாயில்லையோ என்று ஒரு பக்கம். அப்படி விட்டுவிடவும் முடியாமல் துடிப்பில் இன்னொரு பக்கம். சட்டென்று அப்பாவை அப்படி இழப்பதை எண்ணிப் பார்க்கவும் மனம் குறுகுறுத்தது. முடிவு செய்யவேண்டிய நேரத்தில் விமானத்தில் பயணம் என்பதால் விளைவு என்னவென்று தெரியாமலே ஊர் போய்ச் சேர்ந்தோம்.
மருத்துவர்களுக்குத் தெளிவாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. "காலா? உயிரா? என்று கேள்வி வரும்போது நாங்கள் உயிரைத் தான் காப்பாற்ற முனைவோம்" என்று பொறுமையாக விளக்குகிறார் ஒரு மருத்துவர். "இரத்த ஓட்டமின்றி ஒரு கால் இறந்துபோனது மாதிரித் தான். இறந்த ஒரு பாகம் உடலில் ஒட்டி இருக்கக் கூடாது!"
"இது மிகவும் இக்கான நிலை. வெளிநாட்டில் கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவசர அறுவை சிகிச்சை செய்வோம்", மருத்துவராக இருந்த இன்னொரு நண்பர் விளக்குகிறார்.
ஆக, கண்டத்தில் இருந்து அப்பா முற்றிலும் தப்பவில்லை. அது அடைப்பு நீங்காத அந்த வலது காலைக் காவு வாங்கித் தான் சென்றது. தீவிர சிகிச்சைப் பிரிவில் கால் இழந்த நிலையில் தான் அப்பாவைச் சந்தித்தோம். எங்களைப் பார்த்தவுடன் ஒரு நிறைவு அவருக்கு. பேத்திகளைப் பார்த்ததில் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "குடும்மா. நீயும் கொஞ்சம் குடு" என்று இரு பேத்திகளிடமும் தவறாமல் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொண்டார்.
"இப்படி ஒரு பூரிப்ப இந்த ஒரு மாசத்துல ஒரு நாளும் நாங்க பாக்கலப்பா!" என்று உடனிருந்தவர்கள் சொல்ல, தெம்பாகப் பேசிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்து, நாங்கள் சரியான முடிவைத் தான் செய்திருக்கிறோம் என்று தோன்றியது. ஆனால், காலின் இழப்பை அவர் உணர்ந்திருந்தாரா என்று தான் தெரியவில்லை. அப்படி உணரும்போது உண்டாகும் எதிர்வினையையும் உணர்ச்சிகளையும் எப்படித் தாங்கிக் கொள்வது என்றும் புரியவில்லை.
இரத்த ஓட்டக் குறைவும், மூச்சுத்திணறலும் பிற பிரச்சினைகளும் தீர நான்கைந்து நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளிவந்த அப்பா அறையில் பட்ட சிரமத்தைப் பார்க்க இயலவில்லை. எழுந்து நடக்க வேண்டும், வீட்டுக்கு விரைவில் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். கெஞ்சியும், கொஞ்சியும், கோபப்பட்டும் அது உடனே நடக்கவில்லை என்னும் ஏமாற்றம் அவருக்கு உள்ளே இருந்திருக்க வேண்டும்.
ஓரளவு சரிநிலைக்கு வந்தபின் வீட்டுக்குச் சென்ற பிறகு அம்மா அப்பாவுடைய வாழ்க்கை முறையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது போல் இருக்குமே, அதற்கு எவ்வாறு தயார் செய்வது என்று ஒரு பக்கம் சிந்தனை. அப்போதைக்குப் பார்க்க வருபவர்கள் அப்பாவை ஒரு குழந்தையைப் போலவோ காட்சிப்பொருளாகவோ பார்க்கிறார்களோ என்று உள்ளுக்குள் ஒரு கோபம்.
ஒருமுறை உடனிருந்த பிறரிடம் அவர்களின் ஏதோ ஒரு செயல் சற்று ஒவ்வாமல் போனதால், விளையாட்டுக் கலந்து, "உங்க கிட்ட இருந்தெல்லாம் அப்பாவ நான் தான் காப்பாத்தணுமாட்ட இருக்கு" என்று நான் சொல்ல, "ஆமா! இவந்தான் வந்து அஞ்சாறு காப்பாத்தறானாமா!" என்றார். சற்று வலிக்கத் தான் செய்தது. அதில் இருந்த உண்மை குற்ற உணர்ச்சியைத் தூண்டியது. தேற்றிக் கொள்ள எத்தனித்தேன். "பின்னாரு உங்களக் காப்பத்தறாங்களாம்?" என்று பரிந்து வந்த குரல்களிடம், "அம்மா தான் காப்பாத்துணா" என்று அம்மாவுக்கு கொஞ்சம் நிறைவையும் கொஞ்சம் அழுகையையும் தந்தார். ஒவ்வொரு முறையும் மயங்கியும் அடிபட்டும் கிடப்பவரை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுபவர் அவர் தானே!
தீவிர மருந்துகளின் காரணமாகவோ, குருதியில் குறைந்த ஆக்சிஜன் அளவின் காரணமாகவோ அவ்வப்போது அப்பாவுக்குப் பேச்சுக் குழறும். நினைவு மறக்காதிருக்கிறதா என்று சோதிக்க ‘இதாரு தெரியுதா’, ‘இப்ப எங்க இருக்கோம்’ என்னும் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டாலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
எப்போதும் ஞாபக சக்திக்குப் பங்கம் வந்ததில்லை அவருக்கு. யார் யாருக்கு எப்படி உறவு என்பதைச் சுற்று வட்டாரத்தில் அனைவரையும் இணைத்துச் சொல்லும் தரவுப் பெட்டகமாகத் திகழ்ந்தவர் அப்பா. எனக்கும் தெரியட்டும் என்று ‘பாட்டனார் வரலாறு’ என்று ஆறேழு தலைமுறை வரலாற்றை இரண்டு மூன்று இடங்களில் எழுதி வைத்திருக்கிறார்.
இந்த முறை தான் பார்த்தேன். தலைமுறைக் குறிப்புகளோடு தன்வரலாறாகத் தன் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றியும் சில பக்கங்களை எழுதி வைத்திருக்கிறார். தன் தாத்தா, தந்தை இருவரும் மறைந்துவிட, இளம் வயதிலேயே படிப்பை நிறுத்திப் பண்ணையம் பார்த்துத் தன் தாயைக் கவனித்துக் கொண்டது; பண்ணையம் கட்டுப்படியாகாமல் கோடந்தூர்ச் சவுளிக் கடையில் சேர்ந்து தென்னிலைச் சந்தைக்குச் சைக்கிளில் சவுளி எடுத்துச் சென்று விற்று ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் கூலி வாங்கியது; அதுவும் பற்றாமல் ஊரை விட்டுப் பெயர்ந்து வெள்ளகோயில் பேருந்து நிறுவனத்தில் வாயிற்காப்பாளனாக, பின் பத்தாம் நிலைச் சான்றிதழ் வாங்கத் தேர்வெழுதி அரசு வேலைக்கு முயன்று நீதிபதி வீட்டில் எடுபிடியாய் ஆரம்பித்து நீதிமன்றப் பணியில் சேர்ந்தது என்று அவர் ஆரம்பித்த புள்ளியில் இருந்து வந்து சேர்ந்த இடம் நீண்ட பயணம் தான்.
இதனால் தானோ என்னவோ சிரமப்படும் எவரையும் பார்த்து இளகிவிடுவார் அப்பா. இல்லை என்னாது கொடுப்பார் என்றில்லை. இல்லாதபோதும் கடனை வாங்கியோ கையெழுத்தைப் போட்டோ வாங்கிக் கொடுத்துவிடுபவரைக் கவனித்துக் கொள்வதே ஒரு காலத்தில் சவாலாக இருந்தது.
"எந்த வேலையையுமே அவர் கவுரவக் கொறச்சலா நெனச்சதே இல்ல. எங்களை எல்லாம் கூட ‘வாங்க ஏதாவது வேல பாத்துக்கலாம்’னு அப்பவே வரச்சொல்லுவார். நாங்க தான் கவுரவம் பாத்துக்கிட்டு, விவசாயத்த விட்டுட்டு வேற ஒருத்தர்கிட்ட வேலைக்குப் போறதக் கொறையா நெனச்சு அவர் பேச்சக் கேக்கல", பார்க்க வந்திருந்த மாமா ஒருவர் பழைய கதையைக் கூறினார்.
இந்தக் கதைகள் எல்லாம் அப்பா விரிவாக என்னிடம் சொன்னதே இல்லை. இன்றோ அதற்கெல்லாம் சமயம் இல்லை. உடல் வலியை மறக்க மருந்துகளை உட்கொண்டு அந்தக் களைப்பில், தாக்கத்தில் இருந்தார். சிலசமயம் அவர் பேச்சு எங்களுக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை அவரது சிந்தனையோட்டத்திற்கு ஈடுகொடுத்து எங்களால் தான் செல்ல முடியவில்லையோ என்னவோ? ஆனால், அப்போதைக்கு அவரைச் சோதிக்க மீண்டும் எளிய கேள்விகளைக் கேட்டு வைப்போம்.
"நான் யாரு தெரியுதா?", தன்னைக் காட்டியே அம்மா கேட்க, பெயரைச் சொல்லுகிறார்.
"இதாரு?", என் பக்கம் கையை நீட்டுகிறார் அம்மா.
அப்பா ஏதோ சொல்ல, சரியாகக் கேட்காமல் மீண்டும் "யாரு?" எனக் கேட்கிறார் அம்மா.
‘சும்மா என்ன தொண தொணன்னு கேள்வி. இதுங்கூடத் தெரியாதா?’ என்று சுள்ளென்று கேட்பார் அப்பா என்று தயங்கிக் கொண்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிருந்தால் தான் இயல்பாய் இருந்திருக்கும். ஆனால், அவரோ, ஒரு குழந்தையைப் போலக் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். மீண்டும் கேட்கிறார் அம்மா. "இது யாருங்க?"
"நம்ப அப்புக்குட்டி!" என்று என்னைப் பார்த்து அவர் சொல்ல, சட்டென்று மனம் இளகியது எனக்கு. ‘இவனா காப்பாத்தறவன்’ என்றவரே தான் ‘நம்ம குழந்தை’ என்கிறார். எனக்குத் தெரிந்து அண்மையில் என்னை யாரும் அப்படிக் கூப்பிட்டதில்லை. பிறந்து பெயர் வைக்காத ஒரு காலத்தில் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த என்னை நோக்கி அப்புக்குட்டி என்று இவ்வட்டார வழக்கப்படி அழைத்திருக்கக் கூடும். அந்த ‘நம்ப அப்புக்குட்டி’யில் இருந்ததாகப் பட்ட அன்பும் வாஞ்சையும் என்னை ஒரு குழந்தையாக்கி, வலுக்கட்டாயமாக நான் வரவழைக்க முயன்று கொண்டிருந்த உறுதியைக் குலைத்துப் போட்டுக் கொண்டிருந்தது.
இது தான் அப்பா. எதையும் மனதில் வைத்துப் புளுங்காதவர். தற்காப்புக்காகவன்றி யாரிடமும் அதிர்ந்து ஒரு சொல் சொல்லாதவர். அவரோடு பிரச்சினை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் எல்லோருக்கும் அவர் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாதது ஒன்றே காரணமாக இருக்கும்.
சின்னச் சின்ன ஆசைகள் தான் அவரது. ஆனால், நடைமுறை வாழ்க்கையின் இயல்புகளும், பல்திசை இழுவிசைகளின் தளைகளும் சிலசமயம் நம்மைச் சமரசங்கள் செய்து கொள்ளப் பணிக்கின்றன. உணர்ச்சிகள் சார்ந்த சமரசங்கள் எப்போதுமே எங்கேயேனும் சில காயங்களை ஏற்படுத்தியே விடுகின்றன.
"நீங்க எல்லாம் வந்துருவீங்கன்னு எல்லாத்துக் கிட்டயும் சொல்லிக்கிட்டே இருந்தாரப்பா".
"எல்லாத்தையும் உள்ளுக்குள்ளயே போட்டுப் பூட்டி வச்சிருக்காரப்பா! நீ எப்ப வருவ? மருமக, பேத்திக எல்லாம் வருவாங்களா? வந்தா கூடவே கொஞ்ச நாள் இருப்பாங்களா? அவங்களோட பேசி வெளையாட மாட்டமா? அவங்களுக்குச் சீர் செஞ்சு பாப்பமா?…"
அன்றும் சரி, இன்றும் சரி, அறிவார்ந்த முரண் சார்ந்த என் சமரசங்களால் பலமுறை அடிபட்டுப் போனது அவரது ஆசைகளாய் இருக்கலாம் என்பது எனக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவான ஒரு அப்பா-மகனுக்கிடையேயான உறவு எங்களிடம் இல்லையோ என்று முன்பு -இருபது இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு- நான் சிலசமயம் எண்ணி வருந்தியதுண்டு. ஆனால் இப்போது அப்படி அல்ல. எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாவிட்டாலும் எங்களிடையே அண்மைக்காலத்தில் ஒரு வலுவான பிணைப்பு இருந்ததென்பதை என்னால் உணர முடிந்தது.
இருந்தும், என்னால் நிறைவேற்ற முடியாத ஆசைகளுக்கும், ஏக்கங்களுக்கும், செய்து தர முடியாத வசதிகளுக்கும், தந்திருக்கக் கூடிய மன உளைச்சல்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் என்னை ‘நம்ப அப்புக்குட்டி தான!’ என்று மன்னித்து விடுவார் என்றே நினைத்துக் கொள்கிறேன். ‘கெடக்குது போ! என்ன பெரிய விசயம்?’ என்பீர்களா அப்பா?
மருத்துவமனையில் நான் உடனிருந்து சுமார் பத்து நாட்கள் ஆகியிருந்தன. வீட்டுக்குச் செல்லும் நிலை வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். அன்றும் காலையில், "இன்னைக்கே வீட்டுக்குப் போயிரலாமா?" என்று கேட்டவரிடம் முழு உண்மையைச் சொல்லவில்லை. மருத்துவர் சோதித்துவிட்டுச் சொல்வார், போய் விடலாம் என்று தினமும் சொல்லும் பொய்யைச் சொல்லி வைத்தேன்.
ஆனால், காத்திருந்த கூற்றுவனுக்கோ அதற்கும் மேல் பொறுமையில்லை. இறுதி நிமிடங்களில் எதுவும் பேசவில்லை அப்பா. என்ன நினைத்திருப்பாரோ? கைகளைப் பிடித்திருந்தேன். தோளைப் பற்றினேன். நெஞ்சம் தடவினேன். ஆனால் அமைதியாகவே இருந்தார் அப்பா. துடிக்கும் திரை மட்டும் மெல்லக் கிடைமட்டமாகிக் கொண்டிருந்தது.
மறுநாள் மாலை…
காவிரிக்கரையின் ‘ஆத்மா’ எரிப்பகத்தில் அவர் நெஞ்சில் நான் வைத்த கொள்ளி, எரிவளியில் மூண்டு தழலாய் எரிந்து கொண்டிருக்கிறது. சிதையங்கு எரிய, அப்பாவின் கதையன்று முடிகிறது. சென்மம் நிறைந்து செல்பவரை வாழ்த்தும் வைரமுத்துவின் பாடல் தியான மண்டபத்தில் நிறைகிறது.
‘எல்லோரும் இங்கிருக்க எங்கே போகிறீர் அப்பா’ என்கிறேன். எனக்குப் பதிலேதும் கிட்டவில்லை. மெய்யெதுவென்ற அறியொணாமை மட்டுமே மிஞ்சியிருக்கிறது…
சனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
சென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க – வைரமுத்து.
நண்பா, எழுதியது சற்றே ஆறுதல் தந்ததா…
பெருவாழ்வு வாழ்ந்தவரை எம் கண் முன் நிறுத்திவிட்டாய்.
அந்த அற்புத ஆத்மா, இறையுடன் இணைந்து உன் தாய்க்கும், உனக்கும் தைரியமும், மீண்டு வரும் ஆற்றலையும் தரும்.
கூகுள் ப்ளஸ் ல் உங்கள் தளத்தை பார்த்ததும் சற்று ஆச்சரியம். ஆனால் உள்ளே வந்து முழுமையாக படித்த போது எழுதிய விதத்தை நினைத்து பாராட்டுவதா? விசயங்களை உள்வாங்கியதால் உண்டான மன துக்கத்தை பகிர்ந்து கொள்வது எப்படி என்று கலங்கிப் போய் நிற்கின்றேன்.
சில நாட்களுக்கு முன் தான் இந்த காணொளி காட்சி தென்பட்டது. ஒரு நாள் முழுக்க திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தேன். இன்று அதே காணொளி.
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
தந்தையாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
இறைவன் மன அமைதி தரட்டும்.
நெஞ்சம் கனக்கிறது. அவருடைய இழப்பு நமக்கு வலித்தாலும் கால் இழந்த நிலையில் அவர் அனுபக்கவிருந்த வலியில் இருந்து அவருக்கு ஒரு விடுதலை என்றே தோணுகிறது. எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரிய வில்லை. உங்களுக்கான அவரின் ஆசீர்வாதமும் அன்பும் என்றும் உங்கள் குடும்பதினார்க்கு இருக்கும். அவரின் கடைசி நேரதில் நீங்கள் உடன் இருந்ததே அவருக்கு மிக பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும். நீங்கள் இணைத்திருக்கும் கவிதையே உங்களுக்கான ஆறுதல்
Muthu
Selvaraj, it must have been quite difficult to write about this and hope it helped you some extent. Take care.
Deepest Condolences…
நண்பர்களின் அன்புக்கும் ஆறுதலான சொற்களுக்கும் நன்றி. இது நீண்டதொரு உரையானாலும் பொறுமையாகப் படித்தமைக்கும் நன்றி. ஒரு வகையில் எனது ஆறுதலுக்காகவும் நினைவுகளை ஆவணப்படுத்திக் கொள்ளவும் எழுதிக் கொண்டது இது. இப்போது ஒரு மாதம் ஆன நிலையில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். காலச் சக்கரம் சுழன்றபடியே இருக்கிறது தானே… நன்றி.
சென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க – வைரமுத்து பாடலின் சுட்டியை முகநூல் வழியாகப் பகிர்ந்து கொண்ட பேரா.செல்வாவிற்கும் நன்றி. மீண்டும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வழி செய்தது. பாடலும் இசையும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன.
Sorry for your loss. My Tamil is poor. I wish I could read your eulogy. I am really ashamed.
கலங்கிப் போய் நிற்கின்றேன்…..
வணக்கம் செல்வராசு,
செல்வராசு,
வணக்கம்.
தங்களில் வலைப் பக்கத்தின் வாயிலாகத் தான், தங்களின் தந்தை இறந்த செய்தியை அறிந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்
தங்களின் ஒவ்வொரு எழுத்தும் தங்கள் பெற்ற வலியின் வெளிப்பாடே! எத்தனை பேர் ஆறுதல் கூறினாலும் இவ் வலியைக் குறைக்க இயலாது. காலம் தான் குறைக்க இயலும்.
அவரின் ஆன்மா பிறவிப் பெருங்கடலைக் கடந்து அமைதி பெற, அனைவருக்கும் பொதுவான ஆற்றல் துணை புரியட்டும்.
அன்பின் செல்வா:
முழுவதும் படித்தேன். நெகிழ்வாய் இருந்தது. ஆறுதல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
மனம் ஆறுதலடையும்.
அன்புடன்
தங்கமணி
இன்றுதான் படிக்கமுடிந்தது. ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தாயாருக்கும் ஆறுதலைச் சொல்லுங்கள். அவர் ஆன்மா அமைதியுறும்.
அன்புடன்,
இராம.கி.
எமது ஆழ்ந்த இரங்கல்களும், அன்பின் நண்பர் செல்வராசு. தந்தையைப் பற்றிய நினைவுகள் என்றென்றும் பசுமையாக உங்களுக்கு ஒத்தடமளிக்கும்.
Ramesh, not a problem! Appreciated your visit despite short schedule. Regards to your parents as well. Will try to meet them next time.
தங்கமணி, எழுதியிருந்தீர்களே… “என் மகன் எனது தொடர்ச்சி என்பது போல அப்பாவும் எனது முந்தைய இருப்புதான் என்பது… இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.” அன்பிற்கு நன்றி.
தனபாலன், செந்தில், இராம.கி ஐயா, வாசன், அனைவரின் ஆறுதலான சொற்களுக்கும் அன்பிற்கும் நன்றி.
நெஞ்சம் கனக்கிறது.
Dear my son selva,
Yes, Selvaraj time is the best heal. I am sure it is a big loss to you; the way you have written shows the respect, love and affection you have for your father. Take care and let God give you the courage to face this.