அப்பாவின் வயது
Aug 9th, 2005 by இரா. செல்வராசு
“அப்பா… ஒய் ஆர் யுவர் மாம் அண்ட் டேட் ஓல்ட்?” என்று கேட்டது குழந்தை. எட்டிக் குதித்து மேலே விழுகிறவளைத் தாங்கிக் கொண்டு தூக்கிச் சுற்றும் தெம்பு இன்றைக்கு அவருக்கு இல்லை. ஈரோடு நிலையத்திற்கு வந்து நின்ற இண்டர்சிட்டி ரயிலில் ஏற்றிவிடப் பெரியவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த அந்த இரு நிமிடங்கள் கூட அவருக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கக் கூடும். ஒரு காலத்தில் இறுக்கி வைத்துக் கொள்பவரின் வயிற்றைக் குத்திப் பார்த்து விட்டு, ‘கல்லு மாதிரி இருக்கு’ என்று வியந்து நின்றிருக்கிறேன். இன்று பாதியாகிப் போன தேகமும் அங்கங்கு விழுந்திருக்கும் குழிகளும் குறுகும் தோளும் ஏறிக் கொண்டே இருக்கும் வயதிற்குச் சாட்சியங்கள் கூறுவனவாய் இருக்கின்றன. ஓரிரு வருட இடைவெளியில் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இப்படி வயதாகும் மாற்றங்கள் முகத்தில் அறையும். இம்முறை அப்படி ஏதும் தாக்கங்கள் ஏற்படவில்லை என்பதற்கு இந்தச் செலுத்தத்தை இயல்பென்று மனம் ஏற்றுக் கொண்டது காரணமா அல்லது அந்த வயதேறும் செலுத்தமே இப்போது மிதமாகிவிட்டதா என்று தெரியவில்லை.
ஊரை விட்டுக் காவிரிப் பாலத்தைத் தாண்டி இரயில் விரைகிறது. பெரும் பசுமைப் பகுதி என்று சொல்லி விட முடியாது என்றாலும் இந்த மண்ணுக்கே சொந்தமான சின்னங்கள் காட்சி தருகின்றன. ஆங்காங்கே சில தென்னை மரங்களும் பனை மரங்களும் உயர்ந்து நிற்கின்றன. வண்ணக் கோலத்தில் எல்லைத் தெய்வங்கள் கண்ணை உருட்டிக் கொண்டு ஓரமாய் நிற்கின்றன. வண்டி முன்னே செல்ல நினைவுகள் பின்னே செல்கின்றன.
“ங்கோவ், ஒழுங்காச் சாப்பிடுங்க. இப்படி ஒண்ணுஞ் சாப்பிடாம ஒடம்பே எளச்சுப் போச்சு. வெறும் மேலோடு இருந்த ஆளப் பாத்துக் கோயக் கும்பாவிசேத்துக்கு வந்த சனமெல்லாம் பேசுச்சு. ராமசாமி ஒடம்பு பாதி ஆயிருச்சுன்னு”, உணவு பரிமாறுகையில் அம்மாவின் கவலை அதட்டலாய் வெளி வந்தது. “அட. வேண்டாம் போ. பசிக்கல”
“உடுங்க அம்மா. சாப்பிடாமத் தான் இப்படி ஆயிடுச்சா? அப்புறம் வயசும் அறுபதத் தாண்டிருச்சுல்ல” என்றேன். போன வருடம் பணியோய்வு பெற்ற அப்பாவுக்குச் சுமார் அறுபது வயதிருக்கும் என்று கணக்கிட்டேன். அறுபது வயதுக்காரருக்கும் பல ஆண்டுகளாகச் சர்க்கரை இருப்பவருக்கும் உடம்பு சற்று இளைப்பது இயல்பு தானே.
ஒரு கவளம் சோற்றை வாயில் போட்டபடி அப்பா சொன்னார். “ம்..ம்.. அறுவதுக்கு மேலயே இருக்கும். முப்பத்தியஞ்சிலயே பொறந்தனே”
“முப்பத்தியஞ்சா…? அப்பா, அப்படின்னா உங்களுக்கு இப்போ எழுவது வயசாகுதுங்ப்பா. தப்பா சொல்றீங்களா இருக்கும். போன வருசம் தானே ஓய்வு பெற்றீங்க?”
“இல்லப்பா. யுவ வருசம்னு பொறந்த நாளப் பனையோலைல எழுதி இருந்ததெல்லாம் நியாபகம் இருக்குது”. உள்ளறைக்குச் சென்று என்னவோ ஒரு சிறு கையேட்டை எடுத்து வந்தார். வருடங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களுமாய் இருந்த பட்டியல் ஒன்றைக் காட்டிப் “பாரு… யுவ வருசம் – 1935” என்றார்.
இன்னும் சற்று அவநம்பிக்கையாகப் பார்த்தவனைப் பார்த்துச் சொன்னார். “உங்க தாத்தா செத்தது தாரண வருசம். அப்போ நான் நாலாவது படிக்கிறேன். அதுக்கு அடுத்த வருசத்துல இருந்து பள்ளிக்கூடத்துக்குக் கூடப் போகல”
கையேட்டைப் பார்க்கிறேன். தாரண ஆண்டு 1944-45 என்று இருந்தது. ஒன்பது, பத்து வயது. நாலாம் வகுப்பு. சரியாகத் தான் இருக்கிறது.
“அப்போ அதுக்கு அப்புறம் நீங்க பள்ளிக்கோடம் போகலையா? பத்தாவது வரை போனீங்கன்னு நெனச்சேன்”. அப்பாவைப் பற்றி நிறையத் தெரியவில்லை. அலுவலகக் குறிப்புக்களில் ஓரிரு வருடம் மாறிப் போயிருந்தது என்று நினைத்தேன். வயது பத்து வருடம் மாறி இருந்திருக்கிறது.
“இல்லை. வெள்ளகோயலுக்குக் கோர்ட் வேலைக்குப் போகும் போது செர்ட்டிஃபிக்கேட்ல வயசும் படிப்பும் மாத்தி அப்பிடிப் போட்டுக் கொடுத்துட்டாங்க”.
“சரி. ஏங்கப்பா அதுக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்குப் போகலே. அனுப்பறதுக்கு ஆள் இல்லியா?”
“காட்டுல ஆடு மேய்க்கறதுக்கு ஆளு இல்ல. அம்மாவுக்கு மூணு பசங்க. மூணு பேரும் வேலைக்குப் போனா மாசம் மூணு மூட்டை கூலி கெடைக்கும் – கம்போ, நெல்லோ மறந்துபோச்சு. அதனால பள்ளிக்கூடத்துக்குப் போகலே.”
இன்னும் நம்ப முடியவில்லை. அப்பாவைப் பார்த்தால் எழுபது வயது ஆளாகத் தெரியவில்லையே. சந்தேகம் தீர அம்மாவை இன்னும் ஒரு கேள்வி கேட்கலாம். “அம்மா, உங்க கலியாணத்தப்போ அப்பாவுக்கு என்ன வயசு?”
“அதென்னமோ முப்பத்தியொண்ணோ என்னவோ இருக்கும்னு நெனைக்கிறேன்”
முப்பத்தியொண்ணு. ஒரு வருடம் கழிந்து நான் பிறந்து, இன்று என் வயதைக் கூட்டினால், கிட்டத்தட்ட எழுபது வரத்தான் செய்கிறது.
எழுபது வயது ஆள் என்று நம்பமுடியவில்லை என்று சொன்னேன். இளைத்த உடல் என்று சற்று முன் பேசிய அம்மாவின் முகத்தில் கூட ஒரு பெருமிதம் தெரிந்ததாகத் தோன்றியது. பெரிதாக எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத குணம் அவருக்கு. “அடப் போ! என்ன பெரிய இது?” என்று எந்தக் கவலையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப் படுத்திவிடும் குணமே அவருடைய பெரிய பலமும் பலவீனமும் என்று தோன்றியது. இரண்டில் இருந்தும் நான் எடுத்துக் கொள்ளச் சில பாடங்கள் உண்டு.
நான் எழுதிய கடிதங்களை எல்லாம் பத்திரமாய் ஒரு கோப்புக்குள் போட்டு வைத்திருக்கிறார். சமீப காலங்களில் நான் எழுதுவது குறைந்து போனதை நினைத்துப் பார்க்கிறேன். “இப்போது நேரமில்லை. விரிவாகப் பிறகு. இத்துடன் ஒரு காசோலை இணைத்துள்ளேன்” என்று நான் எழுதிய துண்டுக் காகிதத்தைக் கூடத் தூக்கியெறியாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். சிலசமயம் கடிதத்திற்கு மாற்றாய் என் வலைப்பதிவுக் கட்டுரைகளைப் படியெடுத்து அனுப்பி இருக்கிறேன். அவையும் அங்கு பத்திரமாக இருக்கின்றன. அதுவும் என் பதிவுகளின் நோக்கத்தில் ஒன்று தானே. அதையாவது தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஓய்வு நேரங்களில் தானே வெட்டி ஒட்டி அட்டை போடுவதும், பைண்டு செய்வதும் ஒரு பொழுதுபோக்காய் வைத்திருக்கிறார். வீட்டில் கிடக்கிற புத்தகங்கள் கையேடுகள் எல்லாம் அவர் கையில் பட்டு பைண்டு செய்து கிடக்கின்றன. ரேசன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகங்கள், மின்சாரக் கணக்கட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எல்லாம். மைப்புட்டிக்கும் கூடத் தானாக ஒரு பெட்டி செய்து வைத்திருக்கிறார். எழுத்தட்டை செய்து தன் பழைய அலுவலகத்தில் சிலருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
“ரெண்டு மாசம் முன்னாடி உன் பிரெண்டு செந்திலுக்கு பெருந்துறையில ஒரு கோர்ட் வேலைக்கு உதவி தேவைன்னு போயிட்டு வந்தேன்”
“நம்ம முன்னாடி இருந்த வீட்டுப் பழைய போஸ்ட்மேன் பையனுக்கு ஒரு வேலை விஷயமா உதவி தேவையாம். நீ வந்தா போன் பண்றேன்னு சொன்னேன். வரச் சொல்லட்டுமா?”
“அடுத்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் போறேன். அரச்சலூர்க்காரர் ஒருத்துரு பையனக் காலேஜ்ல சேக்கறதுக்குக் கூட ஒத்தாசைக்கு என்னையும் வரச் சொல்லி இருக்கார். அப்படியே சென்னைக்கும் ஒரு நடை போலாம்னு பாக்குறேன்”
ஓய்வான காலத்தில் சும்மா இருக்காமல் இப்படி ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு ஊக்கமாய் இருப்பது முக்கியம் என்று தோன்றுகிறது. “சரி. பாத்துக்கங்க. ரொம்ப அலைஞ்சு ஒடம்பு கெடாமப் பாத்துக்குங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.
பெங்களூரை நோக்கி விரைகிறது ரயில் வண்டி. லேசான மழைத்துளியோடு காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
“யம்மி” என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு ரயில்வண்டியிற் தக்காளி சூப் குடிக்கிற என் மகளுக்காக ஊதி ஊதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
//இன்று பாதியாகிப் போன தேகமும் அங்கங்கு விழுந்திருக்கும் குழிகளும் குறுகும் தோளும் ஏறிக் கொண்டே இருக்கும் வயதிற்குச் சாட்சியங்கள் கூறுவனவாய் இருக்கின்றன. ஓரிரு வருட இடைவெளியில் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இப்படி வயதாகும் மாற்றங்கள் முகத்தில் அறையும்.//
//அப்பாவைப் பற்றி நிறையத் தெரியவில்லை.//
இதைப் படிக்கப் படிக்க வயதான என் தந்தையும் நினைத்துப் பார்க்கிறேன், கஷ்டமாகத்தான் உள்ளது. முதுமை,தனிமை எல்லாம் கொடுமைங்க.
செல்வா…ஏதோ ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கு…ம்ம்..நன்றிகள் செல்வா!
(sbalaji at gmail.com -kku ஒரு மெயில் அனுப்ப முடியுமா?)
உங்க அப்பாவை கண் முன்னே கொண்டு வந்திருக்கீங்க..நல்ல வாசிப்பனுபவம்..
மூன்று வருடம் முன் இந்தியா சென்றபொது என் பெற்றோரை பார்த்ததும் அதிர்ச்சியாய் இருந்தது. குழந்தைகள் மட்டும் அல்ல முதியோரிடத்தும் காலத்தின் மாற்றம் சட்டென்று தெரிகிறது.இன்னமும் என் தந்தையும் ஓயாமல் ஏதாவது செய்து கொண்டிருகிறார். அதுவே அவருக்கு சக்தியை தந்து கொண்டிருக்கிறது.நான் கூட இன்னமும் நிறைய கடிதம் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
நல்ல பதிவு செல்வராஜ்.
ஊருலே என்னோட மாமனாருக்கும் மாமியாருக்குமே வயசாயிட்டது. மாமியாரைவிட
மாமனார் நல்லாத்தான் இருக்கார்ன்னு இருந்தாலும், அகாலநேரத்துலே ஃபோன் மணி
அடிக்கறப்ப ஒரு பயத்தோடுதான் ரிஸிவரை எடுக்கறோம்.
ஹும்…வயசு அவுங்களுக்கு மட்டுமா ஏறுது? நமக்கும்கூடத்தான்.
செல்வராஜ், பதிவுக்கும் எண்ணப்பகிர்தலுக்கும் நன்றி.
சிலருக்கு எவ்வளவுதான் வயது ஏறினாலும் எங்கள் மனதிலிருக்கிற பிம்பத்துக்கு மூப்பில்லைத் தானே.
ஆனாலும், வயது போகிறதென்பது அவர்களுடன் கழிக்கும் காலத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கும். பத்மா சொல்வது போல நானும் எழுத ஆரம்பிக்க வேண்டும்.என்னதான் தொலைபேசினாலும், கடிதங்கள் போல் வராதல்லவா..
என் கணவர் அவரது அம்மாவின் கடிதங்களை ஒரு கோப்பில் போட்டு பத்திரமாக வைத்திருக்கிறார். பிள்ளையைப் பிரிந்திருக்கும் தாயின் எண்ண ஓட்டங்களும் கவலைகளும் ஏக்கங்களும் அக்கடிதங்களில் நிறைந்திருக்கும்.
நெகிழவைக்கும் நல்லதொரு பதிவு செல்வராஜ்.
செல்வா,
உங்களின் இந்த நினைவுகளோடு முற்றிலும் ஒன்றி உறவாட முடிந்தது.
தந்தை – மகன் உறவில் அன்பைப் பிரகடனப் படுத்துதல் இருக்காது. அன்பை வேண்டுவதும், அன்பை வழங்குவதும் tacit ஆக நிகழ்பவை, இருவருக்குமட்டுமே தெரிந்தவை.
இந்தப் பதிவிலும் அதை அதே அழகுடன் பொதிந்திருக்கிறீர்கள்!
நன்றி.
//அப்பாவைப் பற்றி நிறையத் தெரியவில்லை.//
இது சத்தியம்.. எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும் போல.. 🙂
// “இப்போது நேரமில்லை. விரிவாகப் பிறகு. இத்துடன் ஒரு காசோலை இணைத்துள்ளேன்” என்று நான் எழுதிய துண்டுக் காகிதத்தைக் கூடத் தூக்கியெறியாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.//
மனசை ரொம்ப பேஜார் பண்ணின வாக்கியம்..
கருத்துக்களைத் தந்து நெகிழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த உணர்வுகள் பலருக்கும் பொதுவானவை என்று மீண்டும் உணர முடிகிறது. நன்றி.
படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையோடு தொடர்பு படுத்த வைக்கும் நெகிழ்ச்சியான பதிவு, இயல்பான நடையில்.
-Vinodh
http://visai.blogspot.com
கண்ணீர் வந்து விட்டது. அவர்களோடு இருக்க வேண்டிய நேரங்களிள் நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையிழ் ஓடிட்டு இருக்கொம்,
நம்மால் அவர்களுக்கு திருப்பி செய்ய முடியாது, நம் குழ்நதைகளுக்குதான் செய்ய முடியும்.
செல்வராஜ்,
உங்களது பல பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். ஏனோ, இதுவரை பின்னூட்டியதில்லை. சமீப காலத்தில் நான் படித்தவற்றில், மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு பதிவை தந்ததற்கு என் நன்றிகள் !
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், எனக்கு தந்தை-மகன் உறவுடன் அதிகம் பரிச்சயம் கிடையாது ! ஆனால், உங்கள் பதிவைப் படிக்கும்போது, ஏதோ ஒன்றை இழந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை !
நான் தமிழ் வலையுலகில் எழுதப் பழகிக் கொண்டிருந்தபோது எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்தது.
http://balaji_ammu.blogspot.com/2004/07/blog-post.html
வினோத், விமலா, பாலா உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. பாலா, உங்கள் பக்கத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை. அலுவலக அரண் காரணமாய் இருக்கலாம். விமலா, கடைசி வரியின் உணர்ச்சிகளை நீ(ங்கள்) சரியாகப் புரிந்திருப்பது தெரிகிறது. அதனை வலுப்படுத்துவதாய் இருக்கிறது உம் கருத்து.
செல்வராஜ், உங்களிடமிருந்து மீண்டும் ஒரு இயல்பான தந்தை-தனயன் உறவைச் சொல்லும் பதிவு. முன்பு உங்கள் அப்பா ஓய்வு பெற்ற போது ஒன்று எழுதியிருந்ததாக நினைவு.
நன்றி.
நன்றி தங்கமணி. ஆம், மேலே கூட அந்தப் பதிவைச் சுட்டியிருக்கிறேன் (“போன வருடம் பணியோய்வு”).
செல்வராஜ்,
“_” ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்கள் http://balaji%5fammu.blogspot.com (instead of http://balaji_ammu.blogspot.com) என்று முயன்று பாருங்கள். நன்றி.
என்னத்தை சொல்றது என்று தெரியேல்ல. ஓடுகளாய் போனபின்னும் இயங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் தியாகங்களை நினைவு படுத்தும் இப்படியான பதிவுகள் வாசிக்கும் போது கனத்த மனசாகிப்போகிறது. பெற்றோரின் தியாகத்தில் தானே நாங்கள். நன்றி செல்வராஜ்.
நன்றி கயல்விழி. எரித வடிகட்டி இருப்பதால் முதன்முறை நீங்கள் இட்ட பின்னூட்டம் என் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது. இனி உடனே வெளியிடப்படும்.
செல்வராஜ், நீங்கள் இன்னும் ஈரோட்டில் இருந்தால், ramachandranusha@yahoo.co.in க்கு ஒரு மடல் தட்டுங்க. சின்ன உதவிக்காக
உஷா
[…] இயல்பாக இருக்க முடிவது தான் அவருடைய நீண்ட கால வாழ்வின் சூத்திரம் என்று எனக்குத் தோன்றும். ஆனால், […]