• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« அப்பச்சி – 0
தையிலே தீபாவளி »

அப்பாவின் ஓய்வு

Apr 30th, 2004 by இரா. செல்வராசு

நேற்று என்அப்பாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய வாழ்வின் இன்னொரு பாகத்தின் முடிவு, இன்று ஈரோடு நீதிமன்றத்தின்வருகைப் பதிவேட்டில்கடைசியாகப் போடும் கையொப்பத்தோடு நிகழ்ந்திருக்கும். பணியில் இருந்து இன்று முதல் அவருக்குஓய்வு.


“எத்தனை வருஷம் ஆச்சுங்க அப்பா?”


கொக்குமடைப்பாளையம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இது தான். இளவயதில் தந்தையை இழந்தபின் தாயின் வளர்ப்பிலே மூன்று மகன்களில் இவர் மட்டும் பள்ளியிறுதி ஆண்டு (?) வரை கல்வி கற்றதே பெரிய விஷயமாகத் தான் இருந்திருக்கும். கொங்குநாட்டின் பரவலானபங்காளித் தகராறுகள் இங்கும் உண்டு. அவரது மற்ற இரு சகோதரர்கள் உடன் பெரிதாய்த் தொடர்பேதும் இல்லாதது ஒரு வகையில் அடுத்த சந்ததியினருக்குஇழப்புத் தான். அப்பாவிற்குமூத்தவரானவரும், இரட்டையராய் உடன்பிறந்த இளையவரும் இன்று உலகத்தில்இல்லை.


“அறுவத்தி ஆறுலருந்து வேல செய்யறேன். முப்பத்தெட்டுவருசமாச்சு”



நன்றாகக் கணக்கு வைத்திருந்தார் அப்பா. ஆரம்பத்தில் வெள்ளகோயிலில் சுமார் இரண்டு வருடம், பிறகு ஈரோட்டிற்கு மாற்றல். இடையே ஒரு வருடம் தாராபுரம், ஐந்து வருடங்கள் கோபி என்று தான் மட்டும் மாற்றலாகிச் சென்ற வருடங்கள் கழித்து, பெரும்பாலும் ஈரோட்டில் தான் அவருடைய வேலை.

அவருடைய தாத்தாவோ அப்பாவோ ஊரில் அருமைக்காரராய் இருந்தவர். அருமைக்காரர் என்பவர் அன்றும் இன்றும் திருமணங்களை முன் நின்று நடத்தி வைக்கும் சமுதாயப் பெரியவர். நான் வருடம் ஒரு முறை சொந்த ஊருக்கு மற்றும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது பார்க்கும் சொந்தங்கள் பல என்னை “யாரு அருமக்காரர் பேரனா” என்று அடைமொழியோடு தான் அழைப்பது வழக்கம்.

அருமைக்காரர் (கொள்ளுப் ?) பேரன் இன்று அமெரிக்காவில் வேலை செய்கிறான் என்பதில் அவருக்கும் கொஞ்சம் பெருமை தான். சில மாதங்களுக்கு முன் ஊருக்குச் சென்றிருந்தபோது என் வேலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

“நீ என்ன வேலை பண்ணுறே? கேக்கரவங்க கிட்ட என்னன்னு சொல்றது?”

“அப்பா, நான் ஒரு வேதிப் பொறியியலாளன். செயலாக்கக் கட்டுப்பாட்டுவியல் துறையில் இருக்கிறேன்”, என்று தமிழில் தான் நான் சொல்லி இருந்தால் அவருக்கு மட்டுமல்ல 95 சதவீதம் யாருக்குமே புரிந்திருக்காது என்பதால் இன்னும் கொஞ்சம் எளிமையாய் விளக்க முற்பட்டேன்.

“நான் படிச்சது கெமிக்கல் எஞ்சினியரிங் அப்பா. செய்யற வேல வந்து, அது வந்து… இப்போ எந்தப் பொருள உற்பத்தி பண்ணனும்னாலும் அங்கெல்லாம் சிலதக் கட்டுப் படுத்தனும். வெப்ப நிலை சரியா இருக்கா, அழுத்த நிலை சரியா இருக்கா அப்படினெல்லாம் பாக்கணும். அந்த வெவரத்தப் பாக்குறது, அதக் கட்டுப் படுத்தறது, அதுக்கு வேணுங்கற கம்ப்யூட்டர், அமைப்பு வேலை இதெல்லாம் செஞ்சு குடுக்கறது – இதெல்லாம் பண்ற ஒரு கம்பெனியில் வேலை செய்யறேன். உதாரணத்துக்கு, இப்போ சுடு தண்ணி வேணும்னு வச்சுக்குங்க…”

“ஓ, இன்னிக்கு இவன் வந்துட்டான் பாரு…” என்பது போன்ற ஏதோ ஒன்றை திடீரென்று சொன்னார். திரும்பிப் பார்த்தேன். அவரது கவனத்தை ஈர்ப்பதில் சன் டிவியின் ஏதோ ஒரு அழுமூஞ்சித் தொடர்காட்சியோடு என் வேதிப் பொறியியல் வேலை விவரத்தால் போட்டி போட முடியவில்லை. சரி என்று விட்டு விட்டேன். தொடரில் அடுத்த இடைவெளி கிடைத்த போது என்னைப் பார்த்துச் சொன்னார்.

“யாராவது கேட்டா நீ ஒரு பெட்ரோலியம் இஞ்சினியர்னு சொல்லிக்கிட்டு இருக்கிறேன்”.

நான் வேலைக்குச் சேர்ந்த முதல் மூன்று வருடங்கள் ஒரு கச்சா எண்ணைச் சுத்தகரிப்பு ஆலையில் (பெட்ரோலியம் கம்பெனி) இருந்தது பிறரிடம் விளக்க எளிதாய் இருந்திருக்கிறது. சரி அப்படியே சொல்லி விடுங்கள் என்று கூறி விட்டேன்.

என் வேலையை அவருக்கு விவரிப்பது மட்டுமல்ல, அவரது வேலையை நான் புரிந்து கொள்வதும் எளிதாய் இருந்ததில்லை. ஒருவேளை பெரிதாய் நான் முயன்றதும் இல்லையோ என்னவோ. “கட்டளை வழங்குனர்” (Process Server) என்கிற ஒரு வேலையில் இருந்தார். வாதி, பிரதிவாதி போன்ற சொற்பிரயோகங்கள் நிறைய இருக்கும். நீதி மன்றங்கள் வழங்கும் கட்டளைகளை அல்லது அறிவிப்புக்களை அவை சொல்பவர்களிடம் கொண்டு சேர்ப்பது, சேர்த்த பின் கையோப்பம் வாங்கி வருவது, அதற்குச் சாட்சி, அத்தாட்சி என்று இன்னும் சில கையொப்பங்கள் இவையெல்லாம் வாங்கி வருவது இது தான் பிரதான வேலை என்று நினைக்கிறேன். அதற்காக சுற்றுப்புற ஊர்கள், கிராமங்கள் என்று அவர் நிறையச் சுற்றி இருக்கிறார். இதன் பெயர் “கட்டள டூட்டி”.

பிறகு வெளியூர் செல்லவேண்டியிராத நாட்களில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்தாசையாய் இருப்பதும் செய்வதுண்டு என்று எண்ணுகிறேன். தோல்பட்டையில் இருந்து குறுக்கே செந்நிறத்தில் அகலப் பட்டையொன்று அணிந்து கொண்டு இருப்பார் என்று நினைவு. (“கோர்ட் டூட்டி”). பிறகு ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் “பாரா டூட்டி” என்று இரவு நீதிமன்றத்தில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும். காவலுக்காக இருக்கலாம். ஆனால் தூங்கப் போனால் அது என்ன காவல் என்று தெரியவில்லை!

இது தவிர இன்னும் சில வேலைகளும் செய்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். சில கைதிகளை ஈரோடு நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காவலர்களோடு நீதிமன்றப் பிரதிநிதியாகச் செல்ல வேண்டும் என்று சில முறைகள் சென்னைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அப்பாவுடன் அதிகமாய் நான் அவர் பணியிடத்துக்குச் சென்றதில்லை. ஆனால், பலமுறை என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவருக்கு ஆவல் இருந்திருக்கிறது. சிறு வயதில் அவர் அழைப்பிற்கிணங்கிச் சென்று வந்திருக்கிறேன். அவர் மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் என்னைப் பற்றிப் பெருமையாய் அறிமுகப் படுத்தி வைத்துத் தானும் பெருமைப் பட்டுக் கொள்வார். சிறிது வளர்ந்த பிறகு, சிலர் திருப்பி அப்பாவை நடத்தும் விதம் அவ்வளவாய்ப் பிடிக்காமல் போய் அதன் பிறகு நான் அதிகமாய் கோர்ட் பக்கம் சென்றதில்லை. அப்படி இருப்பவர்களிடம் கும்பிடு போட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் இனி நாம் இல்லை என்று அப்பாவிற்குப் புரிய வைக்க முயன்றிருக்கிறேன். “கெடக்குது விடு” என்று அப்பா கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்.

உண்மையிலேயே மனமுவந்து பாராட்டியும் ஊக்கம் தந்து உற்சாகப் படுத்திய சில வக்கீல்கள், நீதிபதிகள், இவர்களைச் சில சமயம் கண்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் நன்றி.

எதைப் பற்றியும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாதிருந்தவர் அப்பா. ஒரு முறை அமெரிக்காவிற்கு ஒரு பயணத்திற்கு அழைத்து வரலாம் என்று எண்ணியிருந்தோம். அரசு அலுவலரான அவர் வெறும் பாஸ்போர்ட் வாங்குவதற்கே அவர் பணியிடத்தில் இருந்து எந்தப் பாதகமும் இல்லை என்றாற்போலக் கடிதங்கள் வாங்க வேண்டும் என்று அவரை கோபிக்கும், ஈரோட்டிற்கும் சென்னைக்கும் இடையே பல மாதங்கள் அலைக்கழித்துத் தாமதப் படுத்தினர். முதலில், சாதாரண ஊழியரான அவருக்கெல்லாம் எதற்கு அப்படியான சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன என்று தெரியவில்லை. எந்த அரசு ரகசியத்தை அவர் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப் போகிறார்? அப்புறம் உள்ளே யாரோ தவறான படிவத்தில் ஆரம்பித்து விட்டார்கள் என்று அதனைச் சரி செய்யச் சில வாரங்கள்… இப்படியாகத் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.

அதோடு, ஒரு பாஸ்போர்ட் வாங்க எதற்குத் தனது மகனது அமெரிக்க நிறுவனத்தில் இருந்து கடிதம், சம்பளச் சான்றிதழ் போன்றவை தேவை என்றும் எனக்குப் புரியவில்லை. அமெரிக்க அரசு விசா வழங்க இந்த விவரங்கள் கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தியக் குடியுரிமை அட்டை வைத்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் அல்லவா ? வெளிநாடு போகாவிட்டாலும் ஒருவர் அதனைப் பெற்று வைத்துக் கொள்ளலாமே ?

இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க அவர் விரும்பவில்லை. சென்னைக்கும் ஈரோட்டிற்கும் இடையே அலைந்து “சளுப்பாய் இருக்கிறது” என்று வரும்போது வரட்டும் என்று நினைத்து விட்டு விட்டார். கடைசியில் வெகு தாமதமான காரணத்தாலும், அதற்குள் இங்கு குளிர்காலம் தொடங்கி விட்டதாலும் அப்பாவால் வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பெரு வருத்தம் தான் அவருக்கு. ஆயினும் அந்தக் குளிரில் வந்து இங்கு வீட்டினுள் சிறையிருப்பதற்குப் பதிலாய்த் தாமதமாய் வந்தாலும் நல்ல சமயத்தில் வரட்டும் என்று நான் எண்ணினேன்.

இனிமேல் தான் அவர் அரசு ஊழியர் இல்லையே. இனி எங்கு செல்லவும் யாருடைய அனுமதியும் அவருக்குத் தேவை இல்லை. இத்தனைக்குப் பிறகும் அப்பா, “எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. எல்லார்த்துக்கும் நம்ப பேர்ல வெகு பிரியம். நல்ல செல்வாக்கு” என்றார் மிக வெகுளியாக.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in வாழ்க்கை

14 Responses to “அப்பாவின் ஓய்வு”

  1. on 01 May 2004 at 6:05 am1Thangamani

    இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், இயல்வாகவும் இருந்தது. ஒருமுறை வெங்கட் எழுதியிருந்ததுபோல மிகப்பெரிய ஆராய்ச்சி நிலைய இயக்குநர்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் மிகச்சுலபமாக எல்லா அத்துமீறல்களையும் செய்யமுடியும். ஆனால் சாதரண மனிதர்கள் மேல் விழுந்து அழுத்தும் சட்டங்கள், மரபுகள்.. நான் இவையெல்லாவற்றையும் வெறுக்கிறேன். இதைக் கொண்டாடும் சகல காரணங்களையும் வெறுக்கிறேன். மனிதர்களை அறியாமையிலும், போலியான கெளரவ மதிப்பீடுகளிலும் சிக்கவைத்து சுரண்டுகிற இந்த உத்திகள் மாறிவிடாவண்னம் பாதுகாக்கும் நமது அரசியலை, கல்வியை, சமூகத்தை….

    நல்லது, இந்தப் பதிவுக்கு நன்றி. உங்கள் அப்பாவுக்கு உண்மையில் வாழ்த்துகள். ஒரு நாள் யோசித்துக் கொண்டிருந்தபொழுது தோன்றியது, உங்கள் குழந்தைகளின் படங்களை ஏன் அவர்களே பாதுகாத்து வைக்கும் படியாக (கணினியில்) நீங்கள் கற்றுத் தரக்கூடாது? ஏனெனில் எனது பல (சிறுவயது) ஓவியங்கள் இப்போது இல்லை; அவை அற்புதமானவை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவைகளைப் பாதுகாத்து வைத்திருந்தால் அது எனது வேறுசில தளங்களில் பயன்படுவதாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  2. on 03 May 2004 at 9:05 am2செல்வராஜ்

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தங்கமணி.
    குழந்தைகளின் படங்களைப் பாதுகாக்க நீங்கள் சொன்னதும் நல்லது தான். அது பற்றி நானும் எண்ணியிருக்கிறேன். பலவற்றைப் போல அதையும் செயல்படுத்தாமல் இருக்கிறேன். முக்கியத்துவம் தர வேண்டும்.

  3. on 04 May 2004 at 12:05 pm3Dubukku

    arumaiyaana pathivu. pala ninaivukaLai kiLaRi vittathu.

  4. on 04 May 2004 at 6:05 pm4Pari

    கொங்கு நாட்டின் பரவலான பங்காளித் தகராறுகள் இங்கும் உண்டு.
    —
    எங்கும் உண்டு.

    எல்லாருக்கும் ஞாபகத்தக் கிளறிவிட்டு வேடிக்கைப் பாக்றதே பொழப்பாப் போச்சு 🙂

  5. on 05 May 2004 at 12:05 am5sundaravadivel

    //எல்லாருக்கும் ஞாபகத்தக் கிளறிவிட்டு வேடிக்கைப் பாக்றதே பொழப்பாப் போச்சு :-)//

    🙂

    ஜெயகாந்தன் மணிவிழாவிற்கு அவரது மகனிடமிருந்து (ஜெயசிம்ஹன்?) விழாவுக்கு வந்த கடிதத்தால் உந்தப் பட்டு, எங்கப்பாவின் பணி ஓய்வு நாளன்று நான் ஒரு கடிதமெழுதி விழாவிலே வாசிக்க அனுப்பினேன். எளிமையையும், உண்மையையும் மதிப்பவர்கள்; பெரிய மனிதர்கள் நம் அப்பாக்கள்.

  6. on 05 May 2004 at 10:05 am6Kasi

    //இத்தனைக்குப் பிறகும் அப்பா, “எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. எல்லார்த்துக்கும் நம்ப பேர்ல வெகு பிரியம். நல்ல செல்வாக்கு” என்றார் மிக வெகுளியாக.//
    செல்வா, எல்லாமே மனதில் இருக்கிறது. ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை அவர்தான் சொல்லவேண்டும், சொல்ல முடியும். அவர் தனக்கு நிறைவான ஒரு பணி செய்திருக்கிறார். நீதிபதியானாலும், குமாஸ்தாவானாலும், தங்கள் மனதில் என்னவாக இருக்கிறோம் என்பதில்தான் பெருமை. அதில் அவர் இமயம். வெகுளித்தனம் ஒன்றுதான் இந்த உலகில் கற்றுக்கொள்ள முடியாத ஒன்றே ஒன்று. Ignorance is bliss. அல்லவா? வெகுளியாக மட்டும் இருக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

  7. on 05 May 2004 at 3:05 pm7Pari

    காசி,
    நீங்க என்ன சொல்றீங்க? ஒண்ணும் வெளங்கல :-))

  8. on 05 May 2004 at 9:05 pm8செல்வராஜ்

    டுபுக்கு, பரி, சுந்தர், கிளறிய நினைவுகள் மனதுக்கு ஒரு சுகந்தத்தைத் தருவதை உங்கள் பதிவுகளிலும் நான் கண்டிருக்கிறேன். இது என் பங்கு. ஊக்கத்திற்கு நன்றி.
    காசி, நன்றி. எப்படி இருந்தாலும் பணி/பணியிடம் பொறுத்த அளவில் அப்பா சந்தோஷமாகத் தான் இருந்தார் என்று எண்ணுகிறேன்.

  9. on 06 May 2004 at 12:05 am9prabhu

    நிச்சயமாக அவர் சந்தோஷமாகவே இருந்திருக்க முடியும். வேலை செய்த இடம் அப்படிப்பட்டதாயிற்றே!சில சம்யம் வீட்டினை காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பினை பெற்று அதை நிறைவேற்றுகையில் அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கலாம் (இதைப் பற்றிய ஒரு புதுக்கவிதையை சுஜாதா சிறந்த கவிதைகளில் ஒன்றாக பட்டியலிட்டிருந்தார்)
    பொதுவாக கடைநிலை நீதிமன்ற பணியாளர்கள் அனைவருக்குமே தங்களது பிள்ளைகளை ஒரு வக்கீலாகவும், நீதிபதியாகவும் வரவேண்டும் என்று விருப்பம் இருப்பதுண்டு.அதைப் பற்றியும் எழுதுங்கள். உங்கள் விபரத்திற்கு:-மஹாராஷ்டிர முதல் மந்திரி ஷிண்டே உங்கள் தந்தையைப் போலவே நீதிமன்ற உதவியாளராக பணீயாற்றி அப்படியே சட்டம் படித்து, பின்னர் காவல் துறையில் சேர்ந்து அரசியலில் நுழைந்து தற்பொழுது முதல்மந்திரியாக இருக்கிறார்.
    பிராஸஸ் சர்வர்கள் என் அலுவலகம் வரும் பொழுதெல்லாம் அவர்களை அமரச் செய்து தேநீர் வழங்காமல் அனுப்பியதில்லை. இந்த சிறிய உபசாரத்திற்காக, நீதிமன்றத்தில் எனக்கு பதில் மரியாதையும் அன்பும் அபாரமானது.உங்களால் உங்கள் தந்தைக்கும், அவரால் உங்களுக்கும் பெருமை!

  10. on 06 May 2004 at 3:05 am10Krishnamurthy

    sel
    Send my congrats to appa for his successful completion of service. Hope he remmebers me. Though many years passed since I talked with him, I even now remember how much he loved his job, his people around and more importantly you. He is a very simple at the same time content person. The very fact that I was doing research made him to adore me. Such an innocent person. It was not your money but your devlopment from the sratch and affection that has made him very happy over life. Though many persons, relatives (though mama takes the major share of the credit), masters, freinds and above all your hard work/intelligence are responsible for the posiiton you are in now, he has every right to feel that he also played a major role in your acheivements. From our perspective, our posiiton of today is not at all that great, but he must be feeling that it is great and rightly so. So, his sense of happiness comes mainly from you. When people who meet him in job/personal life ask him about you, how much proud he would have felt to tell that u are in US & in a big posiiton. So, I thank God for giving this woderful oppurtunity for u to give this happiness to him.
    Sel. now is the time he may require that small thing extra from u. Find out what he requires and try to fullfill it. My best wishes to u to do this.
    anbudan
    Krish

  11. on 07 May 2004 at 1:05 am11செல்வராஜ்

    பிரபு நன்றி. தன்னால் இயன்றவரை அவரும் பிறருக்கு உதவ முயன்றிருக்கிறார் (சமயத்தில் சக்தியையும் மீறி!) என்று தெரியும். இப்போதும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஏதோ இலவச கோர்ட் ஒன்று இருக்கிறது. அங்கு போய் வருபவர்களுக்கு ஏதேனும் உதவலாம் என்றார். உங்களைப் போன்றவர்கள் சிலரை அவர் சந்தித்திருப்பார் என்று நம்புகிறேன். அந்த மகிழ்ச்சி அவர் பேச்சில் எப்போதும் வெளிப்படும். என்றாவது ஒருநாள் வாய்ப்பிருந்தால் அவரோடு உங்களைச் சந்திக்க முயற்சி செய்கிறேன். அவர் துறையைச் சார்ந்த என் நண்பர்கள் என்று அதிகம் இல்லை.

    கிருஷ், வழக்கம் போல உங்கள் அன்புக்கும் அறிவுரைக்கும் நன்றி. நீங்கள் கூறியது உண்மையே. அதிகம் செய்யாதது போல் தோன்றினாலும் அவர் செய்ததும் முக்கியமானது என்பதை நான் அறிவேன். கடந்த காலத்தில் சில வகைகளில் நான் தவறிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதுண்டு. அவற்றை மாற்ற வழி இல்லை. இனிமேல் என்னவென்று கவனிப்போம். உங்கள் விசாரிப்பைச் சொல்லுகிறேன். இந்தப் பதிவும், பின்னூட்டங்களும் பிரதி எடுத்து அவருக்கு அனுப்ப இருக்கிறேன்.

  12. on 18 May 2004 at 10:05 am12பாலா

    செல்வராஜ்,

    மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பதில் ‘வெகுளித்தனம்’ பெரும்பங்கு வகிக்கிறது. உங்கள் தந்தையார் கொடுத்து வைத்தவர். சுற்றிப் போடுங்கள் இந்த பதிவுக்கும்; உங்கள் தந்தையாருக்கும்.

    அரசு பணி என்பது சில நேரங்களில்..இல்லை..பல நேரங்களில் தேவையற்ற சங்கடங்களை தரக்கூடியது தான். உங்கள் அப்பா அமெரிக்கா வருவதற்கு ஏற்பட்ட தடைகளைப்போல. விளக்கமாக சொன்னால் போரடிக்கும். சுருக்கமாக சொல்வதென்றால், ‘இக்கரைக்கு அக்கரை பச்சை”

  13. on 08 Jun 2004 at 9:06 am13Aruna

    ரொம்ப ரொம்பத்தாமதமாக இங்கே எட்டிப் பார்த்துள்ளேன். இவ்வளவு தாமதமாக ஒரு பின்னூட்டம் எழுதுவதா என்று தயங்கினேன். ஆனால் மனசைத் தொட்ட ஒரு பதிவில் ஒன்றும் சொல்லாமல் நகர மனம் இடம் கொடுக்கவில்லை. வாழ்க்கையை அதன் போக்குபடி இயல்பாக ஏற்று கொண்டு மனதில் ஒரு அமைதியுடனும் நிறைவுடனும் வாழ்வது ஒரு பெரிய கலை. நாம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
    —

  14. on 19 Oct 2007 at 12:00 am14செல்வராஜ் 2.0 » Blog Archive » அப்பாவின் வயது

    […] அறுபதத் தாண்டிருச்சுல்ல” என்றேன். போன வருடம் பணியோய்வு பெற்ற அப்பாவுக்குச் சுமார் அறுபது […]

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook