அப்பச்சி – 0
Apr 27th, 2004 by இரா. செல்வராசு
சில நாட்களுக்கு முன்தோழியர் வலைப்பதிவில் ரங்கமீனா அவர்கள் எழுதி முடித்த”அப்பச்சி” தொடர் அருமையான ஒன்று. பத்து நாட்களுக்கு முன்னரே அவர் முடித்திருந்தாலும் விரிவாய் எனது கருத்துக்களைப் பதியவேண்டும் என்று எண்ணி இருந்தமையால் இந்தத் தாமதம். சுமார் பத்து வயதுச் சிறுமியின் பார்வையிலே,அவருடையவாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் படம் பிடித்து எழுதியிருக்கிறார். தான்அதிகம்எழுதியதில்லைஎன்றுஅவர்கூறினாலும்”அப்பச்சி” ஒருஇனியநடையில்நன்றாகஅமைந்திருக்கிறது. அதில்கலந்திருந்தஉணர்ச்சிகளும்பெரும்பிடிப்பைஏற்படுத்துகின்றன. என்றுமேஉணர்ச்சிபூர்வமானஎழுத்துக்கள்சிறப்பாகஅமைந்துவிடுகின்றன.
கடல். முதல் கப்பல் பயணம். அநேகமாய் முதல் தொலைதூரப் பயணம். நீண்ட காலம் பார்க்காதவரைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பு. கூடவே எதற்கோ எழும் ஒரு பயம். கரை தொட்டவுடன் அவரைக் காணவில்லையே என்னும் பரபரப்பு. இடையிலே கண்ணுக்கும் உணர்வுக்கும் தென்படும் புதிய காட்சிகள், என்று பலவற்றையும் கலந்து மீனா சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே அங்கங்கே தெளித்து விட்ட பின்னணி விவரம், வரலாறு. ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் நிறுத்தப்பட்ட அத்தியாயங்கள். ஆனால், தொடரின் மூன்று நான்கு பகுதிகளிலேயே முடிவு தெரிந்துவிட்டது. இதை வெறும் கதையாகக் கருதினால் அந்த முடிவை இன்னும் கொஞ்சம் மறைத்துப் பின்னர் வெளியிட்டிருக்கலாம் என்று சொல்லத் தோன்றும். ஆனால், இது நிஜம். ஒரு பத்து வயதுப் பெண்ணின் இழப்பு என்னும் அளவில் அது சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
முழுத் தொடரையும் படித்து முடித்த பின் எனக்கு ஒரு சிறு குழப்பம். ஓ! அப்பச்சி என்பது ஒருவேளை இவரது தந்தையைக் குறிக்கிறதோ ? தொடர் முடிந்தபின் இருந்த சிறு குறிப்புக்களும், பின்னூட்டங்களுமே அந்தக் குழப்பத்திற்குக் காரணம். அதனால், மீண்டும் ஒருமுறை சென்று முழுவதையும் பார்த்தேன். நல்ல வேளை அந்தக் குழப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு விஷயம் தெளியாமலே இருந்திருக்கும். முதல் பகுதியில் தலைப்பில் (அப்பா) என்று குறிப்பிட்டிருக்கிறாரே. அப்பாவாகத் தான் இருக்கும். அப்படியானால் ஆத்தா என்பதும் அவருடைய அன்னையாகத் தான் இருக்க வேண்டும். இந்த விவரம் சற்றுத் தெளிவாக இல்லாததால், தொடர் முழுவதையும் ஒரு தவறான பொருள் கொண்டே புரிந்திருக்கிறேன். மீனா, மன்னிக்க. ஆனாலும், என் புரிதலில் அந்த ஒரு பொருள் குற்றம் தவிர மற்ற உணர்வுகள், உணர்ச்சிகள் எதுவுமே மாறவில்லை.
இப்படித்தான் படிக்கின்ற விஷயங்களில் பல சமயம் நாம் நமது உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்கிறோம். இங்கே “அப்பச்சி” என்ற ஒரு சொல் எனது உணர்ச்சி நிலைகளில் எங்கோ ஒரு இடத்தைத் தொட்டிருக்க வேண்டும். அது கிளறிவிட்ட நினைவுகளில் மிதந்தபடியே இந்தத் தொடரை நான் படித்து முடித்திருக்கிறேன்.
எனக்கு அப்பச்சி என்பது எனது அன்னையின் தந்தை தான். எங்களூர்ப் பகுதியில் இது தான் வழக்கம். இத்தனைக்கும் அவ்வளவாய் நான் அவரை அப்பச்சி என்று அழைத்த ஞாபகமில்லை. “தாத்தா” என்று அழைத்தது தான். தாத்தா என் சிறு வயது அனுபவங்களில், உணர்ச்சிகளில் பெரிதும் கலந்திருந்தவர்.
அவரும் இப்படித்தான் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், நினைவுகளை மட்டும் விட்டுவிட்டுத் தானும் செத்துப் போனார் ! அந்த நினைவுகளில் சிலவற்றை எடுத்து நானும் இங்கே ஒரு தொடராய்ப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.
புதுக்கோட்டைப் பக்கம் அப்பச்சி என்றால் அப்பாவின் அப்பா.
இலங்கையிலே (மன்னார்) அப்பாச்சி (நெடில்) என்றால் அப்பாவின் அம்மா!!
நான் மீனாவின் எழுத்தைப் படிக்க வேண்டும்.
சுந்தரவடிவேல், அ·து அப்பாச்சி (அப்பாவின் ஆச்சி என்று விரியுமென்று நினைக்கிறேன்).
செல்வராஜ்,
எனக்கு முந்தைய தலைமுறை வரை தாய்,தந்தையரை அப்பச்சி, ஆத்தா என்றழைப்பதுதான் செட்டிநாட்டு வழக்கில் இருந்தது. ஆச்சி என்பதற்கு எதிர்பதமாக அப்பச்சி இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ச்சி’ பெரும்பாலும் பெண்னைக் குறிப்பதற்கே பயன்படுகிறது (தங்கச்சி, ஆச்சி). ஆச்சி என்பதற்கும் திருநெல்வேலி, மற்றும் கொங்குப் பகுதியில் அம்மாவின் அம்மாவைக் குறிக்கிறார்கள். (செட்டிநாட்டு வழக்கில் அம்மாவின் அம்மாவை குறிக்க ஆயா என்ற சொல் பயன்படுகிறது, அப்பாவின் அம்மா = அப்பத்தா. அப்பா + ஆத்தா ). பொதுவழக்கில் மதுரைத் தமிழில் அப்பச்சி என்பது வயதானவரைக் குறிக்கப் பயன்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
நன்றி சுந்தர், ரமணீ, மெய்யப்பன். ‘அப்பச்சி’ பல வகைகளில் வழங்கப் படுகிறது என்பது புதிதாய் இருக்கிறது (எனக்கு). கொங்கு நாட்டிலே சற்றே உகரம் சேர்ந்தாற்போல் அப்புச்சி என்று அழைப்பது வழக்கம். ஆச்சியின் அப்பா என்பது அப்பச்சி ஆகியிருக்கலாம் என்று முன்பு நினைத்திருக்கிறேன்.
ரெம்ப நன்றி செல்வராஜ் என் அப்பச்சிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து அடடா இன்றுதான் பார்த்தேன்
எதிர்பார்க்கவேயில்லை? ரெம்பநாளாக இந்தப்பக்கம் வரவில்லையே என்று இன்று வந்தேன் எல்லாவற்றையும் படித்துக் கொண்டே வந்தால்! மீண்டும் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன் செல்வராஜ்.
இதைப் படித்தவுடன் தான் என் தவறுகள் தெரிகிறது அப்பச்சி என்றால் அப்பா என்று விளக்கியவள் ஆத்தா என்றால் அம்மா என்று சொல்லாமல் விட்டுவிட்டேன் இப்போ கூறினால் என்ன?
சுந்தரவடிவேல் அப்பச்சி படித்தீர்களா?
மீனா, இதை எழுதியபோது உங்களுக்கு மடல் எழுதினேன். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் திரும்பி வந்துவிட்டது. தோழியரில் பின் தொடர் சுட்டியும் கொடுத்தேன். பார்த்திருக்க மாட்டீர்கள் போல.
எண்ணியபடி எனது அப்பச்சி (தாத்தா) பற்றி இன்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை.