இயூசுட்டனில் சங்கத்தமிழ்க் கலந்துரையாடல்
Dec 14th, 2015 by இரா. செல்வராசு
திருமதி. வைதேகி எர்பர்ட்டு அம்மையாரின் சங்கத்தமிழ்க் கலந்துரையாடல் இன்றைய பொழுதை மிகவும் அருமையாக ஆக்கித் தந்திருந்தது. அவரை இன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த இயூசுட்டன் பெருநகரத்துத் தமிழார்வலர்களுக்கு மிக்க நன்றி.
வைதேகி அம்மையாரின் குரலில் இருக்கும் ஆர்வமும், காட்சிகளை விவரிக்கும் உடல்மொழியும், சுவைமிகுந்த விவரங்களும், நேரம்போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்க வைத்தன. அவரிடம் சொன்னால், ‘நான் எதுவும் சொல்லலைங்க; எல்லாம் இதிலேயே இருக்கு; இதன் தொடர்ச்சி தான் இன்றுவரை எல்லாமே’ என்பதாகத் தான் பதிலிறுப்பார் என்று தோன்றுகிறது.
அவர் சொன்ன செய்திகளில் சில:
- சங்க காலத்தில் சாதி இல்லை. தமிழர்களிடையே மதப்பிரிவினைகள் இல்லை. ஏன், கொற்றவை, முருகன் பற்றிய சிறுகுறிப்புகள் தவிரக் கடவுள் என்பதே கூட இல்லை. இறந்துபட்ட முன்னோர் வழிபாடு தான் இருந்தது.
- சங்க காலப் புலவர்களுள் ~15% தான் பெண்கள் என்றாலும், பெரும்பாலான பாடல்கள் (75%) அகத்திணை பற்றியவையே; ஆண்பாற்புலவர்களாலும் அவ்வளவு நுணுக்கமாகப் பெண்ணுணர்வையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பெரும் ஆச்சரியமான ஒன்று.
- பாணர்களும் விறலிகளும் தமிழுக்குப் பெருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் தமிழ் இசை இல்லை, ஏன் தமிழே கூட இல்லை என்றாகியிருக்கலாம் (என்று முனைவர் இராசம் கூற்றாகக் கூறினார்).
- குறுநில மன்னர்கள் மக்களோடு மக்களாய் இருந்து அன்பு கொண்டு வழிப்படுத்தினர் என்றும் மூவேந்தப் பேரரசுகள் அவர்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர். தமிழ்ப்புலவர்கள் அம்மன்னர்களோடு நெருக்கம் கொண்டிருந்தனர். அவர்களை இடித்துரைக்கும் வாய்ப்பும் கொண்டிருந்தனர் (“நான் சொல்றதச் சொல்லீட்டன். அதுக்கப்புறம் உன் விருப்பப்படி செஞ்சுக்கோ”, என்று அவர்களால் சொல்ல முடிந்தது).
- வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அன்றும் எல்லாத் திசைகளிலும் இருந்து வந்த சமயங்கள், அவற்றின் தொன்மங்கள், இனக்குழுக்கள், அரசுகள் என்று எல்லாவற்றிலும் இருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. இவை அனைத்தையும் மீறி இன்றும் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதே அதன் பெருஞ்சாதனை என்றும், இப்படியானதொரு மொழியின் பெருமையை அறியாமல் நாம் அலட்சியமாய் இருக்கிறோம் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.
அனைவரும் இவற்றைப் படிக்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்திய அவர் ஆவலைத் தூண்டும் பல பாடல்களையும் அவற்றின் பொழிப்புரையையும் மொழியாக்கத்தையும் வழங்கினார். ஓரிரு நாள் பயிற்சியாகப் பயிலரங்கமாக நடத்திக் கொடுக்க இசைவு தெரிவித்தார். அவரது ஆர்வம் என்னுடைய அரைகுறை ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கவே படிக்கவேண்டியவற்றின் பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். சங்கத் தமிழ்ப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஆர்வத்தையும் கூட்டிக் கொள்கிறேன்.
(ஏற்கனவே டிசி பகுதியில் நடந்த பயிலரங்கைப் பயணத்தின் காரணமாகத் தவற விட்டவனுக்கு இன்னுமோர் வாய்ப்பாக இது அமையும்).
மிக அருமையாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்! சங்கவிலக்கியத்தின் அருமையை ஓரளவு அறிவேன் எனினும், வைதேகி எர்பர்ட்டு அவர்களின் எளிமையான இயல்பான விளக்கம் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. புது ஈடுபாடு ஏற்படுத்தியது. அரிய தொண்டாற்றுகின்றார். நீங்களும் கேட்டு மகிழ்ந்தது அறிந்து மிகவும் மகிழ்கின்றேன்.