அயற்சூழலில் தமிழ்க்கல்வி
Sep 7th, 2013 by இரா. செல்வராசு
"அங்க்கிள்… இது ஏன் தப்புன்னு போட்டிருக்கீங்க?"
அண்மையில் எங்கள் தமிழ்ப்பள்ளியின் நிலை-4 மாணவி ஒருவர் தேர்வு முடிவினைப் பார்த்து விட்டுக் கேட்டார். ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொற்றொடரைத் தமிழாக்கம் செய்திருந்ததில் சில ஒற்றுப் பிழைகளைச் சுழித்திருந்தேன்.
"ஓ! அதுவா… அந்த இடத்துல ஒற்று வரவேண்டும். (கதவைத் திறந்தான்). இது பத்தி அடுத்த வருசம் இன்னும் விரிவாப் படிப்போம்"
"ஆனா… இதுக்கு மார்க் குறைக்கலியே?"
"இல்லம்மா… பரவாயில்ல. இத நீங்க தெரிஞ்சுக்கணும்னு தான் குறிச்சிருக்கேன். பெரியவங்களே பல பேரு இதச் சரியாச் செய்யறதில்ல! அதனால இதுக்கு நான் முழு மதிப்பெண்ணும் கொடுத்துட்டேன்.
இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. நாம அப்புறம் படிக்கலாம். இப்போதைக்கு, ஒரு object -அ எழுதும்போது அதுக்கப்புறம் வரும் ‘ஐ’க்கு அடுத்துக் க, ச, த, ப எழுத்து வந்தா அப்போ அந்த எழுத்த இரட்டிச்சு எழுதணும். அத மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க"
ஆர்வமாகக் கற்றுக் கொள்கின்றனர் அயலகத்துத் தமிழ்ச் சிறார்கள். வெறும் தமிழ்ச்சூழலும், அறிமுகத் தமிழும் தாண்டி அமெரிக்கத் தமிழ்க்கல்வி இலக்கணமும், சற்றே இலக்கியமும் கற்றுத் தரவும் தொடங்கியிருக்கிறது. ஆரம்பக் கட்டங்கள் தான். ஆனால் வளர்முகமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அயற்சூழலில் தமிழ்க்கல்வி என்பது அதன் தனிச் சவால்களைக் கொண்டது என்பதைக் கற்றுத் தருவோர் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம். இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புகள் பெரும் உதவியாக இருக்கின்றன. தனித்தனியே ஆங்காங்கே நண்பர்கள் தமிழ் அறிமுகம் செய்து வைத்தது போய், அனைவரது உழைப்பையும் அனுபவத்தையும் பகிர்ந்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது வழிவகை செய்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு இது அவசியமும் கூட.