இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

நடுவுல கொஞ்சம் ‘கள்’ளக் காணோம்

January 8th, 2013 · 1 Comment

இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது.  முதலில், இந்த இடுகைக்கும் பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும் தொடர்பு கிடையாது.   Smile

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த இடுகை இந்தப் படம் குறித்த விமர்சனப் பதிவும் கிடையாது!

‘கொஞ்சம்’ என்று பன்மைக்கான முன்னொட்டைக் கொண்டு வரும் பெயரில் ‘கள்’ என்னும் பன்மை விகுதியைக் காணோமே என்னும் தமிழ் இலக்கணச் சிந்தனை தொடங்கி வைத்த ஒரு எண்ண ஓட்டம்.  இருந்தாலும், இது போன்ற பாவனையில் தவறொன்றுமில்லை என்று அண்மையில் எங்கோ படித்த நினைவு வரவே அதனைத் தள்ளிப் போய்விட்டேன். இங்கே இருக்கும் வார இறுதித் தமிழ்ப் பள்ளியில் நிலை-4ன் தமிழ் ஆசிரியனாக இருப்பதில் இந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமாகத் தமிழ் இலக்கணக் குறிப்புகளைப் பார்த்து வருகிறேன். அதில் எங்கேயாவது பார்த்திருக்கலாம்.

இதே கேள்வியையும் ஐயப்பாட்டையும் துவிட்டர்ச் சந்தில் (ஏன் சந்து எனப் பெயர் வந்தது எனத் தெரியவில்லை; அதுவும் ஒருவகையில் நன்றாகவே இருக்கிறது!) இளாவும் பலராமனும் எழுப்பவே, இது சரியான பயன்பாடே என்னும் குறிப்பிற்கான உசாத்துணையைப் பிடிக்க இறங்கினேன்.

பேச்சுத் தமிழில் மட்டுமன்று. உரைநடையிலும் சில இடங்களில் இவ்வாறு பன்மைப் பெயர்களை ஒருமை போன்றே பாவிப்பது தமிழ் மரபில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றே.  குறிப்பாக அஃறிணைப் பெயர்களில் பன்மையைக் குறிப்பிடும் (பலவின்பால்) இடங்களில் இவ்வாறு ஒருமைக்கான பெயரைக் குறிப்பிடுவதைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்று தமிழ் இலக்கணம் வழங்குகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் இந்தப் பயன்பாடு மிகவும் இயல்பாகவும் எல்லா இடங்களில் நிறைந்தும் இருப்பதைச் சற்றே உன்னிப்பாகக் கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

“ஏம்மா… கீரை நல்லா இருக்குதே… மூணு கத்தை குடுங்க”

“நேத்து இராத்திரி கோயில்ல நல்ல கூட்டம்ப்பா. சும்மா முப்பது கெடா வெட்டிருப்பாங்க”

“பூசைக்கு நாலு தேங்கா வாங்கிக்குங்க. ஒரு பத்துச் சூடம், ரெண்டு மொழம் பூவு, வெத்தல பாக்கு ரெண்டு கவுளி, எல்லாம் வாங்கிக்குங்க”

மூணு பாடத்தில ஊத்திக்குச்சு மச்சி. அடுத்த வருசம் மறுபடியும் தேர்வு எழுதணும்”

“அவனுக்கென்னப்பா, கோயமுத்தூர்ல பத்து வீடு கட்டி வாடகைக்கு உட்ருக்கான்”

“இந்தா… ஒரு ரூபா. போயி ரெண்டு பழம் வாங்கிட்டு வா!”, என்று அண்ணன் கவுண்டமணி சொன்னது எப்படித் தவறாகப் போய்விடும்?

ஆக, ‘பக்கங்கள’ என்று எழுத வேண்டியதில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த(க்) காணோம்’ என்பது சரியான பயன்பாடே. (இரண்டாம் வேற்றுமை உருபை ஒட்டிய ககர ஒற்றைக் காணோம் என்பது வேறு குறை; வேறொரு நாள்).

சென்ற ஆண்டு அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்களில் பிழைத்திருத்தம் செய்தபோது இப்படியான மிகைத் திருத்தங்களையும் செய்ததை உணர்ந்து வெட்குகிறேன்.  Sad smile

‘கீழ்க்கண்ட வினாக்களுக்குச் சரியான விடையை எழுதுக’ என்றாற்போன்ற சொற்றொடர்களில், ‘கீழ்க்கண்ட வினாக்களுக்குச் சரியான விடைகளை எழுதுக’ என்று நான் செய்த திருத்தங்கள் (திருத்தம்) தவறல்லவென்றாலும் அவசியமற்ற மிகைத் திருத்தங்கள்.

பால்பகா அஃறிணைப் பெயர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் இனி இவ்வாறான பாவனைக்குச் சிறிதும் அஞ்சவேண்டியதில்லை.  இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருக்கும் ஒரு செம்மொழி, இது போன்று நெகிழ்தன்மையும் இயல்பு வழக்கும் கொண்டிருப்பதில் தான் வியப்பு என்ன!

Tags: தமிழ்

1 response so far ↓

  • 1 இரா. செல்வராசு // Jan 9, 2013 at 10:56 pm

    தமிழ்மன்றம் மடற்குழுவில் முனைவர் வீ.சு. இராசம் அவர்கள் தொடர்புள்ள/பயனுள்ள பல கருத்துகளை வழங்கி இருந்தார்கள். அவருடைய அனுமதியுடன் அவரது மடலைக் கீழே இணைக்கிறேன்.


    திரு செல்வராசு அவர்களுக்கு, வணக்கம்.

    ((இதில் எனக்கொரு ஐயம். பொதுவாக இது அஃறிணைப் பெயர்களுக்குத் தான் பொருந்தும் என்றாலும், “பத்து ஊர்ச் சனமும் கூடிருச்சு” என்றாற்போல் பயன்படுத்தும்போது சனம் என்பது உயர்திணைப் பெயராச்சே… எப்படி?))

    எதுன்னாலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்று தொடங்குவது என் போன்றோருக்கு வழக்கமாச்சே; அதனாலே இந்த என் பதிவு! 🙂
    “கள்” என்ற விகுதியைத் தொல்காப்பியர் அஃறிணைப் பெயர்களுக்குத்தான் அறிமுகப்படுத்துகிறார் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம்: 15). அதனால் … அந்தக் கள் என்ற விகுதியை உயர்திணைச் சொல்லில் எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆயினும், சங்க இலக்கியத்தில் “கள்’ தொடர்ந்த உயர்திணைச் சொல் வழக்கு உண்டு. தேவையானால் பிறகு சொல்கிறேன். ஏற்கனவே என் புத்தகத்தில் விளக்கியுள்ளேன் (http://books.google.com/books/about/A_Reference_Grammar_of_Classical_Tamil_P.html?id=n6VhXLdmdKkC ).
    நிற்க.

    “பத்து ஊர்ச்சனமும் கூடிருச்சு” என்று சொல்வதில் எந்த இலக்கணப் பிழையும் இல்லை. இங்கே இரண்டு நிலைகள் நமக்குக் குழப்பம் உண்டாக்கலாம். இங்கே குழப்பத்தை ஏற்படுத்தும் சொல் “சனம்.” இதற்கு முன்னும் பின்னும் இருக்கும் சொற்கள்: பத்து, கூடிருச்சு.

    (i) சனம் என்ற சொல் பத்து என்று பன்மையை உணர்த்தும் சொல்லுக்குப்பின் வருகிறதே, அதனால் அதில் பன்மையைக் குறிக்கும் “கள்” என்ற விகுதி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    (ii) உடனே, “சனங்கள்” என்ற சொல்லை எதிர்பார்க்கும் மனதில் அடுத்து வரும் வினைச்சொல் “கூடிருச்சு” உறுத்துகிறது. அடடா, “சனங்கள்” என்ற சொல்லுக்குப்பின் இது “கூடியிருக்கின்றன” என்றல்லவா இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    கவலை வேண்டாம்.

    (iii) “சனம்” என்ற சொல்லுக்குமுன் வரும் எண்ணை உணர்த்தும் சொல்லில் (== பத்து) பன்மை உணர்த்தப்படுகிறது. அதுவே போதும். எனவே எழுவாய்-வினை “இயைபு” (subject-verb concordance) என்ற முறையிலும் இந்த வழக்கில் தவறில்லை.

    (iv) “அரிக்கி” என்று எழுத்தால் குறிப்பிடப்படவேண்டிய ஹரிகி (< ஹரி. கி) சொன்னதைத் தொல்காப்பியரே உறுதிப்படுத்துகிறார். வேறென்ன வேண்டும்?! "கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறும் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே" அதனால் ... இரட்டையாகவே இருக்கிறவற்றை, கண்கள், தோள்கள், முலைகள் ... என்று எழுதத் தேவைலயில்லையாம். தொல்காப்பியரே சொல்கிறார். (iv) கையோடு கையாக நன்னூலில் உள்ள "பால்பகா அஃறிணைப் பெயர்கள் பாற்பொதுமைய" என்ற நூற்பாவையும் நினைவில் கொள்ளவும். எளிமையாகச் சொல்லப்போனால் ... பறவை வந்தது என்றும் சொல்லலாம், பறவை வந்தன என்றும் சொல்லலாம். இன்ன பிற. +++++++++++++++++++++++++++++++++ எல்லாவற்றையும் விட உறுதியாக மனதில் கொள்ளவேண்டியவை: (v) தமிழ் வகுப்புகளில் சொல்லிக்கொடுக்கும்போது எல்லா இலக்கண விதிகளையும் ஒரேயடியாகப் புகுத்தவேண்டாம். (vi) "கள்" போன்ற பன்மை விகுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க அவசரமே இல்லை. "கள்" சேர்த்து எழுதினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி ... குடிமுழுகிப் போகாது. (vii) முதலில் தமிழை ஒழுங்காகப் பலுக்க/உச்சரிக்க/ஒலிக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஏனென்றால் ஒலிப்பு வேறுபாடு பொருள் வேறுபாட்டை உண்டாக்கும். எனக்குக் "குழம்பு" சமைத்த வீட்டில் சாப்பிடப் பிடிக்கும்/முடியும்; "குளம்பு" சமைத்த வீட்டில் சாப்பிட முடியாது. எனக்கு "நளவெண்பா" தெரியும், "நலவெண்பா" தெரியாது. எங்கள் வீட்டில் "பெண்ணை"ப் பார்க்க வருகிறார்களா, "பென்"னைப் பார்க்க வருகிறார்களா என்று தெரிந்தால் ... அதற்கு ஏற்றபடி வரவேற்பு அமையும்! ஒழுங்காக ஒலிக்கத் தெரிந்தாலே போதும், பிற தானாக அமையும். (viii) "கொஞ்சு" தமிழ் என்று நினைத்துக் கொச்சைத் தமிழ் (குட்டீஸ், தோழீஸ், வெயிட்டிங்கு, ... போல) பேசும் ஆட்கள் தரும் எரிச்சல் பொல்லாதது. இது ஒருவகையான இக்கால "மணிப்பிரவாளம்." செந்தமிழும் செங்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத்தை ஏற்கமுடிகிறது; அது தரும் இலக்கிய நயனைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், இந்தக் கால மணிப்பிரவாளத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்ய. அதனால், அதை நான் பார்க்காததுபோலப் புறக்கணித்துவிடுவேன். யாராவது எனக்கு அப்படி எழுதினால் நானும் விளையாட்டுக்காக ஒரு முறை அவர்கள் மாதிரியே மறுமொழி அனுப்புவேன். ஆனால் அதுவே என் நடைமுறைத் தமிழாக அமையாது. ஒரு பக்கம் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் இப்படி ( தட்டீஸ், புட்டீஸ், என்று) எழுதியும் பேசியும் புழங்குவதைக் காட்டிலும் ... தமிழுக்கு இடையிடையில் கிரந்த எழுத்தும் (ஜ, ஷ, ஸ, ஹ) ஆங்கிலமும் அப்படி அப்படியே அந்தந்த எழுத்துக்களில் எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. செல்வா என்னை அருளுள்ளம் கொண்டு மன்னிப்பாராக! 😉 😉 😉 +++++++++++++++++++++++++++ இப்படிக்கு, ராஜம்