புத்தாண்டும் படைப்பூக்கமும்
Jan 4th, 2013 by இரா. செல்வராசு
அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள். சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன்.
ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் பெயர் என்று அப்படியே பயன்படுத்தாமல் ஏன் முகப்புத்தகம் முகநூல் எனப் பெயர்க்க வேண்டும் என்றும் முன்பு நான் எண்ணியதுண்டு. ஆனால், சிலவற்றை இப்படிப் பெயர்ப்பதில் தவறில்லை என்பதோடு அதுவே அழகாகவும் இருப்பதால் ஏற்றுக் கொள்ளலாம். தவிர, வலியது நிலைக்கும் என்னும் டார்வின் கோட்பாட்டின்படி இன்று பலரும் முகப்புத்தகம் முகநூல் என்று சொல்லி அது நிலைத்துவிட்டதையும் உணரலாம்.
நிற்க. முகநூல்/முகப்புத்தகமானாலும் சரி, லின்க்டு-இன், கூகுள்+, டுவிட்டர் போன்ற இன்ன பிற குமுகவலைத் தளங்களானாலும் சரி, ஒரு வகையில் அச்சத்தையே உண்டாக்குகின்றன. 66ஏ-விலோ வேறு ஏதேனும் காரணமாக உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்களோ என்னும் அச்சம் (மட்டும்) இல்லை. சும்மா உள்நுழைந்த உடனே உங்களுக்கு இவரைத் தெரியலாம் என்று கொண்டு வரும் பட்டியல் பெரும்பாலும் பொருத்தமாக இருப்பது தான். எப்படி…? எப்படி இத்தளத்திற்கு எங்களுக்குள் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு தொடர்பு தெரிந்தது என்று ஒரு பக்கம் வியப்பாகவும், மறு பக்கம் மலைப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது. அதோடு உங்களின் இந்த நண்பர் அல்லது நண்பரின் நண்பர் இந்தச் செய்தியைப் படித்தார், இந்தத் தளத்தைக் கண்டார் என்று சம்பந்தம் இல்லாமல் என்னிடம் வந்து சொல்லும் இவை, என்னைப் பற்றி யாரிடம் என்னவென்று சொல்லுமோ தெரியவில்லை!
இது பரிந்துரைப்பதை நான் கேட்பதா என்று பலசமயம் வீம்புக்காகவே அது சொல்லும் தொடர்புகளோடு இணைத்துக் கொள்வதும் இல்லை. அதையும் மீறிப் பரவலாகி வரும் குமுகவலைத்தளங்களைத் தள்ளவும் முடியாமல், தயங்காது சேரவும் முடியாமல் இடைப்பட்ட நிலையில் பட்டும் படாத நிலையில், விட்டும் விடாதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
இவற்றில் இன்னுமொரு சிக்கலாக நான் உணர்வது இத்தளங்கள் நுகர்வுத் தன்மையை அதிகரிப்பதாகவும் படைப்புத் தன்மையைக் குறைப்பதாகவும் இருக்கின்றன என்பது தான். இதனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கலாம். தொடர்பை, உறவைப் பேணுதலும், சிறு நேர அளவளாவலும், இரசனைகளைப் பகிர்தலும், அவசரக் கேள்விகளுக்குப் பதிலும், உதவிகளும் கிடைப்பதும், பல சமூகக் காரணிகளுக்காகப் படைதிரட்டலும் எனப் பல்வேறு நன்மைகள் பயப்பவையாக இருப்பதை நானும் ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் எனக்காக நான் செலவிட முடிகிற நேரத்திற்கு இவை போட்டியாகத் தான் இருக்கின்றன என்பதையும் கூடவே உணர்கிறேன்.
முன்பெல்லாம் அவ்வப்போது நாட்குறிப்பு எழுதுவதுண்டு. அன்றைய நாளின் ஆயாசங்கள் அலுப்புகள் வெற்றிகள் மகிழ்ச்சிகள் என எதையேனும் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்ததிலும் ஒரு நிறைவு கிடைக்கத் தான் செய்தது. ஒரு வகைச் சுய ஆய்வுக்கும் சுய உந்துதலுக்கும் வழியாக இருந்த அந்தப் பழக்கமும் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
வலைப்பதிவும் கூட அப்படித் தான். அப்பழக்கமும் சிதைந்து விடாதிருக்க வேண்டுமாயின் நுகர்வுத் தன்மையை மட்டுமன்றிப் படைப்புத் திறனையும் பெருக்கிக் கொள்ள உழைக்க வேண்டும். சென்ற ஆண்டும் இதே சிந்தனை இருந்த போதும் அதனைச் செயலாக்குவதில் பெரு வெற்றி பெறவில்லை. எழுத நினைத்துப் போட்டு வைத்த பட்டியல் கூட அப்படியே இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன? இனி வருங்காலத்தில் சிறப்பாக இயங்கலாம். சென்ற காலத்துத் துவளல்கள் வருங்காலத்துக் கனவுகளைச் சிதைக்க நான் என்றும் விடுவதில்லை.
வோர்டுபிரசு (சொல்லச்சு ) செயலியை 2.3யில் இருந்து 3.5க்கு இற்றைப்படுத்திப் புத்தாண்டைத் தொடங்குகிறேன். ‘இதற்கு இத்தனைக் காலம் ஆச்சுதா’ என மலைக்காமல் வாழ்த்திச் செல்க!
வாழ்க வையகம்!
துவளாத படைப்பூக்கம் என்றும் தழைத்திட வாழ்த்துகள்!
இனிவரும் காலமுழுதும் கிரந்தக் கலப்பின்மை மட்டுமின்றி தெரிந்தவரையில் தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த ஆசை. அதைப் பழகுவதற்கென்றே வலைப்பதியவும்…
வாழ்த்துகளுக்கு நன்றி கண்ணன். அன்றாடப் பேச்சில் கூட தமிழ் எழுத்தும் படிப்பும் குறைந்து போன நாட்களில் ஆங்கிலம் சற்று அதிகமாகத் தலை தூக்குவதை உணர்கிறேன். அதனால் அயல்சூழலிலும் தமிழை மறவாது இருக்கவும் பேணிக் காக்கவும் எழுதுவது அவசியமாகிறது. தொடர்வோம்.
Facebook-ஐ “முகநூல்” என்று குறிப்பிடுவதை அதிகம் காண்கிறேன்.
எனவே Facebook-ஐ முகநூல் எனவும் வழங்கலாம் என்று கொள்க 🙂
உண்மை தான் மஞ்சு. நினைவில் இருந்து எழுதினேன். பிறகு தான் முகநூல் என்பதே இருக்கும் வழக்கு என்பதை உணர்ந்தேன். இரண்டும் ஒன்று தானே என்று விட்டு விட்டேன் 🙂 சுட்டியதற்கு நன்றி. இடுகையில் திருத்தி விடுகிறேன். எவ்வாறு இருக்கிறீர்கள்?
நலம், நீங்க? எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்க.